கவியின்கண் – 10 : “விலை, மதிப்பல்ல.”

– எஸ். சுரேஷ் –

‘தன்விபரக் குறிப்பு எழுதுதல்

என்ன செய்ய வேண்டும்?
விண்ணப்பப் படிவத்தை நிரப்பி
தன்விபரக் குறிப்பு இணைக்க வேண்டும்.

எத்தனை காலம் வாழ்ந்திருந்தாலும்
தன்விபரக் குறிப்பு சுருக்கமாய் இருத்தல் நலம்.

திட்டமான, தேர்ந்தெடுத்த தகவல்கள் அவசியம்.
நிலத்தோற்றத்தின் இடத்தில் முகவரிகள்,
தடுமாறும் நினைவுகளுக்கு, அசைக்க முடியாத தேதிகள்.

உன் அத்தனை காதல்களிலும் திருமணத்தை மட்டும் குறிப்பிடு.
உன் அத்தனை குழந்தைகளிலும், பிறந்தவை மட்டும்.

உனக்குத் தெரிந்தவர்களைவிட உன்னைத் தெரிந்தவர்கள் முக்கியம்.
வெளிநாடு போனால்தான் பயணம்.
எதில் நீ அங்கத்தினன், ஏன் என்பது வேண்டாம்.
பட்டங்கள், அவை பெறப்பட்ட விதம் வேண்டாம்.

உன்னுடன் நீ உரையாடிக்கொண்டதே கிடையாது போலும்.
உன்னை நீ கைக்கெட்டா தூரத்தில் நிறுத்தி வைத்தது போலும் எழுது

அமைதியாய் கடந்து செல், உன் நாய்கள், பூனைகள், பறவைகள்
தூசு படிந்த நினைவுப் பொருட்கள், நண்பர்கள், கனவுகளை.

விலை, மதிப்பல்ல,
பட்டம், உள்ளடக்கமல்ல
காலணியின் அளவு, போகுமிடம் அல்ல,
நீயாகக் காட்டிக்கொள்ளும் அவன்.

கூடுதலாக, ஒற்றைக் காதுடன் ஒரு புகைப்படம்.
அதில் என்ன விழுகிறது என்பதல்ல, அதன் உருவம்தான் முக்கியம்.
ஏன், கேட்பதற்குத்தான் அப்படி என்ன இருக்கிறது?
காகிதங்களைச் சிதைக்கும் எந்திரங்களின் ஓசை.

By Wislawa Szymborska
Translated by S. Baranczak & C. Cavanagh
Copyright © Wislawa Szymborska, S. Baranczak & C. Cavanagh

போலந்து மக்களுக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதை நம் நாட்டில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்பவர்கள் பலரையும் இது நமக்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறதே என்று நினைக்கச் செய்யும், அதிலும் குறிப்பாக ஐடி மக்களை. இந்தக் கவிதையைப் பெரிய அளவில் விளக்க வேண்டிய தேவை எதுவுமில்லை, இதெல்லாம் நாம் அறிந்ததுதான். ஆனால் ரெஸ்யூம் ஏன் தேவைப்படுகிறது என்பது பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அது நவீன வாழ்வின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

மார்க்கெட்டிங்கில் இருப்பவர்கள், “பர்சப்ஷன்தான் உண்மை” என்று திரும்பத் திரும்பச் சொல்வதை, நல்லதும் கெட்டதுமாகப் பல அனுபவப் படிப்பினைகளுக்கு அப்புறம்தான் சாதாரண மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஒரு மனிதன் இப்படிப்பட்டவன் என்று நாம் எப்படி அறிகிறோம்? இது கொஞ்சம் சிக்கலான விஷயம். அவன் எப்படி பழகுகிறான், எப்படி நடந்து கொள்கிறான், பின்னணி என்ன, உள்ளரசியல் என்று இப்படி பல காரணிகள் போதாதென்று அவனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களும் இதைத் தீர்மானிக்கின்றன.

காலம் செல்லச் செல்ல இது மேலும் சிக்கலாகிறது, நம்மோடு பழகுபவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நம் மீது தாக்கம் செலுத்துகிறது. இதனால் நாம் நம்மைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறோம், இதைப் பார்த்து பிறர் தங்கள் எண்ணங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறார்கள். இது இப்படியே தொடர்கிறது. சுருக்கமாகச் சொன்னால், குறிப்பிட்ட வயதுக்குப்பின், நாம் நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ, அதுவே நம் வாழ்வின் மையமாகிறது. இந்தக் காலத்தில் இந்தப் பிரக்ஞை மிக முக்கியமாக இருக்கிறது. இது ஏன் என்று பார்க்க நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நம் பெற்றோரும் தாத்தாக்களும் அவர்கள் ஒரு அரசுப்பணியில் அமர வேண்டுமென்றோ பொது நிறுவனமொன்றில் புக வேண்டுமென்றோ ஆசைப்பட்டனர். அந்த வேலை கிடைத்ததும் ஒரு நிலையான குடும்பத்தை உருவாக்கி குழந்தைகளை நல்லபடி வளர்க்க வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்தது. ரொம்பவும் துணிச்சலாக ஆசைப்படுவதானால், அவர்கள் ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டனர். இதில் சில பேர் தங்கள் குழந்தைகள் வெளிநாட்டில் படித்து அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று விரும்பினர். இதில் சில பேர்தான் வெற்றி பெற்றனர்.

தொண்ணூறுகளின் மத்திய ஆண்டுகளில் காலம் மாறியது, சம்பளம் விண்ணைத் தொட்டது. இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்கத்தில் ஐடி புரட்சி வந்தேவிட்டது, அது அமோக வெற்றி பெற்றுத் தன்னிடத்தை நிறுவிக் கொண்டது. முப்பது ஆண்டுகள் ஒரே வேலையில் இருந்து அப்பாக்கள் சம்பாதித்த பணத்தை முப்பத்து ஐந்தாவது வயதில் பிள்ளைகள் தொட்டனர். வீடு கட்டுவது வாடிக்கையானது. ஒரு காலத்தில் கனவில் மட்டுமே கார் ஓட்டும் நிலைமை மாறி, அதுவும் ஒரு அத்தியாவசியத் தேவையானது. மனைவி வேலைக்குப் போனால் இரண்டு கார்கள் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் போனது. மேற்படிப்புக்கு வெளிநாடு போன காலம் போய், வேலை செய்ய வெளிநாடு போன காலம் வந்து விடுமுறைகாலச் சுற்றுலாவுக்கு வெளிநாடு போகும் காலமும் வந்தது. மத்திய வர்க்கத்துக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே உலகம் தலைகீழானது. நியாயப்படி பார்த்தால் இதெல்லாம் நம் அனைவரையும் சந்தோஷப்பட வைத்திருக்க வேண்டும். ஆனால் வளம் கொழிக்கும் காலமும் வேதனைகளைக் கொண்டு வராமல் இல்லை – ஐடி புரட்சியில் துவக்ககால பங்கேற்பாளர்கள் இந்த உண்மையை இப்போதுதான் மெல்ல மெல்ல கற்கத் துவங்கியிருக்கின்றனர்.

ஐடி புரட்சியின் காரணமாக பணம் வெள்ளமாய் நம் பக்கம் புரண்டு வந்தாலும், பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்தால் நாளுக்கு நாள் இதயங்கள் வற்றிப் போவதைதான் பார்க்கிறோம். ஒரு காலத்தில், ஏதோ குடும்பம் என்று ஒன்று நடத்தி, பிள்ளைகளைப் படிக்க வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் போதும், பெற்றோர்களின் கடமையை நல்லபடியாய் நிறைவேற்றிய திருப்தி இருந்தது. இதெல்லாம் போதாதென்று வீடு கட்டும்போது மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருந்த நாட்களில் இதுவே ஒரு மாபெரும் சாதனையாக இருந்தது. ஆனால் இப்போதுதான் எல்லாம் கிடைக்கிறதே, இது எதற்கும் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. இன்று வெற்றியின் அடையாளங்கள் இவையல்ல. இதெல்லாம் சின்னச் சின்ன மைல்கற்கள், மாபெரும் சாதனைகளை நோக்கிச் செல்லும் பாதையில் நாம் கடந்தாக வேண்டிய நினைவூட்டல்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக. இந்தச் சாலை எங்கு செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலைமையில், எல்லாருக்கும் எல்லாம் இருக்கும்போது உன் கூடையில் பாதிதான் இருக்கிறது என்றால் உன்னை மற்றவர்கள் தோற்றுப் போனவன் என்றுதானே பார்க்கிறார்கள்?

ஒரு பக்கம் பார்த்தால் வேலை செய்யும் இடத்தில் உயரே செல்வதற்குத் தேவையான தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள நீங்கள் கடுமையாக உழைத்தாக வேண்டும். மறுபக்கம் சமுதாய அழுத்தம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி உங்கள் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. தொழிலில் ஒரு குறிப்பிட்ட உயரமாவது போக வேண்டும், இல்லாவிட்டால்நாம் தோற்றுப் போய் விட்டதாக பிறர் நினைத்துக் கொள்வார்கள் என்ற ஒரு அச்சம் நமக்கு எப்போதும் இருக்கிறது. இதனால் தங்கள் வேலை விஷயத்தில் பலரும் முக்கியமான திருப்புமுனை முடிவுகளை எடுக்கிறோம். ஏதோ கொஞ்ச தூரம் ஓடினோம், சிலரைத் தாண்டினோம் என்று வெற்றிக் கோட்டைத் தொட்டதும் நின்றுவிடக் கூடிய ஓட்டமல்ல இது. எத்தனை பேரைத் தாண்டிச் சென்றாலும் இன்னும் சில பேர் முன்னால் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தச் சிக்கலை நாம் வெவ்வேறு வகைகளில் எதிர்கொள்கிறோம். ஓட்டப்பந்தயத்தைவிட்டு விலகுவதாக முடிவெடுப்பது ஒன்று. இருப்பதே போதும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. ஆனால் இவர்களுடன் பேசும்போது இவர்களில் பலருக்கும் மனவருத்தம் இருப்பதை இவர்கள் குரல்கள் காட்டிக் கொடுக்கின்றன. வாழ்க்கையை ஏற்றுக் கொண்டேன் என்பதை என்னவோ எல்லாம் பறிகொடுத்தது போன்ற ஒரு விரக்தியோடு சொல்கின்றனர். ஏதோ பரபரப்பாக கொஞ்சம் தூரம் ஓடினால் போதும் என்று நினைத்துக் கொண்டு களத்தில் குதித்தவர்கள் இவர்கள். இது தொலை தூர ஓட்டம் என்று புரிந்து, போதும் என்று நின்றுவிட்ட போதும், வெளியேறும் வாசல்கள் மிகக் குறைவு என்றும் அந்தப் பக்கம் போவதே பயங்கரமாக இருக்கிறது என்றும் இப்போதுதான் புரிகிறது. எனவே நாம் ஓடும் வேகத்துக்கு நம்மைப் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள் என்று பயந்துகொண்டே ஓட்டத்தைத் தொடர்கின்றோம். ஈகில்ஸ் இசைக் குழுவினர் ஹோட்டல் கலிஃபோர்னியாவில் சொன்னது போல், “You can check out any time you want but you can never leave”. சில பேருக்குதான் தங்கள் அச்சங்களை மீறி வெளியேறும் துணிச்சல் இருக்கிறது.

வேறொன்றும் செய்யலாம். என் வேலையை வைத்து என்னை எடை போட வேண்டாம் என்று சொல்லலாம்: நான் ஒரு போட்டோகிராபர், கலைஞன், பாடகன், நடிகன், என்று இப்படி. இது நமக்கு இன்னொரு பரிமாணம் சேர்க்கிறது என்பது மட்டுமல்ல, ஐயோ பாவம் இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு இந்த வேலையில் சிக்கிக் கொண்டு விட்டானே இவன் என்ற இரக்கத்தையும் இது போன்ற ஒரு பாவனை பெற்றுத் தரலாம். ஏதோ நான் விரும்புவதைச் செய்ய மட்டும்தான் என் சம்பாத்தியம் என்னை அனுமதிப்பது போலவும், என் வேலையை வைத்து என்னை எடை போடாமல் அதைத் தாண்டி எல்லாரும் பார்க்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றத்தை என்னால் ஏற்படுத்த முடிகிறது.

திறமைசாலிகள் சிலருக்கு இதெல்லாம் சரியாக இருக்கும், ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதெல்லாம் வேலைக்காகாது. வேலையிலும் சராசரி, ஆர்வம் காட்டும் விஷயத்திலும் சராசரி என்பது அவ்வளவு நல்ல நிலையல்ல. எந்த ஒரு விஷயத்தையும் நேசிப்பது என்றால் அதற்கு ஏராளமான நேரமும் ஆற்றலும் செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும். என்னதான் ஆர்வம் இருந்தாலும் வேலையை விட்டுவிட்டு பிடித்த காரியத்தில் முழுமூச்சாக இறங்குவது எல்லாராலும் முடியாது. அதே சமயத்தில் ஒரு வேலையைச் செய்துகொண்டே இன்னொரு விஷயத்தில் கவனம் செலுத்துவதும் எளிதல்ல – முழு கவனத்துடன் அதில் ஈடுபட முடியாததால் ஏதோ ஒரு கட்டத்தில் சராசரித்தன்மை வந்துவிடுகிறது. நவீன மனிதன். எத்தனை பணம் இருந்தாலும், திரிசங்கு சொர்கத்தில்தான் இருக்கிறான்.

இந்தக் கவிதையில், எதெல்லாம் உங்கள் தன்விபரப் பட்டியலில் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறதோ, அதெல்லாம்தான் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. சென்ற பதிவில் சொன்னதைதான் சொல்கிறேன், விஸ்லாவா சாதாரண கவிஞரல்ல. அவர் எளிய சொற்களைப் பயன்படுத்துகிறார், ஆனால் ஒவ்வொரு சொல்லையும் துல்லியமாகப் பயன்படுத்துகிறார். எளிய சந்தோஷங்களைத் தன் வாழ்விலிருந்து நீக்கி, தன்னை வெற்றி பெறத் தகுந்தவனாகக் காட்டிக்கொள்ளச் சொல்கிறது கவிதை. இதில் எவையெல்லாம் இழக்கப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டிக் காட்டி இப்படிப்பட்ட அணுகுமுறையில் உள்ள குறையை உணர்த்தி எச்சரிக்கிறார். அவருக்குத் தெரியும், நமக்கும் தெரியும், காலம் அனைத்தையும் சிதைக்கிறது.

இந்தப் புரிதல் ஏற்பட்டால், நாம் நம்மைக் குறித்து எழுதக்கூடிய தன்விபரக் குறிப்பு இதுபோல் இருக்காது.​

தமிழாக்க உதவி : பீட்டர் பொங்கல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.