நெல் ப்ராய்டன்பெர்கருடன் ஒரு நேர்முகம்

நீங்கள் வெளிநாடு செல்ல நேர்ந்தது எப்படி?

பட்டப்படிப்பு முடிந்ததும் ஓராண்டு பாங்காக்கில் இருந்தேன், அங்கு ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். அதன்பின் இந்தியாவில் இரண்டு மாதங்கள் இருந்தேன், அடுத்த ஆண்டு கோடையில் புதுதில்லி சென்று அங்குள்ள குடிசைப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பள்ளியொன்றில் வகுப்புகள் எடுத்தேன்.

அமெரிக்கா குறித்த உங்கள் பார்வையை நீங்கள் வெளிநாட்டில் இருந்த காலம் எப்படி மாற்றிற்று?

அமெரிக்கனாக இருப்பது என்பதைப் பற்றி அர்த்தமுள்ள வகையில் நான் நினைத்துப் பார்த்ததே அப்போதுதான். நம் பூகோளத்திலோ அல்லது அரசியல் தனிமையிலோ ஏதோ ஒன்று அமெரிக்கனாக இருப்பது பற்றி சுவாரசியமாக எதுவும் நினைப்பதை இங்கிருக்கும்வரை தடுப்பதாக இருக்கிறது. தாய்லாந்தில் நாற்பது ஆங்கில ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று நினைக்கிறேன், அவர்களில் முப்பத்து ஒன்பது பேர் நடுத்தர வயது தாய் பெண்மணிகள். நான் ஏதோ காட்சிப்பொருளாக இருப்பது போல் உணர்ந்தேன், நான் செய்வது ஒவ்வொன்றும் அத்தனை அமெரிக்கர்களும் செய்வதாக இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்பை உணர்ந்தேன். இதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்த பிரக்ஞை எனக்கு இருந்து கொண்டேயிருந்தது.

உங்கள் கதைகளிலும் நாவலிலும் புலம் பெயர்ந்தவர்கள் அன்னியப்படுதல், வேரறுதல் போன்ற விஷயங்களை எதிர்கொள்வது போலிருக்கிறது (alienation and displacement). அவர்கள் அறுபட்டிருக்கிறார்கள்.

பாங்காக்கில் ஒரு பெண்ணிருந்தார். அவர் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் பயிற்றுவிப்பது குறித்து வகுப்புகள் எடுத்தார். அவர் காத்திரமான, சிவந்த சிகை கொண்ட டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவள், தாய் போலீஸ்காரர் ஒருவரை மணம் செய்து கொண்டிருந்தார். ஒரு பண்பாட்டில் நம்மை இணைத்துக் கொள்வது எப்படி என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது, ஆனால் வகுப்புகள் முடியும்போது ஏன் உன்னால் எப்போதும் உண்மையாகவே வேறொரு பண்பாட்டில் உன்னை இணைத்து கொள்ள முடியாது என்று அவர் விளக்கினார். எங்களை அவர் தன் மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அது பாங்காக்கில் ஒரு ஆற்றில், மரக்கால்களில் கட்டப்பட்ட பாரம்பரியமான தாய் வீடு. எனக்கு பாடமெடுத்தவர் அங்கு சென்றதும் புத்தர் முன் நமஸ்கரித்தார், என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தார்- ஆனால் குடும்பத்தில் அவருக்கு என்று ஒரு தனியிடம் இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. முழுமையான தாய் மருமகளாக அவர் இருக்கப் போவதேயில்லை. ஒரு பண்பாட்டுக்கு உரியவராக நம்மை மாற்றிக் கொள்வது எப்படி என்பதைக் காட்டிலும் எனக்கு இது சுவாரசியமாக இருந்தது.

சிறுகதைத் தொகுப்பில் அன்னிய மண்ணில் இருக்கும் அமெரிக்கர்களைப் பற்றிய கதைகள் இருக்கின்றன, ஆனால் உங்கள் நாவலில் அதைத் தலைகீழாக்கியிருக்கிறீர்கள். ஓர் அன்னியரை இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். சமன்பாட்டை இப்படித் திருப்புவதன்மூலம் நீங்கள் எப்படிப்பட்ட ஆய்வு செய்ய நினைத்தீர்கள்?

ஒரு ஐடியாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது இப்படியெல்லாம் நினைக்க முடியாது. லாஸ் ஏஞ்சல்ஸில் கதை நடப்பதாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அங்குதான் வளர்ந்தேன். அதில் ஆசிய தாக்கம் இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை. நான் உயர்நிலைப் பள்ளியில் படித்ததை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கு வகுப்புகள் எடுக்க வந்த வெளிநாட்டு டீச்சர் நினைவுக்கு வந்தார். அவர் சீன நாட்டைச் சேர்ந்த ஓவியர், இங்க் கொண்டு வரைபவர். அவருக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. முதலில் ஒரு பாறையை வரைய வேண்டும். பாறையை ஒழுங்காக வரைந்தால் அடுத்தது மூங்கில் வரையலாம், அதையும் ஒழுங்காக வரைந்தால் லாப்ஸ்டர்களை வரையும் அடுத்த கட்டத்துக்கு தேர்ச்சி பெறலாம். இந்த வகுப்புகள் முழுக்க முழுக்க அமைதியாக பயிற்றுவிக்கப்பட்டன. ஏனெனில் யாருக்கும் அடுத்தவரின் மொழியில் பேசத் தெரியாது. அப்போதே இது மிகவும் வினோதமாக இருந்தது, ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும்போது இன்னும் வினோதமாக இருக்கிறது. நான் அந்த வகுப்புகளை மிகவும் விரும்பினேன். எனக்கு ஓவியம் வரையும் திறமை எதுவுமில்லை, ஆனால் எனக்கு ஓவியம் கற்றுத் தந்தவர்களில் அவர் ஒருவர் மட்டும்தான், “நீ இப்படி வரைந்திருப்பது தப்பு,” என்று சொல்லாதவர். நீ வரைந்ததை அவர் கிழித்து, குப்பையில் போட்டுவிட்டு, மறுபடியும் வரைந்து கொண்டுவரச் சொல்வார். அது எனக்கு அர்த்தமுள்ளதாக இருந்தது. ஏனென்றால் எழுதும்போதும் எதையாவது பார்த்து எழுதுகிறோம், அதைத் தப்பாக எழுதிவிட்டு மறுபடியும் மறுபடியும் எழுத ஆரம்பித்து முழுக்க முழுக்க உங்களுக்கே உரியதாக இருக்கும்வரை எழுதுகிறீர்கள்.

சிறுகதைகள் எழுதிக் கொண்டிர்ந்துவிட்டு பல பார்வைகள் கொண்ட நாவல் எழுதுவது எப்படியிருந்தது?

சிறுகதைகளைவிட இது சௌகரியமாக இருந்தது. சில மாதங்கள் என்றிருப்பதற்கு மாறாக, இந்தப் பாத்திரங்களுடன் மூன்றாண்டுகள் வாழ்வது ஒரு சந்தோஷமான அனுபவம். ஆனால் மறுபக்கம் பார்த்தால் சிறுகதைகள் மிகவும் திருப்தி தருபவை, ஏனென்றால் நிறைய கதைகளை எழுதி முடிக்க முடியும். எனக்கு எப்போதும் நாவல் எழுதுவதில்தான் ஆர்வம் இருந்திருக்கிறது. ஒரு நாவல் எழுதி வெளிவந்ததும், யாரோ ஒருவர், “நீ ஒரு சிறுகதை தொகுப்பு எழுத வேண்டும்,|” என்ற சொன்னபின்தான் அந்தத் தொகுப்பு வந்தது. “எப்போதும் நாவல் எழுதத்தான் ஆசைப்பட்டிருக்கிறேன், இப்போது இது எழுத முடியுமா என்று பார்க்கலாம்,” என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் அதன்பின், “இந்தக் கதையை ஏன் இன்னும் விரிவாக எழுதி நாவலாக்கக் கூடாது,” என்று கேட்டார்கள். அது முட்டாள்தனமான அறிவுரை. அப்படியெல்லாம் நினைத்துச் செய்ய முடியாது.

நாவலில் பீஜிங் ஈஸ்ட் வில்லேஜ் பற்றி நீங்கள் எழுதியிருப்பதில் எந்த அளவு புனைவு இருக்கிறது?

அதிலுள்ள படைப்புகள் கற்பனை. அவர்களின் நிகழ்த்து கலைகளைத் திருடுவது நியாயமில்லை என்று நினைத்தேன். கதையிலுள்ளதைவிடச் சிறந்த ஆக்கங்கள் அங்குண்டு. எனக்கு நிஜமாகவே உதவிய புத்தகம் என்றால் அது ரோங் ரோங் எழுதிய ஈஸ்ட் வில்லேஜ் என்ற புத்தகம்தான். அதிலுள்ள போட்டோக்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தன. அவற்றைப் பார்க்கும்போது, நான் முன்னர் நினைத்திருக்காத வகையில் என் பாத்திரங்களின் கடந்த காலத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

புனைவெழுத்தாளர்கள் தமக்கு மிகக் குறைவாகவே தெரிந்தவர்களின் வாழ்க்கையைத் திருடி அதை எழுதுவதை வழக்கப்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஒரு முறை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தெரியாது, ஆனால் எனக்கு ஒவ்வொரு கதையும் அப்படிதான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர், என் நெருங்கிய நண்பரோ அல்லது என் குடும்பத்தைச் சேர்ந்தவரோ அல்ல, ஏதோ ஒரு கதையின் ஒரு பகுதியைச் சொல்வார். எனக்கு முழு கதையும் தெரியாத காரணத்தாலேயே, அந்த நபரை நன்றாக அறிந்திருக்காத காரணத்தாலேயே, நான் கற்பனை செய்யத் துவங்குவேன். என் ஓவிய வகுப்பாசிரியர் பற்றி நினைத்து, அவரது பார்வையில் எழுத ஆரம்பித்தது போன்றதுதான்.

உங்கள் முதல் கதை ந்யூ யார்க்கரில் வந்தபோது உங்கள் இளமையும் அழகும் அதிக அளவில் கவனிக்கப்பட்டன. இளம் ஆண், பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் பதிப்பிக்கப்படுவதற்கும் வெவ்வேறு அளவுகோள்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்த பதிப்பகங்களின் விளம்பரப் பிரிவினர் பல வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் நாம் ஆணா பெண்ணா என்று பார்த்துதான் அதைச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். விமரிசகர்கள் அப்படி வேற்றுமை பாராட்டி எழுதுவதில்லை என்றும் நினைக்கிறேன், அது நல்லதுதான். ஆனால் இலக்கிய வலைப்பதிவுகளைப் படிக்கத் துவங்கினால், எழுத்தாளராக உங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். அதற்கப்புறம் உங்களால் எதுவுமே எழுத முடியாமல் போகலாம்.

நீங்கள் விமரிசனங்களைப் படிப்பதுண்டா?

அதிகம் படித்ததில்லை. சென்ற முறை எனக்கு இன்னும் அதிக தைரியம் இருந்தது. ஆனால் எதிர்மறையாகச் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் துல்லியமாக நினைத்துப் பார்க்க முடிந்தது, பாராட்டி எழுதிய விஷயங்கள் அந்த அளவுக்கு நினைவில் நிற்கவில்லை. எழுதும்போது, இந்த எதிர்மறை விமரிசனங்கள் குறுக்கிடுகின்றன. “வாஷிங்க்டன் போஸ்ட், நான் செய்வதாகச் சொன்ன அந்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறேனோ?” என்ற நினைப்பு வந்துவிடுகிறது. எழுத்தைப் பற்றி அப்படியெல்லாம் நினைப்பது நல்லதில்லை.

டேவிட் மிட்சலின், Black Swan Green பற்றி ந்யூ யார்க் டைம்ஸ் சண்டே புக் ரிவ்யூவில் நீங்கள் எழுதிய ஒரு வரியைப் பற்றி கேட்க வேண்டும். “இன்று வாழும் சமூக அமைப்புகளின் விரிவையும் சிக்கலையும் நாம் பிரிதிநிதிப்படுத்தும் அதே வேளை, மனிதர்களையும் கவனித்து எழுத புனைவில் வழியிருக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

பாத்திரங்களால் செலுத்தப்படும் ‘மரபார்ந்த’ புனைவு, சிந்தனைகளைப் பற்றிய புனைவு, துணிகரமான கதைசொல்லல் என்ற வேறுபாடுகளில் எனக்கு விருப்பமில்லை. இதில் அர்த்தமில்லை. இப்படிப்பட்ட வகைமைகளில் ஏதோ ஒன்றில் கச்சிதமாகப் பொருந்தும் புத்தகங்கள் அதிகம் இல்லை. அந்த நாவலில் உள்ள சீர்மையை நான் மிகவும் மதித்தேன். சிறிய இந்த இங்கிலீஷ் மக்களிடையே கதை நடக்கிறது, இந்தச் சிறுவனின் வாழ்வின் பதின்மூன்று மாதங்களைப் பேசும் கதை. அதே சமயம், அந்நாளைய இங்கிலாந்து பற்றியும் இந்த நாவல் பேசிவிடுகிறது. ஒரு மிகக் குறுகிய களனைக் கொண்டிருந்தாலும் அது புறவுலகைப் பார்க்கும் புத்தகம் என்று நினைக்கிறேன். உண்மையாகவே இது மாறுபட்ட ஒரு படைப்பு. பாத்திரப் படைப்புக்கு முக்கியம் கொடுக்கும் எழுத்தாளர் இவர் என்பது நன்றாகத் தெரிகிறது, இப்படிப்பட்ட நாவல்கள்தான் எனக்குப் பிடித்தமானவை. இது போன்ற நாவலைதான் எழுத விரும்புகிறேன். உங்கள் பாத்திரங்களின் அனுபவ உலகுக்கு வெளியே உள்ளவற்றைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு விஷயம் இருக்கலாம், அதைச் செய்யும் வாய்ப்பை நீங்கள தவறவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.

நன்றி KGB BAR

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.