வாக்கியமொன்றுக்கு வடிவம் கொடுப்பதுதான் இவருக்கு ஆழ்ந்த நிறைவளிப்பதாக இருக்கிறது – சரியான சொல், அழகிய உவமை. “மணிக்கணக்காக” காற்புள்ளியை சந்தோஷமாக இடம் மாற்றிக் கொண்டிருப்பார்.
இவரது புத்தகங்கள் பெரிதாக இருக்கலாம், ஆனால் இவர் தன்னை இவ்வாறு விவரித்துக் கொள்கிறார்: “ஒரு மினியேச்சரிஸ்ட் – சுவற்றளவு பெரிய ம்யூரலை இமையளவு தூரிகையால் வரைபவள்; மிகச் சிறிய, நுண்மைகள் மிகுந்த வேலையைச் செய்பவள், ஆனால் மிகப்பெரும் வெளியில், நீண்ட காலமாக. அதனால்தான் இத்தனை நேரமாகிறது”.
இவரது எழுத்து முறை சிக்கலானது. முதலில் பெரிய அளவிலான, ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்துப் பிரதியாக எழுதுகிறார். தன் எண்ணங்களையும் திருத்தங்களையும் சிவப்பு, நீலம் பின்னர் பச்சை பென்சிலில் குறித்து வைத்துக் கொள்கிறார். கதையோட்டத்தையும் பாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றில் இன்டெக்ஸ் கார்டுகளை ஸ்டேப்பிள் செய்கிறார். இதெல்லாம் ‘மிகவும் குழப்பமாக’ ஆகும்போது, தன் எழுத்துப்பிரதியை கணினியில் தட்டச்சு செய்கிறார். இந்த வரைவு வடிவங்களை வெவ்வேறு வண்ணத் தாள்களில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்கிறார். “பிங்க் கலர் டிராப்ட்டை எடுத்ததும் அது முதலில் எழுதிய வரைவு வடிவம் என்று எனக்குத் தெரிந்துவிடும்; அல்லது பழுப்பு வண்ணம் இரண்டாவது, கடைசியாய் எழுதியது நீல வண்ண காகிதத்தில் இருக்கும். முதலில் எழுதப்பட்ட வரைவு வடிவம் தேவையென்றால் அது எங்கிருக்கிறது என்பதை என்னால் சுலபமாக தேடியெடுக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரெஞ்சு ஆசிரியர் இதைச் சொல்லிக் கொடுத்தார், நிஜமாகவே இப்படிச் செய்வது உபயோகமாக இருக்கிறது”.
அவர் வேலை செய்யும் அறையின் சுவற்றில் பால் வலேரியின் மேற்கோள் இருக்கிறது : “ஒழுங்கின்மையே வளமான மனதின் நிலை”
அவர் சிரிக்கிறார். “இது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது, மிகவும் உண்மையும்கூட”
கோல்ட்ஃபிஞ்ச் எழுதத்துவங்கிய ஏழெட்டு ஆண்டுகளில் ஒரு கட்டத்தில், கடந்த எட்டு மாதங்களாக தான் வேலை செய்து கொண்டிருந்த துணைகதையொன்று தேவையற்றது என்ற பயங்கரமான புரிதல் அவருக்கு ஏற்பட்டது. அதைக் கைவிட்டார்.
எட்டு மாதங்கள்!
சிரிக்கிறார். “ஒரு பத்திரிக்கையாளருக்கு இது கொடூரமாக இருக்கும்”.
அப்போது என்ன செய்வீர்கள்?
“என்னைத் தேற்றிக் கொள்கிறேன். இங்குமங்கும் வேகமாக நடந்து செல்கிறேன், யோசிக்கிறேன்….”
ஆமாம், என்று அவர் ஒப்புக் கொள்கிறார், “அது ஒரு மோசமான நாள்தான், அல்லது இரண்டு நாட்கள் மோசமாக இருந்திருக்கலாம்”. ஆனால் பத்தாண்டு கணக்கில் ஒன்றிரண்டு மோசமான நாட்கள் ஒரு விஷயமா?
2000மாம் ஆண்டில்- அவரது லிட்டில் ஃபிரெண்ட் பதிப்பிக்கப்படுவதற்கு இரு ஆண்டுகள் முன்னர் – இசுலாமிய அடிப்படைவாதிகள் ஆப்கானிஸ்தான் பாமியானில் உள்ள ஆறாம் நூற்றாண்டு கால மாபெரும் பௌத்த புடைப்புச் சிற்பங்களை அழித்தனர். “அது 9/11ன் முன்னதிர்ச்சி. அது மெய்யாகவே, மெய்யாகவே என்னைக் கவலைப்படச் செய்தது”
தீவிரவாதம் பற்றியும் கலைப் படைப்புகள் அழிக்கப்படுவது பற்றியும் ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம உருவாக அது காரணமாக இருந்தது. ஓவியமொன்றை ஒற்றைச் சிந்தனையுடன் தீவிரமாக விரும்பும் குழந்தை ஒன்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு அதே சமயம் இருந்தது.
அவர் குறிப்பாக எழுத விரும்பிய ஓவியம், “குழந்தையை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் – அது போன்ற ஓவியங்கள் அதிகம் கிடையாது’. அவர் எழுதலாம் என்று முதலில் தேர்ந்தெடுத்தது, ஹோல்பெய்ன் ஓவியம், “ஒரு குழந்தை சுலபமாக எடுத்துச் செல்லக்கூடியது”. அதன்பின், 2003ல், ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்தபோது, அவர் சோத்பைஸ் ஏலம் ஒன்றில் கோல்ட்ஃபிஞ்ச் ஓவியத்தின் பிரதி ஒன்றைக் கண்டார். ஃபாப்ரிஷியஸ் மாண்ட 1654ஆம் ஆண்டில் வரையப்பட்ட அந்த ஓவியம், ஏ4 காகிதம் அளவுள்ள ஒரு மரப்பலகையில் வரையப்பட்ட ஒன்று. கண்ணை விட்டு அகலாத மிகச்சிறிய, மென்மையான பறவை ஒன்றின் ஓவியம் அது, ஒரு சங்கிலியால் அது தான் அமர்ந்திருந்த இடத்தில் பிணைக்கப்பட்டிருந்தது,
“முதல் முறை அதைப் பார்த்தபோதே என்னால் அதனுடன் வலுவான உணர்வுத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது,” என்கிறார் டார்ட். “இந்தச் சிறு பறவை, எத்தனை தைரியமாகவும் கம்பீரமாகவும் அமர்ந்திருக்கிறது என்று அப்புறம் பார்த்தால், அங்கே இந்த பயங்கரமான சங்கிலியைப் பார்க்கிறீர்கள்…”
“இது உபநிடதங்களில் இருக்கிறது என்று நினைக்கிறேன் – சங்கிலியால் பூட்டப்பட்ட பறவை மானுட உடலில் உள்ள பிராணனின் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது; பிராணன் வெளியேறுகிறது, பின் எப்போதும் அது ஒரே இடத்துக்குத் திரும்பி வருகிறது. நமது உடல்தான் பூட்டப்பட்ட இடம், இங்கேதான் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். பிராணனை ஸ்பிரிடாஸ் என்று லத்தீன் மொழியில் சொல்வார்கள். இதுதான் மானுட இருப்பின் முடிவிலி. ஏதோ ஒரு தளத்தில் நாம் சிறகுகள் கொண்ட பறவைகள், ஆனால் அதே சமயம் பொறியில் அகப்பட்டிருக்கிறோம். நம்மால் பறக்க முடியும், ஆனால் முடியாது,” என்று சொல்லிச் சிறிது நேரம் அமைதியாய் இருக்கிறார். “எப்படியும்…’
கோல்ட்ஃபிஞ்ச் அழகின் மீதும் நேசத்தின் மீதுமான ஒரு தியானம், இவ்விரண்டும் எளிதில் அழியக்கூடியவை, ஆனால் நிலைத்திருப்பவை. இது எல்லாவற்றுக்கும்மேல் இந்த நாவல் கதைசொல்லலின் அற்புத சாதனை, டார்ட் வளரும் காலத்தில் வாசித்த மாபெரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகோன்னத நாவல்களை நினைவூட்டுபவை….
ஃபாப்ரிஷியஸ் மற்றும் கோல்ட்ஃபிஞ்ச் இவ்விரண்டையும் நீங்கள் புனைவுப் பொருட்களாக கொள்ளக் காரணம் என்ன?
ஓவிய வரலாற்றை வாசிக்கும்போது எனக்குக் கிடைத்த வரம் இது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இளம் வயதில் இறந்துவிட்டவர். நாமறிந்தவரை ஒரு புரட்சியாளர். தன் காலத்தில் வாழ்ந்த சிறந்த ஓவியரான ரெம்ப்ராண்ட்டின் மாணவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் அவர். கோல்ட்ஃபிஞ்ச்சைப் பார்த்தால் அதில் காணும் பகற்பொழுதின் ஒளியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அது ரெம்ப்ராண்ட் பாணி, ஆனால் அது ரெம்ப்ராண்ட்டுக்குரிய உள்ளிருந்து ஒளிரும் பொன்னிறத்தன்மையை அந்த அளவுக்கு கொண்டதல்ல. அந்தப் பாணியைக் கொண்டு ஃபாப்ரிஷியஸ் சூரிய ஒளியை வரைந்தார். வெர்மீர் அதிலிருந்து முன் சென்றார். வெர்மீரில் நாம் நேசிக்கும் பகல் வெளிச்சத்தின் இயல்பு, அவர் ஃபாப்ரிஷியஸிடமிருந்து பெற்றுக் கொண்டது. ரெம்ப்ராண்ட்டையும் வெர்மீரையும் இணைக்கும் தொடர்பு அவர்.
புனைவு எழுதுவதற்குத் தகுந்தவர் அவர். அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. போர்ஹே கதையொன்றில் வரக்கூடிய புகழ்பெற்ற ஓவியர் அவர்- இருந்தார் என்றும் சொல்ல முடியாது, இருக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி அறியப்படும் தகவல்கள் மிகக் குறைவு, அவர் புனைவுக்கும் அபுனைவுக்கும், தொல்கதைக்கும் யதார்த்தத்துக்கும் நடுவிலுள்ள முனையில் நிற்கிறார்.
அப்புறம் இந்த பயங்கர விபத்தில் இறக்கிறார்.
அவர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஓவியரான எக்பர்ட் வான் டர் போல், ஃபாப்ரிஷியஸ் மாண்ட வெடிவிபத்துக்குப் பிற்பட்ட டெல்ஃப்ட்டை ஓவியம் மாற்றி ஓவியமாக வரைந்திருக்கிறார். அவை உண்மையாகவே நம் நெஞ்சை நீங்காதவையாக இருக்கின்றன. இடுபாடுகளில் வரும் புகை, ஆங்காங்கே எரியும் நெருப்பு, வானில் கரும்பறவைகள்.
தன் தாயைக் கொன்ற வெடிவிபத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கு தியோவைப் போன்றவர் அவர், இல்லையா?
டெல்ஃப்ட் வெடிவிபத்துக்கு முன் வான் டர் போல் என்ன வரைந்தார் என்பதே எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதன்பின் அவரால் வேறு எதையும் வரைய முடியவில்லை. 9/11க்கு முன் பாமியானின் மாபெரும் புத்தர்கள் அழிக்கப்பட்டபோது, அது மெய்யாகவே மனதுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருந்தது. அங்கேதான் அழியக்கூடிய ஆபத்தில் இருக்கும் அல்லது அழிந்தே போய்விட்ட ஒரு கலைப்படைப்பைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது.
அப்படிப் பார்த்தால் ஃபாப்ரிஷியஸ் கதைக்குள் பின்னர்தான் வந்தார் என்பது போலிருக்கிறது, கதையை எழுத அவர் உந்துதலாக இருக்கவில்லையோ?
என் எல்லா புத்தகங்களிலும் துவக்கத்தில் பொதுவான ஒரு மனநிலைதான் இருக்கிறது. அதற்கப்புறம்தான் கதை வருகிறது. சீக்ரட் ஹிஸ்டரி நாவலை எடுத்துக்கொண்டால் அது ஒரு மனநிலையில் துவங்கிய நாவல்தான். குளிரும் அறைகள், கைகளில் மசி, வீடுதிரும்பும் ஏக்கம், வீட்டைவிட்டு முதல் முறையாக வெளியில் இருப்பது, இது போன்ற ஒரு உணர்வு.
இந்தப் புத்தகம் உண்மையில் ஆம்ஸ்டர்டாமில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது. என் முதல் நாவல் அங்கே நன்றாக விற்றது, அதனால் நான் அங்கு நீண்ட காலம் இருக்க வேண்டியதாக இருந்தது. அப்போது அங்கே நான் நிறைய எழுதினேன். நான் எழுதுவதில் பலவும் நாவலில் இடம் பெறுவதில்லை. எப்போது பார்த்தாலும் என்னிடம் உள்ள நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். உதாரணத்துக்கு, ஜப்பானில் இருந்தபோது அதைப் பற்றி நிறைய எழுதினேன். இதுவரை அதற்கு எந்த நாவலிலும் இடம் கிடைக்கவில்லை – எப்போதும் கிடைக்காமலும் போகலாம்.
அப்படியானால் ஆரம்பத்தில் மோட்டிஃப்கள், பின்னணிகள், மனநிலைகள் என்ற ஒரு மூட்டம்தான் இருக்கிறதா?
ஆமாம். எதுவும் தெளிவாக இருப்பதில்லை. என்ன செய்கிறோம் என்பது புரியவே நீண்ட காலமாகிறது. பார்ப்பதற்கு பெரிய குழப்பமாக இருக்கிறது, அது உண்மையாகவே பெரிய குழப்பம்தான். இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து நான் வைத்திருக்கும் குறிப்புகளை நீங்கள் பார்த்தால், “இவர் ஒரு பைத்தியம். இது ஒரு நாவலாக உருவாகவே முடியாது,” என்றுதான் நினைப்பீர்கள். எழுத ஆரம்பித்தபோது என் புத்தகங்கள் அத்தனையும் அது போல்தான் இருந்திருக்கின்றன. இதைப் பிறருக்கு விளக்குவது என்பது ஒரு கனவை விளக்குவது போன்றது.
உங்கள் நாவல்கள் அனைத்திலும் பிரதான பாத்திரம் அல்லது கதைசொல்லி குழந்தையாகவோ பதின்ம பருவத்தினராகவோ இருக்கின்றனர். நாவலின் முடிவில் தியோவுக்கு இதைவிட ஓரளவு வயது கூடுகிறது என்றாலும் அவனது பதின்மபருவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். சிறுவயதினரின் பார்வையில் எழுதுவதில் உள்ள வசீகரம் என்ன?
சிறுவயதினரின் பார்வையில் எழுதும்போது குழந்தையாக முதன்முதலில் வாசித்தபோது எனக்குக் கிடைத்த அந்தப் பெரிய சந்தோஷம் எனக்கு இப்போது மீண்டும் கிடைக்கிறது – மூச்சிரைக்க புத்தகங்களைக் கடந்தேன், நூலக புத்தகங்களைத் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வருவேன், அவற்றின் மாயத்தில் என்னை நான் இழப்பேன். இளம் பருவத்தினர் பற்றி எழுதுவது அந்த வாசக மகிழ்ச்சியை அடைய ஒரு வழியாக இருக்கிறது. சிறுவர்கள் உள்நோக்கிச் சிந்திக்கிறார்கள், உலகைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள், அதில் தங்கள் இடமென்ன என்று அறிய முயற்சிக்கிறார்கள் என்ற காரணங்களால் இளம்பருவத்தினர் பற்றி எழுதுவது சந்தோஷமான ஒரு அனுபவமாகவும் இருக்கிறது.
உவமை போன்றவற்றை மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள். உங்கள் ஆக்கங்களின் மிகச் சிறிய இடங்களில்கூட இதைப் பார்க்க முடிகிறது… ஒரு பாத்திரத்தின் இயல்பை வரையறுக்க இவை எவ்வாறு உதவுவதாக நினைக்கிறீர்கள்?
என் பழைய ஆசிரியர் ஒருவரை மேற்கோள் காட்டுவ்தானால், உவமைகள் அழகிய குழப்பங்கள். ஆனால் எப்படிப்பட்ட உவமைகளை ஒரு கதைசொல்லி தேர்ந்தெடுக்கிறார் என்பது, பாத்திரத்தை விவரிக்கும் அளவுக்கு கதைசொல்லியின் இயல்பையும் வெளிப்படுத்துகிறது. இங்கே இருவகைப்பட்ட பாத்திரப்படைப்பு நிகழ்கிறது…
உங்கள் உரைநடை அதன் தெளிவுத்தன்மையின் காரணமாக வீரியம் மிக்கதாக இருக்கிறது. கண்ணால் காணக்கூடியவற்றைக் கற்பனை செய்வது எனக்குக் கடினமாக இருந்தாலும்கூட கோல்ட்ஃபிஞ்ச்சின் ஒவ்வொரு கணத்தையும் நான் கண்முன் காண முடிந்தது. உங்கள் முந்தைய புத்தகங்களை வாசிக்கும்போதும் இப்படிதான் இருந்தது.
அருமையான் விஷயம் இது. ஒரு எழுத்தாளராக நான் என்னை ஒரு செவி என்பதைவிட கண் என்றே கருதிக் கொள்கிறேன் – பிரதானமாக என் கண்களின் வழியாகவே இந்த உலகம் என்னை வந்தடைகிறது. எனவே, உங்களையும் காட்சிகள் வந்தடைந்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என் புத்தகங்களை எழுதும்போது, அதில் உள்ளவற்றை என் கண்முன் நேரடியாகக் காண்கிறேன். வெளியிலிருந்து காணும் ஒரு பார்வையாளன் போல் அதன் நிகழ்வுகளை அனுபவிக்கிறேன்.
உங்கள் மொழியைப் பற்றியும் உரைநடை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
புலனுபவ விவரணைகளாகவே அவற்றில் மிகுதியானவை உள்ளன என்று நினைக்கிறேன். தொடு உணர்ச்சி, நுகர்வுப் புலன். ஒரு சொல்லை அடுத்து அடுத்த சொல், ஒரு வாக்கியத்தை அடுத்து அடுத்த வாக்கியம் என்ற அளவில் என் எழுத்து குறித்து ஓரே நினைப்பாக இருக்கிறேன். மொழி இயங்கும் விதம், தனித்தனி வாக்கியங்களை எழுதுவதில் உள்ள நுட்பம், இதுவெல்லாம்தான் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நான் என் எழுத்தில் ஈடுபட்டிருக்கக் காரணம் இதுதான்.
நன்றி: The Telegraph, Salon, Powells