க்ருஹஸ்தன்

அதிகாரநந்தி

”என்னடி இன்னிக்கு உங்கப்பா வராறா?”

“இல்லையே.. ஏன்?”

“இல்ல விடியற போதே எழுந்து உக்காண்டிருக்கையே… கீழ போய்ப் பால் கூட வாங்கியிருக்க போல; இன்னிக்கு அந்தக் கடக்காரன் கேவலமா இளிக்கலையா?”

“இளிச்சான். ஆனா அவ்ளோ கேவலமா இல்லை”

“போகப் போக பழகிடும்”

“ஆம்பிளைங்க எல்லாம் இப்படி வழியாட்டா தான் என்ன?”

“உங்கப்பா கிட்ட போய்க் கேளு”

“அவர் இன்னும் மோசம், பெண்ணு கூட வரான்னு கூட பார்க்கமாட்டார்… எனக்கும் காபி போடு.”

“அந்தக் கப்ல என்ன?”

“க்ரீன் டீ”

“காப்பி கூட வூட்டுக்காரன் போட்டுத் தர வேண்டியிருக்கு… இதுல உங்கம்மா ’அவளுக்கு ஒத்தாசையா இருங்கோ ஒத்தாசைய இருங்கோ’ன்னு”

“ஏதோ நல்லா காப்பி போடுறியேன்னு தான். ஆனா உங்கப்பா போடற லெவலுக்கு உன்னோட காப்பி இன்னும் வரலை”

“அவரோட மூக்குப் பொடியையும் கொஞ்சம் போடுவாராயிருக்கும்”

“ராத்திரி பூரா தூக்கமே இல்ல”

“உனக்கா? உம்பொண்ணு எத்தன மணிக்கு எழுந்தா சொல்லு?”

“அது தெரியாது. அவ சிணுங்கினது தெரியும். நான் எழுந்தா இன்னும் ரகளை பண்ணுவான்னு தோணித்து அதான் சைலண்டா இருந்துட்டேன்”

“ஏதாவது கனமான ஆகாரமா ட்ரை பண்ணிப் பாரு”

“இன்னிக்கு டிபனுக்கு தோசை பண்ணவா? ஆபிஸுக்கு என்ன கொண்டு போகப்போற?”

“என் உயிரவாங்காத ஏதாவது பண்ணு”

“நாந்தான் உயிர வாங்கறேன். நீ பண்றதெல்லாம் யாரு கேட்க… நேத்திக்கு அப்பாவுக்கு போன் பண்ணினேன், அடுத்த வாரத்துக்கு ட்ரைன்ல டிக்கெட் இருக்கான்னு பார்க்கச் சொன்னார்.”

“என்னவொ பண்ணு”

“உனக்கென் அவாளப் பத்தி பேசினாலே எரியறது?”

“எனக்கொன்னும் இல்லை”

“மொகறைய கண்ணாடில பாரு. எங்கப்பாம்மா வரான்னு எரிச்சப் பட்டாக்கூட பரவாயில்லை. உங்கப்பாம்மா வரதுக்கும் எரிச்சப் பட்டா… நியாயமே இல்ல”

“உனக்கே தெரியும்… அவா இருக்கும் போது நான் இங்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றேன்”

“ரொம்ப ஓவர்”

“சும்மா… அத செஞ்சியா இத செஞ்சியா… அதையேன் இங்க வெச்சிருக்க இதையேன் இங்க வெச்சிருக்க… எப்பப் பாரு என் பின்னாடியே வந்துண்டு நான் பண்ற ஒவ்வொன்னுக்கும் ஏதாவது சொல்லிண்டு.”

“அவாளுக்கு உன் மேல இஷ்டம். உன்கிட்ட ஏதாவது பேசாம அவாளால இருக்க முடியாது. நான் ஊர்ல இருந்தப்போ கூட அம்மா, குழந்தைய பார்க்கும் போதெல்லாம உன்னப் பத்தி தான் ஏதாவது சொல்லிண்டிருப்பா”

“அதான் எனக்குப் பிடிக்கலை. கொஞ்சம் வருஷம் முன்னாடி எங்கப்பா எதுக்கெடுத்தாலும் என்னப் பத்தி கவலைப்படறதா சொல்வார். எதுக்குன்னா அதுக்கும் சரியா பதில் இருக்காது. அவருக்கு என்ன வேணும்னும் தெரியாது. அவாளோட லைஃபே என்ன சுத்தித் தான் இருக்குன்னு சொல்வார்… எங்காவது போய் முட்டிக்கலாம்னு தோணும்… இப்பவும் அப்படித்தான்”

“அவாளுக்கு வயசாயாச்சு. நம்மளப் பத்திக் கவலைப்படாம வேற என்ன பண்ணுவா? பேசாம அவா இங்கயே வந்துடலாம்”

“வயசானா நம்பளப்பத்திக் கவலைப்படணுமா? அதான் பிரச்சனையே. அவா என்ன நினைக்கறா? புள்ளை தான் நினைக்கற மாதிரி இருந்தா போதும், அதான் தனக்கு சந்தோஷம் நிம்மதி எல்லாம்னு நினைக்கறா. அதனால தான் அதப் செஞ்சியா இத செஞ்சியான்னு என்னைப் போட்டுப் படுத்தறா. அவா இதுவரைக்கும் செஞ்சதை வெச்சே அவா நிம்மதியா இருக்கலாம்.. நான் எப்படியிருந்தாலும் அவா கவலைப்படாம இருக்கலாம். அவா சொல்றதுல முக்கால் வாசி விஷயம் எனக்குப் பண்ணப் பிடிக்கலை. மீதி விஷயத்த, நான் பண்றதுக்கு முன்னாடி அவா சொல்லிட்டதாலேயே நான் பண்ணப் போறதில்லை.“

“என்ன பண்றது? தன்னோட புள்ள ஒரு ஈகோட்டிக் இஞ்சினியர் ஆயிட்டான்னு அவாளுக்குப் புரியலை. உன்ன விட அவாளுக்கு வேற யாரத் தெரியும்? அவா ஒன்னோட கனெக்ட் பண்ணிக்க விரும்பறா… நீ தான் ஜடம் மாதிரி புரிஞ்சுக்கமாட்டேங்கற…”

“உனக்குத் தான் புரியலை… அவா என் தலையத் திங்காம, அவாளா நிம்மதியா இருக்கட்டும்னு சொல்றேன்.”

“அப்போ எனக்கும் இதே தானே… உன்ன பார்த்து நான் சந்தோஷப் பட்டுக்குக்க கூடாது?”

“சந்தோஷப்படலாம்; அது வேற. ஆனா, என்னோட நல்லதோ தோல்வியோ ஒன்னோடதில்லை. பேட்ஸ்மென் சிக்ஸ் அடிச்சா, அவன் பொண்டாட்டி பெவிலியன்ல குதிக்கற மாதிரி நடந்துக்காதேங்கறேன். உனக்காக நீதான் உழைச்சுக்கணும்; அடுத்தவாளோட ஒட்டிக்கக் கூடாது”

“உனக்கு கூரே கிடையதுடா… நல்லா நன்றியுள்ளவனா யோசிச்சுப் பாரு. உன்னப் படிக்கவைச்சு வீடு வாங்கிக் கொடுத்து, கல்யாணம் பண்ணிவெச்சு… உன்னோட நல்லதை யோசிக்காதவாளா இதையெல்லாம் செஞ்சா?”

“நான் என்ன படிச்சேன்? எங்கப்பா என்னை என்ன படிக்க வைக்கணும்னு நினைச்சாரோ அதப் படிச்சேன். அவர் எப்போ வீடு வாங்கித் தர நினைச்சாரோ வாங்கிக் கொடுத்தார். கல்யாணமும் அவர் நினைச்ச படி தான் நடந்தது. இதுல நான் என்ன செஞ்சேன்? என்ன முடிவெடுத்தேன்? ஒன்னுமில்ல.

“என்னோட லைஃப்ல நானா ஏதாவது செய்யணும்னு நினைக்கறேன். இங்க என்னோடதுன்னு ஏதாவது இருக்கணும்னு நினைக்கறேன்.”

“உனக்குன்னு இப்போ ஒரு குழந்தை கூட இருக்கு”

“இன்னும் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கற; குழந்தைங்கிறது ரொம்ப சிம்பிள்; அது நம்மோட பயாலாஜிக்கல் கபாபிலிட்டி நாளைக்கு அவ வளர்ந்து பெரியாளானாக்கூட அது அவளோட உழைப்புன்னு தான் நாம நினைக்கணும். நம்மோட பங்கு அதுல என்ன இருக்கு?
உனக்கு அப்பாம்மாவ அப்படியே இமிட்டேட் பண்ணிட்டாப் போறும். நான், அவாளத் தாண்டி யோசிக்கறேன். நடக்குமான்னு தெரியாது, ஆனா தோத்தாலும் பரவாயில்லை; கடசீகாலத்துல கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்த்திருக்கலாம்னு நெனக்கக் கூடாது.”

“அவாளத் தாண்டியா? உனக்கு நீ எந்தளவுக்கு உங்கப்பாவக் கொண்டிருக்கன்னு தெரியலை. காப்பி போடறது, நடக்கறது, பேசறது எல்லாமே உங்கப்பா மாதிரிதான் பண்ற. ஊர்ல இருந்தப்போ, உங்கப்பாவோட ஒவ்வொரு அசைவும் உன்ன மாதிரித்தான் இருந்தது. நீ நெனக்கிறதெல்லாம் நடக்கப் போறதே இல்ல”

“நினைச்சா முடியும்”

“உன்னால நீ நினைக்கற மாதிரி இருக்க முடியல. அத ஒத்துக்கமுடியாம, யார் மேலையாவது பழிபோட ஆரம்பிச்சிருக்க. இன்னிக்கு அப்பாம்மா நாளைக்கு குழந்தையும் நானும்…

“கொஞ்சமாவது நன்றியும் திருப்தியும் இருக்கணும். யாரும் ஒன்னோட கனெக்ட் பண்ணிக்க கூடாது. நீயும் யாரோடையும் கனெக்ட் பண்ணிக்க மாட்ட? அடிக்கடி படபடப்பா இருக்குன்னு ஏதாவது பொலம்புவ. அப்போ நாங்கெல்லாம் உயிரோட இருந்து என்னத்துக்கு?”

“இது எங்கப்பாவோட டயலாக்”

“நீ அப்படித்தான் எல்லாரையும் பேச வைக்கற. அப்பா சொல்ற மாதிரி கண்ட குப்பையையும் படிக்கிறத நிறுத்தினா தான் உருப்படுவ.”

”என்னவிட நீதான் அவர வார்த்தை பை வார்த்தையா, அழகா இமிடேட் பண்ற”

“ஐயா சாமி நீ எக்கேடும் கெட்டுப்போ. ஒனக்கொன்னுமில்லை; நாளைக்கு நான் தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு இழுத்துண்டு ஓடணும். நான் செய்வேங்கிற தைரியத்துல தான் இப்படிப் பேசற.”

“சுத்தம். ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து…”

குழந்தை முழுச்சிட்டா போல…

”இரு ஏன் ஓடற? அவ ஒன்னோட பயாலாஜிக்கல் கபாபிலிட்டிதானே?”.

One comment

  1. Every one has ideals but mostly at the surface level. Though the conversation is bit superficial I guess the author took it to show the hypocrisy of the character.

Leave a reply to nbalajhi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.