டைசுங் நகரில் ஒரு புத்தர் கோவில்

வெ. கணேஷ்

வியாபார விஷயமாக வெளிநாட்டு பயணம் செய்யும்போதெல்லாம் எப்படியாவது நேரத்தை மிச்சப்படுத்தி சுற்றுலா சிறப்பிடங்களையோ விசேஷமான கோயில்களையோ பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அப்படியான சமயங்களில் எவ்வேலைக்காக நாம் வந்தோமோ அதில் இருக்க வேண்டிய ஆர்வத்தின் அளவு குறையும். அதுவும் நமக்கு பிடித்த வரலாற்று தொடர்போ சமயத் தொடர்போ உள்ள இடத்திற்கு வரும் சந்தர்ப்பம் அமைந்தால், “அந்த இடத்திற்கு சென்று பார்க்காமல் வந்தீர்களா?”, என்ற கேள்வி கேட்கப்பட்டுவிடுமோ என்று உதறல் எடுக்க ஆரம்பித்துவிடும். இனிமேல் இந்த ஊருக்கெல்லாம் வரவா போகிறோம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றி துன்புறுத்தும். வேலையை அரைகுறையாக முடித்துவிட்டு எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள விழையும் இடத்துக்கு வேகவேகமாக சென்று நாமும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினால் அதில் ஒரு திருப்தி.

புதிய ஓர் இடத்துக்குச் சென்று வந்தோம் என்ற திருப்தியல்ல- நாமிருக்கும் புகைப்படத்தை பிறருக்கு காட்டப் போகிறோம் என்ற பெருமிதமே அது.

IMG_0379

நேரமே கிடைக்காது என்று எண்ணித்தான் மேற்குப் பிராந்தியத்தில் இருக்கும் டை-சுங் நகருக்கு பயணமானோம். சியாஹி நகரில் இரண்டு மணி நேரச் சந்திப்பை முடித்துக்கொண்டு அதிவேக ரயில் ஏறினோம். என்னுடன் வந்திருந்த எங்கள் லண்டன் தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக-ஊழியர் ரயில்வே அட்டவணையைச் சரியாகப் பார்க்காமல் டை-சுங் நகரை அடைய இரண்டு மணி நேரம் பிடிக்கும் என்ற தகவல் அளித்திருந்தார். ஆனால் டை-சுங் நகரை வந்தடைய அரை மணி நேரமே பிடித்தது.

நகரின் பிரசித்தமான ஓட்டலின் நாற்பத்திரெண்டாம் மாடியில் எங்களுக்கு அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒரு சிறு குடும்பம் தங்குகிற அளவுக்கு பெரிதாக இருந்தது. அறையிலிருந்து டை-சுங் நகரம் கட்டிடங்கள் நிரம்பிய, அங்கங்கே பச்சை வர்ணம் பூசப்பட்டதொரு நவீன ஓவியமாகக் காட்சியளித்தது. குளியலறையின் கண்ணாடிச் சுவர் வழியாகவும்கூட டை-சுங் நகரம் விரிந்து தெரிந்தது. இங்கே குளித்தால் நகரமே நாம் குளிப்பதைப் பார்க்காதோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது- கண்ணாடிச் சுவருக்கு பிளாஸ்டிக் திரை போட்டு மூடும் வசதி இருப்பதை கவனிக்குமுன்.
நிறபேதம் போல் தூரத்தில் மலைத் தொடர்கள் மங்கலாகத் தெரிந்தன. கீழ்வானம் கருமேகங்களாலும் மேல்வானம் வெண்ணிற மேகங்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.

நான்கு மணிக்கு நாங்கள் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் என் சக-ஊழியருக்கு போன் செய்து சந்திப்பை ஐந்து மணிக்கு மாற்றச் சம்மதம் கேட்டார். எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே டை-சுங் நகருக்கு வந்தது; பிறகு சந்திப்பு தாமதமானது ; சில சமயம் நேரம் நாம் கேட்காமலே நம் கையில் வந்தமர்ந்து விடுகிறது.

மனைவியுடன் போன் பேசினேன். எங்காவது ஊர் சுற்றிவிட்டு வருவதுதானே, என்றாள். அடுத்த அறையில் தங்கியிருக்கும் என் சக-பயணருக்கு போன் செய்தேன். அவர் “நான் தூங்கப் போகிறேன்” என்றார்.

மின்னஞ்சல்களைப் படித்து பதிலளித்தேன். தில்லியில் இருக்கும் என் அலுவலகத்துக்கு போன் செய்து சில விஷயங்கள் குறித்து பேசினேன். பிறகு கொஞ்ச நேரம் யூ-ட்யூபில் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களை பார்த்தேன். இரண்டு பாடல்களுக்கு பிறகு அதுவும் அலுத்துப் போனது. டை-சுங் நகரைப் பற்றி படிக்கலாம் என்று இணையத்தில் தேடினேன். பாஉ-சுயே பௌத்த கோவில் பற்றி அப்போதுதான் அறியக் கிடைத்தது. கூகிள் மேப்ஸ் அந்தக் கோயில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகச் சொன்னது.

ஓட்டல் சிப்பந்தி டாக்ஸி வரவழைத்து ஓட்டுனரிடம் நான் எங்கே செல்ல வேண்டும் என்பதை சீன மொழியில் எடுத்துச் சொன்னார். வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறபடியால் ஓர் ஆரஞ்சு நிறக் குடையொன்றை என் கையில் திணித்தார்.

ஓட்டுனர் அமைதியாக பாதையிலிருந்து பார்வையை அகற்றாமல் ஓட்டினார். அவர் பேசினாலும் பலனில்லை. அவர் சொல்லும் ஒரு சீன வார்த்தையும் எனக்கு புரியப்போவதில்லை. நான் சொல்லும் எந்த ஆங்கில வார்த்தையும் அவருக்கும் புரியப் போவதில்லை. சுவஸ்திக் சித்திர உலோகத் தகட்டை காருக்குள் தொங்கவிட்டிருந்தார், சீரான லயத்தோடு அது வலமும் இடமுமாக ஆடுவதைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

சாலையில் அதிகம் போக்குவரத்து இல்லை. நிறைய இரண்டு சக்கர வாகனங்கள் தென்பட்டன. தைவானில் இது பள்ளி விடுமுறைக் காலம். பூட்டியிருந்த ஒரு நடுநிலைப்பள்ளியின் எதிரே காரை நிறுத்தினார். முகத்தை திருப்பி என்னைப் பார்த்து சிறு புன்னகை வீசினார். நான் “வந்துவிட்டோமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். அவர் கையை வலப்புறமாகச் சுட்டினார். அவர் சுட்டிய திசையில் ஒரு பெரிய கேட்டுக்கருகே ஜப்பான் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிலர் கைகளில் காமிரா சகிதம் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் காரை அணுகினர்.

கேட்டுக்குள் வலப்புறமாக நீல வர்ணம் பூசப்பட்ட நவீனமான பகோடாவைப் பார்த்ததும் நான் காரிலிருந்து இறங்கினேன். மீட்டரைக் காட்டி கட்டணம் பெற்றுக் கொண்டார் ஓட்டுனர்.

ஜப்பான்காரர்களுக்கும் சீனர்கள் போல ஆங்கிலம் பொதுவாக பேச வராது; அவர்கள் ஜப்பானிய மொழியில் சொல்வதை ஓட்டுனர் புரிந்து கொள்வாரா?

அகலத் திறந்திருந்த கேட்டைத் தாண்டி நுழைந்தேன். இடப்புற கோடியில் சிவப்பு நிற வளைவுகள் மேவப்பட்ட ஒரு கட்டிடம். வலப்புறம் இருந்த கட்டிடம்தான் பகோடா என்கிற பாவனை தரும் நீல நிற கட்டிடம். பக்கத்தில் காலியிடத்தில் சில கார்கள் நின்றிருந்தன. நான் முதலில் எங்கு செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன்.

IMG_0382

பௌத்த கோயிலில் என்ன எதிர்பார்ப்பது என்று எனக்கு தெரியும். சீனாவுக்கு பல முறை சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் கொத்தான ஊதுபத்திகள் புத்த விக்கிரகங்களுக்கு முன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்; பக்தர்கள் சிலர் நான்கு திசைகளை நோக்கி கைகளில் ஏற்றிய ஊதுபத்திக் கொத்துகளை ஆட்டிக்கொண்டே சுற்றுவார்கள். சாக்கிய முனி விக்கிரகம் இருக்கும் திசையைப் பார்த்து வெகுநேரம் ஆட்டுவார்கள். அதிக நேரம் பௌத்த கோவில்களில் இருக்க நேரிட்டால் ஊதுபத்தி கனலில் கண்கள் எரிய ஆரம்பித்துவிடும்.

போலீஸ்காரர் என்று கருதத்தக்க ஒருவர் வாக்கி-டாக்கியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். வாக்கி-டாக்கி கருநிற காரின் கூரைமேல் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சராசரி தைவான் பிரஜையைவிட அவர் உயரமாயிருந்தார். அவரிடம் சென்று கேட்கலாமா? கொஞ்சம் தள்ளி, முட்டி வரை ஸ்கர்ட் போட்டிருந்த மூன்று இளம் பெண்கள் புகைத்துக் கொண்டிருந்தனர். கோயில்களுக்குள் புகைக்கலாமா? அவர்களிடம் சென்று மூலக்கோயில் எங்கிருக்கிறது என்று கேட்க மனம் வரவில்லை.

இடப்புறக் கட்டிடத்தை நோக்கி நடக்கத் துவங்கினேன். ஒரு மஞ்சள் நிற டாக்ஸியும் கோயில் வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, வளாகத்தை பார்க்கிங் இடமாகப் பயன்படுத்துகிறார்களோ? சிவப்பு நிற கட்டிடத்தை விட்டு ஒருவர் வெளியே வந்தார். தைவானில் நான் பார்த்த முதல் மீசை வைத்த ஆசாமி அவர்தான்.

அவரை அணுகி “புத்தர் சன்னிதி எந்த கட்டிடத்தில் இருக்கிறது?” என்று கேட்டேன். “அங்கும் இருக்கிறது, இங்கும் இருக்கிறது, மரத்துக்கு பக்கத்திலும் இருக்கிறது. கட்டிடத்துக்குப் பின்னாலும் இருக்கிறது. கட்டிடத்துக்குள்ளும் இருக்கிறது” அவர் என்ன சொல்ல வருகிறார்? அவருக்கு ஆங்கிலம் பேச வரும் என்று நான் ஊகித்தது தவறு.

சிவப்பு நிற கட்டிடத்தை தொட்டடுத்து இருந்த புல் தரையில் நினைவுக்கல் மாதிரி ஒன்று இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதன் துவாரபாலகர்கள் மாதிரி இரு சிறு பாறைகள் நினைவுக்கல்லின் பக்கவாட்டில் இருந்தன.

சிவப்பு கட்டிடத்தின் வாயிலுக்கு வெளியே குடைகள் வைக்கப்பட்டிருந்த கூடையொன்றுக்குள் என் ஆரஞ்சு நிற குடையையும் வைத்தேன். உள்ளே நுழைந்தவுடன் நேருக்கு நேராக, கையில் கத்தியோ அல்லது தடியோ ஏந்தி ஒருவர் உட்கார்ந்திருக்கும் தங்க முலாம் பூசியது போன்ற மஞ்சள் நிறத்தில் மூல விக்கிரகம் இருந்தது. . புத்தர் ஏன் ஆயுதம் தாங்கி நிற்கிறார்? பத்மசம்பவராக இருக்குமோ? சீன பௌத்தர்கள் வஜ்ராயனத்தையா பின்பற்றுகிறார்கள்? (ஹச்சிமான் என்கிற ஷிண்டோ சமயத் தொன்மங்களில் தோன்றும் தெய்வம் என்று பின்னர் விக்கிபீடியா வாயிலாகத் தெரிந்து கொண்டேன்)

கதவையொட்டி இரு கேபின்கள் இருந்தன. ஒரு கேபினில் சிலர் டி வி பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு கேபினில் கறுப்புச் சீருடை அணிந்த இளைஞர் சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். இடப்புற கேபினுக்கு வெளியே இரு பெண்கள் அதே கருப்பு சீருடை அணிந்து அன்பளிப்பு ரசீது போன்று இருந்த சில காகிதங்களில் எழுதிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்து மூலவரை நோக்கிக் கொண்டிருக்கையில், எழுதிக் கொண்டிருந்த ஒருத்தி என்னைப் பார்த்து சைகை செய்தாள். என்ன என்பது மாதிரி அவளை நோக்கினேன். “நோ ஃபோட்டோ” என்றாள். நான் “ஓக்கே ஓக்கே” என்றேன்.

மூலவரின் சிலை போலவே இருந்த குட்டிச்சிலைகள் ஏராளமாய் அந்த கோயிலில் இருந்தன. பிரகாரத்தைச் சுற்றி சிவன் கோவில்களில் இருக்கும் நாயன்மார் சிலைகள் மாதிரி வலது பக்க சுவர்களில் ஆங்காங்கே அடையாளம் தெரியா சிலைகள் இருந்தன. புறாக் கூடு மாதிரி பல நீள்-செவ்வக வடிவங்களில் மரக்கூடுகள் அமைக்கப் பெற்று ஒவ்வொன்றிலும் கலை நேர்த்தியான ஜாடிகளோ, சிவப்பு நிறத்தில் கண் கவர் சித்திரங்கள் வரையப்பட்ட உறைகளோ வைத்து, ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் பாஸ்போர்ட் போட்டோக்கள் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்துக் கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தேன்.

மூலவரை உற்று நோக்கி பிரார்த்தனை செய்பவன் போல கைகளை கோர்த்து நின்றிருந்தேன். ஒரு வயதான மூதாட்டி மூலவர் இருந்த மேடையை துடைத்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவளின் முகத்தில் நட்பு கலந்த புன்னகை. நான் அவளிடம் சென்று “புத்தா?” என்று மூலவரைக் காட்டி கேட்டேன். அவள் “ஜப்பானிய மொழியிலோ” அல்லது “சீன மொழியிலோ” ஏதோ சொன்னாள். மூலவரின் சிலையின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த சிவப்புக் காகிதங்களில் எழுதப்பட்டிருந்த ஒன்றை படித்துக் காட்டினாள். வெறுமனே தலையாட்டி விட்டு “சிசியே” என்ற எனக்கு தெரிந்த ஒரே வார்த்தையை சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

குடையை மறக்காமல் எடுத்துக் கொண்டு சிவப்பு கட்டிடத்துக்கு இடப்புறம் இருந்த அசோக மரங்களுக்கு நடுவே லக்‌ஷ்மி அல்லது சரஸ்வதி சிலை மாதிரி ஒரு பெண் தெய்வத்தின் சிலைக்குச் சென்றேன். சிலையைச் சுற்றி வட்டமான பிளாட்ஃபார்ம் எழுப்பப்பட்டு, ஊதுபத்திகள் படைக்கப்பட்டிருந்தன. பெண் தெய்வத்தின் முகம் அழகும் அமைதியும் பொருந்தி காணப்பட்டது. அவள் வலது கையில் ஒரு தாமரை மலர் ஏந்திக் கொண்டிருந்தாள். தாமரைப்பூ சிற்பமல்ல. நிஜத் தாமரை மலர் அவள் கையில் பொருத்தப்பட்டிருந்தது. அச்சிலையை பிரதக்ஷிணம் பண்ணினேன். அது தாரா தேவியின் சிலையாக இருக்கலாம் என்பது என் யூகம்.

வலப்புற நீலப் பகோடாவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மஞ்சள் டாக்ஸிக்கு அருகே ஓர் ஆள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி நடந்து சென்ற ஒரு யுவதி கையில் இருந்த ஏதோவொன்றை ஒரு குப்பைத் தொட்டியில் போட்டாள். இங்கு எதற்காக வந்தேன்? என்ன சாமி என்று தெரியவில்லை. இதெல்லாம் என்ன என்று விளக்குவதற்கும் யாரும் இல்லை. கூட்டம் அலைமோதும் நம்மூர்க் கோயில்கள் சிலவற்றில் அமைதி மருந்துக்குகூட இருக்காது. இந்த கோயிலில் தவழும் அமைதியை அனுபவிக்கலாமே….

நீல நிற பகோடா பின்னாளில் கட்டப்பட்டது என்பது அருகில் சென்றதும் விளங்கியது. ஏற்கெனவே இருந்த புத்தர் கோவிலின் மேல் ஆடை போன்று புதுக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மூன்று புத்தர் சிலைகள் இருந்தன ; தியானம் செய்யும் கோலத்தில். நடுச் சிலையின் முன்னால் கொலு வைத்தது போன்று சிறிது சிறிதாக சிரிப்பு புத்தர்கள். சன்னிதியில் நுழைய முடியாதவாறு தடுப்புகள் போடப்பட்டிருந்தன. கை கூப்பி சில நொடிகள் நின்றிருந்தேன்.

கோயில் வளாகத்துள் நிலைத்த அமைதியில் மனம் லயித்துப் போனது. புத்தர் சன்னிதிக்கு வெளியே வந்து வலப்புற வாயில் வழியாக வெளியே வந்தேன். இருபுறங்களிலும் வெள்ளை யானைச் சிற்பங்கள். பரவியிருந்த புல் தரையில் வெண்ணிறத்தில் செதுக்கப்பட்ட சிறு சிறு சிரிப்பு புத்தர்கள். மொபைல் காமிராவை எடுத்து வெள்ளை யானையை புகைப்படம் எடுக்கலாமா என்ற எண்ணத்தை களைந்து கோயிலின் வலப்புறம் இருந்த இன்னொரு சிறு கட்டிடத்துக்குள் நுழைந்தேன். ஈரடுக்கு கட்டிடத்தின் முதல் அடுக்கு கல்யாண மண்டபம் போன்று தோற்றமளித்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தாலும் என் பிரதிபலிப்பே அதில் தெரிந்தது. ஒளி ஊடுருவ முடியாத கண்ணாடிக் கதவு.

இறங்கி வலப்புறமாக மேலும் நடந்தேன். கண் முன்னால் பிரம்மாண்டமான சிரிக்கும் புத்தர் சிலை. திடீரென இவ்வளவு பெரிய சிலை இங்கே இருக்கிறது என்று இவ்வளவு அருகில் வந்த பிறகுதான் எனக்கு தெரிந்தது. சிரிக்கும் புத்தர் உட்கார்ந்திருந்தார். பொன்னிறம். அவர் தொப்புள் இருக்கும் இடத்தில் துளை. ஒரு காலை மடித்தும் இன்னொரு காலை குந்த வைத்தும் உட்கார்ந்திருந்தார். அவரது ஒரு கையில் ஜப மாலை இருந்தது. அவரின் கால் விரல்கள் அழகாக செதுக்கப்பட்டிருந்தன. அவர் காதுகள் இரண்டும் பெரிதாக, அடிப்பாகம் மடிந்து தோள்களில் படர்ந்திருந்தன. வயிற்றின் மடிப்புகளும் நெற்றியின் சுருக்கங்களும் இரட்டை மோவாய்க்கட்டைகளும் தெளிவுற சித்தரிக்கப்பட்டிருந்தன.

சிரிப்பு புத்தரைப் பார்த்ததும் தரிசனம் என்பது இதுதான் என்ற அறிதலை அக்கணத்தில் எய்தியதாக உணர்ந்தேன். புற்கள் சரிசமமாக வெட்டப்பட்ட பாதையில் வலம்-இடமாக புத்தரைச் சுற்றி நடந்தேன். புத்தருக்குப் பின்னால் இருந்த மரத்தடியில் பழுப்பு வண்ணப் பூனையொன்று தன் கூரிய கண்களால் நான் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தது. முன்புறக் கால்களில் ஒன்றை தூக்கி மடித்துக் கொண்டு மரத்தின் மீது சாய்ந்தவாறு ஒய்யாரமாயிருந்தது. அதன் அருகில் சென்றால் அது ஓடி விடும் என்பதால் கொஞ்சம் தள்ளி நடந்தேன்.

புத்தரின் இடப்பக்கத்தில் ஜன்னல்கள் போல சில ஓட்டைகளை கண்ணாடியால் மேவியிருந்தார்கள் புத்தரின் சிலையின் உள்ளுக்குள்ளே படிகள் அமைப்பட்டிருக்கலாமோ?

IMG_0391

புத்தர் சிலையின் எதிரே ஒரு சிறு செயற்கை ஓடை அமைக்கப்பட்டிருந்தது. பாறைகள் பதிக்கப்பட்டு அவ்விடத்தில் உட்கார்ந்து நீர் நிலையைப் பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது. சில நிமிடங்கள் அங்கே அமர்ந்திருந்தேன். ஆரஞ்சு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் மீன்கள் சிறியதும் பெரியதுமாக நீந்திக் கொண்டிருந்தன. பாறையில் என் கால்களைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருந்ததால் எல்லா மீன்களும் என் காலுக்கு கீழே நீந்தின. பின்னர் நான் எழுந்து இன்னொரு பாறைக்குப் பின்னால் நின்றபோது அந்த மீன்கூட்டம் அதே பாறை முன்னால் வந்து நீந்தின. பழக்கமா? நான் பொரியோ அல்லது உணவோ போடுவேன் என்ற எதிர்பார்ப்பா?

மீன்களைப் பார்த்தவாறு அமைதியில் ஆழ்ந்தேன். வளாகச் சுவர்களைத் தாண்டி பல்லடுக்கு மாடி அபார்ட்மென்ட் கட்டிடம் இருந்தது. எல்லா வீடுகளின் ஜன்னல்களும் மூடியிருந்தன. பால்கனிகளில் ஒருவரும் தென்படவில்லை .ஏர்-கண்டிஷனர்களின் பின் புறங்கள் நீண்டிருந்தன.

பக்கத்தில் எங்கோ இருந்த விளையாட்டு மைதானத்திலிருந்து சிறுவர்களின் சத்தம் கேட்டது. டப் டப் என்று பந்து தரையில் மோதி எழும்பும் ஓசை. கூடைப்பந்தாட்டமாக இருக்கலாம்!

நீர்த்தொட்டிக்கு கொஞ்சம் தள்ளி இருந்த பெஞ்சில் உட்கார்ந்து சிரிக்கும் புத்தரின் ஆஜானுபாகுவான உருவத்தை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அம்முதியவரைப் பார்த்தேன். மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தார். புல்விதைகள் விதைக்கப்படத் தயாராக இருந்தன. அவர் முதுமைக்கால வாய்ப் பொக்கையுடனிருநதார். சட்டையணியாத உடம்புடன் ஓசையெழுப்பாது தன் வேலையில் ஆழ்ந்திருந்தார். கால் சட்டையை முட்டி வரை மடக்கி விட்டிருந்தார். அவர் முதுகைத் திருப்பி வேலை செய்யும்போது அவரின் கழுத்துக்குப் பின்புறம் மேல் முதுகில் பச்சை குத்தப்பட்ட சிரிக்கும் புத்தர் கண்களுக்கு தெரிந்தது. கழுத்தில் வழிந்த வியர்வைத் துளிகள் பட்டு பச்சை குத்தப்பட்ட புத்தர் உருவம் மினுமினுத்தது.

மணி ஐந்தாக பத்து நிமிடங்கள் இருந்தன. ஓட்டலுக்கு திரும்ப வேண்டும். கேட்டுக்கு வெளியே டாக்ஸி பிடிப்பதற்காக நின்றபோது மழை பெய்யத் துவங்கியது. குடையை விரிப்பதற்குள் தொப்பலாக நனைந்துவிட்டேன். ஒரு டாக்ஸி வந்து என்னருகே நின்றது. ஏற்கனவே பார்த்த சுவஸ்திக் தகட்டின் மேல் என் பார்வை விழுந்ததும், ஓட்டுனர் என்னைப் பார்த்து நான் தங்கியிருக்கும் ஓட்டலின் பெயரைச் சொன்னார். நான் புன்னகை செய்தேன். ஓட்டுனரும் புன்னகையுடன் காரை செலுத்தலானார்.

One comment

  1. பொன்னியின் செல்வனில் புத்த விஹாரங்களைப் பற்றிப் படிக்கும்பொழுது ஏதாவதொரு புத்தர் கோயிலைப் பார்த்தே ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அது நிறைவேறியதாக உணர்கிறேன். விவரிக்கவொண்ணா அமைதியை அழகாகக் காட்சிப்படுத்தியமைக்கு நன்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.