அப்படியான
கொடுத்து வைத்திராத லாட்டரித் தாள்கள் காற்றில் எறியப்படும் ராக்கெட்டுகளாய் ஆகிவந்த காலம் அது – வீணாகும் துண்டு லாட்டரிகள் பொறுக்கி எடுத்து தெருவைக் கடப்பேன் நிதானமாக நின்று எதிரில் பார்த்தபடி கைகளிலிருந்து குறி வைப்பேன் – வாகனம் கடக்காத நேரத்தில்
விர் விர்ரென்று
செலுத்திய கூரான காகித ராக்கெட்டுகள் வெயிலுக்காக கடை மேல் போர்த்தப்பட்ட கோணிப்பையின் துவாரங்களைத் தாக்கும் – மிட்டாய்கள் நட்சத்திரங்கள் போல
மினுமினுக்க வண்ண பலூன்கள் மிளிர குறுகலான இடத்தில் அமர்ந்துகொண்டு கடையின் கீழ் ஒளித்து அடுக்கி வைத்திருக்கும் பீடிக்கட்டுகளும் சிகரெட் பெட்டிகளும் தெருமார்களிடம் ரகசியமாக ஒப்படைப்பான் அவன் – என்னுடைய ராக்கெட்டுகள் தலைக்கு மேல் சென்றாலும் ஒருபோதும் அவை அவனை நெருங்குவதோ காயப்படுத்துவதோ இல்லை – இருந்தாலும் அவனுக்குள் பயம் – அவன் என்னை விரட்டுவான் சத்தம் போட்டு ஏசுவான்
என்றாலும் அவன் மீதான என் ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன
எதுவரை என்றால்
ஒருநாள் கொள்ளிட நீர் மண் இழுத்துக்கொண்டு அவனைக் கரைசேர்த்த பொழுது
கொலையுணர்வு கலந்த
என் ராக்கெட் தாக்குதல்கள்
நினைவில் தட்டிய வரை