ரிச்சர்ட் ரோர்ட்டி – ஒரு குறுஞ்சித்திரம்

(பிலாசபர்ஸ் மாகசின் என்ற இதழில் சைமன் ஈஸம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் )

ரிச்சர்ட் ரோர்ட்டி – சிலருக்கு தத்துவவியல் நாயகன், பிறருக்கு தத்துவத்தின் எதிரி. ரோர்ட்டியைக் கண்டனம் செய்வது தத்துவத்துறையில் ஒரு விளையாட்டு போல் ஆகிவிட்டது என்று ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். விரும்பலாம் வெறுக்கலாம், இவரை அலட்சியப்படுத்த முடியாது. உலகில் மிக அதிக தாக்கத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்திய, அதிக அளவில் எழுதிய, அதிக அளவில் வாசிக்கப்படும் தத்துவவியலாளர்களில் ஒருவர் ரோர்ட்டி என்பதில் சந்தேகமில்லை. சமகாலத்தவர்கள் பலரைப் போலன்றி, தன் ஆதர்சங்களான வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் ட்யூவியின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, சமூக நீதி மற்றும் மக்களாட்சி குறித்து பரவலான வாசகர்களை நோக்கி பல்வகைப்பட்ட தலைப்புகளில் பொதுத்தளத்தில் விரிவாக எழுதும் தத்துவவியலாளர் இவர்.

Philosophy and the Mirror of Nature (1979) மற்றும் Consequences of Pragmatism (1982) ஆகிய இரு துவக்க கால பிரதிகளைக் கொண்டு ரோர்ட்டி கடை விரித்தார். அவர் நடைமுறை நோக்கை முன்னிருத்துபவர் (pragmatist). அதாவது, தான் யதார்த்தத்தை ‘இயற்கையின் கண்ணாடி’ போல் பிரதிபலிப்பதாக மொழி கோரிக் கொள்வதில் முழு உண்மை இருக்க முடியாது என்று அவர் நம்புகிறார். மாறாக, அறிவானது, ‘மெய்’ உலகை வெற்றிகரமாய்ச் சமாளிப்பதற்கான சாத்தியங்களைத் தருவித்துக் கொடுப்பதாக இருக்கிறது என்று எதிர்பார்ப்பது மட்டுமே மொழியின்பாற் நாம் வைக்கக்கூடிய உச்ச நம்பிக்கையாக இருக்க முடியும்.

கண்டெடுக்கக் காத்திருக்கும் உண்மை என்று எதுவும் ‘வெளியே’ கிடையாது. உதாரணத்துக்கு, ‘மரபணு’ என்ற சொல், நிஜமாகவே உள்ள எந்த ஒரு வஸ்துவுக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மரபணு-பேச்சு எந்த ஒரு குறிப்பிட்ட சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அந்தச் சூழலைச் சமாளிக்க மரபணுக்கள் என்று பெயரிட்டுச் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்குமா இருக்காதா என்பதுதான் முக்கியமான விஷயம். இதன் விளைவாய் மெய்யெனக் கொள்ளப்பட்ட காத்திரமான அறிவியல் ‘தரவுகள்’ குடைசாய்ந்து, கலை மற்றும் மானுடவியல் துறைகளின் மென்தன்மை கொண்ட சொல்லாடலாக மாறுவதன் பொருள், மொழிக்கு அப்பால் சென்று ‘உள்ளபடியே’ இந்த உலகை அறிவதற்கான உத்திரவாதமளிக்கப்பட்ட வழி எதுவும் கிடையாது என்பதாகும். ‘உலக உருவாக்கம்’ என்பதற்கான அத்தனை முயற்சிகளும் தப்ப முடியாத இனச்சார்பால் சபிக்கப்பட்டிருக்கின்றன.

ரோர்ட்டியின் எழுத்துகள் அவரது சமகால தத்துவவியலாளர்களான நெல்சன் குட்மேன், டபிள்யூ வி ஓ க்வைன், ஹிலாரி புட்னம் மற்றும் ழாக் தெரிதா போன்றவர்களின் தாக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. முன்னரே குறிப்பிடப்பட்டிருப்பது போல், அவரது சமூகவியல் பார்வை ஜேம்ஸ் மற்றும் ட்யூவியைப் பின்பற்றி தொடர்கிறது. ஹெகல் மற்றும் ஹெய்டெக்கர் முதலிய மாபெரும் தத்துவவியல் ஆளுமைகளின் ஆக்கங்களை வலுவாகவும், சில சமயம் முற்றிலும் தனிப்பட்ட வகையிலும் அவர் வாசிப்பது விமரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ரோர்ட்டி முழுமையான, பல பரிமாணங்களும் கொண்ட சிந்தனையாளர் என்பதை மறுக்க முடியாது. Philosophical Papers என்ற தொகுப்பில் காணப்படும் அவரது ஆக்கங்கள் மேற்கத்திய தத்துவத்தை அவர் முழுமையாகவும் மகத்தான வகையிலும் உள்வாங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

ரோர்ட்டி தன் பெயரை நிலைநாட்டிக் கொண்டது அரசியல் தத்துவத் துறையில்தான். Philosophy and the Mirror of Nature என்ற புத்தகத்தில் நம்பிக்கைகளின் அடிப்படை நிச்சயத்தன்மைக்கும், அறிதலின் உருவெளித் தோற்ற இயல்புக்கும் எதிரான நிலைப்பாட்டை (anti-foundationalist and anti-representationist stance) வளர்த்தெடுத்து, எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்த அறிவு உட்பட சகலமும் அறிந்து கொள்வதற்கான புத்தொளிர்க்கால அறிவுத் தேட்டையை (enlightenment quest for knowledge) கைவிட்டதன் பொருள் என்ன என்பதை நேரடியாக விவாதிக்கிறார். இதன் பின் அவர் எழுதிய, வாசக இணக்கம் கொண்ட, Contingency, Irony, and Solidarity (1989), என்ற புத்தகத்தில் இந்த இனச்சார்பின் தவிர்க்க முடியாத பின்விளைவுகளையும், ஒத்த கருத்து கொண்ட உலகு-உருவாக்குபவர்களுடன் ‘கூட்டு ஒருமைப்பாடு” (solidarity) பாராட்டும் போக்கு குறித்தும் விவாதிக்கிறார்.

இந்த உலகில் நாம் எங்கிருக்கிறோம் எப்போதிருக்கிறோம் என்பதையொட்டியே யதார்த்தம் குறித்த அத்தனை அறிவும் உண்மை குறித்த பிரகடனங்கள் அனைத்தும் எழுகின்றன என்பதை அங்கீகரிப்பதன் நீட்சி, நம் நம்பிக்கைகளைத் தீவிர முரண்நகையுணர்வுடன் பேசும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. முரண்நகையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன், பிற எந்த ஒரு சமுதாயத்தின் மொழியும் தனக்குரியதன் அளவுக்கு மெய்த்தன்மையும் யதார்த்தமும் கொண்டதாய் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறான். இந்தக் கருத்து சார்புக்கொள்கையின் (relativism) சாயல் கொண்டிருக்கிறது என்பது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற அபாயத்தை நினைவுறுத்தி எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்கிறதெனில், ரோர்ட்டி இனச்சார்பின் பாதைமறிப்பைத் தவிர்க்கும் காத்திரம் கொண்ட ஒரே சமூகக் கட்டமைப்பாய் தான் கருதுவதைப் பரிந்துரைக்கிறார்: அரசியல் விரிநிலைவாதம் (political liberalism).

தன் சாத்தியங்களை வென்றெடுத்தல், நிறைவு காணுதல், பூரணத்துவம் என்று எவை அந்தரங்க வெளிக்கு உரியதாய் இருக்கின்றனவோ அவற்றை அறமும் நீதியுமாகிய பொதுவெளியில் பிணைப்பதற்கான தொடர் முயற்சியே பிரச்சினையின் ஒரு பகுதியாய் இருக்கிறது என்று சொல்கிறார ரோர்ட்டி. சுதந்திரம், செல்வம், அமைதி முதலியவற்றை சமநிலைப்படுத்துவதோடு விரிதன்மை கொண்ட ஆதர்ச சமூகம் (The ideal liberal society) தன் அக்கறைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது. ஆனால், அதே சமயம், தாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து தன் உறுப்பினர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களின் சாத்தியத்தையும் வாய்ப்பையும் அது அனுமதிக்கிறது. அந்தரங்கத்தையும் பொதுவெளியையும் பிணைக்கும் எந்த ஒரு முயற்சியும் அந்தரங்கத்தைக் காட்டிலும் பொதுவெளிக்கே முன்னுரிமை அளிக்கிறது, அல்லது, அந்தரங்கத்தை பொதுவெளிக்கேற்ப திருத்தி வரையறுக்கிறது- பொதுவாக, அது அந்தரங்க நடத்தையை ஒடுக்குகிறது- அல்லது, வலியவர்களுக்கோ பெரும்பான்மையினருக்கோ உரித்தாயுள்ள அந்தரங்க நடத்தையை பொதுவெளிக்கு உரியதாக்குகிறது.

நாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த பொது இணக்கத்தால் மானுடம் ஒரு நாள் ஒன்றுபடும் என்ற சாத்தியத்தை ரோர்ட்டி மறுக்கிறார். மக்கள் பரப்பில் மிகப் பெரும்பான்மையினரிடையே ஒத்த கருத்து உருவாகக்கூடும் என்பதுதான் நம் அதிகபட்ச எதிர்பார்ப்பாக இருக்கக்கூடும் என்பதையே அவர் ஏற்றுக் கொள்கிறார். எது முக்கியம் எனில், ‘நமக்கு’ எதிராக ‘அவர்கள்’ இருக்கிறார்கள் என்பதும், வரலாற்று வழக்கான, சார்புத்தன்மை கொண்ட நம் மொழி-விளையாட்டை (our historical, contingent language-game) பிறருக்கு உரியதையும் உள்வாங்கிக் கொள்ளும் விரிவுடையதாய் மாற்றிக் கொள்ள நாம் தயாராய் இருப்பதுவும்தான்.

மாற்று மொழி-விளையாட்டுகளையும் உடனிருக்க அனுமதித்து, பிறரின் ‘பழக்கமில்லாத ஒலிகளை’ நாம் கேட்கும் சாத்தியத்தைத் திறந்திருத்தி, அவர்களை நம் உலக பார்வையில் ஏற்றுக்கொள்வதை அனுமதிக்கும் அரசியல் தத்துவமாய் விரிநிலைவாதம் ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்பது ரோர்ட்டியின் கருத்து. இதனால் தவிர்க்க முடியாத வகையில் அவர் நியோ-மார்க்சிஸ்டுகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்- அவரது அரசியல் தத்துவத்தின் தீவிர விமரிசகர்கள் இத்தரப்புக்கு உரியவர்களே. எனினும், ரோர்ட்டி தொடர்ந்து தன் ‘எதிர்க்ளின்’ வாதங்களை மறுத்தும் நிராகரித்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொது விவாதங்களில் அவர் காத்திரமான எதிர்வினையாற்றுபவராய் இருக்கிறார்- அவரைப் பார்க்கவும் அவர் பேசுவதைக் கற்கவும் மெய்ப்பணம் செலவழிக்கத் தகும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.