டெகாமரான் கதைகளில் மூன்றாம் நாளன்று ஃபியாமெட்டா ஒரு கதை சொல்கிறாள். ஹிதோபதேசத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து பொகாஷியோ கையாண்ட கதை அது. இதில் தான் விரும்பும் மணமான ஒரு பெண்ணை பொது குளியலறையில் சந்திக்க திருட்டுத்தனமாகத் திட்டமிடுகிறான் ஒருவன். அங்கே, இருட்டில் அவளது கணவனாக நடித்து அவளைக் கற்பழிக்கிறான். தான் ஏமாந்துவிட்டதை அறிந்தபின் அந்தப் பெண்ணுக்கு தான் நேசிக்கும் தன் கணவனை ஏமாற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது – இதிலுள்ள வெட்கமும் சீரழிவும் அவளுக்கே உரியது, அவளைக் கற்பழித்தவனுக்கல்ல. இன்றும் கார்டியனோ அல்லது வேறு பல செய்தித்தாள்களைப் படித்தாலும் 650 ஆண்டுகளுக்குப்பின், ஹிதோபதேசம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 900 ஆண்டுகளுக்குப்பின், நம்மால் இந்தக் கதையைக் காண முடிகிறது. ஏமாற்றப்பட்ட பெண், கடெல்லா, கற்பழித்தவன் அறிந்த உண்மையை உணர்ந்திருக்கிறாள்: இன்று நாம் வாசிக்கும் இளம் பெண்களைப் போலவே, ஏமாற்றப்பட்ட குற்றத்துக்காக அவள் தண்டிக்கப்படுவாள் அல்லது கொல்லப்படுவாள். அவளது நோக்கங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனாலும் என்ன? Plus ça change, plus c’est la même chose, என்று நாம் சொல்லலாம். ஆனால், அந்த மிக முக்கியமான கேள்வியின் காரணத்தால், நாம் அதைச் செய்வதில்லை.
1540களில் Marguerite of Navarre அந்த மிக முக்கியமான கேள்வியை எழுப்பினார். Lourdesக்கு தெற்கே, Pyreneesல் உள்ள அவருக்குப் பிடித்தமான வெப்பக் குளியலகம் இருந்த Cauteretsல் அவர் இந்தக் கேள்வி கேட்டிருக்கலாம். அவர் கேட்ட கேள்வி இதுதான், “ஒரு பெண் உண்மைக காதலை அறிந்து, தன் கற்பை இழக்காமல் இருக்க முடியுமா?” பிரான்சின் பிரான்ஸ்வாவின் சகோதரி இந்த மார்க்கரிதா, தன்னைவிட வயதில் சற்றே இளைய நவாரே அரசனின் மனைவி. இவர் ஒரு கவிஞர், சீர்திருத்தக்காரர், அறிவுஜீவி. டெகாமரான் கதைகளே நேசித்தார் இவர். நமக்கு இன்று ப்ரைட் அண்ட் ப்ரிஜூடிஸ் எவ்வளவு பழைய காலத்து நூலாக இருக்கிறதோ அது போல் டெகாமரான் அவருக்கு இருந்திருக்கலாம். கடந்த காலத்து ஆக்கம், ஒரு முறை திருத்தி எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.
இன்னொரு நூறு கதைகளை உருவாக்க அவர் தன் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கூடி அமர்ந்தபோது, இரு நிபந்தனைகள் விதித்தார்: இந்தக் கதைகள் உண்மையாக இருக்க வேண்டும் (அதாவது வதந்திகள், கிசுகிசுக்கள்), அவை மிக முக்கியமான கேள்விக்கு விடையளிக்க எண்டும. மார்க்கரிதா 1549ல், தன் நூறு கதைகளைத் தொகுக்கும் முன்னர் மறைந்தார். அதுவரை அவர் தொகுத்திருந்த 70 கதைகளும் அவரது மறைவுக்குப்பின் ஹெப்டாமரான் என்ற தொகை நூலாக உருவானது. அவற்றுக்குரிய தனி வகையில் அவை டேகாமரான் கதைகளைவிடச் சற்றே சுவையாக இருக்கின்றன. ஒவ்வொரு கதையைப் பற்றிய உரையாடல்கள் நீண்டவையாக இருக்கின்றன, டேகாமரான் கதைகளைக் கேட்டவர்களைவிட இவர்கள் இன்னும் கூர்மையாக எதிர்வினையாற்றுகின்றனர். மார்க்கரிதாவின் கதைசொல்லிகள் அளிக்கும் பதிலின் சுருக்கம், ‘இல்லை’ என்பதாக இருக்கிறது: ஒரு பெண் உண்மை அன்பை அறிவதும் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதும் சாத்தியமில்லை.
ஆனால் பதினேழாம் ஆண்டின் பிற்காலங்களில் இந்தக் கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டது. இம்முறை, The Princess of Cleves, என்ற நூலில் Madame de Lafayette இதைச் செய்தார். க்ளேவ்ஸ் இளவரசியின் பிரச்சினை கடெல்லாவின் சிக்கலைப் போன்றதுதான். இளவரசி முறைப்படி, ஒழுங்கான ஒருவனை மணந்திருந்தாள். ஆனால், பெண்பித்தன் போன்ற ஒருவன் அவளை விரும்புகிறான். இளவரசி அவனது காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்று கதை விரிகிறது. அவள் தன் உணர்வுகளுக்குச் செயல்வடிவம் அளிக்க முடியாது, அவற்றை வெளிப்படுத்தவும் முடியாது – அவள் முதலாம் பிரான்ஸ்வா அரசவையில் இருப்பதால் அவளையே அத்தனை கண்களும் எப்போதும் மொய்த்திருக்கின்றன. இப்போது திடீரென்று மார்ககரிதாவின் கேள்விகள் அதன் உறுப்புகளாகப் பிரிகின்றன: அறிதல் என்றால் என்ன? உண்மை அன்பு என்றால் என்ன? கற்பு என்றால் என்ன? நம் நோக்கங்களுக்கு, இவற்றில் மிகச் சுவையான கேள்வி, பெண் என்பவள் யார்?
இந்தப் புதிருக்கு விடை காண மெதாம் டி லஃபாயேட், நாடகாசிரியர்கள் பயன்படுத்த முடியாத ஒரு இலக்கிய உத்தியைக் கையால்கிறாள்: free indirect discourse. அவள் தன் மூன்று பாத்திரங்களின் மனங்களிலும் நுழைகிறாள் – மனைவி, கணவன், காதலன். அவர்களின் உணர்வுகளையும் தங்கள் உணர்வுகள் குறித்து அவர்கள் நினைப்பதையும் நம்பத்தகுந்த வகையில் விவரிக்கிறார். பாத்திரங்கள் தங்கள் உணர்வுகளை ரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறார், அந்த ரகசியத்தின் இன்பதுன்பங்களைச் சித்தரிக்கிறார். இளவரசி உண்மைக் காதலை அறியாதவர் (அவரது உணர்வுகள் நம்பும்படி இருக்கின்றன), அவள் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்கிறாள் (அவள் தன் கணவனுக்கு உண்மையாக இருக்கிறாள், தன் காதலன் பால் தனக்குள்ள காமத்துக்கும் தன் கணவன் மீது தனக்குள்ள நேசத்டுகுமிடையே உள்ள வேற்றுமையை அவள் கண்டு கொள்கிறாள்). அதைவிட முக்கியமாக, வாசகர்கள் அவளது தர்மசங்கடமான நிலை குறித்து பரிதாபப்படும் பாத்தியதை பெற்று விடுகிறாள். ஏனெனில், மெதாம் டி லஃபாயேட், நம் ஒத்திசை உணர்வுகளைத் தொடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் – அதாவது, இளவரசியின் பார்வையில் நம்மைப் பார்க்கச் செய்து விடுகிறார் அவர். தந்தைமை சமூகத்தின் சிவப்புக் கோட்டைத் தாண்டுவது குறித்த அவளது விழைவு நமக்கு விலகல் ஏற்படுத்துவதாக இல்லை. ஏனெனில், நாம் அந்த உணர்வுகளை அனுபவித்தபின், அவற்றை மறுதலிக்க முடியாது. நாம் இப்போது இளவரசியுடன் உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம்.
இதையும், ஒதெல்லோவில் டெஸ்டிமோனாவை நாம் எப்படி அறிகிறோம் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மார்க்காரிதாவின் கேள்விகளுக்கு ஷேக்ஸ்பியர் ஒருவாறு பதிலளிக்கிறார், ஆனால் அவரது பதில் விரிவாகைல்லை. ஆம், டெஸ்டிமோனோ உண்மைக் காதலை அறிந்திருக்கிறாள், சிறிது நேரத்துக்காவது. அவள் ஒதெல்லோவைக் காதலிக்கிறாள்,அவரது அப்பாவை எதிர்த்து, இயாகோவை எதிர்த்து, சண்டைக்கார ஆண்கள் தன்னைச் சூழ்ந்திருப்பதையும் எதிர்த்து. ஆனால் நமக்குத் தெரிந்த எதுவும் ஒதெல்லோவுக்குப் பொருட்டல்ல – எப்படியும் அவளை அவன் கொலை செய்கிறான். டெஸ்டிமோனா விஷயத்தில் நம் வேலை அவள் சொல்வதை நம்புவது மட்டுமே, அவளது உணர்வுகளில் நுழைவதோ, அவள் உலகை அறியும் திறத்தில் நாமும் அறிவதோ அல்ல. யாருமறியாமல் பெசுவது, தனக்குத்தானே பேசிக் கொள்வது போன்றவை ஒதெல்லோவின் எண்ணங்களையும் இயாகோவின் எண்ணங்களையும் அறிய நமக்கு உதவுகின்றன என்றாள்லும் இதுதான் நிலை. டெஸ்டிமோனாவுக்குப் பரிந்து வருவது என்பது எளிய ஒரு செயலைச் செய்வது. க்ளேவ்ஸ் இளவரசியின் உணர்வுகளுக்கு ஒத்திசைவாக இருப்பதைவிட இது கூடுதல் நேர்த்தன்மை கொண்ட உணர்வு.
இப்போது அந்த மிக முக்கியமான கேள்வியின் நான்கு பகுதிகளுக்குத் திரும்புவோம். அறிதல் என்றால் என்ன? உண்மைக் காதல் என்றால் என்ன? கற்பு என்றால் என்ன? பெண் என்பவள் யார்? தந்தைவழி சமூக அமைப்பைக் கவிழ்க்காமல், அதைக் கேள்விக்குட்படுத்தாமல், பிற எழுத்தாளர்கள் இந்தக் கேள்வியை அணுகியிருக்கின்றனர். 1665க்குப்பின் இந்தக் கேள்விகள் நம் உலகில் நுழைவதில் விஷேசத்தன்மை கொண்ட எதுவோ ஒன்று உள்ளது – அதுதான் இந்த உலகை நமக்குத் தந்திருக்கிறது. இங்குதான் என்னைப் போன்ற பெண்களுக்கு கூடுதல் அளவில் சுதந்திரம் இருக்கின்றது, செயலூக்கம் கொண்ட அகவாழ்வு வாய்த்திருக்கிறது, எப்போதும் என் செயல்களின் கர்த்தா நானாகவே இருக்கிறேன் என்ற உணர்வு வசப்பட்டிருக்கிறது.
சிறப்பான இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க: சிட்னி ரிவ்யூ ஆஃப் புக்ஸ்