கார்டியன் பத்திரிகையில் ராபர்ட் மக்க்ரம் நூறு சிறந்த நாவல்கள் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். 1851ஆம் ஆண்டு ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபி-டிக் என்ற நாவல் குறித்த அவரது கட்டுரையின் தமிழாக்கம் இது:
எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கொண்ட ஒரு குழு ஆகஸ்டு ஐந்தாம் தேதி, 1850ஆம் ஆண்டு, மஸாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மான்யூமெண்ட் மவுண்டன் மீதேறியது. இங்கிலாந்தில் உள்ள லேக் பகுதியில் நடைபயணம் செய்வது போன்ற அமெரிக்க சங்கதி இது. இந்த உல்லாசச் சுற்றுலாவில் பங்கேற்ற இலக்கியவாதிகளில், ஸ்கார்லட் லெட்டர் என்ற நாவலை எழுதிய (நம் நூறு சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று) நாற்பத்தாறு வயது ஸ்கார்லட் ஹாதோர்ன்னும் ஒருவர். அது அப்போதுதான் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்திருந்தது. இளம் நாவலாசிரியரான ஹெர்மன் மெல்வில் இன்னொருவர். இவர் டைப்பீ என்ற மிகப்பெரும் வெற்றி பெற்ற முதல் நாவலை எழுதியபின், சவுத் சீயில் திமிங்கல வேட்டையாடும் ஒருவன் மனமுதிர்ச்சி அடைவதைப் பற்றிய சிக்கலான நாவல் ஒன்றை எழுதப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது மெல்வில்லுக்கு வயது முப்பத்து ஒன்றுதான், அவர் அதுவரை ஹாதோர்ன்னைச் சந்தித்ததில்லை. ஆனால் திறந்தவெளியில் ஒரு தினம், கொஞ்சம் ஷாம்பெய்னும் திடீர் அடைமழையும் ஏற்படுத்திய தாக்கத்தில் இந்த இளைஞர் தன் புது நண்பரால் வசீகரிக்கப்பட்டார். “முளைவிடும் விதைகளை என் ஆன்மாவில் பதியனிட்டவர்,” என்றார் மெல்வில். ஆங்கிலோ-அமெரிக்க இலக்கியத்தில் இதுபோன்ற முக்கியத்துவம் கொண்ட ஒரு சந்திப்பு மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது.
இது எதிரிடைகளின் ஈர்ப்பு. ஹாதோர்ன் நீண்ட காலமாக ந்யூ இங்கிலாந்தில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.எச்சரிக்கையானவர், பண்பட்டவர், உன்முகச் சிந்தனை உள்ளவர் – ‘இருண்ட ஏஞ்சல்’, என்று ஒரு நண்பர் இவரை விவரித்திருக்கிறார். மெல்வில் முரடர், உரக்கப் பேசுபவர். வணிக குடும்பத்தைச் சேர்ந்த ரொமாண்டிக்கான ந்யூ யார்க்கர். இரு எழுத்தாளர்களுமே இன்சால்வன்ஸியின் விளிம்பில் நின்றவர்கள், இருவருமே ஒரு வகையில் அவர்கள் சூழலில் வெளியாட்களாக இருந்தவர்கள்.
இந்தக் சந்திப்புக்குப்பின் உணர்வெழுச்சி மிகுந்த கடிதப் போக்குவரத்து துவங்கியது. மெல்வில் முழுமையாக வசீகரிக்கப்பட்டு தன் மனைவியோடும் குடும்பத்தோடும் ஹாதோர்ன்னின் அண்டை வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். இவ்வாறு விடுபட்டு, நிறைவடைந்து பெற்ற உத்வேகத்தில் “இடியாய் முழங்குகிறேன், கிறித்தவம் வேண்டாம்!” என்ற மெல்வில், மோபி-டிக்; அல்லது, திமிங்கலம், என்ற நாவலை 1851ன் வேனிற்பருவத்தில் எழுதி முடித்தார். இதன் கைப்பிரதியை ஆரம்பமுதலே வாசித்த ஹாதோர்ன் நாவலை வெகுவும் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் இன்று நம்மிடமில்லை. மெல்வில் ஆனந்தம் மேலிட்டு எழுதிய பதில்தான் நம்மிடம் உண்டு (“என் விலாக்களில் உன் இதயம் துடித்தது, உனதில் எனது, இருவரதும் இறைவனில்…”). அதன் பின், மோபி-டிக்கின் முதல் பக்கத்தில் ஹாதோர்ன்னின் மேதைமையைப் போற்றி மெல்வில் எழுதிய அர்ப்பணிப்புப் பிரகடனமும் நம்மிடம் உண்டு.
இந்த நட்பு எவ்வளவுக்கு தர்பாலின காமம் கொண்டிருந்தது? யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. அமெரிக்க இலக்கியத்தின் மர்மங்களில் ஒன்றாக இன்றும் இது இருக்கிறது. ஆனால், மான்யூமெண்ட் மவுண்டன் மீதேறியபின், ரொமான்ஸ் கலவையின குறியீட்டுத் தன்மை கொண்ட புனைகைமை, என்ற ஹாதோர்ன்னின் கருத்துவாக்கத்தை மெல்வில் ஏற்றுக் கொண்டார் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். அதன்பின்தான், இந்தப் புது நூலை எழுதுவதில் மெல்வில் தன் படைப்பூக்க மேதைமை வெளிப்படும் வழியை எவ்வாறோ கண்டடைந்தார் என்றும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.
அதுதான் எல்லாமே. ஏனெனில் என்னைப் பொருத்தவரை, தலைசிறந்த அமெரிக்க நாவலாக மோபி-டிக்கே இருக்கிறது. அமெரிக்க இலக்கிய கானனில் அதைத் தொடரும் அனைத்துக்கும் அதுவே மூலமாகவும் உந்துசக்தியாகவும் இருக்கிறது. என் ஆறாம் பார்ம் ஆங்கில ஆசிரியர் லயனல் ப்ரூஸ் அளித்த முனைப்பில், என் பதினைந்தாம் வயதில் நான் அதை முதலில் வாசித்தேன். அதன்பின் அது இன்றும் என்னோடிருக்கிறது. மோபி-டிக் நீங்கள் திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகம். அதில் புதிய புதையல்கள், இன்பங்கள் கிடைக்கின்றன. அது மொழி, நிகழ்வுகள், மற்றும் வினோத ஞானத்தின் கருவூலம்.
சிறந்த அமெரிக்க நாவல் என்ற அடைமொழிக்கு மோபி-டிக்குடன் கடுமையாக போட்டியிடக்கூடிய நாவல்கள் இத்தொடரில் இடம் பெறப்போகின்றன. இதன் மேதைமை அதன் ஆசிரியர் இறந்தபின் நீண்ட காலம் சென்ற பின்னரே உணரப்பட்டது. ‘கால் மி இஷ்மெய்ல்’ என்ற கொண்டாடப்பட்ட அதன் துவக்க வரியில் துவங்கி அது, “ஆன்மாவின் நசநசக்கும், தூறல் விழும் நவம்பரில்” வாழ்வின் பொருள் தேடும் கதைசொல்லியின் பயணத்துக்குள் இழுத்துக் கொள்கிறது.
இஷ்மெய்ல் இருப்பில் ஒரு வெளியாள். நாவலில் விரிவது நவீன, ஆனால் அடிப்படையில் விக்டோரிய 135 அத்தியாயங்கள். மூச்சிரைக்க வைக்கும், அசாதாரண, சில சமயம் அலுப்பூட்டும், அதன் நாசகார உச்சத்தில் கீழே வைக்க முடியாத, இலக்கிய நிகழ்கலை இது.
பெக்வோட் என்ற கப்பலில் இஷ்மெய்ல் அடியெடுத்து வைக்கும்போது அவனது அன்றாட தேடல் வேறொரு இருண்ட தேடலோடு தவிர்க்க முடியாதபடி கூடுகிறது. அழிவை நோக்கிச் செல்லும் இந்த திமிங்கல வேட்டைக் கப்பலின் காப்டன், ‘மோனோமேனியாக்கார அஹாப்’, தன் காலைக் கடித்துத் துண்டித்த பெரும் வெண்திமிங்கலத்தைக் கொன்று பழி தீர்த்துக் கொள்ளப் புறப்படுகிறான். இந்த ‘மகோன்னதமான, இறைநம்பிக்கையற்ற, தெய்வத்தன்மை கொண்ட மனிதன்,’ புனைவுலகின் மாபெரும் பாத்திரங்களில் ஒருவன், ‘பைத்தியக்கார அஹாப், சதிகாரன், வெண் திமிங்கலத்தை வேட்டும் தீராவிடை கொண்ட திடசித்தன்’, தன் அழிவை, ‘முகம்போர்த்த ஆவியை’ மட்டும் சமுத்திரத்தின் பாழ்வெளிகளைக் கடந்து விரட்டிச் செல்வதில்லை, திமிங்கலக் குறியீட்டில் உறைந்திருக்கும் ‘தர்க்கமற்ற மறைமுகத்தின்; பின் மறைந்திருக்கும் கடவுளுடனும் போர் தொடுக்கிறான்.
இறுதியில், இளம் மெல்வில் நேரடியாக அனுபவப்பட்டம் நான்டுக்கெட் திமிங்கல வேட்டை- ஒற்றை வேட்கை ஒன்றின் கதையாகிறது, வாழ்வின் பொருள் என்னவென்ற ஆய்வின் கதையாகிறது.
அஹாப்புக்கும் இஷ்மெய்லுக்கும் அடுத்தபடி, இந்த கனமான நாவல் செறிவான மிகச் சிறு பாத்திரங்களும் கொண்டுள்ளது. பச்சை குத்திக் கொண்ட, ஹார்ப்பூன் வீசும் க்வீக்வெக் முதல், கப்பலின் மேட் ஸ்டார்பக், டாகூ, பெடுல்லா என்ற பார்சி வரை எல்லாரும் வழக்கமான அமெரிக்க கப்பற் பணியாளர்கள்தான். நவம்பர் 1920ல் ஒரு ஸ்பெர்ம் திமிங்கலத்தால் தாக்கப்பட்டு எஸ்ஸக்ஸ் என்ற திமிங்கல வேட்டைக் கப்பல் மூழ்கிய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த ரொமாண்டிக் நாவல், சில சமயம் தாளமுடியாத அளவுக்கு அச்சுறுத்தும் கடற்பயணமாகிறது. மிகவும் த்ரில்லிங்கான மூன்று நாள் விரட்டலுக்குப்பின் மோபி-டிக் பெக்காட்டை அழிப்பதில் இந்த நாவல் உச்சமடைந்து நிறைவடைகிறது. க்வீக்வெக்கின் மரத்தாலான சவப்பெட்டியைப் பற்றிக் கொண்டிருக்கும் இஷ்மெய்ல் இந்தக் கதையைச் சொல்லப் பிழைக்கிறான்.
இப்போது நான் செய்ததுபோல் மோபி-டிக் வழக்கமாகவே பூதங்களோடு பொருதும் நாவலாகவே விவரிக்கப்பட்டு வருகிறது. இதில் இஷ்மெய்ல் என்ற அன்னியன் ஆழம் காண முடியாத கடலின் முடிவின்மையை எதிர்கொண்டு, இருப்பின் மிகப்பெரும் கேள்விகளோடு போராடுகிறான். நாவலை இப்படி வாசிப்பது தவறு என்று சொல்ல முடியாது, ஆனால் வேறொரு மோபி-டிக்கும் உண்டு. இந்த மோபி-டிக்கில் முரட்டு நகைச்சுவை, கூர்மையான வேடிக்கைத் தருணங்கள், புத்திசாலித்தனமான உட்தெறிப்புகள் உண்டு. “குடிகார கிறித்தவனைவிட நரமாமிசம் சாப்பிடுபவனானாலும் சுவாதீனத்தில் உள்ளவனை நம்பி தூங்கலாம்,” என்கிறான் க்வீகெக்குடன் தன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தப்படும்போது இஷ்மெய்ல். இந்த நாவலின் வெளிச்சமற்ற மகோன்னதத்தைக் கண்டு அஞ்சும் வாசகர்களுக்கு இதன் நகைச்சுவை உள்ளே புகும் நல்ல வழியாக இருக்கும்.
மோபி-டிக் பதிப்பிக்கக்கப்படுவதற்கு முந்தைய வரலாறு முடிவற்ற ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திம காலகட்டத்து ஆங்கிலோ-அமெரிக்க கூட்டுப்பதிப்புகளை அறிய ஒரு நல்ல முன்னுதாரணம் இது.
பணத் தட்டுப்பாட்டில் இருந்த மெல்வில் திமிங்கலம் என்று தலைப்பிடப்பட்டிருந்த தன் புது நாவலுக்கு ரிச்சர்ட் பெண்ட்லி என்ற பிரிட்டிஷ் பதிப்பாளரோடு முதல் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் பிழைதிருத்தம் செய்ய உதவியாக இருக்கும் என்று அவர் அதை நியூ யார்க்கில் அச்சிட்டார். ‘என் திமிங்கலம் அச்சுக்கூடத்தின் வழி விரைகையில் நான் அதன் அடிமையாகப பணியாற்றியாக வேண்டும்,” என்று ஹாதோர்ன்னுக்கு நியூ யார்க்கிலிருந்து எழுதினார் மெல்வில். உணமையில் அவர் மெய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் கைப்பிரதியையும் திருத்தி எழுதிக்கொண்டிருந்தார்.
இதற்கிடையே அவர் இன்னமும் தன் அமெரிக்க பதிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கவில்லை. இதனால் பிரிட்டிஷ் பதிப்பு அமெரிக்க பதிப்பைவிட நூற்றுக்கணக்கான சிறுசிறு வகைகளில் வேறுபடுகிறது. இவற்றுள் மிக முக்கியமானது தலைப்பில் உள்ள வேறுபாடு. மிகத் தாமதமாக மெல்வில் பெண்ட்லிக்கு எழுதினார், “மோபி-டிக் என்பதுதான் புத்தகத்துக்கு பொருத்தமான பெயர். அது ஒரு குறிப்பிட்ட திமிங்கலத்தின் பெயர், அதுவே இந்த நூலின் நாயகனுமாகும்”
பெண்ட்லி மிகத் தாமதமாகவே இதற்கு பதிலளித்தார். அக்டோபர் பதினெட்டாம் தேதி, ஆங்கிலப் பதிப்பு, திமிங்கலம் என்ற பெயரில் வெளியாயிற்று. ஐநூறு பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. அதன்பின் நவம்பர் பதினான்காம் தேதி, மோபி-டிக் என்ற அமெரிக்க பதிப்பை ஹார்பர்ஸ் வெளியிட்டது. இதில் குறிப்பிடப்பபட வேண்டிய விஷயம், அமெரிக்க பதிப்பில் பின்னுரை இருந்தது. அது இஷ்மெய்ல் அதிசயமாக உயிர் பிழைத்ததையும் இந்தத் திமிங்கலத்தின் கதை சொல்லப்பட நேர்ந்ததையும் விளக்கிற்று.
ஆனால் எக்காரணத்தாலோ, பிரிட்டிஷ் பதிப்பில் இந்தப் பின்னுரை இல்லை. உயிர் பிழைக்காத கதைசொல்லியால் சொல்லப்படும் கதையை வாசித்த பிரிட்டிஷ் புத்தக மதிப்பீட்டாளர்கள் குழம்பிப் போனார்கள். எனவே ஸ்பெக்டேட்டர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தது, “எழுத்தாளர் நேரடியாக அறிந்து கொள்ளும் சாத்தியமற்ற எதுவும் நாவலுள் புகுத்தப்படக் கூடாது. சுரங்கத்தின் இடுபாடுகளில் எல்லாரும் இறந்து போகிறார்கள் என்றால் அவர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலை விவரித்தலாகாது.” வேறு இரு பத்திரிகைகள், “இந்தக் கதையைச் சொல்லும் கதைசொல்லி எப்படி உயிர் பிழைத்தான்?” என்று கேள்வியெழுப்பின. இதனால் குழப்பம் ஏற்பட்டு, இங்கிலாந்தில் மோசமாக விமரிச்க்கப்பட்டது. இதன் நிழல் அமெரிக்காவிலும் விழுந்த காரணத்தால் நாவல் அங்கும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. மெல்வில்லின் எழுத்துப் பணி இந்த வீழ்ச்சியிலிருந்து மீள முடியாமல் போனது. அவர் 1856ல் ஹாத்தோர்ன்னிடம் கூறினார், “நான் முற்றிலுமாக அழிவேனென்று முடிவு செய்து கொண்டு விட்டேன்,” என்று.
1891ல் மறையும்போது மெல்வில் மறக்கப்பட்டுவிட்டார். அவரது பில்லி பட் இன்னும் அச்சாகாத கைப்பிரதியாகவே இருந்தது. ஆனால் இன்று, ஆஸ்க்போர்ட் கம்பானியன் டு இங்கிலீஷ் லிட்டரேச்ச்சரின் சொற்களில் சொல்வதானால், மோபி-டிக், “அமெரிக்கா தன் தேசிய உரைநடை காவியம் ஒன்றை மிகவும் நெருங்கிய படைப்பு,” என்று மதிப்பிடப்படுகிறது.