பந்திபூர், மார்ச், 2014

– எஸ். சுரேஷ் –

“Or ask why notebooks (Simone Weil), diaries (Kafka), letters (Wallace Stevens) – fragments, ruins – the incomplete – are better (in)formed, and always tell us more.” –La pesanteur

காதுக்குள் ஒலி ஈர்க்கும் காந்தம் இருப்பதுபோல்
மெல்லிய சப்தம் கேட்டு கழுத்தைச்
சட்டெனத் திருப்பும் புள்ளிமான்கள் எல்லாம்
அமைதியாய் ​ ​நின்று கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில்
ஒரே ஒரு கன்னிமான்
அங்கும் இங்கும் தாவிக் குதிக்கிறது.

அசையாமல், அமைதியாய், மரங்களின் நடுவில்,
தீராத காமத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு
வெளியுலகுக்கு புத்தனைப் போல் காட்சியளித்து நிற்கிறது
பெரிய தந்தங்கள் கொண்ட ஒற்றை யானை.

சுண்ணாம்பு பூசிய உடல், கரி பூசிய முகம், வானுயரும் வால்.
பழங்களின் ருசி அலுத்துப்போன குரங்கு
மானிட வருகைக்காக சாலையோரம் வந்தமர்கிறது.

பள்ளிக்கு நேரமாகிவிட்டது போல் விரைகிறது
காட்டுப்பன்றி,
அதன் பின்னால் வரிசையாய் நான்கு
பன்றிக் குட்டிகள்.

மரங்களின் நடுவில் விழும் சூரிய ஒளியில்,
மஞ்சள் நிற இலைகளில், அசையும் புதர்களில்,
எங்கும் புலியைத் தேடுகின்றன என் கண்கள்;
காண முடியாத அந்தப் புலி
காடெங்கும் வியாபித்திருக்கிறது.

மழை வரும் தருணத்தை எதிர்பார்த்து நிற்கிறது
ஒரு மயில்,
அதன் தோகை விரியும் தருணத்தை எதிர்பார்த்து
நான்.

உண்பதற்கே உணவு, ருசிப்பதற்கன்று
என்ற பெரும் தத்துவமறிந்த ஞானி போல்
புல்லை மென்று கொண்டிருக்கிறது காட்டெருமை.

இலைகளின் சலசலப்பு, பறவைகளின் கூக்குரல்,
உஷ்ஷ் என்று மரங்களை வருடிச் செல்லும் காற்று,
குரங்குகளின் கூச்சல், பூச்சிகளின் இடைவிடாத சப்தம்
என்று அடங்காத பேச்சு ஓயாத சலனத்தில்
இருக்கிறது காடு –
என்னுள் பேரமைதி.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.