ஒவ்வோர் அதிகாலையும் திரைச்சீலை விலகுகிறது,
தனியே, இருள் கரைவதை நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்,
டிக்டிக்கென்று நட்சத்திரங்கள் விலகிக் கொள்வதை,
கண்விழித்த பறவைகளால் உலுக்கி எழுப்பப்பட்ட
வானம் மீண்டும் காற்றிலாடும் ஸ்கார்பாகிறது
நீங்கள் ஒருத்தரையொருத்தர் தொட்டுக்கொண்டல்ல,
இணைந்து நடந்து செல்கிறீர்கள்,
ஒருவர் மீதொருவர் சாய்ந்து,
ஒருவருள்ளொருவர் என்று மாலை வரை,
மாலையில், தனியே,
நீ உன் வாசலில் நிற்கும் முரட்டு இரவை விரட்டுகிறாய்
அதற்காக அழுமளவு இனியது, ஈரமான தெரு நாய் போல்,
நீ காகங்கள் கரைவதைக் கேட்க விரும்பவில்லை,
இந்த கட்டத்தில் பேசப்பட வேண்டிய வரிகள்,
நாளுக்கு நாள் குறைந்து வருவதை,
இன்னும் எத்தனை நாட்களுக்கென்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
நிழல் நீள்கிறது, உடலை உள்ளிருந்து வெறுமை நிறைக்கிறது,
வேறொருத்தர் உன் இடத்துக்கு வருகிறார்கள்.
ஒவ்வொரு அடியாக நீ உன்னை விட்டுச் செல்கிறாய்.
Poem by Claire Malraux
o Translated from French by Marilyn Hacker
இதுவரை முதுமை இலக்கியத்தில் போதுமான கவனம் பெறவில்லை என்று நான் நினைக்கிறேன் (உண்மையோ இல்லையோ, என் வாசிப்பு அனுபவம் இதுதான்). பலரும் தங்கள் இளமையில் கவிதை எழுத ஆரம்பித்து, முதுமையிலும் இளம்பருவத்தினராகவே வாழ்கின்றனர் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பல எழுத்தாளர்கள் நாவல்களில் தங்கள் இளமைக் காலத்தை விவரித்துக் கொண்டேயிருக்கின்றனர். முதுமைக்குத் தேவையான தீவிரத்துடனும் நேர்மையுடனும் அதை அணுகுவோர் வெகுச் சிலர்தான்.
இளம்பருவத்து காதலின் கொந்தளிப்பு மாபெரும் எழுத்தாளர்களால் மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வயதாகி முதுமையை எட்டும்போது ஏற்படும் மனக்கொந்தளிப்பு விரிவாக எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இப்படிச் சொல்வதில் ஒரு போதுமைப்படுதல் இருப்பதை அறிந்திருக்கிறேன், விலக்குகள் உண்டு. ஆனால், பொதுவாகச் சொன்னால் நாம் மரணத்தைவிட வாழ்வைப் பற்றி வாசிப்பதையே விரும்புகிறோம் (தாராசங்கர் பந்தோபாத்யாயின் ஆரோக்கிய நிகேதன் ஒரு மகத்தான விதிவிலக்கு. அதே போல், காபிரியஸ் மார்க்வெஸ்ஸின் ‘No one writes to the Colonel’ என்ற நாவலையும் சொல்லலாம்).
இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தில் முதுமையை எதிர்கொள்வது எப்போதும் ஒரு சவாலான அனுபவம்தான்: வயதாகும் மனிதருக்கும் சரி, அவரது குழந்தைகளுக்கும் சரி. இப்போது நாம் நீண்ட நாட்கள் வாழ்கிறோம். மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன, பணிச்சுமையும் முன்னைவிட இப்போது அதிகம் (பிருந்தாவன விதவைகளைப் பற்றி படிக்கிறோம். இது ஏதோ புதிய சங்கதியல்ல, எப்போதும் உள்ள விஷயம்தான்). வயதானவர்கள் என்று வந்தால் நாமெல்லாம் தனிப்பட்ட முறையில்தான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதியவர்களைக் கவனித்துக் கொள்வது ஒரு சமூக கடமை என்று புரிந்து கொள்ளுமளவுக்கு நம் சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை. அதனால்தான் முதியோர் மேம்பாட்டுக்குத் தகுந்த அமைப்புகளை உருவாக்கச் சொல்லி நாம் அரசுகளை வலியுறுத்துவதில்லை.
வழக்கம்போலவே நான் நகர்ப்புற நிலவரத்தைதான் பேசுகிறேன். தனிமையில் வாழும் முதியவர்களை சென்ற பத்தாண்டுகளில் மேலும் அதிக எண்ணிக்கையில் கண்டிருக்கிறோம். அவர்களது குழந்தைகள் வெளிநாடு போய் விட்டனர். அங்கே நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தனி வாழ்க்கையும் பணிவாழ்வும் திருப்தியாக இருக்கிறது. அங்கே பிறந்த பேரப்பிள்ளைகள் தங்கள் ஊரின் சூழலுக்குப் பழகிவிட்டவர்கள். இந்தியா திரும்புவது என்பது பலருக்கும் சாத்தியமில்லை. அதே போல் இந்திய வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்ட பெரியவர்களுக்கும் வெளிநாட்டில் போய் வாழ்வது என்பது கடினமான விஷயமாக இருக்கிறது. அவ்வப்போது தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அவர்களின் தேசத்துக்குப் போய் வரலாம். அங்கேயே இருப்பது என்பது நடக்கக்கூடிய காரியமல்ல.
இதனால்தான் நாம் பல அடுக்ககங்களிலும் முதியவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. அவர்களுக்குத் உதவும் கட்டமைப்பு அங்கு கிடைக்கிறது. நட்புடன் பழக சக வயதினர் இருக்கின்றனர். அடுக்கக விவகாரங்களிலும் அவற்றின் பொறுப்புள்ள பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவசரத்துக்கு உதவ அக்கம்பக்கத்தினர் சுற்றிலும் இருக்கின்றனர். தனியாக இருக்கும்போது பெரிய தலைவலியாக இருக்கக்கூடிய மின்சார கோளாறு, தண்ணீர்க்குழாய் கோளாறு போன்ற சாதாரண விஷயங்களை கவனித்துக்கொள்ள அடுக்ககத்தில் சம்பளம் பெற்று வேலை செய்பவர்கள் இருக்கின்றனர். அடுக்ககத்தில் இருக்கும் பாதுகாப்பு இவர்களுக்கு ஒரு வரம்.
வேறு சிலர் கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் தனி வீட்டை விட்டு வர மறுப்பவர்களாக இருக்கிறார்கள். இதற்காக எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் எங்கே இருந்தாலும், அவர்கள் தனியாயிருப்பது உடம்புக்கு ஒன்று வந்து படுக்கையில் விழும்போதுதான் ஒரு பேரிடியாய் இறங்குகிறது. அப்போதுதான் அதிக அளவில் உதவி தேவைப்படுகிறது, எப்போதும் யாராவது உடனிருப்பது அவசியமாகிறது. ஆனால் அந்த சமயத்தில்தான் நமக்கென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் போகிறது. என்னதான் சொந்தக்காரர்களும் நண்பர்களும் உடனிருந்தாலும் தான் பெற்ற பிள்ளையோ பெண்ணோ பக்கத்தில் இல்லை என்பது பலருக்கும் பெரிய வருத்தமாக இருக்கிறது.
பிரிந்திருப்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியளிப்பதல்ல. தங்களுடன் பெற்றோர் தங்கியிருக்கப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சில இளைஞர்கள் பெற்றவ்ர்களுக்காக் ஊர் திரும்புகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிலை திண்டாட்டம்தான் – தங்கள் எதிர்காலம், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம், பெற்றவர்களின் உடல்னலமின்மை என்று எல்லாமே இவர்களைப் பெரிய சிக்கலில் ஆழ்த்துகின்றன. உடம்பு சரியில்லாத பெரியவர்களைப் பார்த்துக்கொள்ள தாதிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது, ஆனால் அவர்கள் கிடைப்பதில்லை, அந்த அளவுக்கு அவர்களின் பணிக்கான தேவை இருக்கிறது.
அண்மையில் ஒரு நண்பர் சொன்ன விஷயம் இது. பெரியவர் ஒருவர் இறந்துபோனதும் இந்தியா வந்த அவரது பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டிருந்த பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்த தாதியை இன்னும் இரு வாரங்கள் தங்களுடன் இருக்கச் சொன்னார்களாம். காரணம், பெரியவரின் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை எல்லாம் பார்த்துக் கொண்டது அந்தப் பெண்தான், அவளுக்குதான் உண்மையான நிதி நிலவரம் தெரியும். எதிர்காலத்தின் இது போல் முழுமையாய் சர்ந்திருப்பவர்களை நிறைய பார்க்கப் போகிறோம்.
இப்போதெல்லாம் தனிக்குடித்தனங்கள்தான் இருக்கின்றன, கூட்டுக்குடும்பங்கள் அபூர்வமாகி விட்டன. இதனால் முதியவர்கள் நிலை மோசமாகிவிட்டது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் பேரப்பிள்ளைகளை முதியவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட வழக்கமாகவே ஆகிவிட்டது. முதியவர்களுக்கு குழந்தைகளைக் கொஞ்சும் ஆசை இருந்தாலும் அது மிகவும் களைப்பூட்டும் வேலை. சில வீடுகளில் வேலைக்காரிகள் இருந்தாலும் எல்லா இடத்திலும் இப்படியில்லை.
இந்த மாதிரி வீடுகளில் பெரியவர்களுக்கு முடியாமல் போகும்போது பிரச்சினை பெரிதாகிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டில் இருக்கும் வயதானவர்களையும் கவனிப்பது எளிதல்ல. இப்போதெல்லாம் இருவருக்கு ஒருவர் என்று இருப்பதால் எதிர்காலத்தில் அவசரத்துக்கு தம் வீட்டில் வைத்துக் கொண்டு உதவ உடன்பிறந்தவர்கள் என்று யாரும் வரப்போவதில்லை. உடம்புக்கு ஒன்றுமில்லாமல் இருந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் அது நம் கையில் இல்லை. தனியாய் இருக்கும்போதும் உடம்பு சரியில்லாத போதும் பார்த்துக்கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள் என்ற காரணம் சொல்லியே நகருக்கு வர மறுக்கும் கிராமத்து பெற்றோரை எனக்குத் தெரியும். நகரில் தனிமனிதர்களுக்குப் போதுமான கவனிப்பில்லை.
சரி, முதியவர்களின் சமூக நிலை இப்படி இருக்கிறது என்றால் வயதாகும்போது எப்படி இருக்கும்? மரணத்தின் நிழலில் வாழ்வது எப்படிப்பட்ட உணர்வாக இருக்கும்? உன் சமவயதினன் இறந்து போன செய்தி கேட்கும்போது எப்படி இருக்கும்? இந்தக் கவிதை நெருங்கிவரும் மரணத்தை இயல்பான ஒன்றாகப் பேசுகிறது. “ஒவ்வோர் அதிகாலையும் திரைச்சீலை விலகுகிறது,”. ஆம், ஒவ்வொரு அதிகாலையும் ஒரு வரம். இந்த நாடகத்தில் நாம் நமக்குரிய பாத்திரத்தை ஏற்று நடிக்க நமக்கு இன்னொரு நாள் வழங்கப்பட்டிருப்பதை உணர்த்தவே திரைச்சீலை விலகுகிறது.
“நீ காகங்கள் கரைவதைக் கேட்க விரும்பவில்லை,/ இந்த கட்டத்தில் பேசப்பட வேண்டிய வரிகள்,/ நாளுக்கு நாள் குறைந்து வருவதை,/ இன்னும் எத்தனை நாட்களுக்கென்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது” என்று தொடர்கிறது கவிதை. நாளுக்கு நாள் நம் பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறது, எப்போது வேண்டுமானாலும் நாம் மேடையை விட்டு இறங்க வேண்டியதாகலாம்.
“நிழல் நீள்கிறது, உடலை உள்ளிருந்து வெறுமை நிறைக்கிறது,/ வேறொருத்தர் உன் இடத்துக்கு வருகிறார்கள்./ ஒவ்வொரு அடியாக நீ உன்னை விட்டுச் செல்கிறாய்”. ஆனால் உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு அடியாய் விட்டுப் பிரிவது ஒரு நல்லூழ் என்று பலரும் நினைப்பார்கள். கவிஞர் மரணத்தை அமைதியாக அணுகுகிறார், அவரது கலை அந்த ஆற்றலை அவருக்கு வழங்குகிறது. எல்லாருக்கும் இது சாத்தியமல்ல. அவர்களுக்கு இருப்பதெல்லாம் நினைவுகளும் கவலைகளும்தான் – அவர்களால் அவற்றைக் கவிதையாக்க முடியாது.