அர்னாப் சக்லதார்: இந்த நாவலின் எழுதப்பட நேர்ந்தது குறித்துச் சிறிது பேசலாமா?
கிரண் நாகர்கர்: Cuckold உருவான விதம் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன்: நான் அவ்வப்போது எழுதுபவனாக இருக்கப் போகிறேன் என்பது எனக்கு அப்போது தெரியாது, ஆனால் என் இளமைப் பருவத்தில் இரண்டு விஷயங்களைத் தொடப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தேன். அவற்றிலொன்று, உட்கலவி (incest)- காரணம், இந்தியச் சமுதாயம் மட்டுமல்ல, மேலைச் சமுதாயமும் தகாத விஷயங்களை (taboo issues) புதிதாய்ப் பார்ப்பதை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு ஸ்டீரியோடைப்பாகதான் இவற்றை நாம் அணுக முடியும். முடிந்தவரை, தகாத விஷயங்களை ஸ்டீரியோடைப்பாக அணுகுவதைத் தவிர்க்க நினைப்பதால், “முடிந்தவரை” என்று நான் சொல்லியிருப்பதை அடிக்கோடிட விரும்புகிறேன், உட்கலவியைப் பேசுவது எனக்குச் சாத்தியமில்லாமல் போனது. எப்படியானாலும் அது மிகவும் தீவிரமான களம். அது பற்றி எழுதுவதானால் மகேஷ் எல்குஞ்ச்வார் எழுதியதைப் போலல்லாமல் வேறு வகையில் எழுத வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.
தொடக்கூடாது என்று நான் நினைத்திருந்த மற்றொரு விஷயம் மீரா…
அர்னாப் சக்லதார் ஏன்?
கிரண் நாகர்கர்: நான் மீரா சலிப்பூட்டும் பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! அவள் எப்போதும் வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறாள், கையில் எப்போதும் ஏக்தாரா வைத்துக் கொண்டிருக்கிறாள், அந்தர்முகமாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றிய கிட்ஷ் தொன்மத்தை நானும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் சொல்ல வ்நேடும். அதனால்தான், “முடிந்தவரை” என்பதை அழுத்தம்திருத்தமாகச் சொன்னேன். பின்னர்தான் தெரிந்தது, பிற எவரையும் போல் நானும் ஸ்டீரியோடைப்புகளுக்குப் பலியானவன்தான் என்று. இப்போதும்கூட நான் பெரிதாய் ஒன்றும் கற்றுக்கொண்டு விடவில்லை என்று நினைக்கிறேன்.
அப்போதெல்லாம் பயங்கர சினிமா பைத்தியமாக இருந்தேன். தினமும் ஆறு படங்கள் பார்ப்பேன். அவ்வப்போது சினிமா-விமரிசகனாகவும் இருந்தேன். ஒரு முறை தில்லியில் நடந்து கொண்டிருந்த திரைப்பட விழாவில் சினிமா பார்த்துவிட்டு, பின்னிரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். என்னோடு ஒரு நண்பனும் இருந்தான். ரிகஷாவில் குளிர் உறைய வைப்பதாக இருந்தது. பம்பாயிலிருந்து வந்திருந்த காரணத்தால் நான் குளிருக்குத் தகுந்த ஆடைகளையும் கொண்டு வரவில்லை. அப்போதுதான் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றிற்று.. இதோ இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பெண் இருக்கிறாள்.. மொழிகளையும் மாநிலங்களையும் கடந்தவளாக இருக்கிறாள் மீரா. மறைபொருளைப் பாடும் பிற கவிஞர்கள் அளவுக்கு இவள் மகத்தான கவிஞரல்ல, ஆனால் அவளது மொழி உன் நாவிலும் என் நாவிலும் இருக்கிறது. இது பற்றி நமக்கு ஒரு உணரவேயில்லை.
சரி, இதிலுள்ள முரண்நகை இதுதான்: இந்தியாவில் உள்ள அனைவரும் அறிந்த பெண் இவள், ஆனால் இவளது கணவன் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. எனக்கு இது உண்மையாகவே ஒரு புதிராக இருந்தது: இவனைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல் இருந்தபோதும் எப்படி நாம் தன் மனைவியைக் கொலை செய்ய தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் மோசவனாகவே இவனை எப்போதும் சித்தரிக்கிறோம்? இந்த எண்ணம் வந்ததும் அதை உடனே அழித்துவிட்டேன். அவனைப் பற்றி நான் எழுதப் போவதில்லை.
ஆனால் சில விஷயங்கள் உன் சொற்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வைக்கின்றன. நான் திரும்பத் திரும்ப காணாமல் பொல கணவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். மீராவைப் பற்றி அசிரத்தையாகப் படிக்கத் துவங்கினேன். அவளது கணவனின் பெயர் போஜ்ராஜ் எனபதைத் தெரிந்து கொண்டேன், கர்னல் டாட் அளிக்கும் தகவலும்கூட தவறுதான் என்பது புரிந்தது. ரானா கும்பாதான் அவளது கணவன் என்று அவர் நினைத்திருக்கிறார். மீராவின் கணவனைப் பற்றி எழுத முடியும் என்று நான் இறுதியில் நினைத்தபோது, அது பெரிய எழுத்துகளில் 104 பக்கம் வரக்கூடிய ஒரு புத்தகமாக இருக்கும் என்று நினைத்தேன்.
லத்தின் அமெரிக்கர்களைக் காட்டிலும் மாச்சோவானவர்கள் உண்டென்றால் அது இந்தியர்கள்தான் என்பது என் எண்ணமாக எப்போதும் இருந்திருக்கிறது. என்ன ஒன்று, நாம் அந்த விஷயத்தில் போலியானவர்களாக இருக்கிறோம், பெரிய பெரிய வார்த்தைகளைக் கொண்டு அந்த விஷயத்தைக் குழப்பி மூடி மறைக்கிறோம். சரி, இந்த ஆளை மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துபவன் என்கிற மாதிரியெல்லாம் எழுதுவோம் என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக, புத்தகமும் அதன் பாத்திரங்களும் உயிர் பெற்று, இது முழுக்க முழுக்க வேறு புத்தகமாக மாரிவிட்டது.
இவ்வாறாகத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்..
நன்றி : http://www.anothersubcontinent.com/nagarkar.html
oOo
“என் தாத்தா உயர்ந்த வர்க்க குடும்பத்தைச் சேர்த்தவர், அவர் குழந்தையாய் இருந்தபோது ஒரு கோவிலின் பணிகளுக்கு உரியவராக இருந்தார்,” என்று நாகர்கர் விளக்குகிறார். “சிற்றூரில் இருந்தார். அங்கு பிராமண மரபு இன்னும் ஆசாரமாகவும் இறுக்கமானதாகவும் இருக்கும். அவர் எப்படி அதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் முற்றிலும் துண்டித்துக்கொண்டு அந்த இடதைவிட்டே வெளியேறினார்.
“நாம் 19ஆம் நூற்றாண்டைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். உங்கள் குடியைவிட்டு வெளியேறும்போது மிகவும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர் வெளியேறினார் என்பது மட்டுமல்ல, அவர் பம்பாய் வந்து ஆங்கிலமும் கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் மரியாதைக்குரிய அமைப்பாக இருந்த கல்லூரியில் அவர் முதல் ஆங்கில பேராசிரியாகவும் பணியாற்றினார். அவர் ஒரு சீர்திருத்தக்காரராகவும் மாறினார், அதனால் அவரது தனிப்பட்ட வாழ்வில் பயங்கரமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. என் தாத்தாவுக்கு நான் ஒரு விஷயத்தில் கடன்பட்டிருக்கிறேன்- அவர்தான் அத்தனை ரிஸ்க் எடுத்தார், பாரம்பரியத்தை எதிர்த்து நின்றார், அதனால்தான் என்னால் வழக்கத்தில் இல்லாததை இயல்பாக எடுத்துக் கொள்ள முடிந்தது”
அவரது தாத்தா தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்- காந்தியின் நிலைப்பாட்டிலும் அவரது தாக்கம் இருந்திருக்கலாம்-, இறந்த கணவனுடன் விதவையையும் சிதையில் எரிக்கும் சதி பழக்கத்துக்கும் எதிராகப் போராடினார். வழக்கத்துக்கு முரணாக அவர் ஒரு யூதரை மணம் புரிந்தார்- அந்தப் பெண்தான் நாகர்கரின் பாட்டி. காலம் மாறிவிட்டது, பிரச்சினைகளும் மாறிவிட்டன. என்றாலும், “அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்,” என்கிறார் நாகர்கர். “உலகின் கவலைகளைச் சுமப்பது என் வழக்கமாகி விட்டது. இப்போது நான் பாலஸ்தீனியர்களைப் பற்றியும் இராக்கியர்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் சகதேசத்தவர் பற்றிச் சொல்லவே வேண்டாம். அமெரிக்கர்களைப் பற்றிய ஆழ்ந்த கவலையும் இருக்கிறது, அவர்கள் இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்”.
வாழ்வியல் ஆதாரங்களை மட்டுமே தாத்தா விட்டுச் செல்லத் தவறினார். அவர் இளம் வயதில் மரணமடைந்ததால், நாகர்கரின் அப்பா பத்தாம் வகுப்பு முடிப்பதற்கு முன்னரே கல்வியை நிறுத்திக் கொண்டு, குடுமத்தின் நிதிநிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. “அது மிகப்பெரும் சுமை. அவரது வாழ்வில் பயங்கரமான அழுத்தம் அளித்தது என்றாலும், என் மாமாக்கள், அத்தைகள், அவர்களில் சிலர் உயர்ந்த நிலைக்குச் சென்றனர்- ஒரு அத்தை சினிமா நடிகையானார். நல்லவேளை, உறவினர்கள் எங்களை ஏழைகளாக நடத்தவேவில்லை”
பணப்பிரச்சினை ஒரு போராட்டமாக இருந்தபோதிலும், நாகர்கரின் தந்தை கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தைத் தளர்த்திக் கொள்ளவே இல்லை. கல்வியின் மதிப்பை அவர் தன் தந்தையிடமிருந்து அறிந்திருந்தார், கடன் வாங்கி தன் மகனைப் படிக்க வைத்தார்.
இந்தியாவின் காலனிய, காலனியம்-கடந்த காலகட்டங்களில் இரு கால்களையும் பதித்தவராக நாகர்கர் வளர்ந்தார், “கலப்புப் பிராணி” என்ற தன் நிலையை விரும்பி ஏற்றுக் கொண்டார்.
“1942ஆம் ஆண்டு பிறந்த காரணத்தால் நான் ஒரு வினோதமான இடத்தில் இருக்கிறேன்,:” என்று விளக்குகிறார் அவர். “நான் காலனிய காலகட்டத்தின் குழந்தை. பிற கவிஞர்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்து கொண்டதைப் பார்க்கும்போது, அவர்களில் பலர் மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து சென்றிருக்கின்றனர்- இரு நாற்காலிகளுக்கு இடையே நின்று கொண்டிருந்தவர்கள் அவர்கள். பாதிரியார்களும் சிஸ்டர்களும் ப்ராடஸ்டன்ட் சர்ச்சைச் சேர்ந்தவர்களும் நடத்திய ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்கள். ஒருபக்கம் அவர்கள் மேற்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் வளர வளர அவர்கள் நாம் இப்போது சுதந்திர அமைப்பு என்பதைப் பற்றிய ஆழமாகச் சிந்தித்தனர், நம் வேர்களைத் தேட வேண்டியதாயிற்று… இந்தச் சிக்கலை நான் முழுமையாகத் தப்பித்தேன்,.
“அவர்கள் திரும்பிச் சென்று தமிழ், இந்தி, அல்லது குஜராத்தி மொழிகளைக் கற்றார்கள் என்றால் எனக்கு அதற்கான தேவையே தெரியவில்லை. என் முதல் நனகாண்டு கால கல்வியால் எனக்கு ஒரு குழந்தைக்குரிய அளவு மராத்தி தெரிந்திருந்தது, இந்தப் பிளவுண்ட நிலைமை குறித்து எனக்குக் கொஞ்சம்கூட வருத்தமில்லை. சுதந்திரமடைந்த காலத்தையொட்டிப் பிறந்தேன், எனவே எனக்கு காலனியம் அளித்ததையும் புது இந்தியாவையும் மறுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. அதை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லது வீணாக்கலாம்.
“என் வாழ்க்கையில் வெகு சில விஷயங்களே சந்தோஷப்படவோ பெருமைப்படவோ இருக்கின்றன- மிக, மிகக் குறைவான விஷயங்கள். அவற்றில் ஒன்று, நான் எப்போதும் கலப்பினப் பிராணியாக இருக்கப் போகிறேன் என்ற மறுக்க முடியாத உண்மை. அதுதான் எனக்கு அளிக்கப்பட்ட வரம், அதை நான் மறுக்கப்போவதில்லை. எனவே நான் என் தாய் மொழியைக் கற்றுக் கொள்ளப் போகவில்லை, என் வேர்களைத் தேடிப் போக முயற்சி செய்யவில்லை. என் வேர்கள் ஆழமற்று இருக்குமென்று சந்தேகிக்கிறேன்”.
தன் வேர்களைத் துண்டித்துக் கொண்ட தாத்தாவின் வாரிசு, பாதுகாப்பதைவிட மாற்றத்தில் ஈடுபாடு கொண்டவர் நாகர்கர். “தமருடன் இருந்த அன்னியன்” என்றே வளர்ந்தார்- மிகச் சிறந்த முறையில் அவதானிப்பதற்கும் காலனியம் கடந்த இந்திய பண்பாட்டை எழுதுவதற்கும் தகுந்த இடத்தில் இது அவரை நிறுத்தியிருக்கிறது
“200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியும் அதன்பின் 1947வரை 50 ஆண்டுகாலம் மிகத் தீவிரமான லட்சியவாத உணர்வுகள் இருந்தன. அதன்பின் நாம் சுதந்திரம் பெற்றோம். மிகைபடுத்திச் சொல்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாம் அந்த லட்சியவாத உணர்வை மிக வேகமாக இழந்துவிட்டோம். இப்போது நாமேதான் நமக்குப் பொறுப்பாகிறோம், பிறரைக் காட்டி குற்றம் சொல்ல முடியாது”.
“சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் பிறந்தவர்களுக்கும் சுதந்திரத்தையொட்டிய காலத்தில் பிறந்தவர்களுக்கும் இரு வேறுபட்ட மரபுகள் இருப்பதான உணர்வு இருந்தது. பிரிட்டிஷ் அல்லது மேலை மரபும், இதுவரை கேவலப்படுத்தப்பட்ட, எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் நமக்கே இருந்த நம் மரபும். ஆனால் திடீரென்று இப்போது இந்த இளைஞர்கள் புதிய யதார்த்தத்தை எதிர்கொண்டாக வேண்டியிருந்தது, இந்த இந்திய யதார்த்தத்தை. அது சிறிது காலம் கடினமாக இருந்தது. இப்போதும் சில சமயம் கஷ்டமாகதான் இருக்கிறது.”
நன்றி: http://www.news-releases.uiowa.edu/2007/october/103007nagarkar.html