அதிநாயகர்களின் அந்திப்பொழுது – டெபோரா ஐஸன்பெர்க்

– அஜய் ஆர். – 

டெபோரா ஐஸன்பெர்க் கதைகள் சிறுகதைகள் என்று குறிப்பிடப்பட்டாலும், அவை கால/ பக்க அளவில் நெடுங்கதைகளே. 30-50 பக்கங்கள் நீளும் கதைகள் என்பதால், ஓர் புள்ளியில் இருந்து ஆரம்பித்து நேர்கோட்டில் சென்று கச்சிதமாக முடியும் கதைகள் அல்ல இவை. ஒரு கதையில் பல இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கதைகளில் பல இழைகள் இருந்தாலும் வாசிக்கத் துவங்கியதும் விரைவிலேயே பாத்திரங்களுடன் நமக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் நம் வீட்டு சன்னல் வழியாக தினமும் நாம் பார்க்கும் அண்டை வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் போல் பழகியவர்களாகி விடுகின்றனர். நமக்கு இவர்களை நன்றாகத் தெரியும், எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வோம். ஆனால் இந்த அறிமுகம் புகைமூட்டத்தின் ஊடே ஒருவரை பார்ப்பது போல்தான், இவர்கள் யார், என்ன வேலை செய்கிறார்கள் என்ன என்பது போன்ற விவரங்களை நம்மிடம் யாராவது கேட்டால் ஊகத்தால்தான் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இது போல்தான் இவரது கதைகளும். வாசித்து முடிக்கும்போது நாம் கதாபாத்திரங்கள் பற்றி அறிந்திருந்தாலும், பல விஷயங்களை நம் கற்பனையைக் கொண்டுதான் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கதையின் முடிவைத் தாண்டி நம் எண்ணம் பயணித்து வாசகன் பார்வையில் கதை தொடர்கிறது. “அதிநாயகர்களின் அந்திப்பொழுது” (Twilight of the Superheroes), என்ற இவருடைய நான்காவது தொகுப்பில் உள்ள கதைகளுக்கும் இது பொருந்தும்.

“இதைவிட நல்ல, வேறொரு ஓட்டோ” (‘Some Other, Better Otto’) என்ற சிறுகதைதான் இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாக இருக்கிறது. வழமையான ஐஸன்பெர்க் மோஸ்தரில் இந்தக் கதை தன் துணைவனுடன் கடந்த 25-30 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தற்பாலின விழைவு கொண்ட ஓட்டோவின் வாழ்வில் சில நிகழ்வுகளை விவரிக்கிறது. இதில் கதை என்று சொல்ல எதுவுமில்லை.

பல சகோதர சகோதரிகள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் ஓட்டோவும் ஒருவன். அவனது கதையைச் சொல்லும்போதே விளிம்பில் அவனது சகோதரிகளில் ஒருவரான ஷரோனின் கதையும் பேசப்படுகிறது. அவளுடைய அறிவே அவளுக்கு எதிரியாக இருக்கிறது – வெகு நாட்களாக யாருடனும் பழகாமல் அவள் ஒதுங்கி வாழ்வதாகத் தெரிகிறது. மூன்று முறை மணம் செய்து கொண்ட, இன்னும் இரண்டு மூன்றுக்கு அடி போடுகிற அவனது சகோதரன் குடும்பத்தில் மற்றவர்களால் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறான். ஆனால் வாழ்க்கை முழுவதும் ஒரே துணைவனுடன் வாழ்ந்து வரும் ஓட்டோவும் அநியாயத்துக்கு அறிவாளியாக இருக்கிற ஷரோனும்தான் மற்றவர்களால் ஒரு மாதிரி பார்க்கப்படுகிறார்கள்.

பெரும்பான்மையினருக்கு ஏற்ப வாழ்வதுதான் நல்லது, விளிம்புக்குப் போனால் பிரச்சினைதான். நீ எதுவும் தப்பு செய்திருக்க வேண்டும் என்றுகூட இல்லை, நீ சற்றே வேறுபட்டு இருந்தால் உன்னை உன் குடும்பத்தினரே ஒதுக்கி வைத்து விடுவார்கள். அல்லது ஓட்டோவுக்கு அவனது குடும்பத்தில் நிகழ்வது போல் நீயும் பரிதாபத்திற்குரியவனாக, பெரிய தவறு செய்யாதிருந்தாலும் மன்னிக்கப்பட வேண்டியவனாகப் பார்க்கப்படுவாய். ஏதோ அவர்கள் ஒரு உயர்ந்த பீடத்தில் இருந்துகொண்டு உன்னை சகித்துக்கொள்வதை போல் நடந்து கொள்வார்கள் (condescending attitude).

வேற்றுபாலின இல்லறத்தில் உள்ள தினப்படியான சராசரி பிரச்சினைகள் ஓட்டோவின் சுயபாலின இல்லறத்தில் சில காட்சிகளையும், (துணைவனுக்கும் அவனுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள், சிறு சிறு ஊடல்கள் போன்ற இரு பால் உறவில் நிகழும் சம்பவங்கள்), ஆசிரியர் நமக்கு அளிக்கிறார். பாலினத்தை தவிர இவர்களின் வாழ்க்கை இருபால் இல்லறத்தில் இருக்கும் மற்றவர்களைப் போன்றே உள்ளது, ஏன் இந்த ஒரு சிறு வேற்றுமைக்காக இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று நம்மை எண்ண வைக்கும் கதை. இவரின் சிறந்த கதைகளின் தொகுப்பு ஒன்று வந்தால் இந்த கதை கண்டிப்பாக அதில் இருக்கும்.

உரையாடல்களை எவ்வளவு நன்றாக எழுதுகிறாரோ, அதே அளவுக்கு நன்றாக காட்சிகளையும் நுட்பமான உணர்த்துதல்களையும் நிகழ்த்திக் காட்டுகிறார். இவரது கதைகளில் உரையாடல்கள் எந்த பாவனையுமில்லாமல் வாழ்க்கையில் நாம் பார்த்துப் பழகியது போலவே இயல்பாய் இருக்கின்றன- இரண்டு பேர் பேசிக்கொள்ளும்போது ஏற்படும் இடைவெளிகள், பேசிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று ஒரு கணத்தில் மேலே எப்படி, என்ன பேசுவது என்று தெரியாமல் ஏற்படும் மௌனம், அதனால் உண்டாகும் சிறு சங்கடம், ஒன்றை சொல்ல ஆரம்பித்து பாதியில் நிறுத்துவது போன்ற பேச்சில் நமக்கு ஏற்படும் அத்தனை விஷயங்களும் இந்த கதைகளின் உரையாடல்களில் உள்ளன. ‘Ear for dialogue’ என்று சொல்வார்கள் அல்லவா, அது இவரிடம் மிக நுணுக்கமாக உள்ளது. இவரது கதைகள் அரசியலையும் பேசுகின்றன, இருந்தும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் முந்திய தொகுப்புகளின் கதைகள் அளவுக்கு இதைச் செய்வதில்லை.

தலைப்பு கதை “அதிநாயகர்களின் அந்திப்பொழுது” (‘Twilight of the Superheroes’). 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய நிகழ்வுகளைப் பேசும் கதை. அதன் தாக்கம் மக்களிடமும் பொதுவாக ந்யூ யார்க் நகரத்திலும் எப்படி இருந்தது என்பதன் விவரணை.

Y2K நினைவிருக்கிறதா? எவ்வளவு பழைய காலம்! அப்போது ஏதோ ஒரு பேரழிவு ஏற்படும் என்ற ஆருடங்கள் மெய்ப்படுவதைப் பார்க்க நதானியல் 2000ஆம் ஆண்டையொட்டி ந்யூ யார்க் வந்தவன். அப்படி ஒன்றும் பிரமாதமாக நடக்கவில்லை என்ற நிலையில் அவனது மாமா ஒருத்தரின் சகல வசதிகளும் நிறைந்த அபார்ட்மெண்ட்டில் தன் நண்பர்களுடன் தங்கி விடுகிறான். அது இரட்டைக் கோபுரங்களுக்கு அருகில் இருக்கிறது (“உலகின் மிகச் சிறந்த வியூ”). பின்னர் 9/11 தாக்குதல் அவர்கள் அனைவரின் வாழ்வையும் பாதித்து விடுகிறது, ஏன் இப்படி ஒன்று நடந்திருக்க வேண்டும் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. ஆர்மீனியாவைச் சேர்ந்த டெல்பைனின் மாற்றுப் பார்வைதான் இவனது புதிரை சமன் செய்கிறது – ஒரு உரையாடலின்போது அவள், “அங்கே உங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்கிறாள்.

அரசியல் பிரக்ஞை இல்லாத பெரும்பாலான அமெரிக்கர்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டவர்களாக இருப்பதைச் சுட்டும் கதை. அவர்களுக்கு தங்கள் தேசம் பிற தேசங்களில் எப்படி நடந்து கொள்கிறது என்று எந்த புரிதலும் இல்லை. தங்களைப் பற்றி பிற தேசத்தினர் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலையும் இல்லை.

நதானியலும்கூட பிறர் தன் தேசத்தைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியாதவன்தான். எல்லாரும் அமெரிக்க கனவை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அல்லது அதை அடைய போராடிக் கொண்டிருப்பவர்கள். நதானியலின் பெற்றோரும்கூட ஐம்பதுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான், நல்ல வாழ்க்கை அமைந்தாலும் முழுசாக அமெரிக்கர்களாக தங்களை உணராதவர்கள் அவர்கள். .

கதையின் தலைப்பே பழைய நம்பிக்கைகள் உடைந்து நொறுங்குவதைச் சுட்டும் நேரடி படிமமாக இருக்கிறது. ஒரு அதிநாயகனாக அமெரிக்கா வீழ்ச்சியடையத் துவங்கிவிட்டது என்பதை உணர்த்தும் தலைப்பு. ஆனால் 9/11க்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் உலகெங்கும் என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது (வேறு வேறு காரணங்களைச் சொல்லி எத்தனை அமெரிக்க படையெடுப்புக்கள்) என்பதைப் பார்க்கும்போது, இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிநாயகனின் அந்திப் பொழுதாகப் பார்ப்பதற்கில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சர்ச்சில் வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்னதுபோல் துவக்கத்தின் முடிவாக இதைக் காண முடியும் – (இரண்டாம் உலகப்போரில் நோர்மண்டி (Normandy) கடற்கரையை நேச நாடுகள் கைப்பற்றிய பின் ஜெர்மனியின் வீழ்ச்சி உறுதியா என்று சர்ச்சிலிடம் கேட்கப்பட்டபோது அவர், “Now this is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning,” என்று கூறினார்.)

“வடிவமைப்பில் உள்ள குறை” (‘The Flaw in the design’) என்ற கதை ஒரு மாலைப் பொழுது குடும்ப வாழ்க்கையின் விவரணை வழியாக நம்மை துணுக்குற செய்யும் ஒரு சித்திரத்தை தருகிறது. பெயர் குறிப்பிடப்படாத நாயகி, வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தன் கணவன் மற்றும் பதின்பருவ மகனுடன் இரவு உணவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறாள். மற்றவர்களைவிட அதிக செல்வமும் வசதிகளும் தனக்கு இருப்பது குறித்து மகனுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அவனால் அவை இல்லாமல் இருக்க முடிவதும் இல்லை. இது அந்த வயசுக்குரிய மனநிலைதான், புரட்சி செய்ய வேண்டும் ஆனால் தன் சுகங்கள் விட்டுப் போகக்கூடாது என்ற அளவில்தான் பலரும் தங்கள் பதின்ம வயதில் புரட்சி பேசி இருப்பார்கள் அல்லவா?

இரவு உணவின்போது நம் வீடுகளில் சாதாரணமாக நடக்கும் உரையாடல்கள்தான் விவரிக்கப்படுகின்றன. ஆனால் இதில் என்ன விஷயம் என்றால் அந்தப் பெண் யாரோ ஒரு அன்னியனுடன் அந்த நாள் பொழுதைக் கழித்து விட்டு வீடு திரும்பியிருக்கிறாள். அதை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாட வாழ்க்கையை எந்த சிக்கலும் இல்லாமல் அவள் கொண்டு செல்வது நம்மை துணுக்குற செய்கிறது. மனிதன் எப்படி மனதின் பல அடுக்குகளில் பல்வேறு மாறுபட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு அடுக்குக்கும் இன்னொன்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், அவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்க முடியும் என்ற புதிரை இந்த கதை சுட்டுகிறது. அந்த ஆணுடன் எப்படி சந்திப்பு நிகழ்ந்தது, பின் என்ன நடந்தது என்பதைக்கூட சில பத்திகளில் உரையாடல்களில் கூறி முடித்து விடுகிறார் ஆசிரியர்.

மேலோட்டாமாக எந்த பிரச்சனையும் இல்லாதது போல் தோன்றும் கணவன்-மனைவி உறவில்கூட எத்தனை சிக்கல்கள்… அந்தப் பெண் ஏன் இப்படி செய்தாள், இதுதான் முதல் தடவையா என்ற கேள்விகள் எழுந்து கதை முடிந்த பின்பும் தொடர்கின்றன. ரொம்ப சராசரியான அன்றாட வாழ்வின் ஆழத்தில் இப்படிப்பட்ட, நாம் எண்ணிப் பார்க்க முடியாத விஷயங்கள் இருக்கின்றன என்பதுடன் குடும்ப வாழ்க்கையின் கட்டமைப்பிலேயே இருக்கும் பிழையை கதையின் தலைப்பு சுட்டுகிறது (‘The Flaw in the design’)

இருபதுகளின் துவக்கங்களில் உள்ள, வேலை செய்கிற, ஆனால், எதிர்காலம் குறித்த சலனங்கள், என்ன முடிவெடுப்பது குறித்த தெளிவின்மை கொண்ட பெண்களை ஐஸன்பெர்க் கதைகளில் காண முடியும். இந்த வகை பாத்திரங்களைப் Alice Munro முதல் ‘Nell Freudenberger’ போன்ற இளம் எழுத்தாளர்கள் எழுத்துக்களில் காணலாம். ஆனால் கருப் பொருள் ஒன்றாக இருந்தாலும், இவர்களின் கதைகள் ஒரே வார்ப்பில் இல்லாமல், கதைக் களன்/சம்பவங்கள்,உரைநடை/உரையாடல், பாத்திரங்களின் குணாதிசயங்களில் உள்ள வேறுபாடு என தங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் உள்ளன.

“சன்னல்” (‘Window’) என்ற கதையில் கிறிஸ்டினா என்ற இத்தகைய ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். கிறிஸ்டினா ஒரு குழந்தைக்குத் தந்தையான, அவளைவிட கொஞ்சம் பெரியவனான ஏலி என்பவனுடன் உறவில் இருக்கிறாள். இந்தக் கதையில் இரண்டு இழைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் (control freak) ஏலிக்கும் அவளுக்கு உள்ள உறவு ஒரு இழை. அவனது மகனுக்கும் கிறிஸ்டினாவுக்கும் உள்ள உறவு மற்றொன்று. ஏலியுடனான உறவில் கிறிஸ்டினா எப்போதும் கொடுப்பவளாகவும் ஏலி பெற்றுக்கொள்பவனாகவும் இருக்கிறான்.

இறுதியில் அவள் எடுக்கும் முடிவு, விடுதலை அளிக்கக் கூடியது என்றாலும், அதுவரை ஏலியின் கட்டுப்பாடுகளை, குண மாற்றங்களை சகித்துக்கொண்டு, ‘வன்முறை உள்ள’ இப்படிப்பட்ட உறவில் (abusive relationship) கிறிஸ்டினா ஏன் இருக்க வேண்டும்? அதற்கு காரணம் ஏலி மேல் உள்ள காதலா அல்லது அவன் குழந்தை மேல் உள்ள அன்பா? மனித மனம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பாதைகளில் செல்லக்கூடியதாக இருக்கிறது என்றும், அதன் போக்கைப் புரிந்து கொள்ள முயல்வதுவுமே கூட வியர்த்தம் என்றும்தான் கதை முடிவில் நமக்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட உறவுகளில் சிக்கிக் கொண்டுள்ள கிறிஸ்டினாக்களை நாமும் அறிந்திருப்போம்.

இந்த தொகுப்பின் சாதாரண கதைகள் என்று இரண்டு கதைகளைச் சொல்லலாம் – “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்’, ‘டைனோசார்களின் வெஞ்சினம்’ (‘Like it Or Not’ and ‘Revenge Of the Dinosaurs’). பிந்தைய கதையில் லூசில் உடல்நலம் சரியில்லாத பாட்டியை பார்க்கச் செல்கிறாள். அவளுடைய உடன் பிறந்தவர்களுடனான சந்திப்பும் நடக்கிறது. வழக்கமாக ஐஸன்பெர்க் கதைகளில் இருக்கும் பல பரிமாண பாத்திரப் படைப்பு இதில் இல்லை. உதாரணமாக பில்லும் அவனது மனைவியும் பணத்தாசை பிடித்தவர்கள் என்று மட்டையடியான ஒரு சித்திரம் மட்டுமே இந்த கதையில் உள்ளது.

நான்கு தனித் தொகுதிகளில் இவரது சிறுகதைகள் வெளி வந்துள்ளாலும், அனைத்தும் ‘The Collected Stories of Deborah Eisenberg’ என்று ஒரே தொகுப்பாகவும் கிடைக்கின்றன. காலக்கிரமமாக தொகுக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், இவரின் சிறுகதைகளை ஒருசேரப் படிப்பது, எழுத்தில் அவருடைய மாற்றங்களை எளிதில் அறிந்து கொள்ளவும் உதவும்.

நன்றி : ஆம்னிபஸ் தளம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.