மொழிபெயர்க்கப்பட முடியாத சொற்களின் அகராதி

ராஸ் பெர்லின் எழுதிய கட்டுரையின் பகுதி இது:

பிரெஞ்சிலிருந்து புதிதாய் மொழிபெயர்க்கப்பட்ட The Dictionary of Untranslatables என்ற நூல்… 11 ஆண்டு கால செயல்திட்டத்தின் விளைவு. 150 பங்களிப்பாளர்களின் 400 பதிவுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அகராதியைப் பார்க்கும்போது திலோனின் முதல் கலைக்களஞ்சியத்தின் ஒன்பதாம் நூலோடு இதை ஒப்பிட முடியுமென்ற எண்ணம் எழுகிறது. “அறியப்படாத ஒரு கோளுக்குரிய முழு அளவு சரித்திரத்தின் பரந்த, வகைமைப்படுத்தப்பட்ட துணுக்கு” என்று அந்தக் கலைக்களஞ்சியத்தை விவரித்திருக்கிறார் போர்ஹெஸ்.

‘கான்டினென்டல் தத்துவம்’ என்று நாம் வழக்கமாகக் குறிப்பிடுவதுதான் இந்த அகராதியில் பேசப்படும் கோளாக இருக்கிறது. நம் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலோ அமெரிக்க பகுப்பாய்வுத் தத்துவம் எலும்பு வரை உலர்ந்ததாய் எதையெல்லாம் கற்பித்துள்ளதோ அவையெல்லாம் இதுவல்ல: வாழ்வின் பொருள், சிந்தனைகளின் வரலாறு, மானுடத்தின் கதி முதலான இன்ன பிற விஷயங்களைக் குறித்த ஊகம் கலந்த சிந்தனையின் கிறுகிறுக்க வைக்கும் உலகம் இது.

ஐரோப்பிய கண்டத்தின் மறு முனையிலிருந்து வரும் சொல்லொன்றைப் பார்ப்போம் – saudade, ‘ஒரு இளகிய நோய்மை’. நாஸ்டால்ஜியாவுடன் இன்னும் கொஞ்சம் கூடுதல் உணர்வு இருப்பதைக் குறிக்கும், மொழிபெயர்க்க முடியாத சொல் இது.

‘போர்ச்சுகீசிய ஆன்ம உணர்வுகளின் திறவுகோல்’ என்றும், ‘அட்லாண்டிக் சமுத்திரத்தின் தொடுவானுக்கு அப்பால் எப்போதும் நோக்கிக் கொண்டிருக்கும் மக்களின்’ ஏக்கம் என்றும் இது குறித்து இந்நூலில் நீண்ட விவரணை அளிக்கப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டு கோடக்ஸ் துவங்கி கத்தோலிக்க பாதிரியார் அந்தோனியோ வியர்ராவின் அதிசயிக்க வைக்கும் ‘எதிர்காலத்தின் வரலாறு’, பிரசித்தி பெற்ற பிரேஸிலிய இசைக்கலைஞர் அந்தோனியோ கார்லோஸ் ஜோபிம் என்று இந்த அகராதி நம்மை saudadeன் வரலாற்றினூடே ஒரு உற்சாகப் பயணம் கொண்டு செல்கிறது. புற ஊடுருவல்களுக்கு எதிராக ஒரு தேசிய குணச்சித்திரத்தை நிலைநாட்ட இந்தச் சொல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று நாம் அறிகிறோம்.

இவையெல்லாம் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றனதான். ஆனால் இந்த விவரணைகள் வரைகளற்ற தத்துவ வரலாற்றைவிட தேசிய சரித்திரத்துக்கே கூடுதல் பொருத்தம் கொண்டதாக இருக்கும். சிந்தனை வரலாற்றாய்வாளர் ஸ்வெட்லானா பொய்ம் நமக்கு நினைவூட்டுகிறார், “இதில் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. வெவ்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்தவர்களும் வீடுதிரும்புதலுக்கான ஏக்கத்துக்கு, தமக்கென்று ஒரு தனித்தன்மை கொண்ட சொல் இருக்கிறது, அது வேறு எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு உணர்வை விவரிக்கிறது என்று கோரத் துவங்கினர்: போர்ச்சுகீசியர்களுக்கு அவர்களது saudade இருக்கிறது, ரஷ்யர்களுக்கு toska, செக்குகளுக்கு litost’, ரோமானியர்களுக்கு dor… தேசியத் தனித்தன்மை கொண்ட, மொழிபெயர்க்க முடியாத சொற்கள், ஆனால் ஓரே வரலாற்று உணர்வின் சமச்சொற்கள்’. மனோதத்துவவியலாளர் எரிக் எரிக்சன் உருவாக்கிய ஒரு சொல் இருக்கிறது, அது இந்த அகராதியில் இடம் பெறவில்லை: pseudo-speciation, முன்னெப்போதும் இல்லாத வேற்றுமையை வலிந்து விவரிக்கும் செயல்.

பல்வேறு இயல்புகளைக் கொண்ட தேசிய மரபுகளுக்கு உரிய முக்கியமான சொற்களின் பொருளை வெளிப்படுத்துவதிலோ, ஒப்பீட்டு தத்துவத்துறையின் விரிகோண ஆழங்களுக்குள் துழாவுவதிலோ அல்ல இந்த அகராதியின் சிறப்பு. ஏனெனில், இங்கு முயற்சி செய்யப்பட்டுள்ள எதையும்விட ஐரோப்பிய இயற்கையையும் சீனத்து ziranஐயும் ஆழமாய் ஒப்பிடுவது அதிக அளவில் கேள்விகளை எழுப்புவதாக இருக்கும். சொற்களைக் கொண்டு, இணையான ஆனால் மாற்று அறிவுப்புல மரபுகளை விவரிக்கும் தன்மையில்தான் இந்த அகராதியின் வெளிப்பாட்டுச் சிறப்பு இருக்கிறது. மொழி ஆசிரியர்கள் ‘போலி நண்பர்கள்’ என்று அழைக்கும் இயல்பு கொண்டவை எங்குமிருக்கின்றன – நுண்வேறுபாடுகளுக்கான தொடர் விழிப்பு நிலையை இவை நம்முள் உருவாக்குகின்றன. பிரஞ்சு classicisme என்ற சொல் Versaillesஐ நினைவூட்டுகிறது (நாம் அதை baroque என்று அழைப்போம்), என்றாலும் ஜெர்மனில் உள்ள Klassizismus என்ற சொல்தான் நியோகிளாசிக்கல் என்று நாம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதை அர்த்தப்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?

பெண்ணியவாதிகளுக்கு மிக முக்கியமாக உள்ள sex மற்றும் gender என்ற இரு சொற்களுக்கு இடையே உள்ள பேதம், 1970கள்முதல் ஆங்கிலத்தில் புழக்கத்தில் உள்ள இந்த பேதம், எந்த ஒரு ரொமான்ஸ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட முடியாதது என்பது பலரும் அறியாதது. அகராதியில் ஜூடித் பட்லர் எழுதியபடி ஜெர்மன் சொல்லான Geschlecht எழுப்பும் கேள்விகள் வேறு இதில் உண்டு. இன்னும் சற்றே விசாரணைகள் செய்தால் நாம் ஆங்கிலத்தில் உள்ள செக்ஸ் – ஜெண்டர் பேதத்தின் அடிப்படையில் மிக எளிமையாக உருவாக்கி விளம்பரப்படுத்தும் இயல்பு/ வளர்ப்பு வேற்றுமை சரியான வகையில் இப்பிரிவினைகளைப் பகுப்பு செய்கிறதா என்றுகூட சந்தேகிக்க வைக்கிறது. உலக மொழிகள் வேறு பல சாத்தியங்களை முன்னிருத்துகின்றன.

மொழிகளைக் கொண்டு இப்படிப்பட்ட தத்துவ விசாரணையைத்தான் இந்த அகராதியின் பதிப்பாசிரியர்கள் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த நோக்கம் சரியானதே – தத்துவம் எப்போதும் சொற்களை குறிப்பிட்ட வகையில் பொருட்படுமாறு வளைத்தும் வார்த்துமே செயல்பட்டு வந்திருக்கிறது. ஏற்கனவே அதே பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் மொழி அமைப்புகளை புத்திப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டு கருத்துநிலை அறிவாக்காங்களைத் தோற்றுவிப்பதே தத்துவத்துறையின் செயல்பாடாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், லுட்விக் விட்ஜென்ஸ்டீன் முதலான பகுப்பாய்வு தத்துவவியலாளர்கள் தத்துவச் சிக்கல்கள் அனைத்தையும் மொழியின் தெளிவின்மையைச் சார்ந்திருப்பதாகவே கண்டறிந்தனர்; இந்த அகராதியில் கட்டுரைகள் எழுதியுள்ளவர்களும் சொற்களுக்கு இது போன்றதொரு முக்கியத்துவம் அளிக்கின்றனர், ஆனால் சொற்களின் தீர்மானிக்கப்பட முடியாத கருத்து பேதங்களைக் கொண்டாடுகின்றனர்.

நாம் உள்ளபடியே பேசுவதை அறுவடை செய்துகொள்ளும் ஆங்கிலோ அமெரிக்க சாமானிய மொழி தத்துவத்துக்கும் சொற்பொருள் வேர் ஆராய்ச்சி, புதுச்சொல் உருவாக்கம் என்று மார்ட்டின் ஹைடெக்கர் வகையின மர்மமயக்கு மொழியாராய்ச்சிக்கும் இடைப்பட்ட பாதையில் இந்த அகராதியின் ஆசிரியர்கள் பயணிக்கின்றனர் (அதற்காக மொழிபெயர்ப்புக்கு அப்பாற்பட்ட Dasein, Ereignis போன்ற ஹைடெக்கர்த்தனங்களை எதிர்கொள்ள இந்த அகராதி அஞ்சுகிறது என்று சொல்ல முடியாது).

பொதுவாக அறிவுப்புல, மொழித்துறை வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் இதன் ஆசிரியர்கள் சிலபோது தாம் பேச்சுமொழியில் உள்ள, பேச்சு மொழியால் உருவாக்கப்படும் மெய்யான சொற்களைக் கையாள்கிறோம் என்பதை மறந்துவிட்டது போலிருக்கிறது. சொற்கள் பன்னாட்டுக்கும் உரிய தத்துவக்குடி ஒன்றுக்கு மட்டுமே உரிய, அவர்களுக்குள் மட்டுமே கைமாற்றிக் கொள்ளப்படும் தாயத்துக்கள் அல்ல. அவ்வப்போது அர்பன் டிக்சனரியைச் சுட்டியிருக்கலாம் என்பது வன்மையாக வலியுறுத்தப்படுகிறது. அதேபோல் ரேமண்ட் வில்லியம்சின் Keywords, Flaubertன் Dictionary of Received Ideas முதலானவையும் கையாளப்பட்டிருக்கலாம்.

கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே செல்லலாம்

Image Credit : Princeton.edu

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.