கதைகளை எடிட் செய்தல் – ஆலிஸ் மன்ரோ

ஆங்கில மொழியில் எழுதுபவர்களில் மிகத் துல்லியமாக எழுதுபவராக இருக்கக்கூடிய ஆலிஸ் மன்ரோ எழுதுவதையும் யாராவது எடிட் செய்ய முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நார்மன் மெய்லர் அல்லது சல்மான் ருஷ்டி முதலானவர்கள் நிறைய எழுதுபவர்கள். அவர்களைப் போல் ஒரு வாக்கியத்தையடுத்து இன்னொரு வாக்கியம் என்று எழுதிக் கொண்டே செல்பவர் அல்ல ஆலிஸ் மன்ரோ – எந்தச் சொற்கள் தேவையில்லை என்று தேர்ந்தெடுப்பவர் அவர், தான் எழுதியதை இன்னும் நறுக்கு தெறித்தாற்போல் கத்தரிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

ஆனால்கூட மன்ரோவுக்கு ஒன்றல்ல, மூன்று பதிப்பாசிரியர்கள் இருக்கின்றனர். மூவரும் அவரது ஆக்கங்கள் உருவாவதில் கைகொடுத்து உதவுகின்றனர்: ந்யூ யார்க்கரில் Deborah Treisman இருக்கிறார், அங்குதான் மன்ரோவின் கதைகளில் பலவும் பதிப்பிக்கப்படுகின்றன; McClelland & Stewartஐச் சேர்ந்த Douglas Gibson, Who Do You Think You Are?, என்ற 1978ஆம் ஆண்டு தொகுப்புக்குப்பின் அவரது கனடிய பதிப்பாசிரியராக இருக்கிறார், மன்ரோவின் நீண்ட கால அமெரிக்க பதிப்பாளர் Knopfல் Anne Close இருக்கிறார்.

மன்ரோவின் பதினான்காவது தொகுப்பான Dear Life, வெளியிடப்படுமுன் நான் க்ளோஸ் மற்றும் கிப்சன், இருவரிடமும் நேர்மையான, ஆனால் மரியாதைக்குறைவாக இருந்திருக்கக்கூடிய ஒரு கேள்வியைக் கேட்டேன்: நீங்கள் மூன்று பேரும் என்னதான் செய்கிறீர்கள்?

“நாங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை,” என்று சிரிக்கிறார் க்ளோஸ், “ஆலிஸ் எழுதும் கதைகளில் பலவும் இங்கு வந்தாலும் எங்களில் யாரும் ஒரு வார்த்தையைக்கூட தொடுவதில்லை. ஆனால் அவ்வப்போது கொஞ்சம் சிக்கலில் இருக்கும் கதை வரும், அப்போது எங்களில் ஒருவர் ஏதாவது சொல்வது பயன்படுவதாக இருக்கும்.”

ஒவ்வொரு கதையும் இந்த இரண்டில் ஒரு எடிட்டோரியல் பாதையில் செல்லும் என்கிறார் க்ளோஸ்: அது நியூ யார்க்கருக்கான கதை என்றால், முதலில் ட்ரைஸ்மானிடம் செல்கிறது. அந்த இதழில் அது பதிப்பிக்கப்படும்வரை க்ளோஸுக்கும் கிப்ஸனுக்கும் அது பார்க்கக்கூட கிடைக்காமல் போகலாம். அது ந்யூ யார்க்கர் கதையாக அல்லாதபோதோ, வேறெங்கோ செல்வதாக இருந்தாலோ, நேரடியாக க்ளோஸுக்கும் கிப்ஸனுக்கும் வாசிக்கச் செல்லும். அச்சாகும்வரை அது ட்ரைஸ்மானுக்கு வாசிக்கக் கிடைக்காது. இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும் இந்த இரு எடிட்டர்கள்தான் இறுதி முடிவெடுக்கின்றனர்.

பொதுவாகச் சொன்னால், பாத்திரப்படைப்பு, சொற்தேர்வு, கதைநுட்பம் போன்ற விஷயங்களில் மன்ரோவுக்கு எந்த உதவியும் தேவைப்படுவதில்லை. ஆனால் சிறுகதையின் வடிவம், தெளிவு குறித்து தன் பதிப்பாசிரியர்களிடம் கருத்து கேட்கிறார் அவர். தன் கதையின் பிரதியை இருவருக்கும் தபாலில் அனுப்பி வைக்கிறார் அவர். தங்கள் கருத்துகளை அதன் மார்ஜின்களில் பதிவு செய்து இருவரும் மன்ரோவுக்கும் பிற எடிட்டர்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்த மாற்றங்கள் குறித்து தொலைபேசியில் விவாதிக்கிறார மன்ரோ. இது பல முறை நடக்கிறது, பின்னர் அவர் தன் கதையின் இறுதி வடிவை எழுதி முடிக்கிறார்.

மன்ரோவின் தீவிர வாசகர்களுக்குத் தெரியும், அவரது தொகுப்புகளில் வெளியாகும் கதைகளைவிடக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவரது ந்யூ யார்க்கர் கதைகள் வேறுபடுகின்றன. ந்யூ யார்க்கர் இதழில் இத்தனை பக்கங்கள்தான் எழுத முடியும் என்ற கட்டுப்பாடு இருப்பதால் இந்தக் கதைகளில் பலவும் அளவில் சிறியனவையாக இருக்கின்றன, இந்த ந்யூ யார்க்கர் கதைகளில் கிப்ஸன் சில சமயம் கனடிய திருத்தங்கள் செய்வதுண்டு. காலேஜ் என்பது முதலில் இருந்தவாறே யுனிவர்சிட்டியாக மீண்டும் திருத்தப்படுவது போன்ற மாற்றங்கள் இவை. “The Progress of Love,” என்ற 1986ஆம் ஆண்டு தொகுப்பில் வந்த அதே பெயர் கொண்ட சிறுகதை போன்ற சில கதைகள் முழுமையாக திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன. முதலில் கதைசொல்லி நேரடியாகச் சொல்வதுபோல் எழுதப்பட்ட இந்தக் கதை ந்யூ யார்க்கருக்காக வேற்று நபர் குறித்துச் சொல்வதாகத் திருத்தப்பட்டது. இரு கதைகளையும் வாசித்த க்ளோஸ், முதலில் எழுதியதே நன்றாக இருக்கிறது என்று மன்ரோவிடம் சொன்னார். அந்தக் கதைதான் தொகுப்பில் இடம் பெற்றது.

இது போன்ற உதாரணங்கள் அபூர்வம்தான். பொதுவாக கதையின் முடிவுகள்தான் சொல்லத்தக்க வகையில் திருத்தி எழுதப்படுகின்றன. மன்ரோ எவ்வளவு வேண்டுமானலும் திருத்தி எழுதுவார் என்கிறார் க்ளோஸ். தான் எழுதிய கதைகளின் கடைசி பத்திகளை திரும்பத் திரும்ப யோசித்து அதிக அளவில் திருத்தங்கள் செய்பவர் அவர்.

“இந்த முடிவுகளை எழுத நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வார்,” என்கிறார் க்ளோஸ். இங்குதான் அவரும் கிப்ஸனும் மன்ரோவுக்கு அதிக அளவில் உதவியாக இருக்கின்றனர். “பல எழுத்தாளர்களும் இன்னதென்று தீர்மானமாகச் சொல்லாத வகையில் கதைகளை முடிப்பது வழக்கம், ஏனென்றால் இவ்வளவுதான் கதையா என்று நினைக்கும் வகையில் எழுத அவர்கள் விருமபுவதில்லை. எனவே, “இதற்கு என்ன அர்த்தம்?” என்று நான் கேட்பேன், அவர் இன்னும் கொஞ்சம் தெளிவான முடிவை எழுதும்வரை திரும்பத் திரும்ப அப்படி கேட்டுக் கொண்டேயிருப்பேன்”

ஒரு தொகுப்புக்குத் தேவையான அளவில் கதைகள் சேர்ந்ததும் – பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தொகுப்பு என்ற கணக்கில் – அடுத்து எடுக்க வேண்டிய முடிவு, கதைகள் எந்த வரிசையில் வர வேண்டும் என்பதுதான். சில சமயம் மன்ரோ முன்னதாகவே இதை முடிவு செய்து விடுகிறார். Dear Life என்ற தொகுப்பு போல் சில சமயங்களில் பரிந்துரைகளை வரவேற்கிறார். “To Reach Japan,” என்ற கதையில் ஆரம்பித்து, “முழுசாக-கதைகளாக-இல்லாத” பெரிதளவும் தன்னைப் பற்றிய நான்கு கதைகளுடன் தொகுப்பை முடிக்கவேண்டும் என்று மன்ரோவுக்கு முதலிலேயே தெரிந்து விட்டது. ஆனால் மற்ற கதைகள் குறித்து அவரால் தீர்மானிக்க முடியவில்லை. வெவ்வேறு விஷயங்களை முயற்சித்தபின், கிப்ஸன் பரிந்துரைத்த கதை வரிசை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தது.

பல சமயங்களில், அந்தத் தொகுப்புக்குப் பொருந்தாத ஒரு கதை இருக்கும். அது பின்னொரு தொகுப்புக்காக எடுத்து வைக்கப்படும். உதாரணத்துக்கு, “Wood,” என்ற கதை மூன்று தொகுப்புகளைக் கடந்து, 2009ல் வந்த Too Much Happiness என்ற தொகுப்பில் இடம் பெற்றது.

“அது பதிப்பிக்கப்படும் தரத்தில்தான் இருந்தது, ஆனால் அது எதிலும் பொருந்துவதாகவே இல்லை,” என்கிறார் க்ளோஸ். ஒவ்வொரு முறையும் மன்ரோ அதை இன்னும் கொஞ்சம் திருத்தி எழுதினார். “இப்படி அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது, கடைசியில் தொகுப்பில் இடம் பெற்றபோது அற்புதமான, அசாதரணமான கதையாக அது மாறியிருந்தது”.

அதன்பின் அடிப்படை விஷயங்கள்தான் – புத்தகத்தை டைப்செட் செய்வது, காப்பி எடிட் செய்வது, உள்ளட்டை வாசகங்களை எழுதுவது. இதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது, கதை நன்றாக வந்திருக்கிறது என்று உறுதி கூறுவதுதான் தங்களது பெரிய ஒரு பங்களிப்பு என்பதை கிப்ஸனும் க்ளோஸும் ஒப்புக் கொள்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், 1990களில் எழுதப்பட்ட “The Love of a Good Woman”என்ற கதை, சிறந்த கதைகள் கொண்ட தொகுப்பு ஒன்றில் அச்சாகும்போது அதன் சில பகுதிகளை மாற்றியமைப்பது குறித்து மன்ரோ பேசினார் என்று சொல்கிறார் க்ளோஸ்.

“நான் அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது, “இருக்கிறபடியே எல்லாம் நன்றாக இருக்கின்றன” என்று”.

நன்றி : Quill and Quire

தொடர்புடைய பதிவுகள்:

பதிப்பாசிரியப் பணி : ராபர்ட் காட்லீப்  – நன்றி சொல்வனம்

காப்பி எடிட்டரின் வேலை : சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் – இவற்றைச் சரிபார்த்தல் குறித்த நேர்முகம் – ஈடன் லெபுகி – நன்றி சலொன்

கவிதையைத் திருத்தி எழுதுதல் : எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர் – நன்றி english.illinois.edu

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.