ஜேன் ஸ்மைலி நேர்முகம்

எந்த ஒரு எழுத்தாளரின் நாவல்களையும் தொகுத்து நோக்கும்போது அவருக்கென்று உள்ள தனித்தன்மை வெளிப்படும் என்பதுதான் நாவல் வடிவத்தின் சிறப்பு என்று சொல்கிறார் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜேன் ஸ்மைலி. அவருக்கு இது நிச்சயம் பொருந்தும்: ஷேக்ஸ்பியர் கதையோன்றின் நவீன மீளுருவாக்கம், ஹோமிசைட்: லைப் ஆன் த ஸ்ட்ரீட் என்ற தொலைக்காட்சித் தொடரின் ஒரு எபிசோட் வரை பல்வகைப்பட்ட ஆக்கங்களைத் தந்திருக்கிறார் அவர். பிரைவேட் லைப் என்ற தன் சமீபத்திய நாவலில், மார்கரெட் மேஃபீல்டு என்ற பாத்திரத்தின் அகவாழ்வை விவரிக்க ஹென்றி ஜேம்ஸ் பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் பித்துக்குளித்தனமான விஞ்ஞானி ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவதிப்பட்ட ஒரு தூரத்து உறவினர்தான் மேஃபீல்டு பாத்திரத்தின் ஆதாரம்.

பெயில்பெட்டர் டாட் காம் தளத்தில் கான்ட்ரிப்யூட்டிங் எடிட்டராக உள்ள ஜூலி நியூபெர்கர் இவரைப் பேட்டி கண்டார்.
நீங்கள் ப்ரைவேட் லைப் நாவலில் மார்க்கரெட்டின் அகவுணர்வுகளைச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது ஏன்? அவரைவிட வலிமையான ஒரு பாத்திரத்தைக் கொண்டு எழுதியிருக்கலாமல்லவா? தான் எதுவும் செய்யத் திராணியற்று இருக்கும் பாத்திரத்தை முக்கியமாகக் கொண்ட நாவலில் வாசகரின் ஆர்வத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள்?

அவள் சுயமாய் எதுவும் செய்ய திராணியற்றவள் என்று நான் நினைக்கவில்லை. அவள் நல்லவள். அப்போதும் இப்போதும் உள்ள பல பெண்களைப் போலவே, இன்ன மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அதை மேன்மைப்படுத்துவதுதான் அவளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அவளுக்குப் பெரிய கேள்விகள் எதுவும் கேட்கத் தெரியாது. நான் ஏன் முதலாளியாக இல்லை என்றெல்லாம் அவள் கேட்க மாட்டாள். உடனே என்ன செய்ய முடியுமோ அதில்தான் அவளது கவனம் இருக்கிறது… வாழ்க்கையில் நம் மன அமைப்பு, அதிர்ஷ்டம் இரண்டுக்கும் இடம் இருக்கிறது. நான் அதை விவரிக்க விரும்பினேன். அவளுக்கு முக்கியமாக இருந்த அந்தரங்க விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசக கவனத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தேன் – இது ஒரு வகை ஹென்றி ஜேம்ஸ் பாணி. நம் எல்லாருக்கும் அது உண்டு. சில சமயம் பெரிய நிகழ்வுகளில் அவை தொலைந்து போய்விடும், ஆனால் அவை நம்மோடிருக்கும்.

நீங்கள் ‘நாவலை அணுக பதின்மூன்று வழிகள்’ என்ற நூலில் வர்ஜினியா வுல்ஃப்பை மேற்கோள் காட்டுகிறீர்கள்: “எழுத்தாளனின் பணி அசாதாரண கணங்களைப் பாதுகாப்பது, அவற்றை அசாதாரண மனிதர்களுக்கு அளிப்பதல்ல” என்கிறார் அவர். இந்த நாவலில் மார்க்கரெட் தன் மகன் மீது தான் கொண்டுள்ள பாசத்தின் ஆழத்தை அறியும்போது அப்படிப்பட்ட ஒரு அசாதாரண கணம் நேர்கிறது: “அவன் சாயம் போலவும், அவள் வெண்பஞ்சு போலவும் இருந்தது. அவனைப் பார்த்துக் கொண்டு அவனைக் கையில் ஏந்திக் கொண்டும் இருப்பது அவளை முழுக்க முழுக்க சாயத்தில் நனைத்தெடுத்தது”. அதிக அளவில் இப்படிப்பட்ட அசாதாரண கணங்கள் இந்த நாவலில் இருப்பதாக நினைக்கிறீர்களா? அதில் மார்க்கரெட்டுக்கு உரிய பங்கு கிடைத்திருக்கிறதா?

மார்க்கரெட்டின் பங்கு கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். கொஞ்சம் கிடைத்திருக்கிறது. ஆஆல் அவையும் தனக்குக் கிடைக்காதவை குறித்த ஏக்கத்தை அவள் நெஞ்சில் நிறைப்பவையாக இருக்கின்றன. ஆனால் அவளுக்கும் கொஞ்சம் கிடைத்தது என்னவோ உண்மைதான். அவள் இன்னும் துணிச்சலாக இருந்திருக்க வேண்டுமோ? தற்கு அவள் என்ன விலை தந்திருக்க வேண்டும்? டோராவைவிட அதிகம் இவளுக்குக் கிடைத்ததா? டோராவுக்குக் குறைவாகக் கிடைத்திருக்கலாம், ஆனால் அவை அவளது அன்றாட அனுபவத்தைவிட மாறுபட்டு இருப்பதால் அவற்றை அவள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறாள்.

நீங்கள் பிரமிக்கத்தக்க அளவில் வெவ்வேறு வகை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள். டூப்ளிகேட் கீ என்ற மர்மக்கதை, மூ என்ற நகைச்சுவை நாவல், குதிரைகள் பற்றி பதின்ம வயதினருக்கான புத்தகங்கள், முன்னணி இதழ்களில் அன்றாட நிகழ்வுகள் பற்றி கட்டுரைகள் என்று பலவும் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் பாணியையும் நடையையும் எப்படி மாற்றிக் கொள்ள முடிகிறது?

எனக்கு வெவ்வேறு ஐடியாக்களும் ஆர்வங்களும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் அவற்றின் போக்கில் வளர விட முயற்சிக்கிறேன். இதற்கு என் இயல்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நான் வேலை செய்வது இப்படிதான், நான் படிப்பதும் இப்படிதான். எனக்கு பல்வகைப்பட்ட புத்தகங்களும் பிடிக்கும். அப்படி வெவ்வேறு வகையில் எழுதுபவர்களை விரும்புகிறேன்.

வரலாற்று புனைவை எப்படி அணுகுகிறீர்கள்? அதற்கான ஆய்வு முறையில் மாற்றம் உண்டா? உங்கள் வரலாற்று புனைவுகளில் அது விவரித்த காலத்தின் உணர்வுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தியதில் பிற நாவல்களைவிட அதிகம் வெற்றி பெற்ற நாவல் என்று எதைக் கருதுகிறீர்கள்?

கிரீன்லாண்டர்ஸ் நாவல வாசகர்களைத் தன் உலகினுள் உள்ளிழுத்துக் கொள்கிறது என்று நினைக்கிறேன், ஆனால் அந்த உலகும் பிற உலகுகளைப் போலவே அந்நிய உலகுதான். அந்த நாவலின் உலகு பிடித்திருந்தால் ரொம்ப பிடித்துப் போகிறது, ஆனால் பலருக்கும் அது ஒரு விலகல் உணர்வைக் கொடுத்தது. பழைய காலத்து நடையில் அதை எழுதியிருக்காவிட்டால் இன்னும் பலர் அதை ரசித்துப் படித்திருப்பார்கள். ஆனால் வரலாற்றுப் புதினத்தில் நடை மிக முக்கியம். ஒன்று அந்த காலத்து நடையை அப்படியே திரும்ப எழுத வேண்டும், அல்லது புறவயப்பட்ட எளிய நடையில் எழுத வேண்டும், வரலாற்று உண்மைகள் இழக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று. கடினமான தேர்வு. தனக்கு எது பிடிக்கும் என்பதை வாசகர்கள்தான் தீர்மானித்துக் கொள்ள முடியும். என்னைப் போல் வெவ்வேறு வகையில் எழுதியிருந்தால் சில வாசகர்கள் ஏமாற்றமடைவதைத் தவிர்க்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, எல்லாரையும் எந்த ஒரே புத்தகமும் இதுவரை ஏமாற்றியதில்லை.

“நாவலை அணுக பதின்மூன்று வழிகள்” என்ற புத்தகத்தில் கட்டாயம் படிக்க வேண்டியவை என்று ஒரு நூறு புத்தகங்கள் கொண்ட பட்டியலைத் தந்திருக்கிறீர்கள். அதில் எதை நீங்கள் எழுதியிருக்க விரும்புவீர்கள்? ஏன்?

அது போன்ற ஒரு புத்தகத்தை எழுதுவதென்றால் அது போல் வாழ்ந்திருக்க வேண்டும் என்று பொருள்படுகிறது. எனவே பல புத்தகங்களை நான் நேசித்தாலும் எந்த ஒரு எழுத்தாளராகவும் இருந்திருக்க வேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாது. இன்னதென்று சொல்ல முடியாத தன்மை ஒவ்வொருத்தரின் மொத்த படைப்புகளையும் பார்க்கும்போது புலப்படுகிறது என்பதுதான் நாவல் வடிவத்தின் சிறப்பு. எனக்கு பல எழுத்தாளர்களையும் பிடிக்கும். ஆனால் டரொல்லோப் போல் கடுமையாக உழைக்கவோ ஜோலா போல் கொலை செய்யப்படவோ நான் விரும்ப முடியுமா, அல்லது போர்ட் மாடாக்ஸ் போர்ட் போல் ஒரு தடவைகூட குதிரையேற்றம் செய்யாமல் முதல் உலகப் போரில் பங்கேற்க விரும்ப முடியுமா அல்லது வர்ஜினியா வுல்பின் சித்தப் பிரச்சினைகளுக்கு ஆசைப்பட முடியுமா அல்லது ஜார்ஜ் எலியட் போல் மன அழுத்தத்தால் அவதிப்பட முடியுமா? இல்லை ப்ரூஸ்ட் போல் சுவரெல்லாம் கார்க் அடைத்த அறையில் இருக்க முடியுமா? எந்த முயற்சியும் இல்லாமல் இயல்பான நகைச்சுவையோடு எழுதும் நாவலாசிரியர் இருந்தால் அது போல் இருக்க ஆசைப்படலாம்- நான்சி மிட்போர்ட்? ஆனால் அவரது வாழ்வும் கடினமான ஒன்றுதான். இல்லை. அவர்களுக்கு அவர்களுடைய வாழ்வு, எனக்கு எனது.

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் முதல் கதைகளின் தொகுப்பு ஒன்றில் உங்கள் முன்னுரையை பார்த்தேன். முதலில் பதிப்பான உங்கள் கதை பற்றி நினைவிருக்கிறதா?

நன்றாக நினைவிருக்கிறது. சுயபால் விழைவு கொண்ட ஒரு நண்பரை நான் என் வீட்டில் சாப்பிட அழைத்திருந்தேன். யாராவது அவரை மயக்கி கர்ப்பமாகி இன்னார்தான் காரணம் என்று சொல்ல வேண்டிய நிலைமை வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அதை எழுதியும் விட்டேன். அப்புறம் எழுத்துப் பயிற்சிப் பட்டறை வாசிப்பு ஒன்றில் அதை என் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு ரகசியமாகக் கொடுத்தேன். வாசிப்பு நடந்து கொண்டிருக்கும்போது சிரிக்கக்கூடாத சமயத்தில் என் கதையைப் படித்துக் கொண்டிருந்தவர் சிரித்து விட்டார். தேறிவிட்டேன்.

உங்கள் அடுத்த கதை வரலாற்று புனைவா, மர்மக்கதையா, நகைச்சுவையா, அபுனைவா, பதின்மபருவக் கதையா, எதுவாக இருக்கும்? அல்லது புதிதாக எதுவும் முயற்சி செய்யப்போகிறீர்களா?

சொல்லவே மாட்டேன்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.