– அஜய் ஆர். –
டானா டார்ட்டின் முதல் நாவலான “ரகசிய வரலாறு” (The Secret History) தலைப்பை பார்த்தோ, பின்னட்டை ‘டயோனிசியச் சடங்குகள்’ (‘Dionysian rites’) என்று குறிப்பிடுவதைப் பார்த்து மர்மக்கதை என்றோ த்ரில்லர் என்றோ எண்ணினால் அது தவறாகும்.
ஆம், இந்த நாவலின் துவக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதைத் தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிவிட்ட, அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது, என்பதால் இந்த நாவலை ‘bildungsroman’ நாவல் என்றும் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவதால், ‘Campus Novel’ என்றும் குறிப்பிடலாம். குற்றம், அதற்கான காரணம், அந்த குற்றம் எப்படி குற்றம் செய்தவர்களையே பாதிக்கிறது என்று பேசுவதால் உளவியலைப் பற்றிய நாவல் என்றும் சொல்லலாம். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் மட்டுமே பொருத்தப்படக் கூடிய நாவல் அல்ல இது. மர்மக் கதையை எதிர்பார்த்து இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாற்றமளிக்கும்.
இந்த நாவலின் நிகழ்வுகள் ஒரு உயர்தரக் கல்லூரியில் நடைபெறுகின்றன. முக்கிய பாத்திரங்களில் ஒருவனான ரிச்சர்ட் கல்வி ஊக்கத் தொகை உதவியுடன் கல்லூரியில் இணைந்திருக்கிறான். சிறிய கிராமத்திலிருந்து வரும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த அவனால் அங்கு ஒன்ற முடிவதில்லை, தன் குடும்பப் பின்னணி குறித்து பொய் சொல்லி/ அதை மறைத்து மற்றவர்களுக்கு சமமாகச் சேர்ந்து கொள்ள முயற்சி செய்கிறான். அந்தக் கல்லூரியில் ஜூலியன் மாரோ என்ற ஒரு பேராசிரியர் இருக்கிறார், ரொம்பவும் பூடகமான நபர். பண்டைய கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் அவர் தன் வகுப்பில் அதிக மாணவர்களை சேர்ப்பதும் இல்லை. அந்த வகுப்பில் ஒரு ஐந்து மாணவர்கள் (நான்கு ஆண் ஒரு பெண்) எப்போதும் ஒரு குழுவாக இருக்கிறார்கள், தங்கள் குழு தவிர்த்து மற்றவர்களுடன் அவர்கள் அதிகம் பழகுவதில்லை. ஐந்து மாணவர்களின்பாலும் அவன் ஈர்க்கப்படுகிறான், இதில் பண்டைய கிரேக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தைவிட அந்த மாணவர் குழுவிடம் நட்பாக வேண்டும் என்பதுதான் அவனுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, ஒரு முறை அவர்களுக்கு உதவி செய்து அதில் வெற்றியும் பெறுகிறான். பின்னர் அவர்கள் வழிகாட்டுதல்படி, மாரோவிடம் மீண்டும் பேசி வகுப்பில் சேர அனுமதி பெறுகிறான், அதைத் தொடர்ந்து ஐவர் குழுவில் இணைந்து அறுவனாகிறான்.
அவர்களோடு நெருங்கிப் பழகப் பழகத்தான் அவனுக்கு சில உண்மைகள் புரிகின்றன. இத்தனை நாட்களாக அவன் அந்த குழுவை நிறைத்து, சூழ்ந்திருப்பதாக எண்ணிய சுய உறுதி, சுய அறிதல்- நெருங்கிய பழக்கத்தில்தான் அது அத்தனையும் பொய், ஒரு பாவனை என்பது அவனுக்குப் புரிகிறது. இது அவனை துணுக்குறச் செய்கிறது. ஏனென்றால் அவனை அந்த குழுவின்பால் ஈர்த்ததே அதுதான்,அவனுடைய பின்புலன், வர்க்கம் சார்ந்து ரிச்சர்ட்டுக்கு இருக்கும் போதாமை, அதனால் அவனுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை, அதற்கு மாற்றாக/ ஈடு செய்ய, அந்த குழுவை, மேலோட்டமாக அறிந்ததில், அவர்களின் பிரச்சனை இல்லாத வாழ்க்கையை பார்த்து அந்த குழுவில் அவன் இணைந்தான், ஆனால் உண்மை அப்படி இல்லை என்று தெரிய வருகிறது.
எல்லாரும் தன்னை மையமாய்க் கொண்ட ஏதோ ஒரு விஷயத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரிச்சர்ட் இப்போது இந்தக் குழுவில் ஒருவனாகிவிட்டாலும் அவன் பல விஷயங்களில் தெளிவில்லாமல் இருக்கிறான் – குறிப்பாக Bunny குழுவின் மற்றவர்களை எப்படியோ சரிக்கட்டி அவன் சொல்வதைச் செய்ய வைத்து விடுகிறான். அவர்கள் அவனுக்காக பணம் கட்டுகிறார்கள், அவனை எங்கேயும் அழைத்துச் செல்கிறார்கள், இதெல்லாம் எப்படி என்பதில் ரிச்சர்டுக்குக் குழப்பம் இருக்கிறது. மெல்ல மெல்ல ரிச்சர்டும் இந்தச் சுழலில் சிக்கிக் கொள்கிறான். நடப்பதில் அவனும் பங்கெடுத்துக் கொண்டாலும் ஏதோ ஒரு தளத்தில் அவன் பார்வையாளனாகவே இருக்கிறான். விவகாரம் பெரிசாகி நாவலின் துவக்க நிகழ்வுக்கு வந்து சேர்கிறது.
கொலைக்குப் பின் குழுவினர் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் பிரிவது மனதைப் பிசைவதாக உள்ளது. கொலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையைப் பழையபடியே தொடர முயற்சிக்கிறார்கள், பெரும்பாலும் தோற்றுப் போகின்றனர். அவர்களது வாழ்வின் ஒரு முக்கியமான அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது, ஒவ்வொருத்தரும் தங்களுக்கான வாதையை எதிர்கொண்டு விடலைப் பருவத்தைக் கடந்து செல்கிறார்கள். கல்லூரி மாணவர்களாய் நினைத்தே பார்த்திராத ஒரு வாழ்க்கையை வாழத் துவங்குகிறார்கள், சிலருக்கு இப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்ற நிர்பந்தமும் ஏற்பட்டு விடுகிறது. நிறைவேறாத, உடைந்த கனவுகளின் வழக்கமான துயரக் கதைதான். இதற்கு மேலும் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தால் நாவலை முழுசாகச் சொன்னதுபோல் ஆகிவிடும்.
முதல் நாவலிலேயே டானா டார்ட் தன் படைப்பின்மீது முழு கட்டுப்பாட்டைச் செலுத்தக்கூடியவராக இருக்கிறார். அவரது பாத்திரங்கள் உணர்ச்சிவசப்படலாம், ஆனால் கதைசொல்லியாக, எழுத்தாளராக, எழுதும்போது தன்வயமிழந்த நிலையில் எதையும் இவர் எழுதிவிடுவதில்லை, அனைத்தையும் ஒரு விலகல் மனநிலையில் விவரிக்கிறார் .இதைச் சொல்லும்போது எனக்கு ஆலிஸ் மன்ரோதான் நினைவுக்கு வருகிறார். மன்ரோ எழுத்தில் clinicalஆக இருப்பார், ஒரு தேர்ந்த பொம்மலாட்டக்காரரை போல் தன் கதையை, பாத்திரங்களை ஆட்டுவிப்பார், கதையின் ஒவ்வொரு திருப்பமும், பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவும் அவரின் அனுமதியன்றி நடக்காது என்று நமக்கு தோன்றும். உதாரணமாக அவரின் ‘Chance’, ‘Soon’, ‘Silence’ சிறுகதைகளை எடுத்துக்கொள்வோம். மூன்றிலும் ஒரே முக்கிய பாத்திரம் (ஜூலியட்) தான். முதல் கதையில் ஜூலியட்டுக்கு ஒரு ரயில் பிரயாணத்தின்போது ஒருவருடன் திடீர் தொடர்பு (affair) ஏற்படுகிறது, மற்ற இரண்டு கதைகளும் அதன் நீட்சி. இப்படி திடீரென்று ஏற்படும் உறவுகளை பற்றிய கதைகள் சற்றே அதீதமாக, நம்ப முடியாததாக இருக்கும், மேலும் அள்ளித்தெளித்த கோலம் போல் ஒரு அவசரம் தெரியும். ஆனால் இந்த கதைகளில் மன்ரோவின் clinical எழுத்து முறையால், இப்படி நடக்கக் கூடும் என்பதுடன், இந்த பாத்திரங்கள் இப்படி தான் நடந்து கொண்டிருக்கக்கூடும் என்றும் நமக்கு தோன்றுகிறது. அதுபோல் இந்த நாவலை படிக்கும்போதும், எழுத்தின் லகான் எப்போதும் டார்ட் கையில்தான் உள்ளது என்று நாம் உணர்கிறோம்.
ஒரு வெங்காயத்தின் சருகுகள் ஒவ்வொன்றாக உதிர்க்கப்படுவதுபோல் நாவலின் கதையோட்டத்தில் ஒவ்வொரு பாத்திரத்தின் சுயமும் வெளிப்படுத்தப்படுகிறது – எப்போதும் அகத்தின் ஒரு தளத்தின்கீழ் வேறொன்று இருந்து கொண்டேயிருக்கிறது. துவக்கத்தில் ஒரு சோம்பேறியாக, உதவாக்கரையாக நமக்கு அறிமுகமாகிறான் Bunny. அவன் தன் நண்பர்களின் பரந்த இதயத்தைப் பயன்படுத்திப் பிழைக்கும் ஒட்டுண்ணியாக இருக்கிறான். ஆனால் ரிச்சர்ட் இந்த குழுவுடன் சேர்வதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளையும் அவனது குடும்பப் பின்னணியையும் நாம் அறியவரும்போது அவன் உளச்சிக்கல்களால் வதைபடும் எதிர்மறை பாத்திரமாக நமக்குத் தெரிய வருகிறான்.
இந்தப் புரிதல் நமக்குக் கிடைக்கும்போது இவனது தவறான நடத்தையை சகித்துக் கொள்ளும் மற்ற குழுவினரைப் பற்றிய புரிதலும் மாற்றமடைகிறது. துவக்கத்தில் அவர்கள் அனைவரும் நட்புக்காக அவன் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால் பின்னர்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே அதற்கான நோக்கமாக இருக்கிறது என்பது புரிகிறது.
பதின்ம பருவத்தின் அச்சங்கள், பால்விழைவு குறித்த குழப்பங்கள் முதலானவற்றை டானா டார்ட் துல்லியமாகவே அவதானிக்கிறார். ரிச்சர்ட்டுக்கு தன் குடும்ப பின்னணி குறித்த தாழ்வு மனப்பான்மை உள்ளது. அந்த வயதில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும், பெற்றோரை, அவர்கள் செய்யும் வேலையைக்கூட அவமானமாக எண்ணும் வயதல்லவா அது. மேலும் அந்த வயதில், தனிமைப்பட்டு விடாமல், கல்லூரியின் பிரபலமான ஏதோவொரு குழுவின் (the ‘in crowd’), அங்கமாக வேண்டும் என்ற உந்துதல் தான் இந்த நாவலின் ஆரம்பம், அந்த உந்துதல்தான் ரிச்சர்டை ஐவர் குழுவுடன் இணைக்கிறது. இவை அனைத்தையும்விட இந்த பதின்ம வயதில்தான் நாம் முகமூடிகளை அணிய ஆரம்பிக்கிறோம், நம்மைப் பற்றிய வேறான, ஒரு போலியான பிம்பத்தை இந்த உலகின் முன்வைக்கிறோம், நாம் நாமாக இருப்பதில்லை. இதற்காக நாம் கொடுக்கும் விலையையும் இந்த நாவல் பேசுகிறது.
சில இடங்களில் நாவல் ஒரே இடத்தில் உழல்வது இதன் பலவீனமாக உள்ளது. குறிப்பாக, குளிர்கால விடுமுறையில் ஐவர் குழு தங்கள் வீடுகளுக்கு செல்ல, ரிச்சர்ட் தனியாக இருக்க வேண்டிய சூழல். . குளிர்கால வானிலை, பனி மூடி உள்ள சாலைகள், சிறிய இடத்தில் குளிரை பொறுத்துக்கொண்டு ரிச்சர்ட் இருப்பது, என குளிர்காலத்தின் வெறுமையையும் அவனுடைய தனிமையின் உளைச்சலோடு ஒன்றிணைக்கும் இந்தப் பகுதி, மிகவும் atmosphericஆக இருந்தாலும்,அதையே சில பத்து பக்கங்களுக்கு நீட்டிக்கும் போது வாசகன் சற்று சலிப்புறுகிறான்.
நாவலின் துவக்கத்தில் ஒரு புதிரான பாத்திரமாக வரும் கிரேக்க பேராசிரியர் ஜூலியன் மோரோ கதையின் பிற்பகுதிகளில் ஏறத்தாழ காணாமலே போய் விடுகிறார். அவர் நாவலின் மையத்தில் இல்லை என்பதால் இது நாவலின் தர்க்கப்படி சரியாகவே உள்ளது . ஆனால் துவக்கத்தில் இவரது பாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கவனம், அந்த பாத்திரத்தின் மேல் ஏற்றப்படும் பூடகத்தன்மை, வாசகரை உள்ளிழுத்துக் கொள்வதால், அவர் இந்த நாவலின் முக்கிய பாத்திரமாக இருப்பார் என்று நினைக்கிறோம். எனவே நாவலின் போக்கில் மாரோவுக்கு நியாயம் செய்யப்படவில்லை என்று தான் வாசகனுக்கு தோன்றுகிறது.
பின் நவீனத்துவத்தின் சேட்டைகளும் மோஸ்தர்களும் டானா டார்ட்டிடம் இல்லை. பழகிப் போன நவீனத்துவ கால பாணியிலான அதே கதைசொல்லல்தான். நல்ல ஒரு காத்திரமான கதைக் கரு, நன்கு வார்க்கப்பட்ட பாத்திரங்கள், ஆழமான அக/ புற சிக்கல்கள், அவை வெளிப்படும் முறை. நம் அனைவரின் அகத்திலும் நிழலாடும் அந்த இருண்ட பிரதேசங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் டானா டார்ட்டின் முயற்சி வாசகனை நிலைகுலையச் செய்யக் கூடியது.
நன்றி : ஆம்னிபஸ்
image credit: The Telegraph
