நாற்காலி

நரோபா

naroba

ஜானுவிடம் ஃபோனில் பேசிக்கொண்டே அஞ்சுவிளக்கு வரை வந்துவிட்டதை அப்போதுதான் கவனித்தான் செந்தில். “ஒகே மா. வீட்டுக்கு போய் மெசேஜ் பண்றேன்..டேக் கேர்..” என்று சொல்லிவிட்டு அணைத்தான். ஒன்பதரை ஆகிவிட்டது. கடையை சாத்திவிட்டு கிளம்ப வேண்டும். சுந்தரமண்ணே காத்து கொண்டிருப்பார்.

சுந்தரம் வாசலில் தயாராக நின்றிருந்தார்.

“தம்பி கணக்கு எல்லாம் சரி பார்த்து வெச்சுட்டேன்..எட்டு ரூவா கல்லாவுல கெடக்கு..நீங்க ஒருக்கா பாத்துருங்க.”.

“சரியண்ணே..பாக்குறேன்..நீங்க கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு கல்லாவில் கணக்கை சரி பார்க்க துவங்கினான். அவன் கல்லா நாற்காலியில் அமரும்போதெல்லாம் பற்கூசும் கிரீச்சிடல் எழும். நாற்காலியை மாற்றவேண்டும் என வழக்கம் போல் எண்ணிக் கொண்டான். சுந்தரம் வாயிலில் நின்றபடியே இந்தப் புதுப்பழக்கத்தை சுணங்கிய முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். ரூபாய் கற்றைகளை எண்ணி வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தபின்னர்தான் தலைதூக்கி அவர் நின்றிருந்ததை கவனித்தான்.

“கிளம்பலியா..?”

ஏதோ முனங்கியது போலிருந்தது “இல்ல.. எல்லாம் சரியா இருக்கா?”

செந்தில் வழக்கம் போல் புன்னகைத்தான்.

“சரி வரேன் தம்பி” என்று முணுமுணுத்தபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு இருளில் மறைந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் செந்திலின் அப்பா ஆவுடையப்பன் இறந்ததால், மதுரையில் பிரபலமான நிறுவனத்தில் லாஜிஸ்டிக் பிரிவின் மேலாளர் பதவியை விட்டுவிட்டு ஊர் திரும்பி கடையையும் ஆயில் மில்லையும் கவனிக்கத்\ துவங்கிய முதல் நாளில் இருந்து சுந்தரம் அண்ணனின் இந்தப் பார்வை அவனை எப்போதும் தொந்தரவு செய்யும். வேறுபல அப்பாவின் நண்பர்கள் அவனை நெருங்குவதும் பின்னர் விலகுவதுமாக இருப்பது அவனுக்கு விளங்கவில்லை. காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நம்பிக் கொண்டிருந்தான்.

டிராயரில் கிடந்த நான்கு கல்யாண பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டு அவன் வழக்கமாக முடிவெட்டச் செல்லும் காதம்பரி சலூனுக்கு சென்றான். இருபது வருட பழக்கம். பள்ளி காலத்தில் எப்போதும் அங்குதான். பின்னர் கல்லூரியின்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை லீவுக்கு வந்துசெல்லும்போதும் அங்கு செல்வதுதான் வாடிக்கை. .

சவரக்கத்தியை தடித்த ஆசாமியின் கழுத்தில் வைத்தபடியே “வாங்க செந்தி தம்பி..” என்று சிரித்தார்.

“வணக்கம்ண்ணே…நம்ம மாடு எப்படி இருக்கு?”

“இங்க பாத்தியா..” என்று மடித்து வைத்திருந்த தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தை காட்டினார்.

“போன பாலமேடு மஞ்சுரட்டுல வந்தப்போ எடுத்த ஃபோட்டோ”

அவர் காண்பித்த புகைப்படத்தில் தலைசாய்த்து மண்ணைக் கிளறி அந்தரத்தில் துகள்கள் தெறிக்க இரண்டு கால்களில் திமிறிக் கொண்டிருந்த கருப்பும் சாம்பலும் கலந்த காளையின் படம் போட்டிருந்தது.

“இப்ப எவ்ளோ வயசாச்சுண்ணே அதுக்கு?”

“இப்ப ஒம்போது ஆச்சுப்பா..

“லேட்டாகுமா? காலைல வரட்டா..”

“இந்தா அடுத்து பண்ணிரலாம்..கட்டிங்கா? ஷேவிங்கா?”

“ஷேவிங் மட்டும் போதும்ண்ணே..அடுத்தவாரம் வெட்டிக்கலாம்”

தினத்தந்தி குருவியார் பதில்களில் செந்தி லயித்திருக்க, தடித்த ஆசாமி ரூபாயைக் கொடுத்துவிட்டு எழுந்து போனான். அடுத்து ஒடிசலான இளைஞன் ஒருவன் நாற்காலி ஏறி “சைடுல மெஷின் போடுங்கண்ணே” என்றான்.

“உங்கப்பாரு தங்கமான மனுஷன்..அவர மாறி ஒருத்தர பாக்க முடியாது..எம்பொண்ணு இப்ப நீ படிச்ச ஸ்கூலுக்கு தான் போறா பதினொன்னு…அவ ரெண்டாவது படிக்கும்போது இங்க சேக்கணும்னு அவருகிட்டதான் போய் நின்னேன்…ஃபீசை நினைச்சாலே மயக்கம் வரும் களுத கவர்மெண்டுலேயே படிச்சு சீரழியட்டும்னு தோணிப் போச்சு..அப்பாதான் .ஓனர் செட்டியார்கிட்ட பேசி சேத்து விட்டாரு… ..என்னத்த சொல்ல.. நல்லவங்களுக்கு காலமில்லை..சேர்க்க சரியில்ல..”

நான்கு மாதங்களில் ஆயிரம் முறைக்கு மேல் இந்த வசனத்தை கேட்டுவிட்டான். தொடக்கத்தில் அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. இப்போதெல்லாம் எரிச்சலாகத்தான் வருகிறது. சரியென்றோ தப்பென்றோ ஒப்பாமல் பொத்தாம்பொதுவாக சிரித்து வைத்தான். அந்த ஒடிசல் இளைஞன் இறங்கிச் சென்ற பின் நாற்காலியில் அமர்ந்தான். தண்ணீர் தெளித்து சவர பூச்சைப் பூசிக்கொண்டே பேச ஆரம்பித்தார்..

“அவருட்ட வாங்கி சாப்ட்டு அவரையும் கெடுத்துப்புட்டாய்ங்க.. தண்ணியில அழிச்ச காச மட்டும் சேத்து இருந்தாலே இந்நேரம் பெருங்கொண்ட பணம் சேந்துருக்கும்..எல்லாம் விதி..அக்கா மெட்ராஸ்லதான இருக்கா?”

தலையசைத்தான்

“ மூத்தவன் ஆறாவது இருக்குமா? ரதீஸ்தான அவன் பேரு..வாலு பய..”

“ஏழாவது”

“பொண்ணு பேரு கூட புதுசா இருந்த நினைவு…சவிதாவோ கவிதாவோ.ரெண்டாவது இருக்கும்ல..”

“விவிதா மூணாவது.”.

“ஒருக்கா அப்பா அவளை தூக்கியாந்திருந்தார்.. மஷ்ரூம் கட் பண்ணி விட்டேன்..ஒரே அளுகை..”

சவரக்கத்தி கன்னப்பரப்பில் வழுக்கி கழுத்துக்கு இறங்கியது. பான்பராக் வாய் மிக அருகில் கடந்து சென்றது.

“அம்மா சௌக்கியமா? அவுகளுக்குதான் ரொம்ப சிரமமா இருக்கும்..”

“உம்ம்”

“கடையெல்லாம் நல்லா போகுதா? சுந்தரம் அண்ணனும் இங்கனதான் வருவாப்ல..நல்ல மனுஷன் ..அப்பதைக்கப்ப கேட்டுக்குவேன்..”

“போகுது”

கன்னத்தை அழுத்தி பிசிறுகளை துடைத்தபின் தடவிய ஆப்டர்ஷேவ் லோஷன் குளிர்ந்து எரிந்தது.

“கல்யாணம்னு சொன்னாரு..ரொம்ப சந்தோஷம்”

“ஒருநிமிஷம் அண்ணே..” என்று வண்டியிலிருந்த பத்திரிக்கை ஒன்றை எடுத்து சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவைத் திறந்து மேஜையில் வைத்துக் குனிந்து, “அண்ணே. பத்திரிக்கையில என்ன பேரு போட?..நீங்க அவசியம் வரணும்” என்றான்.

பைப்பில் கைகழுவி கொண்டிருந்த அவர் முகம் திருப்பாமலே, “இருக்கட்டும் தம்பி” என்றார்.

2 comments

  1. அன்றாட வாழ்வில் முடி திருத்துபவர், பால் காரர், கீரைக்காறி ……… இவர்களையெல்லாம் தினமும் பார்த்தாலும் அவர்கள் பற்றி அறிந்துக்கொள்ள நாம் முனைவதில்ல. நாற்காலி நல்ல தலைப்பு.

Leave a reply to s.kaniamudhu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.