ஆரண்ய கன்னி – கன்யா சிறுகதை

கன்யா

நர்மதையின் அருகே அமைந்துள்ள அழகான காடு. செடியும் கொடியும் மரங்களும் சிறு சிற்றோடைகளும் சூழலை ரமிக்கச் செய்கின்றன. மலர்களிலும் கனிகளிலும்தான் எத்தனை வகைகளைப் பார்க்க முடிகிறது இங்கே! மாதவி, தான் எப்போதும் அந்தந்தக் கணங்களில் வாழ்வதை தானே இரசித்தாள். மரப்பட்டைகளைக் கொண்டும் கீற்றுக்களைக் கொண்டும் மூங்கில் கழிகளைக் கொண்டும் அங்கே பர்ணசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், யாரையும் காணவில்லை. ஒருக்கால் அஷ்டவகனின் யாகத்திற்குச் சென்றிருக்கலாம். அவள் இங்கு வந்து ஐந்து நாட்கள் ஆகின்றன.

நான்கு மான்கள்- ம்ருணாளினி, ம்ருகனயனீ, ஹிரண்மயி, அக்ஷ வித்யா! எத்தனை அன்புடன் மாதவியைச் சுற்றி வருகின்றன! நான்கு வேதங்களின் குறியீடா?அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று பெண்களுக்குச் சொல்லப்படும் குணங்களா?அவளையும் இணைத்துக் கொண்டு ஐந்தழல் தவமா?அவளையே அறியும் ஆவலா? இன்று அதிகாலையிலேயே ம்ருணாளினி வந்து விட்டாள். நேற்றே இதற்கான அச்சாரமும் போட்டுவிட்டாள்.

மாதவி பேசத் தொடங்கினாள்-

‘ம்ருணா, நானும் காட்டின் உயிர்தான். உன்னைப் போல் கவரிமான் இனம்தான்.வெள்ளி எழுந்தாகிவிட்டது. அடர்ந்த மரங்களின் உள்ளே தாய்ப் பறவைகள் எழுந்து குஞ்சுகளைக் கொஞ்சிக் கொண்டே பாதுகாப்பாக இருக்கும் விதத்தினைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. புலரியின் முதல் கிரணங்களில் அவை இரை தேடி கிளம்பத் தயாராகும். முந்தும் பறவைக்குத்தான் அதிக உணவு கிடைக்கும். ம்ருணா, அந்தக் குஞ்சுகளுக்கு பறக்கத் தெரிந்தவுடன் தாய் அதை கவனிக்காது. ஆனால், அப்பொழுதுதான் பிறந்த குழந்தைகளை விட்டு தனியே வந்த தாய் நான்.’

ம்ருணாளினி ஏறிட்டுப் பார்த்தது.

‘ஓ, ம்ருகனயனீ, நீயும் வந்துவிட்டாயா? ஹிரண்மயி, அக்ஷ வித்யாவும் வந்திருக்கிறார்களா? புதுப்புற்கள் உங்களுக்காகவே பனித்துளிகளுடன் காத்திருக்கின்றன. நந்தினி பால் ததும்ப வந்து நிற்கிறாள் பார். என்ன கேள்வி கேட்க வேண்டும் என்னிடம்? என் அமுதூற்றை என்ன செய்தேன் என்றா? பாருங்கள், நந்தினி கன்றுடன் வரவில்லை. நினைத்து முலை வழியே நின்று பால் சுரக்கிறாள், நானும் என் மைந்தர் நால்வருக்கும் அப்படியே செய்தேன். பசும் புல் கூட வேண்டாம், என் கதைதான் வேண்டுமா உங்களுக்கு? சரி காலையிலேயே கதையா? பாதிதான் இப்பொழுது சொல்வேன்,சம்மதமா?’ என்று அவள் ஆரம்பித்தாள்.

‘என் பெயர் மாதவி. ஒவ்வொரு வனமாகப் பார்த்து வருகிறேன். எல்லா உயிர்களும் என்னை நேசிக்கின்றன. நான் எல்லோருடனும் நட்பு கொள்கிறேன்.’

‘மரங்களின் இலைகளின் ஊடாக ஆதவன் பூமியில் போடும் வட்டங்களும், காற்றில் இலைகள் அசைய அவை மாறும் உரு எழிலும், தெளிந்த நீல வானும் காலவர் வந்த அன்றைய தினத்தில் இல்லை. பொழியாத கரு மேகங்கள், இறுக்கமான காற்று, இனம் தெரியாத மனக் கலவரம் இப்படிப்பட்ட ஓர் நாளில் பிரதிஷ்டானத்தின் மன்னராகிய யயாதியிடம் அவர் வந்தார். முகத்தில் நல்ல களை. திருமணமாகாதவர். தன் ஆசானாகிய விஸ்வாமித்திரருக்குக் கொடுப்பதற்கான குரு தட்சிணையை மன்னரிடம் யாசகம் பெற்றுச் செல்வதற்கு வந்திருந்தார். அவருக்கு எண்ணூறு பால் வெள்ளைக் குதிரைகள் வேண்டும்-அவைகளும் ஒரு காது மட்டும் கறுப்பாக இருக்க வேண்டும். யயாதியிடம் அந்த மாதிரி ஒரு குதிரைகூட இல்லை; பொருள் தந்து வாங்கிக்கொள்ளச் சொல்ல கருவூலத்தில் நிரை இல்லை. மன்னருக்கும், மைந்தர்களுக்கும் கவலை; ஏழை அந்தணனுக்கு உதவ ஒன்றுமில்லை. அப்பொழுது நான் சொன்னேன், ’தந்தையே, உங்கள் கௌரவத்தை நான் காக்கிறேன்,’ மாதவி சற்று நிறுத்தினாள்.

‘ம்ருணாளினி, உன் அழகான கண்களை வியப்பில் விரிக்கிறாய், என்ன ஒரு வசீகரம்! ஆம், நான் இளவரசிதான். ஆனால், செயல்களின் எந்த விளைவும் என்னை அணுகாது. தழையும், புற்களும் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றன? உங்களுக்கு அவை உணவு, எங்களுக்கு கண் கொள்ளும் விருந்து,’என்று சற்று நிறுத்திவிட்டு, ‘சரி,சரி, அக்ஷ வித்யாவைப் பார், தலையைச் சாய்த்து மேலே சொல் என்கிறாள். “தந்தையே, காலவர் என்னை அழைத்துச் செல்லட்டும்; என்னை மணம் புரியும் அரசரிடம் தனக்கான 800 குதிரைகளைப் பெற்றுக் கொள்ளட்டும்” என்றேன். என் தந்தை மகிழ்ந்தார். இவளுக்கு ஆண் மக்களைப் பெற்றெடுக்கும் வரம் ஒரு முனிவர் தந்துள்ளார். காலவரே, நீங்கள் இவளை அழைத்துச் சென்று அரச குலத்தில் மணம் செய்வித்து அதன் மூலம் உங்கள் குரு தட்சிணையைப் பெறுங்கள், என்றார் அரசராகிய என் தந்தை.’

‘மீதியை இன்று மதியம் சொல்கிறேன்,’ என்று மாதவி நகர்ந்ததும் மான்களுக்கு வருத்தம்தான்.

“ஒரு இளவரசி ஏன் காட்டில் இருக்கிறாள்? மனிதர்களைப் போல் நரிகள்கூட இல்லை.அந்தக் காலவன் தன் வேலை முடிந்ததும் இவளைக் கைவிட்டிருப்பான். ஆமாம், அதென்ன விந்தையான குரு தட்சிணை; எண்ணூறு வெள்ளைக் குதிரைகள், அவைகளின் ஒரு காது மட்டும் கறுப்பு. காட்டில் தவம் செய்யும் ரிஷிக்கு அவ்வளவு குதிரைகள் எதற்கு?அவர் இந்தக் காட்டிற்கு வருகையில் நம்முடைய கொம்பாலே முட்டித் தள்ள வேண்டும்,” அவைகள் பேசிக்கொண்டே புல் மேய்ந்தன.

‘எல்லா உயிர்களுக்கும் பிறரது வாழ்க்கை ஒரு சுவாரஸ்யம் போலும். இந்த மான்கள் என்னைப் புரிந்து கொள்ளுமா? அது கான் உயிரிகளின் சட்டத்தைக் கொண்டா, மனித நியதிகளைக் கொண்டா? அதிலும்கூட இப்பொழுது நடைமுறையில் உள்ள வழக்கங்களா, இல்லை தொன்ம மரபுகளா?’

மாதவி சிரித்துக் கொண்டாள். பிறர் புரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தாலே நம் செயலுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம் என்றுதானே பொருள். ஆனாலும், உயிர் சுமக்கும் பெண்ணிடம் உலகம் அதிக அளவில் உண்மையை எதிர்பார்க்கிறதோ? எந்த உண்மை அது, நிஜமான மெய்யா, நிழலான மெய்யா? நிகழ்வுகளிலிருந்து பிரிந்து அதில் ஒன்றாமல் ஈடுபடுவது உண்மையின் வேஷம் போட்ட பொய் அல்லவா?அல்லது அதுதான் வாழும் கலையா? மனிதன் பிற உயிர்களைப் போல் நான்கு கால்களால் தவழாமல் நேரே நிற்கத் தெரிந்ததும் கனல் என்றும், கன்னி என்றும், கற்பு என்றும், வம்சம் என்றும், குலப் பெருமை என்றும் சிக்கிக் கொண்டு விட்டானோ? விலங்குகள் புணர்வதற்கென்று பருவங்கள் வைத்திருக்கின்றன, சில நியதிகளும்கூட.

அந்த ஆண் தூக்கணங்குருவி பார்த்துப் பார்த்து எத்தனை அழகாக கூடு கட்டியது தன் துணைக்காக. அதை அந்தப் பெண் குருவி ஏற்றுக்கொள்ளவில்லை. சில மாறுதல்களைச் செய்யச் சொன்னது- முக்கியமாக உள் தொட்டில் போன்ற அமைப்புடன் முட்டையிடவும், குஞ்சு பொரிக்கவும் அது சொன்ன மாறுதல்கள். தன் இனப் பெருக்கத்தில் அவைகள் கவனமாக இருக்கின்றன. அவைகளும்தான் காதல் கொள்கின்றன, சேர்ந்து இன்பமாக இருக்கின்றன. ஆனால், சில மனிதர்கள் காமத்தில் மட்டுமே ஆடி, அதுவும், பருவங்கள் பாராது, அழகுணர்ச்சியை இழந்தல்லவா வாழ்கிறார்கள்? பக்க விளைவாகக் குழந்தைகள்! விந்தையான உலகம் இது’.

மான்கள் வந்து அவள் சிந்தனையைக் கலைத்தன. ’என் கதையைத் தொடர வேண்டும் அதுதானே? அயோத்தி அரசர் ஹர்யஸ்வாவிற்கு ஒரு ஆண் மகனை  அதாவது வசுமானசாவைப் பெற்றுக் கொடுத்தேன். அவர் இருநூறு குதிரைகள் கொடுத்தார். பின்னர் காசி மன்னர் தேவதாசவிற்கு என் மூலம் ப்ரதார்த்தனா பிறந்தான். மேலும் ஒரு இருநூறு குதிரைகள். அப்புறம் போஜனகிரியின் அரசனான உஷினராவிற்கு சிபி பிறந்தான். மீதி இருநூறு குதிரைகளுக்காக விஸ்வாமித்திரருக்கு அஷ்டவகனைப் பெற்றுக் கொடுத்தேன்.’

“ஹர்யஸ்வாவிற்குச் சரி. மற்ற மூவருமெப்படி இதை ஒப்புக் கொண்டார்கள்?” என்றாள் ம்ருகனயனீ.

‘சென்ற பிறப்பில் நீ மனிதனாக இருந்திருக்க வேண்டும்; வாசனை போகவில்லை’ என்று சிரித்தாள் மாதவி.

‘ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன் நான் கன்னியென ஆகும் திறம் பெற்றவள்; அதை வரமென்றுகூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அதனால் நான் கற்புக்கரசி என கொண்டாடப்படவும் கூடும்.’

“நீ அதிகமாக பயமுறுத்துகிறாய். உங்கள் மனித சட்டங்கள் அப்படித்தானே இருக்கின்றன,” என்றாள் ஹிரண்மயி.

‘கோபத்தைப் பார். சாஸ்திரங்களின்படிதான் நால்வருடன் எனக்குக் கல்யாணம். அப்படியில்லையென்றால் பிறக்கும் மகனுக்கு அரசாளும் உரிமை கிடையாது. என் கருவறை வாயில் ஒரே ஒரு கூடலுக்குத்தான் திறக்கும். ஒரு விந்துவிற்கு மேல் அனுமதிக்காது. காதலுக்கும், காமத்திற்கும் இடம் கொடுக்காத இதை தாந்த்ரீகத்தில் ’யோனிக் காப்பு’ என்றும், ’கரு இருள் பூஜை’ என்றும் சொல்வார்கள். என் மகன்கள் பிறந்த மறு நொடி நான் அவர்களை விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுள் ஊறும் அமுது அவர்களை என் நினைப்பாலேயே வளர்த்து விடும் நான்காவது மகன் பிறந்த பிறகு காலவர் என்னை வாழ்த்தி வணங்கி கன்னியெனவே என் தந்தை யயாதியிடம் ஒப்படைத்தார்’.

“அதெல்லாம் தான் முடிந்துவிட்டதே, பின் ஏன் காட்டுக்கு வந்தாய்?’என்றாள் அக்ஷ வித்யா.

‘யயாதி மன்னர் எனக்கு சுயம்வர ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். பல அரசர்களுக்கு  என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்தது. முத்தான நான்கு புதல்வர்களை நான் பெற்று அளித்தாகிவிட்டது. ஒவ்வொரு மகனுக்கும் நினைப்பாலே பாலூட்டி வளர்த்தாகிவிட்டது. இனி ஒரு மண வாழ்க்கை எனக்கெதற்கு? வசுமானசா செல்வம் மிக்கவனாகவும், பெருமை படைத்தவனாகவும் இருக்கிறான்; இரண்டாம் மகன் ப்ரதார்த்தனா வீரம் மிக்கவன்; சிபி உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறான். அஷ்டவகா அஸ்வமேத யாகம் செய்து அரசாள்கிறான். எனக்கு கடமைகள், பந்த பாசங்கள் கிடையாது. நல்ல உலகிற்கான தவமும், நல்ல நட்பும் மட்டுமே தேவை. இரண்டும் காட்டில் எனக்கு கிடைக்கும் என்றவுடன் என் தந்தை என்னை என் விருப்பப்படி அனுப்பி வைத்தார். காடு காடுகளாகச் சென்று கொண்டிருக்கிறேன்,’ என்றாள் மாதவி.

“என் கேள்வி இது, மாதவி. நீ கன்னிகையென ஆகாவிடில் உன்னை தேவதாசாவோ, உஷினராவோ கல்யாணம் செய்திருப்பார்களா? அவர்களின் இந்த மனப்பாங்கினை நீ வெறுக்கவில்லையா?” என்றாள் ஹிரண்மயி.

‘ஒரு போதும் இல்லை. எல்லாம் ஒரு நிலத்தில் விளைந்த தானியமாக இருந்தாலும் தேர்ந்த நெல்மணி விதைகளை வைத்துத்தான் அடுத்த பட்டம் நடக்கும். மனைவி ஆன கன்னியினால்தான் அரச வழி நல் வாரிசென வளரும்,’ மாதவியின் பதில் புரியவே அவர்களுக்குச் சற்று நேரமாயிற்று.

“அப்படியென்றால் உன் தந்தை சொல்படி திருமணமாவது செய்து கொண்டிருக்கலாம் அல்லவா?” என்றாள் அக்ஷ வித்யா.

‘எனக்கு கலவியில் நாட்டமில்லை. கற்பிற்கு மனிதர்கள் சொல்லும் சமன்பாட்டில் நம்பிக்கையில்லை. நான் சக்தியின் குறியீடு.என் கருப்பையில் குடி கொண்டுள்ள கன்னித்தெய்வம் நான். திங்கள்தோறும் நான் அடையும் விலக்கின் குருதி மிகத் தூய்மையானது. பெண்ணெனப் பிறந்ததால் அன்னை என ஆனேன். அது என் பெருமை. அந்தந்தக் கருச் சுமந்த போதில் நான் அதைத் தவிர எதையும் நினைக்கவில்லை, ஒப்பீடு செய்யவில்லை.

‘பிறந்த குலத்திற்கு நேர இருந்த சங்கடத்தைப் போக்கினேன், மகன் அற்ற அரசர்களுக்கு நல்ல குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தேன். குருதட்சிணை தர இயலாமல் தவித்த ஒரு அந்தணனுக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன். மகளாக,பட்டத்து இளவர்களின் தாயாக, ஒரு  கடன்பட்ட யாசகனின் உறவற்ற தோழியாக, விச்வாமித்திரரின் வாரிசினைச் சுமந்த பாக்யசாலியாக… இனி என்ன வேண்டும் எனக்கு? நான் நிர்க்குணா, நிர்மலா, நிசம்சயா, நிர்னாசா. நான் சரஸ்வதி எனும் ஆறு. பிறர் கண்களுக்குப் புலப்படாத தத்துவம் இலங்கும் தூய நதி. கலையாத தருணங்களைக் காலம் கலைக்காது குழந்தைகளே, நான் காட்டின் கன்னி அல்லவா?’

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.