மொழியாக்கம்- மொழிகளைக் கடந்த வாசிப்பின் சாத்தியம்

akrphoto7_courtesy-ramanujan-estate_1

பொதுவாக நாம் மொழிபெயர்ப்பு கவிதைகள் சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்கப்பட வேண்டும், அல்லது, அவற்றின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்பது போல் நினைக்கிறோம். எனவே ஒரு மொழிபெயர்ப்பை அணுகும்போது அது மூல மொழியிலிருந்து வேறுபடுவதில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து விட்டதுபோல் பார்க்கிறோம் – நமக்கே நன்றாகத் தெரியும், இப்படிப்பட்ட பிழைபெயர்ப்புகளை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாது என்று. இந்நிலையில், இந்த இழப்புகளிலிருந்து வேறு ஏதோ ஒன்றை மீட்பதற்கான வழியை நாம் காண இயலுமா என்ற கேள்வியை எழுப்புவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதற்கான வேறு வழியை அறிவதற்கு அதிதீவிரமான ஒரு நிலைப்பாடு நமக்குப் பயன்படும் என்று தோன்றுகிறது. அர்த்தமும் முக்கியமில்லை, உணர்வும் முக்கியமில்லை, வாக்கிய அமைப்புதான் முக்கியம் என்பதான ஒரு கருத்துருவாக்கத்தை வால்டர் பெஞ்சமின் முன்வைக்கிறார் . மூல மொழியில் உள்ள சொல் வரிசையில் மொழியாக்கம் செய்வது மொழிகளுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் என்று சொல்கிறார் அவர். மொழியாக்கம் தனித்துவம் கொண்ட ஒரு வடிவம் என்று சொல்லும் பெஞ்சமின், மொழிபெயர்ப்பாளரின் லட்சியம், “அனைத்துக்கும் மேலாக மொழிகளுக்கிடையே உள்ள உள்ளார்ந்த உறவை வெளிப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகவே இருக்கும்” என்கிறார் (“ultimately serve the purpose of expressing the innermost relationship of languages to one another”).

இதை எப்படிச் செய்ய முடியும், இது சாத்தியம்தானா என்பன கேள்விகள். பொதுவாக ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல மொழியில் உள்ள கவிதையின் ஓசை நயம், பொருள் செறிவு மற்றும் சொல்லமைப்பின் வரிசையில் வெளிப்படும் கவிதை வடிவம் என்று இந்த மூன்றையுமே தன் மொழிக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறான். தன் மொழிபெயர்ப்பு பொருள் சிதையாமல், தாய் மொழியில் எழுதப்பட்டது போன்ற உணர்வை அளிக்க வேண்டும் என்பது அவளது நோக்கமாக இருப்பினும், முற்றிலும் அந்நிய மொழியின் தடங்கள் அழிவது விரும்பத்தக்கதல்ல. ஆதர்ச மொழிபெயர்ப்பு என்பது ஓரே சமயத்தில் மொழியாக்கமாகவும் படியாக்கமாகவும் இருக்கும் (translation and transcription). கவிதையின் வடிவை, அதன் ஒலி மற்றும் சொல்வரிசையிலிருந்து பொருள் பிரித்து வாசிக்க முடியாது, அதுவே முக்கியம் எனினும். கவிதையின் வடிவம் இவை மூன்றையும் தன்னுள் கொண்டு உருவாவது. பெஞ்சமின், ஒரு மொழிபெயர்ப்பாளனின் நோக்கம் மொழிகளுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று சொல்வதில் வெற்றி பெறுவது, ஒரு கவிதை மொழியாக்கமாகவும் படியாக்கமாகவும் இணைந்து செயல்படும்போதுதான் சாத்தியப்படும்.

இந்த அசாத்திய லட்சியத்தை ஒரு வேத வாக்காகக் கொள்ளாமல், எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவு முயற்சி செய்துப் பார்ப்பதற்கான ஒரு அணுகலை நாம் முயற்சி செய்யலாம்.

கவிதையின் பொருள் என்பது குறிப்பிட்ட ஒரு மொழியில் மட்டுமே கவிதை வாசிப்பை நிகழ்த்தும்போதுதான் பிரதானமாக இருக்கிறது; ஏனெனில், இரு வேறு மொழிகளில் ஒரே கவிதை வாசிக்கப்படும்போது, கவிதை மொழிகளின் எல்லையைக் கடக்கிறது. மொழிகளின் வரலாற்றைக் கடந்த வேறொரு உயர் மொழியின் ஒத்த சாயல் கொண்ட, ஆனால் தனித்துவம் கொண்ட உறுப்புகளாக இரு மொழிகளும் ஆகின்றன. மொழிகளுக்கிடையே ஒரு கவிதையில் வெளிப்படும் உறவு எத்தகையதாக இருக்க முடியும் என்று யோசித்தால் எல்லாமே இரு மொழிகளின் வரைகளையும்\ கடந்த ஒரு பொருளை நோக்கிச் செல்கின்றன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு வாசிக்கும்போது, ஒரு மொழியில் வெளிப்படும் அர்த்தம் இன்னொரு மொழியின் அர்த்தத்தோடு சேர்த்து வாசிக்கப்படும்போது இவை இவ்விரண்டையும் தன்னுள் கொண்ட வேறொரு முழுமையான அர்த்தத்தை நோக்கிச் செல்வதை நாமறிகிறோம். இத்தகைய ஒரு நிலைப்பாட்டில் கவிதையை வாசிக்கும்போது, மொழிபெயர்ப்பில் எழும் பாட மற்றும் பொருள் பேதங்கள் தவிர்க்கப்பட முடியாதவை மட்டுமல்ல, அவசியமானவையும் கூட என்றாகிறது. இப்போது, மொழிபெயர்ப்பில் எதுவும் இழக்கப்படுவதில்லை, வரலாற்று இழப்புகள் வேறொரு வடிவில், வரலாற்றுக்கு அப்பாற்பட்ட உயரிய தளத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

இத்தகைய வாசிப்பு சாத்தியமா என்பதை சொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த கருப்புக் கோழி  என்ற கவிதையை எடுத்துக் கொள்கிறேன். கவிதைக்காக காத்திருத்தல், அதைக் கைப்பற்ற எத்தனித்தல், அது உயிர்பெற்று எழுவதைக் கண்டு திகைத்தல் என்ற மூன்று நிலைகளையும் அழகாய் விவரித்து ஏ கே ராமானுஜன் எழுதிய The Black Hen என்ற கவிதையின் தமிழாக்கம் இது.

ஆங்கிலக் கவிதை,

It must come as leaves
to a tree
or not at all

என்று துவங்குகிறது.

It must come as leaves என்பதில் வருவதுடன்கூட போவதின் நிழல் தெரிகிறது, வேறு எந்த பொருளிலும் புரிந்து கொள்ள இடமில்லை என்றாலும், to a tree என்பதுதான் இலைகளை நிறுவுகிறது. அதன்பின், or not at all என்பது கவிஞனின் விருப்பத்தை, அல்லது அது குறித்த அவன் முடிவைச் சொல்கிறது.

இங்கு சுட்டப்படும் இதன் மொழியாக்கம், கூடுமான அளவு, பொருள் சிதையாமல், மூல மொழியின் சொல் வரிசையை ஒட்டி எழுதப்பட்டுள்ளது – கருப்புக் கோழி

மரத்திற்கு
இலைகள் வருவது போல்
அது வர வேண்டும்
இல்லையேல்
வரவே வேண்டாம்

மரத்திற்கு இலைகள் வருவது போல் – என்பதில் அந்த வருவதில் போவதின் நிழல் இல்லை, ஆனால் இருக்கிறது: போல் என்ற சொல்லில். எங்கு ஒருமை இல்லையோ அங்குதான் போல, என்று சொல்ல முடியும். போல என்பது ஒற்றுமையைச் சொல்வது போல் இருந்தாலும், வேற்றுமையையும் சுட்டுகிறது. இந்த இரு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்த்தாலன்றி நமக்கு இந்தப் புரிதல் சாத்தியப்படாது, ஏனெனில் நமக்கு இதற்கான தேவை கிடையாது.

இங்கு ஆங்கிலத்தின் இருப்பு X இல்லாமை தமிழிலும் காப்பாற்றப்படுகிறது. அது மட்டுமல்ல, வரச் சொல்லும்போதே போவதன் சாத்தியம் உண்டு என்பதையும், ஒற்றுமையைச் சுட்டுவது வேற்றுமையையும் சுட்டுகிறது என்பதை அறிகிறோம். மொழி எதைச் சுட்டுகிறதோ, அதுவாக இருப்பதில்லை.

இங்கு ஆங்கிலத்தில், “It must come as leaves / to a tree” என்பது, “மரத்திற்கு/ இலைகள் வருவது போல்/ அது வர வேண்டும்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் முதலில் வருகை, பின்னர் இலைகள், இறுதியில் மரம் என்றிருக்கும் வாக்கிய அமைப்பு தமிழில் தலைகீழாக்கப்பட்டுள்ளது. கவிதையின் வருகைக்காகக் காத்திருத்தலை வெளிப்படுத்தும் இந்தக் கவிதையின் காத்திருப்பு, இலைகள் கூடி மரமாவது போன்ற ஒரு அழகிய படிமத்தை ஆங்கிலத்தில் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழிலோ, காத்திருப்பு முடிவு பெற்ற நிலையில் கவிதை துவங்குகிறது. மரத்தைக் காட்டி, அதிலுள்ள இலைகள் வந்ததுபோல் அது வர வேண்டும் என்று சொல்வதில் உள்ள படிமம் வேறு பொருளை உணர்த்துகிறது – மரத்திற்கு இலைகள் வருவது போல், என்று அறிந்ததைச் சொல்லி, அது வர வேண்டும் என்று அறியாததைக் காட்டி, அதற்கான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது தமிழாக்கம்.

இவ்விரண்டையும் கூட்டிப் புரிந்து கொள்வது எவ்வாறு? அறியாதபோதும், இல்லாத ஒன்றை எதிர்பார்த்திருக்க முடியாது. மரத்தை அறியாதவன் இலைகளுக்காகக் காத்திருக்க முடியாது. இலைகளை மட்டும் அறிந்தவன், மரத்தை அறிந்திருக்க முடியாது. தன்னிச்சையாக கவிதை உருவாக வேண்டும் என்று சொல்லும்போதும், அதன் வடிவம் இத்தகையது என்ற இச்சை கவிஞனின் உள்ளத்தில் இருக்கவே செய்கிறது – கவிதை வரும்போது அந்த உருவம் மாறலாம், ஆனால் இல்லாத, அறியாத ஒன்றுக்கான காத்திருப்பு அல்ல இது.

இந்த இடத்துக்கு வர நமக்கு இரு மொழிபெயர்ப்புகளும் தேவைப்படுகின்றன. இவற்றின் சொல் வரிசையைக் கொண்டு கவிதையை வாசித்து, இவ்விரண்டும் வேறொரு பொதுப் பொருளின் பின்னங்கள் என்ற புரிதலின் அடிப்படையில் இவற்றுக்கான முரண்களை சமநிலைப்படுத்தும் முயற்சி மட்டுமே இத்தகைய உணர்த்தலை அளிக்கிறது. மொழியாக்கம் ஒரு தனி வடிவம் என்று சொல்கிறார் பெஞ்சமின், கவிதையின் பொருளை உணர்த்துவதல்ல, மொழிகளின் வரலாறு கடந்த உறவை உணர்த்துதல் என்கிறார் அவர்.

அடுத்து or not at all என்பது ஆங்கிலத்தில் வந்தால் வரலாம், வரவே வேண்டாம் என்று இரு பொருள் கொண்டதாக இருந்தாலும் தமிழாக்கத்தில், ‘இல்லையேல் வரவே வேண்டாம்’ என்று முடிகிறது. இந்த மொழிபெயர்ப்பு ஒரு இழப்பு என்ற தோற்றம் அளித்தாலும், ‘இல்லையேல், வரவே வேண்டாம்’ என்பது ஒரு முடிவான தீர்மானம் அல்ல – ‘இல்லையேல்’ என்பதில் ஒரு தீர்மானமின்மை இருக்கவே செய்கிறது. நாம் இந்த இரு கவிதைகளையும் வாசிக்காவிட்டால் இந்த, ‘இல்லையேல் வரவே வேண்டாம்,’ என்பது போன்ற இறுதித் தீர்மானங்களில் உள்ள தீர்மானமின்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லை.

சொற்களின் வரலாற்றை மறுதலித்து, மொழிகளின் முரணியக்கத்தில் வெளிப்படும் வரலாறு கடந்த உயர்பொருளை உணர்த்தும் தனிவடிவம் என்று மொழியாக்கங்களை அணுகலாம் – ஏன் இந்த அணுகல் எனில், எவை எல்லாம் இழப்புகள் என்று நாம் கருதுகிறோமோ அவை நேர்மையான ஒரு மொழிபெயர்ப்பில் முழுமுதல் இழப்புகளாக ஆவதில்லை, அவசியமான இணைப்புகளாகவும் இருக்கலாம் என்ற ஒரு சாத்தியத்தை இது அளிக்கிறது.

இத்தகைய வாசிப்புகளுக்கான தேவை என்ன என்ற கேள்வி எழுவது இயல்பு, அதில் நியாயம் இல்லாமல் இல்லை. எந்த ஒரு கவிதையை எழுதுபவனும், கவிதையை வாசிப்பவனும் இத்தனை நெருக்கமாக, ஒரு கவிதை என்ன சொல்கிறது, அதை எப்படிச் சொல்கிறது, அதில் சொல்லப்படக்கூடிய, ஆனால் சொல்லாமல் விடுபட்டவை எவை என்றெல்லாம் தேடித் தேடி வாசிப்பதில்லை. ஆனால், மொழிபெயர்ப்பாளனின் நிலை வேறு.

மொழிபெயர்ப்பை முயற்சி செய்த ஒவ்வொருவரும், ஒரு கவிதையின் ஒவ்வொரு சொல்லின் எடையையும் நிறையையும் ஒப்பிட்டே உணர்கின்றனர். சில சமயம், ஒரு சொல்லின் ஒவ்வொரு அசையும் முக்கியமானதாக ஆவதுண்டு. அவ்வாறு மிக நெருக்கமான வாசிப்பில் உருவாகும் காரணத்தால்தான் மொழியாக்கம் ஒரு தனி வடிவம் என்றாகிறது – இரு மொழிகளிலும் சொல்லாத, ஆனால் இரு மொழிகளும் சேர்ந்து சொல்வதை மொழிபெயர்ப்பாளன் உணர்கிறான்- சொற்களுக்கு அப்பால், சொல்லில் கொண்டு வர முடியாத ஒரு ஊமை வலியாக, மொழிபின் வெறுமையாக. இத்தகைய வாசிப்புகள் எது மொழிபின் வெறுமையாக உணரப்படுகிறதோ, அதுவே பல்வேறு மொழிகளின் வெளிப்பாட்டு சாத்தியங்களின் வேராகவும் ஆகின்றது என்ற ஆறுதல் அளிக்கிறது. இத்தகைய ஒரு கருத்துருவாக்கம் மொழிகளிடையே காட்டாற்றில் அடித்துச் செல்லப்படுவது போன்ற ஒரு தொடர் தோல்வி உணர்வில் போராடும் மொழிபெயர்ப்பாளன் பற்றிக்கொள்ள ஒரு கிளையாகக் கிடைக்கிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.