காப்பி எடிட்டரின் வேலை – சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் – இவற்றைச் சரிபார்த்தல் குறித்த நேர்முகம் – ஈடன் லெபுகி

கைப்பிரதியின் படியைத் திருத்தும் காப்பி எடிட்டர்கள் சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்களின் துல்லியம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள். பொது எடிட்டரின் உதவியுடன் உள்ளடக்கம் தீர்மானிக்கப்பட்டபின் காப்பி எடிட்டர்களின் துணையுடன் படி திருத்தம் செய்யப்பட்டு ப்ரூப் ரீடரால் மெய்ப்பு பார்க்கப்படுகிறது. முன்னிலை ஆங்கில பதிப்பகங்கள் பலவற்றில் நீண்ட காலம் படிதிருத்தப் பதிப்பாசிரியராக பணியாற்றிய சுசன் ப்ராடனினி ப்ரெட்ஸின் நேர்முகம் இது. நேர்முகம் கண்டவர் ஈடன் லெபுகி. நன்றி- மில்லியன்ஸ் தளம்.

பதிப்புத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறீர்கள் – படிதிருத்த பதிப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியப் பணி சார்ந்த வேறு பல துறைகளிலும் பணிபுரிந்திருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்குப் பிடித்த வேலை காப்பி எடிட்டிங் செய்வதுதான் என்று சொல்கிறீர்கள். ஏன்?

படைப்புகளைத் தருவித்துத் தரும் பதிப்பாசிரியராய் இருந்தபோது இயன்றதைவிட படி திருத்தம் செய்யும்போது என்னால் கைப்பிரதியை இன்னும் நெருக்கமாக அணுக முடிகிறது. இப்போது நான் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கிறேன், ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து வாக்கிய அமைப்பின் வடிவத்தைச் சரி பார்க்கிறேன். படி திருத்தும்போது வாக்கியங்களைக் கடந்து செல்லும் மேம்போக்கான வாசிப்பைச் செய்வதில்லை. கைப்பிரதியை முழுமையாய் பாதிக்கக்கூடிய திருத்தங்களைச் சொல்வதோ, அதன் தரம் குறித்து என் கருத்துகளைப் பகிர்வதோ ஒரு காப்பி எடிட்டராக என் வேலையல்ல. எனவே கதை என்ன என்பதில் என் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது, மொழியைச் சொற்கள் மற்றும் வாக்கியங்களின் தளத்தில் கவனிக்கிறேன். வாசகனை மனதில் வைத்துக் கொண்டு வாசிப்பதால் அவருக்கு எது குழப்பமாகவோ சிக்கலாகவோ இருக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முயற்சிக்கிறேன். தகவல்களையும் தேதிகளையும் சரி பார்க்கிறேன், பாத்திரங்களும் நிகழ்வுகளும் முரண்பாடுகளற்ற ஒழுங்கு கொண்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்கிறேன். என்னால் எவ்வளவு முழுமையாக வாசிக்க இயலுமோ அவ்வளவு முழுமையாக வாசிக்கிறேன். படைப்புகளைத் தருவித்துக் கொடுக்கும் காலத்தில் சாத்தியப்படாத ஆழமான புரிதல் எனக்கு இப்போது கிடைக்கிறது.

படி திருத்தம் செய்வதை இப்போது நான் சுயதொழிலாகச் செய்வதால், என் பணியை ஒழுங்காகச் செய்து தருவேன் என்ற எதிர்பார்ப்பு கொண்ட பதிப்பகங்களுடன் வேலை செய்கிறேன். ஒரு நாவலின் கால்க்கிரமத்தில் பிழை பார்க்கும்போதோ, ஒரு அபுனைவில் பிழையான தேதியைக் கண்டுபிடிக்கும்போதோ அந்த நூலின் சீர்மைக்கு அப்பிழைகளைத் திருத்துவது முக்கியமானது என்று நினைக்கிறேன். முன்னர் நான் அத்தியாயங்களின் வரிசையை மாற்றி எழுதச் சொல்லும்போது அது எவ்வளவு முக்கியம் என்று நினைத்தேனோ, அதே அளவுக்கு இப்படிப்பட்ட பிழைகளைத் திருத்துவதும் முக்கியம் என்று இப்போது நினைக்கிறேன்.

குறிப்பாய் ஒரு காப்பி எடிட்டருக்குக் கிடைக்கக்கூடிய சந்தோஷங்களும் அவர் எதிர்கொள்ளக்கூடிய சவால்களும் எப்படிப்பட்டவையாக இருக்கும்?

இப்போது என்னால் ஒரு கைப்பிரதியை உன்னிப்பாக வாசிக்க முடிகிறது என்பதை நேசிக்கிறேன். என்னிடமுள்ள படியை வார்த்தை வார்த்தையாக வாசிக்கிறேன். சில சமயம் அடர்த்தியான பகுதிகளை ஒவ்வொரு அசையாகவும் வாசிக்கிறேன் (ஆமாம், அதையும் செய்திருக்கிறேன்). காலக்கெடுவையும் தரத்தையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது என்ற வழமையான சவாலைத் தவிர, அடிப்படையான சவால் என்ன என்று கேட்டால், இதை ஒரு சுயதொழில் பணியாய்க் கொண்டு ஜீவனத்துக்குரிய வருமானம் பெறுவதுதான் கடினமாக இருக்கிறது.. ஒபாமாகேர் வந்ததில், வெகு காலத்துக்குப்பின் முதல் முறையாக எனக்கு ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் கிடைக்கப் போகிறது.

ஒரு கைப்பிரதியை எப்படி காப்பி எடிட் செய்கிறீர்கள் என்பதை விவரிக்க முடியுமா? அதாவது, உங்கள் வாசிப்பு எப்படிப்பட்டது? மிகச் சிறிய பிழைகளையும்கூட உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடிகிறது?

ஒரு ஆதர்ச உலகில் ஒவ்வொரு கைப்பிரதியையும் இரு முறை வாசிக்க எனக்கு நேரமிருக்கும்: ஒரு முறை எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ள வாசிப்பேன், முதல் முறை வாசித்தபோது தவறவிட்ட அத்தனையையும் கண்டுபிடிக்க இரண்டாம் முறை சும்மா வெறுமனே வாசிப்பேன். ஆனால் கால அட்டவணைகள் இதை அனுமதிப்பதில்லை. தவிர, எப்படியும் ஒவ்வொரு வாக்கியத்தையும் பலமுறை வாசித்துப் பார்க்கும்படியாகி விடுகிறது.

எனவே, கைப்பிரதி என்னிடம் வந்தவுடனேயே முதல் பக்கத்திலிருந்து அதைப் படிக்க ஆரம்பித்துவிடுகிறேன். பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது, மேம்போக்கான ஒரு வாசிப்பு கொடுப்பது என்றெல்லாம் செய்வதில்லை. காரணம், ஒரு கதை எப்படி வளர்கிறது என்பதையும் தகவல்கள் அளிக்கப்படும் வரிசையையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். வாசகரின் புரிதலுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய தகவல் ஏதேனும் எழுத்தாளர் திருத்தி எழுதும்போது தன்னையறியாமல் தவற விடப்பட்டிருந்தால், இப்படிச் செய்யும்போது என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியலாம்.

முதல் அறுபது முதல் நூறு பக்கங்கள் எதுவும் குறித்து வைத்துக் கொள்ளாமல் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். காற்புள்ளிகள், எழுத்துப் பிழைகள், மேற்கோள் குறிகள் மாதிரியான மிகச் சாதாரணமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் குறித்து வைத்துக் கொள்வதில்லை. முதல் பக்கத்திலேயே ஸ்டைல் ஷீட்டை ஆரம்பித்து விடுகிறேன். எழுத்தாளர் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் பாணி, அவர் தேர்வு செய்யும் சொற்கள், உரையாடல் பாணி முதலானவற்றை அதில் குறித்துக் கொள்கிறேன். தெரிந்தே செய்த மாதிரி இருப்பது என்ன, தெரியாமல் செய்த மாதிரி இருப்பது என்ன, இந்த மாதிரி விஷயங்கள்.

எழுத்தாளரின் நடையும் குரலும் பழகிப் போனதும் காப்பி எடிட்டிங் வகை திருத்தங்கள் செய்யத் துவங்குகிறேன். வழக்கமாக இது அறுபதாம் பக்க வாக்கில் ஏற்படுகிறது. இந்தத் திருத்தங்கள் ஆசிரியரின் நோக்கத்தையும் பதிப்பாளரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்கிறேன். திருத்துவதைவிட அதிக அளவில் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு செய்து கொள்வது என் வழக்கம். கைப்பிரதியின் முடிவுக்கு வந்ததும் திரும்பிப் போய், அந்த முதல் அறுபது பக்க படிகளைத் திருத்துகிறேன்.

சின்னச் சின்ன பிழைகளைக் கண்டுபிடிக்க முடிவதன் ரகசியம், நான் ஸ்டைல் ஷீட்களை உருவாக்கி வைத்துக் கொள்வதுதான். நான் என் ஸ்டைல் ஷீட்களில் பைத்தியமாய் இருக்கிறவள். வார்த்தைப் பட்டியல், பாத்திரப் பட்டியல், இடப் பட்டியல் (நிஜ இடங்கள், கற்பனை இடங்கள்), காலவரிசை, பொதுவான ஸ்டைல் சீட், ஹைபன் பயன்படுத்திய இடங்கள், இன்னும் என்ன பட்டியல் தேவைப்படுகிறதோ அது என்று எதுவெல்லாம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள உதவுகிறதோ அதையெல்லாம் பட்டியல் போட்டு வைத்துக் கொள்கிறேன். தகவல்களை உடனுக்குடன் சரி பார்த்துவிடுவது என் வழக்கம், ஆனால் நேரமில்லை என்றால் பின்னர் சரி பார்க்க வேண்டியவை என்று ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொள்கிறேன். சில சமயம் கைப்பிரதியை பதிப்பாளரிடம் கொடுத்த பினன்ர்தான் இந்தப் பட்டியலைக் கையில் எடுக்க முடியும். அந்த சமயங்களில் புத்தகத்தை அச்சிடும் பதிப்பாசிரியர் சேர்க்க வேண்டிய திருத்தப் பட்டியல் என்று இதை அனுப்பி வைக்கிறேன் (ஹாஹா, வேறு யாராவது இந்தப் பத்தியை எழுதியிருந்தால், பட்டியல் என்ற சொல் இத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருப்பேன் – ஐந்து வாக்கியங்களில் ஏழு முறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்).

நான் மெல்ல வாசிக்கும் காரணத்தால், வலிமையான காட்சிப் புலன் உருவ தோற்றத்தை அளிக்கக்கூடிய சின்னச் சின்ன நுண்தகவல்களை என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது. எனவே படித்துக் கொண்டே போகும்போது, ஒரு வர்ணனை என் காணுருவுடன் முரண்படும்போது, திரும்பிச் சென்று சீர்குலைவு ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா என்பதைப் பார்க்கிறேன். நான் என் வாழ்வில் சந்தித்தவர்களைப் பற்றிய நுண்விவரங்களைவிட அதிக அளவில் நான் படி திருத்தம் செய்த பாத்திரங்களைப் பற்றிய நுண்விவரங்களை நினைவில் வைத்திருகிறேன்.

உங்கள் சந்தோஷத்துக்காகப் படிக்கும்போது காப்பி எடிட் செய்யும் மூளைக்கு ஓய்வு அளிக்க முடிகிறதா?

இல்லை அதை என்னால் செய்ய முடிவதில்லை. ஆனால் நம்பினால் நம்புங்கள், அந்த மன அமைப்போடு படிப்பது என் வாசிப்புக்கு இன்னும் சந்தோஷமளிப்பதாக இருக்கிறது. என் மகிழ்ச்சிக்காக வாசிக்கும்போது படியைத் திருத்துவது போன்ற நிதானத்துடன் நான் படிப்பதில்லை, ஆனால் நான் வழக்கமாவே வேகமாக படிப்பவள் அல்ல. ஒரு வாக்கியத்தை ஒரு தடவைக்கு மேல் வாசிப்பதுதான் அடிக்கடி நடக்கிறது, அப்புறம் முன்னும் பின்னும் சென்று அதைப் பிற வாக்கியங்களுடன் ஒப்பிடுவதும் என் வழக்கம்தான். படி திருத்தம் செய்யும்போது என்ன செய்கிறேனோ அதைத்தான் இப்போதும் செய்கிறேன். நான் எப்போதுமே ஒரு காப்பி எடிட்டராகதான் வாசித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படி திருத்தம் என்றால் என்ன என்று தெரிவதற்கு முன்னர்கூட இப்படிதான் வாசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் ப்ரூஸ்ட், என் இளம்பருவத்தில் நான் அவரது சில வாக்கியங்களைத் திரும்பத் திரும்ப வாசித்து, ஒவ்வொரு வார்த்தையும் பிற வார்த்தைகளுடன் எப்படிப்பட்ட தொடர்பு கொண்டிருக்கிறது என்பதையும், அவர் சொல்வதை நான் புரிந்து கொண்டிருக்கிறேனா என்பதையும் உறுதி செய்துகொள்வது வழக்கம்.

படி திருத்துவதும் உற்சாகமான ஒரு அனுபவமாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்….

ஆமாம்! எனக்கு வரும் கைப்பிரதிகளை வாசிப்பது எனக்கு எப்போதுமே விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பதிப்பாளர்கள் நான் வாசிக்கப் பிரமாதமான பட்டியல் ஒன்றை அளிக்கும் வகையில் என் தொழில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்.

எடிட்டிங்கைவிட வேகமாக வாசிப்பதை நான் தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனால் சில சமயம் இது சாத்தியமில்லை. கதை நம்மை உள்வாங்கிக் கொண்டுவிடும். மெல்லப் படிக்கும்போதும், முதல் முறை படிக்கும்போதும்தான் பல விஷயங்களை கவனிக்க முடியும். முதலிலேயே படித்துவிட்டால் அப்புறம் எல்லாவற்றையும் படி திருத்த நிதானமான வேகத்தில் திரும்பப் படிக்க வேண்டியிருக்கும். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பது முதலிலேயே தெரிந்து விடுவதால், கதையின் அந்தக் கட்டத்தில் வாசகனுக்குக் கிடைக்கக்கூடிய குறைந்த அளவு தகவல்களைக் கணக்கில் கொள்ளாத ஊகங்களை நான் செய்யக்கூடும்.

எது சரி, எந்த அளவு சுதந்திரம் எழுத்தாளனுக்கு உண்டு என்பதற்கிடையான டென்ஷன் இருக்கிறதா? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

காப்பி எடிட்டராக என் வேலை விதிகளை நடைமுறைப்படுத்துவது என்பதை விட, கைப்பிரதியில் வழக்கத்தில் இல்லாத பிரயோகம் இருப்பதை எழுத்தாளருக்குச் சுட்டிக் காட்டுவது, நிறுத்தற்குறிகள், பொது இலக்கணத்துடன் வேறுபடுவது இதெல்லாம் அறிந்தே செய்யப்பட்டதா என்று உறுதி செய்து கொள்வது, இதுதான் என் வேலை என்று நினைக்கிறேன். நான் ஒரு விஷயம் பற்றி கேள்வி எழுப்புவதால் அதை மாற்றியாக வேண்டும் என்று அர்த்தமல்ல என்பதைக் கேள்வி கேட்கும்போதே உணர்த்திவிட முயற்சி செய்கிறேன். எப்போதும் நான் ஏதாவது வினா எழுப்பும்போது, கூடவே “சும்மா செக் செய்யறேன்,”, “எனக்கு மட்டும்தான் இப்படி தோணலாம்”, “மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை” என்றெல்லாம் சொல்வது என் வழக்கம், இது உங்களுக்கே தெரியும். குறிப்பாக கவிதையை காப்பி எடிட் செய்யும்போது, “ஆமாம், அதைத் தெரிந்தேதான் செய்தேன்,’ என்று அதை எழுதியவர் சொல்லும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அவர் தான் எழுதுவது குறித்து நிறைய யோசித்திருக்கிறார் என்பதை அது காட்டுகிறது, இந்த விஷயத்தில் நான் இவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அர்த்தமாகிறது.

முழு பேட்டியும் இங்கு படிக்கலாம் – மில்லியன்ஸ் தளம்

தொடர்புடைய பதிவுகள்:

பதிப்பாசிரியப் பணி : ராபர்ட் காட்லீப் – நன்றி சொல்வனம்

கவிதையைத் திருத்தி எழுதுதல் : எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர் – நன்றி english.illinois.edu

கதைகளை எடிட் செய்தல் – ஆலிஸ் மன்ரோ – நன்றி Quill and Quire

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.