திறந்த கதவில் பூட்டு

ஏம்பலத்தானின் முகத்தில் எப்போதும் பார்த்திராத சிரிப்பு படர்ந்திருந்தது. கண்ணில் தெரிந்த விஸ்கியினால் உறைந்த சிரிப்பு என முதலில் நினைத்தேன். சோகையான விளக்குகளில் அவன் முகத்தில் வரிக்குதிரை பதற்றம் அவ்வப்போது பொசிங்கியது. நான் டாவர்ன் பாருக்கு வந்ததும் குடிக்கத்தொடங்கி மூன்றாவது லார்ஜ் வரைதான் காலியாயிருக்க அதற்குள் அண்டை டேபிளில் `மாப்ள, மச்சி` எனக்கூப்பிடும் நான்கு நண்பர்களை சம்பாதித்திருந்தான் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாத ஏம்பலத்தான். அடிபட்ட தெருநாயின் மெல்லிய தொடர் ஓலம்போல பார் வாசனையை மீறி அவனிடம் மருந்து வாடை.

`கண்ணமெல்லாம் ஆப்பிள் மாதிரி புசுபுசுன்னு எப்படிடா இப்படி இருக்கே?` , என கார மல்லாட்டை ஒட்டியிருந்த ஈர விரல்களால் என் கன்னம் தடவினான். நான் ஊரை விட்டுப் போன நாட்களிலிருந்து அவனது கையில் ஒட்டியிருந்த சாயகட்டை வாசம் அப்படியே இருந்தது.

`நீ உப்பளத்தில ஊறப்போட்டவன் மாதிரி உருகிப்போயிட்டே..என்ன?`, நான் சொன்னதைக் கேட்காதவன் போல இளித்துக்கிடந்தான். அவனது கருவடுயேறிய பள்ளங்களில் இன்னும் பெயரிடப்படாத  பதின்மவயது பேச்சொலிகள் அசிரதையாக அமர்ந்திருந்தன.

`அட்வைஸு..மாறவேல்லடா நீ. போட்டோவை எவண்டா எடுத்தான்`, புத்தகத்தைப் புரட்டியபடி என் கைவிரல்களைத் தட்டிக்கொண்டே கேட்டான்.

`மெட்ராஸ் பிரஸ் அசோசியேஷன்ல ஒரு நண்பன் எடுத்தது`, தோற்கடிக்கப்படுவதற்காக வடிவெடுத்த ஏக்கம் மடியில் தவழத் தொடங்கும் குறுகுறுப்பு.

`அவன் காமிராவைத் தூக்கி சாக்கடைல போடு..மெட்ராஸ் என்ன மெட்ராஸு, இங்க வந்திருக்கணும் நீயி. துல்லியமா எடுத்திருக்கலாம். உன்ன விட பின்னாடி வானம் தான் நிறைய தெரியுது. அது என்னடா எழுத்தாளன்னா மோவாக்கட்டைல ஸ்டாண்டு போட்டாமாதிரி மூக்கைத் தூக்கி போட்டோ..`, மீண்டும் கன்னத்தைக்கிள்ளினான்.

`மச்சி, போலாண்டா. ஸ்ப்லெண்டர் இன்னும் இருக்கா? அங்க போய் உக்காரணும் போலிருக்கு`

`இருடா நாளைக்குக் கோட்டாவுக்கு கொஞ்சம் வாங்கிக்கறேன்..டேய், காந்திமோகன் ஞாபகம் இருக்கா? அவனும் இங்கதான் வேலை செய்யறான்..எப்படி பாரு?`, என பெரிய ஜோக் கேட்டது போல கண்ணடித்துச்  சிரித்தான்.

கவுண்டரில் பணத்தைக்கட்டிவிட்டு இரவுக்கான பாட்டில்களை வாங்க எத்தனித்தபோதுதான் அழையா விருந்தாளியாக என் விரல்களைக் கோர்த்தபடி அவன் நின்றிருப்பது உரைத்தது. எல்லா வேதனைகளையும் தீர்க்கும் அந்த புன்னகை இதோ என்னிடம் இருக்குப்பார் எனத் தோற்றுக்கொண்டிருந்தேன்.

*

bench

அலை உள்வாங்கி கடற்கரை மணல் வெளிவந்திருந்ததில் கூட்டம் எகிறி நின்றது. ஏம்பலத்தான் விடுவிடுவென இறங்கி மணலில் படுத்துக்கொண்டான்.

`டேய் நீ வந்திருப்பதுக்கான ஸ்பெஷலா கடலு உள்வாங்கியிக்குடா..வா இப்படி வந்து உக்காரு. சாமியார் ஞாபகம் இருக்காடோய்!`, என வானத்தைப் பார்த்து கண்களை இறுக்க மூடிக்கொண்டான். முகத்தில் மட்டும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது.

`யாரு அறுவையா?`, அலையில் செருப்பும் பேண்டும் நனையாமலிருக்க ஏம்பலத்தானின் தலைக்குபின்பக்கம் உட்கார்ந்துகொண்டேன்.

என்னை ஓரக்கண்ணால் பார்த்து, `குச்சான் தொரத்தறவர சேதுவோட பாட்டுல இங்கியே கெடப்போம் இல்ல..ம்ம்`. அவன் ஞாபகம் இருக்காவெனக் கேட்காமல் பழங்கதைகளை அசை போடத்தொடங்கிவிட்டான். சேதுவின் பாட்டு நினைப்பிருக்கும் அளவு ராத்திரி முழுவதும் கடற்கரையில் உட்கார்ந்தது நினைப்பில்லை.

`அண்ணன் பொண்ணு எப்படிரா இருக்கா?`

`ம்ம்..மாசத்தொரு தடவை பாக்கலாம்னு சொல்லிருக்காங்களே. சமயத்துல அமலோர்பவமுக்கு போயி – அமலோர்பவமேரி ஸ்கூல்ல ஆறாவது படிக்கிறால்ல – மதியம் சாப்பாடு நேரத்துல போயி பார்ப்பேன்..முதல்ல வெய்யும். அப்புறம் சாப்பாட்ட முழுசா காலி செஞ்சுட்டு சீக்கிரம் போயிடுன்னு துரத்திவிடும் குட்டகுட்டி..ஹே..` , அவனது சொற்கள் அலைகளில் மூழ்கி எழுந்து மீண்டும் கடல் ஆயின.

கண்டதை விழுங்குவதும் பின்னர் கழிசலைத் துப்புவதுமாக அலை அடித்துக்கொண்டிருந்தது. சுண்டக்காய்ச்சிய பால் போல நிலா மேகம் கலைந்து வெளிப்பட்டது. சிறிது நேரத்தில் முழுவதுமாய் சுண்டி வந்ததும் திட்டுதிட்டாகக் கிடந்த கரை முழுமையாக வெளிப்பட்டது. அலை கெண்டிய மணல் யாளிகளுக்கு புலர்காலை நிச்சயமில்லை. அடுத்த அலைவரை கூட.

சென்னையில் என்னோடு தங்கியிருந்த எட்டு மாதங்களில் பாதி நாட்கள் வீட்டில் படுத்துக்கிடந்ததைப் போல இப்போதும் ஏம்பலத்தான் மெளனமாகப் படுத்துக்கிடந்தான். நாங்கள் வேலைபார்த்த தினசரியில் ஆறு மாதங்களில் பத்து தலைப்புக்கட்டுரைகள் எழுதியிருப்பான். விளம்பரத்துக்காக மட்டுமல்லாது உண்மையை ரிப்போர்ட் செய்யும் அவனது துல்லியமும் தீவிரமும் ரெண்டே மாதத்தில் சீனியர் எடிட்டர் வரை பெயர் வாங்கித்தந்திருந்தது.

`செக்ரட்டேயிட் பக்கத்தில முருகன் கோயிலு அப்படியேதான் இருக்கு தெரியுமா..போய்ப் பார்க்கலாமா?`

பதிலைச் சொல்வதற்குள் என் முகத்தில் அவன் கைதட்டி உதறிய மணல் தெறிப்புகள். `வா மச்சி`, எனக் கைபிடித்துத் தூக்கிவிட்டான்.

`டேய், நீ இன்னுமா அந்த இடத்தில வேல பார்க்கிறே? இதுதானாடா உன் சாதனை?` – வண்டியின் பின்புறத்திலிருந்து அவனது குரல் கேட்டது. புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

`அந்த சூரப்புலி எடிட்டரும் உன் புத்தக வெளியீட்டுக்கு வந்தானாடா?`, என் சீனியர் எடிட்டர் எழுதிய முன்னுரை பக்கம் அவன் இன்னும் வரவில்லை. `அப்படியே எல்லாத்துக்கும் தலையாட்டிகிட்டே இருக்கே போல. சொந்தமா ஒரு ரசனை வேணும்டா..அட்டைல இருக்கிற ஃபோட்டோவிலயே இல்லையே` – கெட்டித்த ஒரு கணம் எதிர்பார்த்ததை அடைந்ததுபோல நெகிழ்ந்து, ஏம்பலத்தான் பேசும் ஓவ்வொரு வார்த்தையும் அவன் மீதான அன்பை அதிகப்படுத்தியது. செக்ரட்ரேட் பில்டிங்கைப் பார்த்தும் வண்டியின் வேகத்தைக் குறைத்தேன். அவன் பேசிக்கொண்டே வந்தான்.

தூரத்தில் தெரிந்த கடை உயிரில்லாதது போல் இருந்தது.

`வண்டிய கடை வாசல்ல நிறுத்தாத..இங்கெயே நிறுத்து`

எதற்கெனப் புரியாமல் திருப்பத்தில் நிறுத்தினேன். எதிரே நாங்கள் வழக்கமாக மதியம் சந்திக்கும் நூலகம் தெரிந்தது. என்னைப் பார்த்து இளித்தபடியே, `இங்கேர்ந்து பேசிகிட்டே நடப்போம்டா..மெல்ல நம்ம கடை பெருசாயிட்டே வரும் பாரேன்..`. முன்னெப்போதும் இல்லாதபடிக்கு அவனது முகம் பிரகாசமாக இருந்தது. `இப்பல்லாம் அங்க வாசல்ல உக்கார்ந்துதான் ரஞ்சனாவுக்கு கடிதம் எழுதறேன்..இங்கிலீஷ்லதான் எழுதணுமாம். எப்படி பாரு?`

எஸ்.நாகராஜனும் சுந்தர ராமசாமியும் இங்க்லீஷுலதான் கடுதாசி எழுதிக்குவாங்களாம்..ஏன்யா அவங்களுக்குத் தமிழ் வராதா? – என முன்பொரு நாள் கட்சி வகுப்பில் பேசிய துணைத்தலைவரின் கன்னத்தில் படீரென அறைந்த ஏம்பலத்தானின் கை இப்போது என் தோளைச் சுற்றிப் பிடித்திருந்தது. கடையைச் சுற்றி நினைப்பு வட்டம் அடித்ததும் என்னைப் போலவே அவனும் கலாவை நினைத்திருக்கலாம். அவளைப் பற்றி பேசுவான் என எதிர்பார்த்தேன். பேசிடக்கூடாது என குவியல் குவியலாக எழும்பிய நினைவை திசை மாற்றினேன். அடிக்கடி `இந்த இடம் நினைப்பிருக்கா?` என்பதுபோல என் முகத்தைப் பார்த்தான். `பிரியமானவங்கெல்லாம் ஒவ்வொருத்தரா இங்கிருந்து போனா என்ன வழி?` அவன் வாய் உறுதியற்று முணுமுணுத்தது.

`கசப்பா, நிறைய சக்கரையோடு ரெண்டு காப்பி மாஸ்டர்`, பத்து வருடங்களுக்கு முன்னதாக இருந்தால் தூங்கப்போற நேரத்துல என்னடா காபி எனக்கேட்டிருப்பான். கேட்ட பின்னாலும் என் கையில் காபி கோப்பையைத் திணித்துவிட்டு, `ஏதாவது சொல்லேன்..அவன் படிச்ச கட்டுரைக்கு அவன நாடு கடத்த வேணாம்..நம்ம பிரெஞ்சுக்காரனின் கில்லட்டினெல்லாம் அத்தனை மோசமில்லைன்னு தோணலை? ஏதாவது சொல்லேன்`, என மாலை நடந்த இலக்கிய கூட்டத்தைப் பற்றிய அபிப்ராயத்தை சம்பிரதாயமாகக் கேட்டது போல பதிலை எதிர்பார்க்காது நின்றிருப்பான்.

நெல்லி இலைகளை நனைக்கும் மழை – என நான் எழுதிய முதல் கவிதை வெளிவந்தபோது, பக்கத்தின் ஓரத்தில் `மழை – ஒழுகல்` என கிறுக்கலாக எழுதி கையில் கொடுத்தான். கவிதையை நான் எழுதியதையோ, அது வெளியானைதையோ, கிறுக்கலாக அவன் அடித்ததையோ மறந்தவன் போல ஸ்ருதி சிறிதும் கூட்டாது பேச்சைத் தொடருவான். சற்று நேரத்தில் நினைப்பு வரும்போது, `இனிமே மழை, மேகம், கனவு, பியானோ, புல்லாங்குழல், பூனை, பசி, வயிறு, மயிறுன்னு எவனாச்சும் கவிதைய எழுதிட்டுவாங்க, சிகரெட்ட நசுக்கறா மாதிரி நசுக்கிப்புடறேன்`, சொல்லிவிட்டு ஒய்யாரமாய் சிரிப்பான். பின் மழை  விடுநாழிகை கருக்கிருட்டு விரிசல்விடும் நேரம் ஈர றெக்கை சிலிர்த்து மிகையில்லாது விண்ணேறும் பறவையைப் போல.

டீக்கடை ரேடியோ இலங்கை ஸ்டேஷன் பக்கம் லாந்திவிட்டு தில்லி வாத்திய இசையில் நிலைபெற்றிருந்தது. தெருவின் இருண்ட தூரத்தில் ஓரிருவர் வீடுகளுக்குத் திரும்பும் அவசரத்தில் சத்தமாக நடந்துவந்தனர்.

‘அக்காள அப்புறம் பார்த்தியா?’

அவன் இல்லை என்பதுபோல உதட்டைப் பிதுக்கியபின்னே அந்த கேள்வியை அவனிடம் கேட்டிருக்கக்கூடாதோ என எனக்குத் தோன்றியது.

`அக்காள மார்க்கெட்லேர்ந்து வரும்போது பார்த்தேன்`, எனச் சொன்ன என்னைப் பார்த்து பூரிப்படைந்த அவனது முகம் நினைவுக்கு வந்தது. நாட்கணக்கில் காசைப் பார்த்திராதவனை மறித்து இன்றைய பரிசுச்சீட்டைக் கொடுத்தவன் போல எனக்குள் கூடுதலான சந்தோஷம். ஊரில் இல்லாத நண்பனின் ஒற்றையறை வீட்டில் தனியொருவளாக அக்காள் வாடகைக்கு வந்த நாள் முதல் பழக்கம்.

அதிகாலை தட்டப்பட்ட கதவுக்குப் பின்னால் நின்றிருந்தவன் பழுப்பு நிற பத்திரிக்கையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பக்கத்தை என் முகத்துக்கு நேராக ஆட்டிய கோலமும் அவனது அதிரடியானப் பூரிப்பும் எனக்குள் பரவிய நாட்கள் துல்லியமாக நினைவுக்கு வந்தன.

`கவிதை! இத முதல்ல படி..`

வெளி நதியில்

சிறகின் துடுப்பிசைத்து

எதிர் வரும் வண்டை

நான்

கண்டுகொண்டிருப்பது

எந்தப் பூவின் கனவோ.

கீழே `ஜெ.பிரான்சிஸ் கிருபா` என எழுதியிருந்தது. சில படைப்பாளிகளோடு கடிதத் தொடர்புகள் எங்களுக்கு முளைக்கத் தொடங்கிய காலகட்டம் என்றாலும் பெயர் புதிதாக இருந்தது. ஏம்பலத்தானின் சந்தோஷத்தைப் பார்த்து புது கவிஞரை எனக்கும் ரொம்பவும் பிடித்துவிட்டது.

`பூ, மேகம், பட்டாம்பூச்சின்னு கவிதை எழுதலாண்டா..இந்த மாதிரி எழுதனும்..ரசிகன்யா. இந்த `துடுப்பிசைத்து` வார்த்தையில அப்படியே சொக்கிக் கிடக்கனும்டா..துடுப்பியத்தில் உலகம்.`

மடித்த காலோடு அப்படியே படுத்துக்கொண்டான். வீட்டுக்குள் ஏன் அவனை அழைக்கவில்லை என்றோ, கதவைத் திறந்த என் அம்மா அவன் முகத்தைப் பாராது திரும்பி என்னைப் பார்த்ததையோ அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.

`இன்னிக்கு கவிதை வாசிப்பில் இதை அரங்கேற்றம் செஞ்சிருவோம்..மூடர்களில் ஒருத்தனாச்சும் ரசனையை ஒளிச்சு வெச்சிருக்கானான்னு பார்க்கலாம்.`

அவனுக்குத் தெரியுமோ இல்லையோ, இந்தக் கவிதையை விட உன்னதமானவற்றை அவனால் எழுதிட முடியுமென எனக்குத் தெரியும். எழுதியும் இருக்கிறான். எழுதும் நேரம் தவிர பிற எப்போதும் எழுத்தைப் பற்றிப் பேசாத அவனும் பலதும் எழுதியிருக்கிறான்.

என் அம்மை தழும்புகள் முழுவதுமாக உதிரவில்லை என்றோ அடுத்த பத்து நாட்களில் பத்திரிக்கை ஜூனியர் எடிட்டராக நான் சென்னைக்கு செல்லப்போவதைப் பற்றியோ அவன் அப்போது பேசவேயில்லை. சம்பிரதாயங்கள் இல்லாத எங்கள் நட்புக்கு அவனது அன்பு மட்டுமே உரம்.

பத்து வருடங்களுக்கு முன் எங்களிடையே படர்ந்திருந்த நட்பை ரசிக்காத கண்கள் கூட்டங்கூட்டமாக எங்கும் எங்களைப் பின் தொடர்ந்தன. இலக்கிய கூட்டங்களில் தரமற்ற வாதங்கள் நடக்கும்போதுதான் ஏம்பலத்தான் கூட்டத்தில் இருப்பது வெளிப்படும். அசிங்கங்களை இம்மியும் பொறுக்கமாட்டாதவனை ஆத்திரக்காரன் என வெளியே நிறுத்தத் தலைப்பட்டனர் சிலர். பூக்காடு தரிசாக மாறத் தொடங்கிய நாட்கள் அவை. ஆனால் அது மட்டும் காரணமல்ல.

`யாரை பார்த்தா என்ன, பார்க்காட்டா என்ன? நீயும் ஊருக்கு வரதில்லை..அக்காளையாச்சும் நான் அடிக்கடி பார்க்கணுமில்ல? அது சந்தோஷப்படுமா? தெரியல…`

நான் எதுவும் பேசாமல் காபிக்கோப்பைக்கு அடியில் தேங்கியிருந்த துகள்களைக் கரைக்க முற்பட்டிருந்தேன். இது போன்ற தருணங்களில் என்ன பேசலாமெனத் தெரியாமல் பலமுறை குழம்பியிருக்கேன். ஊருக்குப் பயணங்களைத் தள்ளிப்போட்டிருக்கிறேன். ஏம்பலத்தானை காப்பகத்தில் சேர்த்திருக்கும் விவரம் அம்மா சொல்லித்தான் தெரியவந்தது. க்ளூனி மருத்துவமனையோடு இணைந்தது என்றாலும் முழு நேரம் அடைத்துக்கிடக்கவேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு நாளில் சின்ன உலாத்தல்கள் சாத்தியமாயிருந்தது. சிறிதும் பெரிதுமான உலாத்தல்கள்   விருப்பமீறி காட்சிகளாக துடி நுரைக்கும்..

மானசீகமாக சில படங்களை ஒவ்வொன்றாகப் புரட்டுவதுபோல காட்சிகள் மாறி மாறி வந்து விழுகின்றன. நாங்கள் இருக்கும் டீக்கடையின் அடுத்தத் தெருவில் தான் அக்காள் இருக்கிறாள். பார்க்கும் தைரியம் அவனுக்கும் வரவில்லை போலிருக்கு.

மஞ்சள் பூ போட்ட திரைச்சீலை, ஜன்னலோர சாம்பல் நிற தையல் மெஷின், முகம் பார்க்கும் கண்ணாடி பதிந்த மரபீரோ, பக்கத்திலேயே குனிந்து எடுக்கும் வாக்கில் வைக்கப்பட்டிருந்த எவர்சில்வர் குடமும் கிளாசும், சமையலறை சட்டகத்தில் சாய்ந்து சிரிக்கும் அக்கா, பின்னால் அரையிருட்டில் கலா.

அக்காளுடன் கலா தங்கியிருந்த சமயத்தில் பல நாட்கள் அங்கு போயிருக்கிறோம். அக்காளுக்காக எனப் புறப்பட்ட பயணங்கள் நானும் அக்காளும் அதிகம் பேசுவதுமாக மாறிய நாட்களிலும் நிழல் போல அக்காவை ஒட்டியே கலா நின்றிருப்பாள். சமையலறை வெளிச்சம் விழாத இரு முகங்கள். சித்திரங்களை எத்தனைக் கலைத்துப் பார்த்தும் கலாவைத் தனியாக நான் பார்த்த நினைப்பில்லை. அக்காளுடனான என் பேச்சு சத்தம் தான் அதிகமாக இருக்கும். வாடிக்கைப்போல கிழமைகளின் இழுவை மதியங்களில் அக்காளைப் பார்க்கும் சாக்கில் ஏம்பலத்தான் பலமணிநேரங்கள் சரணடைய மழுங்காமல் வளர்ந்தது கட்சி கலை ரசனைகள்.

`கவிஞரும் ரசிகைக்கும் வாயைத் திறந்து பேசற தேவையேயில்லை…நம்மள மாதிரி ஆளுகளுக்குத்தான் பேசாட்டா எலும்புத் துண்டுன்னு நாயி தூக்கிட்டு போயிடும்..`, என ஏம்பலத்தானைப் பார்த்து சத்தமாக சிரிப்பாள் அக்கா.

ஏம்பலத்தான் வெக்கப்படுவது போலிருந்த பாவனையையும் கைவிட்டிருந்த காலம் வந்துவிட்டதை மெட்ராசிலிருந்து வந்த ஒரு விடுமுறை நாளில் கண்டுகொண்டேன்.

அற்பம் எனத் தூக்கிப் போடும் விஷயங்கள் தான் பின்னர் உயிர்பிடிப்பாக மாறிவிடுகிறது. பேசியது போலவும் இல்லை, பேசாதது போலவும் இல்லை, இது இருக்கு பாரு சாவுக்குழி என குடிக்கும்போது ஏம்பலத்தான் தன் தொண்டையைக் காட்டி புலம்பிய இரவுகள் ரயில் பயணத்தில் தூரத்தில் தெரியும் ஒற்றைப் பனை மரம் போல கடந்து மறைந்துவிட்டன.

பின்னொரு நாளில் அவன் கிறுக்கியிருந்த பக்கத்தில் கண்ட கவிதை.

திருவிழாக் கூட்டத்தில்

தெரிந்தவர் முகம்தேடி

மேலும் மேலும் தொலையும்

குழந்தையானேன்.

பிரான்சிஸ் கிருபா எனக் கீழே போட்டிருந்தது. அதை அடித்துத் திருத்தி ஏம்பலத்தான், பிரார்த்தனை, வெள்ளை நிற தேவதை, வானவில், கலா எனப் பலப் பெயர்கள் எழுதி அடிக்கப்பட்டிருந்தன.

`நீ நிறைய காதல் கவிதை எழுதுவேன்னு எதிர்பார்த்தேண்டா`, எனக் கேட்ட என்னைப் பார்த்து சிறு சலுகை போலச் சிரித்தான். வெறுமனே இருந்த நாட்களில் ஒரு நாள் அவன் காதல் கவிதை எழுதும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்து சலிப்படைந்திருந்தேன்.

`ஐநூறு காப்பி போட்டிருக்கியே..விற்குமாடா?`, திரும்பும்போது ஏம்பலத்தான் கேட்டான். ஆட்டோவில் நெருக்கமாக உட்காரும்போது பெட்ரோல் வாடை போல அவனது உடலிலிருந்து மருந்துவாடை மிதமாக வந்தது.

`பார்ப்போம்டா. நூறு காப்பி எழுத்தாளர்களுக்கே அனுப்பிட்டேன்..`

சாமியார் வீடு, சேதுவின் அச்சகம் என ஆட்டோ கடக்கின்ற ஊரின் அமைப்பு எங்கள் உலகின் தீராத காதலையும் தாகத்தையும் ஒட்டி வரைந்தது போல இருந்தது. எல்லாவற்றையும் பேசி முடித்த இரு நண்பர்களின் சிறு பயணமாக எங்கள் மெளனம் ஓட்டுனருக்குத் தெரிந்திருக்கலாம்.

பூட்டியிருந்த பூங்காவைத் தாண்டும்போது நள்ளிரவின் கனம் தாளமுடியாமல் இருந்தது. காப்பகத்தின் முன் கேட்டுக்கு அருகே ஆட்டோ நின்றபோது காவலாளி முன்னால் வந்தான். நான் பணத்தை எடுத்துக்கொண்டிருந்தேன்.

`நான் தான்..`, என ஏம்பலத்தான் கூறியதும் காவலாளி அருகில் வராது நின்றுவிட்டான்.

டிரைவரின் முதுகில் கைவைத்து, `இஞ்சினை ஆஃப் பண்ணுங்க அண்ணே`, என்றான்.

`டேய்..துரத்திவிடாத குறையா அக்காளை மேட்னி ஷோவுக்கு அனுப்பிச்சாம். போன மாசம் அக்காளை பார்த்தபோது சொன்னாங்க. சில சந்தர்ப்பங்களில் திட்டமிடாமல் திடீரென தற்கொலை எண்ணம் வருமாம்…டாக்டர் சொன்னதா சொன்னாங்க`.

 காப்பகத்தின் வாசலில் விளக்கு எரிந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.