புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்

பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது. இது மூன்றையும் முறையே அகவெதிர்வினை, அறிவெதிர்வினை, அறவெதிர்வினை (emotional response, intellectual response, moral response) என்று சொல்லலாம்.

மூவகைப்பட்ட எதிர்வினைகளும் நம் அனைவருக்கும் சாத்தியமாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலனவர்கள் இவற்றில் ஏதோ ஒரு இடத்தில் நின்றுவிடுகிறோம். எனக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் அது குறித்து என்ன சொன்னாலும், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போல் எனக்குப் புரியாத கதையைப் பற்றி எத்தனை விளக்கம் கொடுத்தலும் அதை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பாது. வன்முறை, காமம், சில அரசியல் சார்புகள் எனக்குப் பிடிக்காவிட்டால் அதைப் பற்றி எழுதப்பட்டவை எவ்வளவு அறிவார்ந்து இருந்தாலும், அவற்றில் உணர்வுகள் எவ்வளவு மெய்ம்மையுடன் வெளிப்பட்டிருந்தாலும் என்னால் அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள முடியாது.

இது போன்ற சமயங்களில் என்ன நடக்கிறதென்றால், பிற படைப்புகளில் என்ன குறை இருந்தாலும் பெரிது பண்ணாமல் விட்டு விடுகிறோம்.​ ஆனால் இத்தகைய படைப்புகளில் நமக்கு ஒவ்வாத அந்த ஒரு விஷயத்தையே பெரிது பண்ணிக்கொண்டு இருப்போம், அதையே மையமாக எடுத்துக் கொண்டு பேசுவோம்.

பிடித்த ​கதை, புரிந்த கதை, ஏற்றுக்கொள்ளக்கூடிய கதைகளை அது சம்பந்தமாக என்ன வேண்டுமானாலும் சொல்லி, எத்தனை வேண்டுமானாலும் பாராட்டிக் கொள்ளலாம். தவறில்லை, காரணம் நாம் புத்தகங்களை வாசிப்பதும் அவற்றை விவாதிப்பதும் இது போன்ற நேசத்துக்குரிய கணங்களுக்காகத்தான். எனவே எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். ஆனால், நமக்குப் பிடிக்காதது, புரியாதது, நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததை​ அணுக ஒரு புறவய கோட்பாட்டு பார்வையை உருவாக்கி வைத்துக் கொள்வது உதவியாக இருக்கலாம்.

எந்த ஒரு எழுத்தாளனும், அவன் எவ்வளவுதான் ‘மோசமாக’ எழுதியிருந்தாலும், அதைத் தன் அகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து உங்களிடம் தருகிறான். நாம் நம் அகத்திலிருந்து கொஞ்சமாவது வெளியே போய் அதை ஏற்றுக்கொள்வதுதானே மனிதனுக்கு மனிதன் அளிக்கக்கூடிய மரியாதை? நம் விருப்பு வெறுப்புகள், சார்பு சார்பின்மைகளைப் பொருட்படுத்தாத புறவய கோட்பாடுகள் ஒரு பாலமாக இருக்கும்.

ஆம்னிபஸ் தளத்தில் இத்தகைய ஒரு புறவய அணுகலுக்கான அடிப்படை அனுமானங்களைக் காண நேர்ந்தது. இந்த விஷயங்களை எடுத்துச் சொன்னாலே ஒரு நல்ல விமரிசனத்துக்கு துவக்கப்ப்புள்ளி வைத்தது போல் இருக்கும்.

​”எது இலக்கியம் என்பதை இப்போதெல்லாம் யாரும் அவ்வளவு தீவிரமாக வரையறுக்க முயற்சி செய்வதில்லை – இது இலக்கியம் என்று கொண்டாடப்படும் படைப்புகளைக் கொண்டு எதுவெல்லாம் இலக்கியம் என்று நாமேதான் ஓரளவுக்காவது அனுமானித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

“​முதலாவதாக, அர்த்தமுள்ள ஆவணப்படுத்துதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது. அது மட்டும் போதுமா என்றால், இல்லைதான், ஆனால் முதல்நிலையில் இலக்கியமாகப் பேசப்பட அதுவே போதுமானதாக இருக்கிறது. இராண்டாவதாக, ஒரு படைப்பைப் படித்தபின் அதைப் பற்றி எவ்வளவு பேசியும் தீராமல், தொடரும் வாசிப்புக்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் படைப்புகள் இலக்கியமாக வகைமைப்படுத்தப்படுகின்றன, எளிய தீர்வுகளை அளிக்க மறுக்கும் இவற்றில் வெளிப்படும் சிக்கலான கதையமைப்பு வெவ்வேறு வாசகர்கள் விமர்சகர்கள் பார்வையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது​”​.

இலக்கியத்தை ஒரு தேடலாகக் கொண்டால், மெய்ஞான மரபுகளின் மொழியைக் கடன் வாங்கி, இத்தகைய விமரிசனம் காண்பான், காட்சி, காட்சிப்பொருள் என்னும் மூவகை மருள் நிலைகளின்மீது ஒளி பாய்ச்சுகிறது என்று சொல்லலாம். எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை அவனது எழுத்தில் அடையாளப்படுத்துதல் காண்பானின் மெய்ம்மையை நிறுவுவதாகவும், படைப்பின் இயல்பை விவாதித்தல் காட்சியின் மெய்ம்மையை நிறுவுவதாகவும், படைப்பு எத்தகைய ஆவணமாக இருக்கிறது என்ற விவாதம் காட்சிப்பொருளின் மெய்ம்மையை நிறுவுவதாகவும் இருக்கும்.

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் நம்மை இணக்கமான உணர்வுநிலையில் ஆழ்த்தாத படைப்புகளை முழுமையாக நிராகரிப்பதைத் தவிர்க்க உதவும் இது. நாம் நேசிக்கும் சக நண்பர்கள் நேசிப்பனவற்றை இருவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் சந்திக்க இது ஒரு பயனுள்ள அணுகுமுறையாக இருக்கலாம். இலக்கியம் என் உணர்வுகளை நான் அறியச் செய்கிறது என்பது அதன் வசீகரம் என்றால், பிறர் உணர்வுகளுக்கான வாசலாகவும் இருக்கிறது என்பதுதான் அதன் வரம். எனக்காக இல்லாவிட்டாலும், நான் மதிக்கும் என் நண்பர்களுக்காக, அவர்களின் ரசனையையும் உணர்வுகளையும் அவர்களின் வாழ்வனுபவங்களையும் வாசிப்பனுபவங்களையும் அங்கீகரிக்கவும் ஆலோசிக்கவும் நான் இதைச் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.

ஆனால் இதில் உள்ள பிரச்சினை, visceral விலகல் அளிக்கும் படைப்புகளுக்கு அணுக்கமாக நாம் பேச வேண்டியிருக்கும் என்பதுதான்.

உதாரணத்துக்கு, மார்க்சிய/ முதலிய விமரிசனப் பார்வையை ஆவணப்படுத்தும் ஒரு புத்தகம் இருந்தால், நான் அது நமக்கு எப்படிப்பட்ட சித்திரத்தைக் கொடுக்கிறது என்று எழுத வேண்டும்- மார்க்சியம்/ முதலியம் குறித்து எனக்கு எதிர்மறை விமரிசனங்கள் இருந்தால், இதைச் செய்யும்போது நான் மார்க்சியம்/ முதலியத்தின் மெய்ம்மையின் உட்சென்று விசாரிக்க முயற்சிக்க வேண்டும். அதைத் திட்டுவதில் கிடைக்கும் திருப்தி எனக்கு இதில் இருக்காது. என்னால் சில சிக்கல்களையும் முரண்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது, சில பார்வைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையெல்லாம் ​செய்து, அதன்பின் அந்தப் படைப்பை விமரிசித்து எழுதினால் அது ஒரு நல்ல விமரிசனமாக அமையலாம் – இந்த விமரிசனம் விமரிசகனின் மருள்களின் வெளிப்பாடாக இருக்கக்கூடும் என்பதால் இதுவும் ஒரு குறைபட்ட ஒரு அணுகலாகவே முடியலாம். என்றாலும்கூட மெய்ம்மையை நோக்கிய பாதையில் இது ஒரு சிறு முன்னேற்றமாக இருக்கும். ஆனால் அதற்கு கொஞ்சம் உழைக்க வேண்டும், என்னைவிட்டு வெளியே வரவேண்டும்.​ இவை அனைத்தையும்விட, மட்டையடியாக நிராகரிக்கும் திருப்தி இதில் இருக்காது.

ஒருவரின் படைப்பில் வெளிப்படும் இயல்புகளை அங்கீகரித்து, அதை விமரிசிக்கும்போது என் விமரிசன மூன்றாம் கண்ணை கொஞ்சம் மூடி வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிடிக்காததை பிடிக்கவில்லை என்று சொல்ல இத்தனை கஷ்டப்பட வேண்டுமா, அதைவிட ஒரேயடியாக நிராகரித்தால் வேலை முடிந்துவிடுகிறது என்றால், நாம் நம் நண்பர்களைச் சந்திக்கும் இடம் இல்லாமல் போகிறது என்று பொருள். தனியாக சொப்பு வைத்துக் கொண்டு விளையாடும் சிறுபிள்ளைகள் ஆவோம் நாம்.

– பலவேசம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.