உச்சத்தில் ஒரு கதவு: லோரி மோரின் A Gate at the Stairs

– அஜய் ஆர். – 

லோரி மோர் (Lorrie Moore) எழுதிய ‘A Gate at the Stairs’ நாவலின் ஆரம்ப பகுதியில், நாவலின் கதைசொல்லி டாஸி (Tassie), தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் தன் தம்பி ராபர்ட்டுடனான தன் உறவைப் பற்றி சொல்லும்போது, “in fact when I thought back to our many years together, he was, essentially, always nice to me,.. ” என்று முடிக்கிறார். ‘essentially’ , ‘nice’ என்ற இரு வார்த்தைகள்தான் இந்த வரியில் முக்கியம், பல ஆண்டு உறவின் சாரத்தை இந்த இரு வார்த்தைகளில் தந்து விடுகிறார். ஒருவருக்கொருவர் அதீத அன்போ, வெறுப்போ, போட்டி பொறமையோ (sibling rivalry) கொண்டுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லாமல், யதார்த்த அக்கா/ தம்பி உறவைச் சுட்டி செல்கிறார். முகத்திலறையும் சொற்விளையாட்டோ, புத்திசாலித்தனமோ இல்லாமல், வாசகனின் கவனத்திற்கு வர முனையாத உரைநடை நாவலின் முக்கிய அம்சம். பேச்சொலியில் வரும் ஏற்ற இறக்கங்கள், உரையாடலின் இடையே வரும் தயக்கங்கள், மௌனங்கள் மூலம் வாசகனுக்கு தெரிவிக்க வேண்டியதை நுட்பமாக சொல்லிச் செல்வது மோரின் பாணி.

9/11 நிகழ்வுக்குப் பிறகு அடுத்த ஒரு வருடம் டாஸியின் வாழ்வை இந்த நாவல் பதிவு செய்கிறது. 20 வயதான டாஸி ட்ராய் (Troy) நகரில் படிக்கிறாள். குடும்பம், சிறு கிராமம்/ டவுன் என்ற வட்டத்திலிருந்து வந்துள்ள அவளுக்கு வெளி உலகம் புதிதாக, புதிராக உள்ளது. சிறிய இடங்களிலிருந்து நகரத்திற்கு வரும் எந்தவொரு 20 வயதுடையவரைப் போலவும், தன் உடல், படிப்பு, எதிர்காலம், மற்றவர்களிடம் எப்படி பழகுவது என பல விஷயங்கள் குறித்து சற்றே சஞ்சலம் கொண்டவளாக இருக்கிறார். (I too often found myself having to do, to find a language, or even an octave in which to speak.”. )

சாரா, எட்வர்ட் (என்ற வெள்ளை இன) தம்பதியர் தத்து எடுக்கும் அமெரிக்க-ஆப்ரிக்க குழந்தைக்கு, குழந்தை- பராமரிப்பாளராக (baby sitter) பகுதி நேர வேலையில் சேர்கிறார். இந்த இடத்தில், ‘அட இது ஒரு இளம் பெண் தன்னைக் கண்டடையும் இன்னொரு ‘coming of age கதை’’ என்று வாசகன் எண்ணினால் அது ஓரளவிற்கே சரியாக இருக்கும். இது நாம் பொதுவாக அறிந்துள்ள ‘bildungsroman’ வகை நாவல் மட்டும் கிடையாது. இவற்றில் ஒரு இளம் வயது ஆண்/ பெண்ணின் முதல் தீவிர உறவு, குடும்பப் பொறுப்பு, எதிர்பார்த்திராத ஒரு தோல்வி (அது உறவிலோ/ படிப்பிலோ/ தன் ஆளுமை குறித்த ஒன்றை தானே உணர்ந்து கொள்ளுதல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) அதனால் வரும் முதிர்ச்சி என்று இருக்கும். அதே சமயம் ஒரு வகையில் இது அமெரிக்காவின் ‘coming of age’ நாவல் என்றும் சொல்லலாம். உலகின் மற்ற நாடுகள் தங்கள் நாட்டை வெறுக்கக்கூடும் என்பதை கற்பனைகூட செய்திராத, ஒரு நொடியில் தங்களின் ‘American Dream’ தவிடுபொடியாகிவிடும் என்று எண்ணியிராத, ஒரு நாட்டின்/ அதன் மக்களின் ‘coming of age’ நாவலும்கூட இது.

குழந்தை மேரியை கவனித்துக்கொள்ளும் பணியில் டாஸி பல புதிய/, தன்னைத் துணுக்குற வைக்கும் அனுபவங்களை, தான் பார்த்திராத சமூகத்தின் இன்னொரு பகுதியை அறிகிறாள். குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, காரில் செல்லும் இளைஞர் கூட்டம் ‘nigger’ என்று ஓலமிட்டு செல்கிறது. இதற்கு மாறாக சில நேரங்களில் டாஸியையும், குழந்தையையும் பார்த்தவுடன் வரும் எதிர்வினை வெளிப்படையாக இல்லை. அவர்கள் இருவரையும் மற்றவர்கள் பார்ப்பதைப் பற்றி,

“Few people were on the street, but the ones we passed smiled at me, then looked at Mary-Emma and then back at me, their expressions not exactly changed but not exactly the same: upon seeing us together, our story unknown but presumed, an observation and then a thought entered their faces and froze their features in place.”

என்று டாஸி சொல்கிறார். சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் கதையை, இந்த புத்தாயிரத்திலும், இனக்கலப்பு குறித்த ஒவ்வாமை இன்னும் உள்ளதை மேலே உள்ள பத்தி உணர்த்துகிறது.

இந்த மனிதர்கள்,’Ku Klux Klan’ போன்ற அமைப்புக்களை சேர்ந்தவர்களா? கிடையாது. இவர்கள் வெளிப்படையான இன/ நிற துவேஷம் கொண்டவர்கள் அல்ல. தங்களை இன/ நிறவெறி கொண்டவர்கள் என்று மற்றவர்கள் சொன்னால் அதிர்ச்சி அடைபவர்கள் இவர்கள். இருந்தும் ஒரு வெள்ளை இனப் பெண், ஒரு கறுப்பினக் குழந்தையுடன் செல்வதைப் பார்த்தவுடன் அவர்கள் கற்பனை தறிகெட்டு ஓடுகிறது. 9/11க்கு பிறகு மதவெறிக்கு எதிரான, சுதந்திர உலகிற்கான போரில் ஈடுபடுவதாகச் சொல்லும் நாட்டில் அவர்கள் குடிமக்களிலேயே ஒரு சாரார் நிறம் சார்ந்து வேறுபடுத்தப்படுவது நகைமுரண்தான். (ஒரு 20 வயது அமெரிக்க பெண்ணிற்கு, தன் நாட்டில் உள்ள நிறவேற்றுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதா என்று தோன்றலாம். டாஸி வெள்ளையர்களே உள்ள இடத்திலிருந்து வந்தவள் என்பதால், நிற வேற்றுமை குறித்து அவள் படித்திருந்தாலும்/ கேள்விப்பட்டிருந்தாலும், அதை அவள் இங்குதான் நேரடியாக பார்க்கிறாள் என்பதை நினைவுகொள்ள வேண்டும்).

டாஸியின் பார்வையிலேயே செல்லும் நாவலில், சாரா, எட்வர்ட் தம்பதியரும் அவர்களுக்குரிய வடிவம் பெறுகிறார்கள். எல்லோரையும் போல் சாதாரணமான தம்பதியராக அவர்கள் தோன்றினாலும், ஏதோ ஒரு பிரச்சனை அவர்கள் வாழ்வில் இருக்கலாம் என்று நமக்கு சுட்டப்படுகிறது. பிறகு தெரியவரும் விஷயம் நம்மை பதைக்கச் செய்கிறது. ஒருவர் சாதாரணமாகச் செய்யும் செயல், எண்ணியே பார்க்க முடியாத மோசமான விளைவை ஏற்படுத்தும்போது, அதை துரதிருஷ்டம் என்றோ விதி என்றோ தேற்றிக் கொள்ள நினைத்தாலும் அந்த விளைவுகளை நம்மால் மறக்க முடியாது இல்லையா? தங்களை மீறி நடந்த சம்பவத்தின்/ அதன் விளைவின் நினைவுகளை சிலுவைகளாக சுமந்து, ‘அப்படி நடந்திருந்தால்’, ‘நான் இப்படி செய்திருந்தால்’ என அதையே எண்ணி மருகி குற்றவுணர்வுடன் வாழ சபிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

‘ரெனோல்ட்’ என்பவருடன் டாஸிக்கு ஏற்படும் உறவு இன்னொரு கிளைக்கதை. ஆப்கானிய குழந்தைகள் நலனுக்காக செயல்படும் அறக்கட்டளையில் பங்கு வகிப்பதாக சொல்லும் ரெனோல்ட் பூடகமான பாத்திரமாக உள்ளான். அவனுக்கும் 9/11க்கும் சம்பந்தம் உண்டா (அவன் இல்லை என்கிறான்) போன்ற கேள்விகள் இருக்கின்றன. உலகறியாப் பெண் முதன் முதலில் ஒரு ஆணுடன் உறவு கொள்வது என்பதே இந்த இழையின் மையமாக இருந்திருந்தால் நாவலோடு ஒட்டி இருந்திருக்கும். ஆனால் அந்த ஆள் மர்ம ஆசாமியாக இருக்கலாம் என்பது போல் வரும் சம்பவங்கள் இந்த இழையை வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக கருதச் செய்கின்றன.

9/11இன் நிழல் நாவல் முழுதும் கவிகிறது, ஆனால் ‘The Terrorist’ (Updike) or ‘Falling Man’ (Don Dellilo) போல 9/11இல் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ, அதை அரசியல்/ சித்தாந்த ரீதியாகவோ இந்த நாவல் அலசுவதில்லை. 9/11ஆல் நேரடியாக சம்பந்தப்படாதவர்கள் கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாத சூழல் அமெரிக்காவில் ஏற்படுவதை நாவல் சொல்கிறது. 9/11 பற்றி கேள்விப்பட்டவுடன் ‘seemed both near and far’ என்று டாஸி நினைக்கிறார். வெகு சீக்கிரமே அது அவளுக்கு அருகில் வந்து விடுகிறது. 9/11ஆல் உண்டான paranoia எங்கும் பரவுகிறது. ஜனவரியில் விமானத்தில் அவள் செல்ல வேண்டிய சூழலில் அது கடத்தப்படுமோ என்று யோசிக்கிறார். ‘Arabic Princess’ என்ற தன் வாசனை தைலத்தின் பேரை சொல்ல விரும்பாமல், தெரியாது என்கிறார். அடுத்த ஆண்டு டாஸியின் ஊரில் அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் எப்போதும் நடக்கும் வாண வேடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தன் தம்பி ராணுவத்தில் சேர்ந்தவுடன் அவளுக்கு ஆப்கானிஸ்தான் பற்றித்தான் முதலில் தோன்றுகிறது.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், இது ஒரு போர் எதிர்ப்பு நாவலே. புஷ்ஷிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பற்றிய குறிப்புகள் போன்ற சம்பவங்கள் நாவலில் சொல்லப்படுகின்றன. நாவலின் இறுதியில் ஒரு காட்சியில் டாஸியும் அவள் பெற்றோரும், ஆப்கானிஸ்தானில் இறந்த, ராணுவத்தில் தானே சேர்ந்தவர்கள் (volunteers, இவர்கள் பெரும்பாலும் இளம் வீரர்கள்) பற்றிய செய்திக் குறிப்பை தொலைகாட்சியில் பார்க்கிறார்கள். இவர்களில் பலர் எந்த அரசியல் சித்தாந்தமோ, வல்லாதிக்க ஆசையோ, ஒரு குறிப்பிட்ட நாட்டினர் மீது வெறுப்போ கொண்டவர்கள் கிடையாது. 9/11க்கு பிறகு திணிக்கப்பட்ட தேச வெறி (jingoism), நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அச்ச உணர்வின் காரணமாக தூண்டப்பட்டோ, குறைந்த பட்ச ராணுவ சேவை செய்தால் கிடைக்கும் மேல் படிப்பிற்கான அரசாங்க சலுகைகளுக்காகவோ சேர்ந்தவர்கள். ஆப்கானிய மக்களைப் போலவே இவர்களும் ‘collateral damage’ ஆகவே அமெரிக்க அரசாங்கத்தால் கருதப்படுகிறார்கள்.

கடைசி 50-60 பக்கங்களில் மோர் நாவலை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார். இதில் ஒரு 10 பக்கங்களுக்கு, டாஸி தன் சிறு ஊரைச் சுற்றிச் செல்வதும். காடுகள் (woods), பண்ணைகள் பற்றிய விவரணைகளுமே வருகின்றன. வேறெந்த பாத்திரமோ, உரையாடலோ இல்லாமல் கோர்மாக் மக்கார்த்தி (Cormac McCarthy) நாவலின் வரும் நிலவியல் வர்ணனைங்கள் போல் உள்ளது (ஒரு வித்தியாசம், இந்த நிலவியல் வரண்டதோ/ மிகுந்த ஆபத்தானதோ இல்லை). இப்படி உரைநடையை அமைப்பது வாசகனின் கவனத்தை சிதறச் செய்து, அவனுக்கு அலுப்பூட்டக்கூடியது. ஆனால் இந்தப் பகுதியில் அப்படி எதுவும் நடப்பதில்லை.

நாவலின் பொதுவான இயல்புத்தன்மையோடு மாறுபட்ட, ‘இப்படி நடந்தது’ என்று கேள்விப்பட்டால் நாம் நம்பவே முடியாத, மிகையதார்த்த (surreal) விவரிப்பு என்று ஒதுக்கக்கூடிய ஒரு சம்பவம் நாவலில் உள்ளது. ஆனால் பாத்திரத்தின் மனநிலையோடு பொருந்திப் போவதாலும், அந்த சம்பவம் மிகையதார்த்த பாணியில் இருப்பதாலும் அதை இயல்பான மொழியில் சொல்லி உள்ளதால், கதையின் போக்கில் கச்சிதமாகப் பொருந்துகிறது. வெளிக்காட்டப்படாத பாசம், பிரிவின் சோகமாக மாறும்போது, என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும் என்று உணர்த்துகிறது. இந்த இறுதிப் பகுதியே, ‘ரெனோல்ட்’ கிளைக் கதையால் சற்றே தடுமாறும் நாவலை தாங்கிப் பிடிக்கிறது.

நாவலின் இறுதியில் ஒரு துயர சம்பவம் நடக்கிறது. அதற்கு டாஸி பொறுப்பில்லை என்பதும், அவர் அதை தடுத்திருக்க முடியாது என்றும் ஒரு பார்வையாளனாக வாசகனுக்குத் தோன்றினாலும், தான் தவற விட்ட ஒன்றுதான் அதற்கு காரணம் என்று டாஸி குற்ற உணர்வு கொள்வதை உணர முடிகிறது. இந்தக் குற்ற உணர்வு அவரை மனச்சோர்வுக்குள்ளாக்குகிறது. வெளியிலிருந்து ஒரு விஷயத்தை பார்த்து, அதை உணர்ச்சி வசப்படாமல் தர்க்க ரீதியாக பகுப்பாய்வு செய்வது எளிது, ஆனால் அந்த விஷயம் நம்முடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டதாக இருந்தால், அப்படி செய்வது எளிதில்லை அல்லவா, அப்படி பலரால் செய்யவும் முடியாது.

டாஸி சோர்வான மனநிலையுடன், தன் வாழ்வின் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு செல்வதுடன் நாவல் முடிகிறது. இதிலிருந்து அவர் மீள்வாரா, அல்லது சாரா/ எட்வர்ட் தம்பதியரைப் போல் நினைவுகளின் சிலுவையை சுமந்து கொண்டிருப்பாரா என்று வாசகனுக்கு தெரியாது. ‘coming of age’ என்பது பதின் வயது/ இருபதுகளின் ஆரம்பத்தில் ஒருவர் எதிர்கொள்ளும், வாழ்க்கை குறித்த அவரின் பேதைமையை நீக்கி , அவரை மாற்றும் அனுபவங்களைக் குறிப்பிட்டாலும், அதற்குப் பிறகு அவர் மாறவே மாட்டார் என்று அர்த்தமில்லை. அவர் யதார்த்த உலகில் முதல் காலடியையே எடுத்து வைக்கிறார், இன்னும் பல அனுபவங்கள் அவருக்காக காத்திருக்கின்றன. அந்த அனுபவங்களும், அதற்கான அவரின் எதிர்வினையும் அவருடைய ஆளுமையை விரிவாக்கவோ அல்லது உட்சுருங்கச் செய்யவோ ஆற்றல் படைத்தவையாகயும் இருக்கக்கூடும். ‘தன்னைக் கண்டடைந்தல்’ என்பது ஒரு முடிவுறாத பயணம் அல்லவா. டாஸியும் அவருடைய இப்போதையை மன நிலையிலிருந்து மீளக்கூடிய காலம் வரும் என்று நம்பலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.