அதிகாரநந்தி

ஒரு சிவப்பு பாட்டில்

அதிகாரநந்தி

img_20161103_170038-01

என் முன்னே இருக்கும்
இந்தச் சிவப்பு பாட்டில்
ப்ரான்ஸில் செய்யப்பட்டது
ரத்தம் மாதிரி இருக்கிறதே நீர்
என்று ஓரோர் நாள் நினைத்ததுண்டு-
தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு கொடுத்திருக்கிறான்
அதுவும் ப்ரான்ஸிலிருந்து. ரத்தம்தான்,
ஆனால் யாருடையதோ.

என்ன செய்ய முடியும்

அதிகாரநந்தி

நான் வரும் நேரம் அறிந்து
எதிரே வருகிறார்.
தேகசக்திக்கு மீறிய வேகம்.
ஏன் இப்படி? என்றெனக்கு படபடப்பு.
கெட்ட சேதி கேட்டேன், என்கிறார்.
கெட்ட செய்திதான்.
அவருக்காக நானும்
எனக்காக அவரும்
எதையும் வெளிக்காண்பிக்காமல்,
என்ன செய்ய முடியும், என்கிறோம்.

உய்வித்தல்

-அதிகாரநந்தி-

உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்

பாவம்! அது தான்
உய்தபாடில்லை.

ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்

இந்தக் கரிய இருள்

அதிகாரநந்தி

 

இந்தக் கரிய இருளின் நேர்த்தியை
இதுவரை நான் அறிந்திருக்கவில்லை
நிலவை நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு
இருளின் தண்மை பிடிபடவில்லை
கண்ணுக்குத் தெரியாத பெரிய இருள்
அதனுள் படர்ந்த சிறு வெளிச்சம்
இருளும் ஒளியும் இணைந்த இரவு
அங்கே விழும் ஒர் நட்சத்திரம்
எதை வேண்டிக்கொள்ள?
இருளைத் தெரிந்து கொண்டவனுக்கு
ஏதேனும் வேண்டியும் இருக்குமோ?
வெளிச்சம் தேடித் தோற்பதை விட
பரந்து விரிந்த இருள் இருக்கிறது
அது போதும்.

ஒளிப்பட உதவி – techsupportalert.com

சவாரி

அதிகாரநந்தி

நான் ஏறிக் கெண்டேன்
ஏன் என்றெல்லாம் கேட்காதீர்
ஏறிக் கொண்டேன் அவ்வளவு தான்
இப்படி ஓடுமென்று யார் கண்டார்கள்
விழுந்துவிடலாம்
ஆசை விடவில்லை

வேகமுமில்லை
திசையுமில்லை
ஒன்றுமில்லை என்கையில்
ஒருபிடி பிடறி மயிரைத்தவிர

பிடித்திழுக்கலாம்
கட்டி முத்தமிடலாம்
இது எனது சவாரி
எனது விருப்பப்படி