பிலவப் பார்வை – கோ. கமலக்கண்ணன் சிறுகதை

கோ. கமலக்கண்ணன்

01

அவனுக்கு அப்படியொரு குணம் இருந்தது. அது குணமல்ல; அது பேராற்றல், ஆம். கூடுவிட்டு கூடு பாய்வது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் போலொரு ஆற்றல். அவனுக்கு முன்பு – சில திறமை வாய்ந்த புனைவெழுத்தாளர்களைத் தவிர – யாருக்கும் அந்த திறமை இல்லாமல் இருந்ததால், அதை அவன் அதற்கிட்ட பெயரான `பிணைநுழை` என்றவாறே அறிந்துகொள்ள முடிகிறது.

அதைப் பற்றி விவரிக்கும் முன்னர், `பிணைநுழை` போன்ற அரிய, உண்மையான திறமைகள் கொண்டவர்கள் வாழ்வில் – பெரும்பாலும், இத்தகைய திறமைகள் ஏதோவொரு புள்ளியில் கண்டடையப்பட்டதாகவே இருப்பதையும், பிறப்பிலேயே இத்தகைய பேராற்றல் திறன்கள் இல்லாமல் இருப்பதையும் சுட்ட விழைகிறேன்.

இதில் முதன்மை பாத்திரம் செய்யும் அளப்பறிய, வியப்பூட்டும் செய்கைகளை ஒருவேளை நம்ப மறுக்கும் தற்குறியாக நீங்கள் இருந்தால், இதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது, ஆழமாய்த் தொடர்ந்து வாசிப்பது போன்ற செயல்கள், யாருக்கும் எந்த நன்மையும் தரப்போவதில்லை; கூடவே, கடவுள் நம்பிக்கையுடன் ஒவ்வொரு சடங்குகளையும், மந்திரங்களையும் சொல்லிக் கொண்டு தனக்கு நன்மை விளையும் என்று நினைப்பதற்கும் அக்கதியே விளையும். ஒரு வேளை நான் சொல்லப்போவதையெல்லாம் நம்புபவருக்கும் எந்த நன்மையும் விளையப்போவதில்லை, அவர்கள் இதை நம்பினார்கள் என்பதைத் தவிர.

காசிநாதன் அவனது காலகட்டத்தின் இளைஞர்கள் அனைவரையும் போல்தான் அன்றுவரை வாழ்ந்து கொண்டிருந்தான். காலையில் தன் காலரை முகர்ந்து பார்த்துவிட்டு, தனக்கே சகித்துக் கொள்ள முடிந்ததால், தனது சட்டையினை மூன்றாம் நாளாக துவைக்காமல் அணிந்து கொண்டான். எப்படியும் நாளை துவைக்க வேண்டும். ஜீன்ஸ் ஒன்றும் பிரச்சனை இல்லை எப்படியும் பத்து முறைவரை எந்தவித குழப்பமுமின்றி அணியலாம்.

அலுவலகம் வெறும் அல்லல் தரும் இடமாகவே பெரும்பாலும் இருக்கிறது. காசிக்கு விருப்பமாக இருப்பது ஒளிப்படங்கள் எடுப்பதும், பறவைகள் மீதான ஆர்வமும் மனித அரவமற்ற இடங்களில் அவற்றை தரிசிப்பதும்தான். ஒரு அரைகுறை ஆர்னித்தாலஜிஸ்ட். அவன் தனது அழகிய உணர்வுகளை காமிராவில் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் திளைத்திருந்த காலம் உண்டு.

தான் விரும்பாத ஒரு பணியில் ஒருவன் சிக்கிக்கொள்ளும்போது, அதன் சுமை பல மடங்காகிவிடுகிறது.  அவன் பார்த்த பணி, ஒரு எழுத்தர் பணியைப் போலவும், ஒரே விதமான கணக்குகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்து அதிலுள்ள பிரச்சனைகளைக் கண்டு சரி செய்தல் என்பதாக இருந்தது. அணிலைப் பிடித்து வந்து மூட்டைச் சுமக்க வேண்டும் என்று சொன்னது போல.

மதிய உணவுக்குப்பின், ஒரு மணிநேரம் கழித்து, வழக்கம் போல் அவனது இமைகள் தன்னை இழுத்து கண்களுக்குத் திரையிட முயன்று கொண்டிருந்தது. அவன் நெற்றியைச் சுருக்கி விரித்து கண்களை விசும்பிற்குக் காட்டிக்கொண்டிருந்தான். அப்படியே மெல்ல ட்ராகன் வடிவில் இருந்த ஒரு ஓவியத்தின் நடுவே வீற்றிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். ரொம்ப நேரமாக ஓரிரு நிமிடங்கள்தான் கடந்திருந்ததாக காட்டியது. சார்பியல் தத்துவத்தை எளிதில் விளக்க உதவும் இரண்டு உதாரண நிலைகள் – காதலிக்கு காத்திருப்பவனும், விரும்பாத அலுவல் செய்பவனும்.

கிடைக்கும் நேரம் தூங்க மட்டுமே அப்பழுக்கின்றி உதவுகிறது. ஒரு வேளை, தூங்கும் நேரமான ஆறு மணிநேரத்தில் ஓரிரு மணி நேரங்களைக் கடன் வாங்கினால், அடுத்த நாள் முதல் வேலையாக கணிணியில் அமர்ந்து தொலைக்கவேண்டிய நிலை அவன் கண்களை படுத்திதான் எடுத்துக் கொண்டிருக்கும். அதற்கு பயந்தே அவன் பல சுய பணிகளை, ஞாயிறன்று என்று தள்ளிப் போட்டுக்கொள்வான். ஞாயிறு வந்ததும், அவன் குறித்து வைத்த பணிகளில் முக்கால்வாசி பெரும்பாலும் அப்படியே கவனிக்கப்படாமலே எஞ்சும்; தள்ளி போடுவதற்குதான் அடுத்த ஞாயிறு வருமே.

02

ஒரு முறை தன்னிடம், கவனித்துக் கொள்ளும்படியாக அலுவலக செயலாளரால் விட்டுச்செல்லப்பட்ட, அழகிய பெண்குழந்தை `சித்திரவேணி`யின் அழுகையைச் சுழியாக்க நினைத்து, தன் முகத்தை பலவாறாய் நீட்டி மடக்கி, மங்கோலாய்டு போலவும், உதட்டைச் சுழித்து `ய்யூயூ…’ என்றவாறும் சத்தமிட்டுக் கொண்டே தன் காதுகளருகே கைகளை வைத்துக் கொண்டு, `வா, வா` என்றழைப்பதைச் செய்தபோது, தன் விழியின் பாவையைச் சுழற்றி ஏதோ படுமுயற்சியில் இருந்தபோது, அத்திறமையை நிகழ்த்தும், அது நிகழும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளி அவனுக்குத் தென்பட்டது. அவ்விளையாட்டுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட `சித்திரவேணி` அவனைக் கைதட்டி ஆர்ப்பரித்ததாலும், வெகு நாட்களுக்குப் பிறகு தன் முகத்தை பல கோணங்களில் இழுத்துப் பிசைந்ததில் அவன் முகத்தசைகளுக்குள் ஏற்பட்ட இரத்த ஓட்டம் தந்த புத்தெழுச்சியின் செம்மையாலும், அது ஒரு பேராற்றல் என்பதை அவன் அப்போது கவர்ந்து கொள்ளவில்லை.

இரவில், நீளுறக்கத்தின் நடுக்கடலில் அவன் அமர்ந்து அதே விளையாட்டை – அதாவது விழியின் இமையைத் திருப்பிவிட்டு வெள்ளையாக தன் விழியை மாற்ற முயன்ற பகுதியை மட்டும் – செய்து பார்த்தபோதுதான், அவன் தான் ஒரு நடுக்கடலின் மையத்தில், விழியின் அமைப்பில் இருந்த ஒரு படகின் கருவிழியாக இருக்கவேண்டிய இடத்தில் அமர்ந்திருப்பதை முழுமையாக உச்சத்திலிருந்து காண முடிந்தது. அந்த காட்சி தந்த சிலிர்ப்பாலும், ஒருவித பீதியாலும், உதறிவிட்ட கைகளைக் கொண்டு விழியை மீள்நிலைக்கிழுத்தான். மேலே பார்த்தான், பருந்தொன்று உச்சத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது – அது அவனை இரையென்றெண்ணித்தான் அதைச் செய்து கொண்டிருக்கிறது என்று நினைத்ததால் அவன் பீதி நொடிக்கிருமடங்காக பெருத்துக் கொண்டிருந்தது.

இரண்டாவது முறை; அவன் தன்னுள்ளிருக்கும் அப்புதிரை – எப்போதும், புரியாதிருக்கும் வரை எதுவும் அப்படித்தானே அழைக்கப்பட வேண்டும் – துழாவ ஆரம்பித்து விட்டான். எப்படி இத்தனை நாள் இதை நாம் எழுப்பாமல், இதை பயன்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறோம், என்ற கேள்வியும் பரவசமும் அவனை உருட்டிக்கொண்டிருந்தது.

அவனது புதிர் மெல்ல அவிழ்ந்தது. அதனை தன் திறமைகளுள் ஒன்றாக மாற்றிக் கொள்ளத் தக்கவாறு, அது மலரென விரிந்தது; பாம்பென வளைந்தாடியது; கிளியென மூக்கில் சிவந்தது; இப்போதெல்லாம், அவன் தன் கைகளால் விழியிமையைத் திருப்பவேண்டியதாயில்லாமல், நேரடியாய் தான் குறிவைக்கும் பறவைகளின் உயிரில் நேரடியாக `பிணைந்து நுழைந்து`, தன் இமைபிறழ்வதை உருவாக்கிக் கொண்டான்.

அணில்களின் ஓட்டத்தில், வல்லூறுகளின் உயரத்தில், தேள்களின் ஒய்யாரத்தில் என அத்தனை மனிதனாயல்லாத உயிர்களோடும் அவனால் தன்னைப் பிணைத்துக் கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட மூன்றேகால் வருடங்களை இப்படி உலகை ரசிக்க அவன் பயன்படுத்திக் கொண்டான்.

பறவைகளை ரசிக்கும் கண்களைப் பெற்றிருந்த காசியின் பார்வை, தற்போது பறவைகளுக்குள் இருந்து உலகை ரசிக்கும் நிலையில் இருந்தது. அவனுக்கு பறவைகளின் மூலமாக உலகினை ரசிப்பதே வெகு இன்பமாக இருந்தது. பறத்தல் ஒரு வித தளைகிழித்தல. உயரங்களை அணுகியும், விசும்பின் மையத்தில் உலவியும் அவன் கொண்ட உணர்வு, தான் எதையும் சார்ந்தவனல்ல; நான் நிலத்தை வென்றவன் என்பதுதான்.

உலகின் அத்தனை பறவைகளும் நிறைந்த ஒரு இளம்புற்குறுங்காட்டினை அமைக்க வேண்டுமென்ற பேராசையும் அவனுள் குடியேறியது. அப்போது, அவனுக்கிருந்த பொருளாதார அடிப்படையில், சில கிளிகள், ஒரு சில காதற்பறவைகள், புறாக்கள் ஆகியவற்றை மட்டும் தன்வீட்டில் வைத்துக்கொண்டு நாளுக்கு பத்துமணி நேரங்கள் செலவிட்டு தன் `பிணைநுழை` திறனை மென்மேலும் நுணுக்கமாக ஆக்கிக்கொண்டிருந்தான்.

அவன், உலகின் நுண்ணிய கண்களைக் கொண்ட மனிதர்களும், அவர்களது உயர்ரக கேமிராக்களும்கூட நுழைய முடியாத காட்சிகளை வெகு அநாயசமாகக் கண்டு நிகழ்ந்துகொண்டிருந்தான். அவன் கரண்டு கம்பியில் நின்ற காகத்தின் பார்வையில், மாடிப்படியில் இடதடமுலை மட்டும் தன் காதலன் உதடுகளுக்கு உணவிட்டவாறான கனவில் தன்னைப் பதமாய் விரல்களுக்குப் பதப்படுத்திக் கொண்டே, நின்று சொருகிய கண்களோடு தன் முனகலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தை ரசித்து சுயமைதுனம் செய்ததை வெகு ஆர்வகதியோடும், பேருக்கு, கடற்குதிரையின் `பிணைநுழை`யில், தன்செவுள்களிலிருந்தே ஒளிவிடுவதாய்க் காட்சி தரும் சூரிய கதிர்பட்ட `கொலைத்தன மீனின்` நிழலைப் பிடிக்க நினைத்த காட்சியையும், தான் பார்த்த காட்சிகளிலேயே மிகவும் சிறந்தவை என்று குறிப்பிட்டு தன் முகநூலில் பதிவிட்டு அதையும் தன் சுயபார்வைக்கு மட்டுமென திருத்தி வைத்துக் கொண்டான்.

03

அவைகளைத் தொடர்ந்து, நாள்தோறும் அவனுக்கு உலகின் புதிர்களைக் காண்பதும், புதிர்களின் பதில்களைத் தேடுவதுமே ஆதியந்த தேடலாகி, உலகில் மனிதன் உருவாக்கிய, இயற்கையில் உருவாக்கப்பட்டதான, அத்தனை அழகினையும் தெவிட்டி மீண்டு, மீண்டும் தெவிட்டும் மட்டும் ரசித்தான்.

அவனுக்குள்ளே அகம் கடவுளாக மாறிவிட்டிருந்தது. அதையும் கடக்க முடியாமல் போனபோது அவனுக்கு ஏற்பட்ட சலிப்பும் போதாமையும் அவனைக் கொன்றுவிடுவது போலிருந்தது. மெல்ல மீண்டும் கடவுளைத் தேய்த்து மனிதனாகும் முனைப்பில், தன் எண்ணத்தைச் சாறுபிழிந்து முடிவில், இந்த திறனை வெகு சிறப்பான தொழிலாக நடத்த முடிவெடுத்தான்.

ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தேவையான, தொலைந்து போன எதையும் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கலாம் என நினைத்து அதற்கு விளம்பரப்படுத்தும் விதமாக `சகலமார்க்க யோகி` என்ற பட்டப்பெயரிலும் ‘குரு காசி’ என்ற பொதுப்பெயரிலும் அறியப்பட்ட ஒரு சிறிய குறி சொல்லும் தொழிலதிபராய் அமர்ந்தான். அவனது எதிர்பார்ப்பை விடவும் தொழில் வெகு எளிதாகவும் சூடாகவும் இருந்தது, துவக்கத்திலிருந்தே. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தேடிவரும் பொருள் கிட்டும் பட்சத்தில் மட்டுமே தான் கட்டணம் வசூலிக்கப்போவதாக இருப்பதையும் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தது விரைவிலேயே அவனை ஒரு பெரும் புள்ளியாக்கியது அந்த வட்டாரத்தில்.

குரு காசி, ஒரு தடிமனான கிழவனின் பல்செட்டையும், ஒரு மகாபக்தன் தான் கோயிலில் தொலைத்த செருப்பையும் ஒரே நாளில் கண்டுபிடிக்க வேண்டிய கோரிக்கையை மின்னஞ்சலில் பெற்று, அதைக் கண்டுபிடித்ததும் கட்டணமாக அவர்களுக்கு இரண்டு விரல்களைக் காட்டியதும் – இரண்டாயிரம் கட்டணம் கேட்பதாய் எண்ணி- இருபதாயிரம் பெற்றதும் அவனது பொருளாதார நிலையைப் பன்மடங்கு பெருக்கிட துவக்கப் புள்ளியானது.

தன் தொழிலின் மீது பலருக்கும் சந்தேகம் விளைவது இயல்பே என்பதைப் புரிந்து கொண்டிருந்த காசி என்கிற குரு காசி தற்போது, மக்களை அதிகம் குழப்பிவிடக்கூடாது என்பதற்காக தனது உண்மையான திறமையை மறைத்து வைத்துக்கொண்டான். மாறாக கிளிகளைக் கொண்டு சில எழுதப்படாத ஓலைகளுள் ஒன்றை தேர்ந்தெடுத்து, தனக்கு மட்டுமே அவ்வோலையில் தெரியும் எழுத்துக்களைப் படிப்பதாக அனைவரையும் நம்பவைக்கும் தன் ஆகிருதி அசைவுகளைக் கொண்டு தொழிலில் செழித்தான்.

04

அந்த பைத்தியம் குரு காசியின் பிறப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் கெட்ட வார்த்தையை மந்திரமென சொல்லிக்கொண்டிருந்தது. பதற்றத்துடன் தன் மகனின் சித்தம் குறித்த அலைபாய்தல்களை விளக்கிக் கொண்டிருந்தாள் அந்த பைத்திய பாலகனின் அன்னை. அவளிடம் கனிவினை இழந்துவிடாத பார்வையுடன் அவனது நிலைகுறித்து அறிந்து கொண்டார் குரு காசி. அவளால், எந்த மருத்துவத்திலும், எந்த கடவுளாலும் சரி செய்யப்படாத அவனது பிரச்சனையின் தீர்வு குரு காசியிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்று வலுவாக நம்பப்பட்டதுதான் காசிக்கு மேலும் சங்கடத்தைத் தந்தது.

சேவை மையத்தின் கோட்பாடுகளைச் சரிவர புரிந்து கொள்ளாமல் நிலைகுத்திய விழிகளோடும், மனக்கோணலோடும் இருந்த தன் மைந்தனின் பைத்தியக்காரத்தனத்திற்கு முற்றுப்புள்ளி இங்குதான் கிடைக்கும் என்று எண்ணி வந்த அன்னை, கடைசியில் குரு தன் நிலை விளக்கம் தந்து அவளிடம் அழாதகுறையாக அனுப்பிவைத்திடும்போது அவ்வன்னையின் சோகம் அவனையும் தொற்றிக்கொண்டது. குரு தன் நிழல் போன்ற தோற்றமளிக்கும் உடலிலிருந்து சொன்னது, ‘வெளியே தொலைந்தவர்களை கண்டறியும் வழிமுறைகளே எனக்கு இச்சுவடிகளால் அருளப்பட்டுள்ளது; தனக்குள்ளேயே தொலைந்து போன உன் பாலகனை கண்டறிய என்னால் இயலாது தாயே`.

பிளாஸ்டிக் செருப்பு நெருப்பில் உருகுவது போல உணர்ந்தான். அன்று முதல், இது போன்ற வழக்குகளை வாசலிலேயே தவிர்த்திட, தனக்கு உதவியாளராக அப்துல் என்ற அநாதையைச் சேர்த்துக் கொண்டான், அவன் அநாதை என்பதற்காக அல்ல; அவன் குருட்டு அநாதை என்பதற்காக. கூடுதல் சிறப்பாக அப்துலின் குள்ளத்தனம் இருந்தது. அது ஒரு விதமான மாயமந்திர சூழலுக்கு உதவும் தோற்றமாக இருந்தது.

இப்படி ஒரு இடத்தில் ஒரு குள்ளன் இருந்தால், அவனைப் பற்றிய பெரும் கற்பனைக் கதைகள் மக்களாலேயே புனையப்பட்டு அது நிறுவனத்திற்கு கூடுதல் பயனளிக்கும் என்பதையும் குரு காசி உணர்ந்து கொள்ள அதிக நாட்கள் எடுக்கவில்லை.

குள்ளனால் முடிந்தாலும், இந்த பணியை ஒரு குருடனால் முழுமையாகச் செய்ய முடியாது என்று முன்னரே புரிந்து கொண்டதால், அவன் அமர்ந்திருக்கும் இடத்தின் உச்சியில் தன் சேகரத்தில் இருந்த பல பறவைக்கூண்டுகளில் ஒரு கண்காணிப்பு புறா ஒன்றினை நிறுவியிருந்தான். கண நேரத்தில் அப்புறாவிலும், தன் உடலிலும், தொலைபேசியிலும் என பரிணமித்து உரிய ஆணைகளை அப்துலுக்கு அனுப்பிக்கொண்டு சிறப்பாக நிர்வகித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு பலனைத் தருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு படி முன்னேற்றமும் ஒவ்வொரு எதிரியை உருவாக்கிவிடுகிறது என்பது மட்டும் திண்ணம். உள்ளூர் வெளியூர் அரைச் சாமியார்கள், ரவுடிகள், அவர்களுக்கான வழக்கறிஞர்கள் ஆகியோரடங்கிய லாபியில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றதே இவனது இந்த அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்தத்தான். ஆனால், அந்த கூட்டத்தில் முடிவானதென்னவோ அவனை தீர்த்துக்கட்டிவிடவேண்டுமென்ற தீர்மானம்தான்.

பெரும் பொருட்செலவில் ஒரு நிழலுலக கொலைகாரனை தேர்ந்தெடுத்து குரு காசியின் பறவைப் பண்ணைக்கு அனுப்பியிருந்தார்கள். ஆனால், இரண்டு நாட்களாக குரு காசி அந்த கொலைகாரனின் கண்களில் அகப்படவேயில்லை.  இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த கூலியின் உடல் ஊரின் பொதுவான ஒரு சாலை சிக்னலில், விடியற்காலையில் கிடந்தது. அவனது, இரண்டு கண்களும் அவன் இறப்பதற்கு முன் கிடுக்கியைக் கொண்டு பிடுங்கப்பட்டிருப்பது போல தெரிவதாக பின்னர் கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு முறையும் அவனைக் கொல்ல வரும்போதும் அவன் மாயமாய் மறைந்துவிடுவதும், கொல்ல வந்தவர்களே மரணிப்பதும், அவர்கள் கண்கள் பிடுங்கி எறியப்பட்டிருப்பதும், ஒரு பெரிய ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் எதிரிகள் தரப்பில் ஏற்படுத்தியது. இதை குறிப்பிட்டு போலீஸுக்கு தெரிவிக்கவும் இயலாது என்பதும், குரு காசியின் தொழில் எந்த சுணக்கமுமின்றி முன்பை விட செறிவாக நடைபெறுகிறது என்பதும் அவர்களை நோக்கி குரு காசி தந்த எச்சரிக்கையாகவே இருந்தது. அது, முக்கிய நிலை எதிரிகளை புண்ணில் தேய்த்த மிளகாய்ப்பொடியென வெறியேற்றி வைத்திருந்தது.

05

அப்துல், தனக்கு வந்த சில்லறைப் பணத்தை வைத்து ஒரு சிறிய வீடு ஒன்றினைக் கட்டியிருந்தான். சிறிய வீட்டில் அவன் உடலிலுள்ள இச்சைகளை சரிகட்ட ஒரு பேரழகியை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அவள், அவனால் அல்ல, உண்மையில் அவனிடமிருந்து ரகசியங்களை திருடிக்கொள்ள எதிரிகளால் அமர்த்தப்பட்டவள்.

அவள், பேரழகியாயிருக்க வேண்டிய அவசியமில்லையே என்றொரு விவாதம் நடந்தது. இல்லை, குருடர்களுக்கு களிமயக்கில் விரல்களில் பத்துகண்கள் முளைக்கும், உடலிணைவில் ஆயிரம் கண்கள் சிமிட்டும் என்றொருவாறு, தெளிவாக எதிர்வாதத்தைக் கிளப்பி தன் சொந்த செலவில் தன் மனைவியை விட அதிகம் தான் நேசிக்கும் பிரகதி என்ற பேரழகியை உள்நுழைப்பதில் கோவிந்தன் என்ற வழக்கறிஞர் வெற்றி பெற்றிருந்தார். அவள் மூலம், தன் கூட்டாளிகளைவிடவும் கூடுதல் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற தனிக்கணக்குதான் அவர் அவ்வளவு சிரத்தை மேற்கொள்ள காரணம்.

அவளும் குள்ளனுக்கும் குருடனுக்கும் செய்வதிலாத சேவைகள் செய்து, அவனிடமிருந்து கிடைத்த ஒன்றுக்கும் உதவாத செய்தியோடுதான் தினமும் திரும்பிட வேண்டி இருந்தது. மேலும், நேரடியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு அப்துல் வெகு திறமையாக புலன்விசாரணை செய்யும் கேள்விகளைத் தொடுக்கக் கூடும் என்றறிந்து அவள் அமைதி காத்தது அவள் அனுபவத்தைக் காட்டுவதாக இருந்தது.

அன்று தானும் திருதராஷ்டிரரின் மனைவி போல தன் கண்களை மூடிக்கொண்டு அவனைப் புணர விரும்புவதாக சொல்லி அப்துலைத் தூண்டினாள். அவள் விழியினை துணியால் மூடியதோடன்றி, பிரகதியின் கைகளையும் கால்களையும் கட்டிலின் நான்கு திசைகளிலும் பிணைத்து, அவளுடலை தன் காமத்தால் விழுங்கிக் கொண்டிருந்த அப்துல் தன் இச்சை தீர்ந்ததும் சற்று நேரம் அவள் கொப்பூளில் முகம் வைத்திருந்தான். அவள் சில முனகல்களும் பாராட்டுகளுமாக அவனை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

அடுத்த நொடி தன் கழுத்தின் வளைவிடுக்கில் ஏதோ கூர்மை படுவதை உணர்ந்தாள். புரிந்துவிட்டது அவளுக்கு, தடுமாறினாள். அத்தனை உண்மையும் கொஞ்சம் ரத்தமும் வெளியேவந்தது அவள் தொண்டையிலிருந்து.

06

அன்றிரவு தன் ரகசிய அறையின் உள்ளே துயில் கொள்ளும் முன், வழக்கம் போல் அப்துலை அழைத்து அன்றைய பரிவர்த்தனைகளை கவனித்து அவனிடம் பேசி அனுப்பினான். பிறகு தன் உறக்கத்தை துவங்க எத்தனித்தான். சில வாசனைகள் ஒன்றுக்கொன்று தொடர்பான வாசனைகளின் நியாபங்களை நோக்கி அவன் மனதை இழுத்துச் சென்றது. எல்லாமே நியாபகங்கள்தான், நமக்கு தெரியாத ஒன்றை, அது இது போன்றதுதான் என்ற மாயையின் மூலம் நமக்கு தெரிந்த ஒன்றாக மாற்றுவது இந்த நியாபகங்கள்தான். வியந்தான்.

மெல்ல அவனது நியாபகம், அவனது நாற்றமடிக்கும் சட்டையை நோக்கி நகர்ந்தது. தற்போது, இருக்கும் இந்த பணியாவது தனக்கு பிடித்தமான பணிதானா என்ற எண்ணத்தில் நுழைந்தான். அன்று கிடைக்காத உறக்கத்தையெல்லாம் இன்றே தூங்கி கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. வந்ததுமே அவ்வெண்ணத்தின் மீது சிறு புன்னகையைத் தெளித்தான். நிகழ்விலிருந்து கனவிற்கு எப்போது வந்தேன் என்ற பிரித்தறிய இயலாத கனவொன்றில் சஞ்சரித்தான். ஆழ்துயில் கொண்டான்.

பூக்கள் நிறைந்த உலகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரம்மனாக தானிருப்பதைக் கண்டுகொண்டிருந்தான். அவனது படைப்பின் மூலம் உருவாகிக் கொண்டிருந்த ஞாலம் உலகின் அத்தனை சுகங்களையும், அழகுகளையும், அழகினைக் கண்டறியும் கண்களையுமே கொண்டிருந்தன.

திடீரென்று, அக்கனவில் புயலும், கோரங்களும், இடியும் என பதற்றங்கள் உருவானது. படைப்பாளி தவித்துக் கொண்டிருந்தார், என்ன குழப்பமானதென்று அறியாமல். திடீரென அவரது இதயப்பகுதியில் ஒரு ஈட்டி நுழைந்து, அவரது குருதி கொப்பளித்து அவ்வுலகின் பள்ளங்களை நிரப்பி செங்கடலாகிக் கொண்டிருந்தது.

திடுக்கிட்டு விழித்த காசியின் முன் பலர் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். காசியால் நம்ப முடியவில்லை, இந்த அற்ப மனிதர்களால் பேராற்றல் பெற்றிருந்த என்னை எப்படி நெருங்க முடிந்தது என்ற கேள்வியே அவனை வலியை மீறிய வியப்பில் வைத்திருந்தது.

வழக்கறிஞர் கோவிந்தன், அமைச்சர் பிரகாஷம், ஆய்வாளர் ஷாஜகான் என அத்தனை எதிரிகளும் அங்கே தரிசனம் தந்தனர். எதிரியை ஒழிப்பதில் ஒருமைப்பாடு கொள்ளும் அவர்களை நோக்கி புன்னகைத்தபோது, பிணைநுழை கொண்டு பறவையின் உடலை அடைந்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் நான் பிழைப்பேன். இந்த உடல் மட்டுமே இவர்களிடம் சடலமாய் எஞ்சும். நான் உலகை ஆளும் ஒருவனாய் இருப்பேன் என்ற அவசர தேவையினையும் காசி உணர்ந்தான்.

`பிணை நுழை` யை முயற்சிக்கத் தொடங்கும் கணத்தில், ஒரு பெரிய கூராயுதம் வெகு சரியாக நெஞ்சைப் பிளந்தது. அடுத்த கணத்தில் நெஞ்சைக் கிழித்த கொடும் ஆயுதம், பின் நோக்கி சென்றது. கனவெனத் தோன்றிய நிஜத்தில், மிச்சமிருந்த உயிரின் உதவியால் திரும்புகையில் குனிந்து பார்த்த, அவன் கண்களை நம்பமுடியாமல் தவித்தான்.

இரு கண்களும் ஒளி பெற்றிருந்த அப்துல் அங்கே, சாமர்த்தியமான சிரிப்புகளுடன் கூடிய முகத்தில் இருந்தான். காசி மெல்ல தன் இருளும் கண்களோடு மல்லாந்து விழுந்தான். ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அப்துல் தன் குருவின் முகத்தில் மிதித்தான். காசியின் உடல் ஐம்பத்திரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் தூக்கி எறியப்பட்டது.

அப்துல் அளவிடமுடியாத செல்வத்திற்கு அதிபதியாக இருந்தான். பிரகதியையும் அவள் போன்ற பலரையும் தன் இச்சைக்கு துணையாக இருத்திக் கொண்டு தானிழந்த உயரத்தை தன் ஈகோவால் பூர்த்திசெய்து கொள்ள எண்ணிக் கொண்டிருந்தான். குள்ளன் தானே குபேரனாக வாழமுடியாத கரீபியன் கடற்கரையில் சூரியனை குளிராடி அணிந்து பார்த்தவாறே மகிழ்ந்திருந்த அவன் முகத்தின் மீது, ஒவ்வொரு 12 நொடிக்கும் உச்சியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த  ராஜாளி ஒன்றின் நிழல் பட்டுப் பட்டு சென்றுகொண்டிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.