
நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் என்ற இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திமோதி ஸ்னைடர் ஒரு கட்டுரை எழுதினார் – வரலாற்று காழ்ப்புகளையும் வரலாற்று நிகழ்வுகளின் சிக்கல்களையும் புரிந்துகொண்டு சரி தவறுகளைத் தீர்மானிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் பேசும் கட்டுரை அது. http://www.nybooks.com/articles/archives/2010/jun/24/jews-poles-nazis-terrible-history/?pagination=false
“1941ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாளன்று, ஒருகாலத்தில் மத்திய போலந்தாக இருந்த வியர்ஸ்ப்ரூக் நகரின் ஊர்ச்சதுக்கத்தில் அந்த தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஜெர்மன்-சோவியத் கூட்டமைப்பின் படையெடுப்பு போலிஷ் தேசத்தை அழித்து இரண்டு ஆண்டுகள் கடந்திருந்தன; அதன்பின் பத்து வாரங்களுக்கு முன்னர்தான், ஜெர்மானியர்கள் சோவியத் யூனியனின்மீது படையெடுத்து தம் சகாவுக்கு துரோகம் இழைத்திருந்தனர். போலந்துக்காரர்களுக்கும் யூதர்களுக்கும் தாயகமான வியர்ஸ்ப்ரூக், பொது அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. போலந்தில் வெற்றிகொண்ட பகுதிகளைக் கொண்டு ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்த காலனி அது.
“அந்த ஞாயிற்றுக்கிழமை காலை சர்ச்சிலிருந்து திரும்பிவரும் போலந்துக்காரர்கள், தூக்கு மேடைகள் தம்முன் இருப்பதைக் கண்டனர். ஜெர்மன் காவல்துறை பதினாறு அல்லது பதினேழு போலந்துக்காரர்களைத் தேர்ந்தெடுத்திருந்தது- ஆண்கள், பெண்கள், தவிர குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது அன்று தூக்கிலிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி கெட்டோவிலிருந்து அன்று காலை அழைத்து வரப்பட்டிருந்த யூத கொலைக்குழுவினருக்கு உத்தரவிட்டனர். போலந்துக்காரர்கள் முக்காலிகளில் ஏற்றி நிறுத்தப்பட்டனர்; யூதர்கள் அவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டியபின் முக்காலிகளை எட்டி உதைத்தனர். தொங்கும் உடல்கள் விட்டுச் செல்லப்பட்டன.
“ஜெர்மானியர்கள் இந்த சிவிலியன்களைக் கொல்லக் காரணம் இருந்தது. போராளிகளுக்கு ஆதரவளிக்கும் பொதுமக்களுக்கு இத்தகைய தண்டனை அளித்து போலந்து தேசத்தவரின் போராட்டத்தை நசுக்க ஜெர்மானியர்கள் கையாண்ட பல வழிமுறைகளில் இது ஒன்று. 1939ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் கல்வியறிவு பெற்ற போலந்துக்காரர்களை பல பத்தாயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஜெர்மானியர்கள் கொன்றிருந்தனர்; 1940ஆம் ஆண்டின் துவக்கத்தில் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள். 1940ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, சந்தேகத்துக்குரிய போலந்துக்காரர்களை ஜெர்மானியர்கள் ஆஷ்விட்ஸ் மற்றும் பிற முகாம்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். எதிர்ப்பற்ற தொழிலாளிகளாய், தனித்துவமற்ற கூட்டமாய், போலிஷ் சமுதாயம் ஒடுக்கப்பட வேண்டும்.
“வேறுபாட்டின் தன்மை எத்தகையது என்பது இன்னமும் தெளிவடையவில்லை என்றாலும் ஜெர்மனியின் செயல்திட்டம் யூதர்கள் விஷயத்தில் வேறாக இருந்தது. யூதர்களில் மேல்நிலையில் இருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டிருந்தனர்; இந்த யூதர்களில் சிலர், ஜூடன்ராட் என்று அழைக்கப்பட்ட யூத நிர்வாக அமைப்பின் உறுப்பினர்களாகவும், வேறு சிலர் யூதர்களுக்கிடையிலான விவகாரங்களை ஜெர்மானியர்களுக்கு ஏற்ற வகையில் கையாளும் காவல்துறை அமைப்பிலும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
“சில கெட்டோக்களின் மரண விகிதம் அதிகமாக இருந்தாலும், 1941ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில், “இறுதி தீர்வு”க்கான ஆயத்த நடவடிக்கையாகவே கெட்டோக்களில் தாம் குவித்து வைக்கப்பட்டிருகிறோம் என்பதை யூதர்கள் சிறிதும் அறியாதிருந்தனர்.
“சரியான ஆட்களைத்தான் கொன்றேன் என்பது எனக்குத் தெரியும்,” என்று அன்று வியர்ஸ்ப்ரூக் நகரில் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய யூதர்களில் ஒருவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் நினைவுகூர்ந்தார். தூக்கிடப்பட்டவர்கள் போலிஷ் ஹோம் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் என்பது அவரது எண்ணம்- அந்த அமைப்பின் போராளிகள் யூதர்களைக் கொன்றார்கள் என்பதால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் அன்று வியர்ஸ்ப்ரூக்கில் தூக்கிடப்பட்டு இறந்தவர்கள் என்னவோ போலந்துக்காரர்கள் யூதர்களைக் கொன்ற குற்றத்துக்காக இறக்கவில்லை- ஜெர்மானிய ஆட்சியை எதிர்த்து போலந்து தேசத்தவர்கள் போராடிக் கொண்டிருந்த காரணத்தாலேயே அவர்கள் மரணதண்டனை விதிக்கப்பட்டு இறந்தனர்.
“ஆம், வியர்ஸ்ப்ரூக் நகரின் தூக்கு தண்டனைகள் ஜெர்மானியர்களுக்கேயுரிய பழிவாங்கல் நடவடிக்கையாகும் பொதுமக்களை அச்சுறுத்தி, தங்களுக்கு எதிராகத் தொடரும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை முறியடிக்கும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகள். அந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு வியர்ஸ்ப்ரூக் நகர யூதர்களின் சாட்சியங்களின்றி மறக்கப்பட்டிருக்கும். இனி வரப்போவதின் மிகச்சிறிய முதற்சுவையாக இருப்பினும் அந்த யூதர்களில் பலருக்கும் ஜெர்மானியர்கள் நிகழ்த்திக் காட்டும் கூட்டுக்கொலைகளை முதன்முறை நிதர்சனமாய்க் காணும் அனுபவமாய் அமைந்தது இது”.
இந்த நிகழ்வின் அனுபவப்பட்டவர்களின் வாழ்வினூடே பரவிய அதிர்வுகளை நினைத்துப் பார்ப்பது கடினமல்ல. அன்று யூத கொலையாளிகளால் தூக்கிடப்பட்டவர்களின் நண்பர்களையோ குடும்பத்தினரையோ கண்டிருக்கக்கூடிய போலந்துக்காரர்கள் அதன்பின் வந்த ஆண்டுகளில், ஹோலகாஸ்ட்டிலிருந்து மறைத்து வைக்கப்படவேண்டிய தேவையிலிருந்த யூதர்களை எதிர்கொண்டபோது எப்படி நடந்து கொண்டார்கள்? ஆனாலும் ஏன் கெட்டோவிலிருந்து கொணரப்பட்ட யூதர், ஜெர்மானியர்களின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அவர்களின் நீசத்தனத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் நடந்துகொண்டு நாஜிக்கள் சொல்படி செயல்பட்டபோதும், தான் “சரியான ஆட்களை” தூக்கிலிட்டதாக நினைத்துக் கொண்டார்?
இதற்கான காரணத்தில் ஒரு பகுதி இது: கம்யூனிஸ்டுகளாய் அல்லாத குழுக்களில் பிரதான குழுவாய் இருந்த அமைப்பான ஹோம் ஆர்மி பங்கு வகித்த போலிஷ் போராட்டப்படைகளின் சில யூனிட்டுகள், தம் முன் எதிர்ப்பட்ட யூதர்களை வரம்பின்றி கொல்லவே செய்தனர். ஆனால், நாஜிக்களுக்கு எதிரான இந்தப் போராட்டப்படையினர் யூதர்களைக் கொன்றதற்கான காரணம் என்ன? அதற்கான காரணத்தில் ஒரு பகுதி, நாஜிக்கள் படையெடுத்து சில நாட்களேயாகிருந்தபோது போலந்தின்மீது படையெடுத்த சோவியத்துகளை யூதர்களில் பலர் தீவிரமாக ஆதரித்திருந்தனர். ஹிட்லர் ஸ்டாலினுக்கு எதிராகத் திரும்பி சோவியத் யூனியன் மீது படையெடுத்த ஜூன் 1941ஆம் ஆண்டுவரை சோவியத்துகள் போலந்து தேசத்தின் பாதியை, அதன் கிழக்குப் பகுதியை, ஆக்கிரமித்திருந்தனர். இங்குள்ள போலிஷ் அதிகாரிகளையும் கல்வியறிவுள்ள எலைட்டுக்களையும் கூட்டம் கூட்டமாக சோவியத்துகள் கொன்றிருந்தனர். சோவியத்துகளும் . ஆனால், எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய காரணங்களால், நாஜிக்களைவிட கம்யூனிஸ்டுகளே நம்பத்தகுந்தவர்கள் என்று யூதர்களில் பலரும் கருதி, அதற்கேற்ற வகையில் அவர்களோடு கூட்டு சேர்ந்திருந்தனர்.
முன்னொரு நாள் ஜேகபின் மேகசினில் ஒரு கட்டுரை படித்தேன். அதை எழுதியவர், ஸ்னைடரின் அற்புதமான, ஆனால் நம்பமுடியாத அளவு இருண்மையான, Bloodlands: Europe Between Hitler and Stalin என்ற நூலைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்தார். அவரது குற்றச்சாட்டு? ஹிட்லர் அளவுக்கே மோசமானவராக ஸ்டாலினைத் சித்தரித்ததில் ஸ்னைடர் அநீதி இழைத்திருக்கிறார், அதிலும் கம்யூனிஸ்டு போராளிகள் விஷயத்தில் ஸ்னைடர் அதைவிட அநியாயமாக எழுதியிருக்கிறார் என்பதுதான். உண்மையில், கம்யூனிஸ்டு போராளிகளின் வன்முறையும் நாஜி ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறையும் மேலும் மேலும் அதிகரிக்கும் வன்முறைச் சுழலாக இயங்க நேர்ந்ததை ஸ்னைடர் மீண்டும் மீண்டும் நூலில் மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறார்:
“சோவியத் போராளிகள் ரயில்களைக் கவிழ்த்தபோது, அந்த இடத்துக்கு அருகாமையில் இருந்தவர்கள் அனைவரும் மொத்தமாகக் கொல்லப்படுவதை உறுதி செய்வதாக அவர்கள் செயலின் விளைவு இருந்தது. சோவியத் போராளிகள் கண்ணிவெடிகளைப் புதைத்து வைக்கும்போது, அவற்றில் சில சோவியத் குடிமக்களின் உடல்களின்கீழ் வெடிக்கும் என்பதை அறிந்திருந்தனர். வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலத்தில் உள்ளூர் மக்களையும் பெலாரஷ்யர்களையும் யூதர்களையும் கைகோர்த்து நடக்கச் செய்து கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் ஜெர்மானியர்கள்.
“பொதுவாகச் சொன்னால், இத்தகைய மனித உயிரிழப்பு குறித்து சோவியத் தலைமை மிகக் குறைவாகவே கவலைப்பட்டது. இறந்த மக்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள், எனவே சந்தேகத்துக்கு உரியவர்கள், சொல்லப்போனால் சாமானிய சோவியத் குடிமகனின் உயிரைக் காட்டிலும் இவர்கள் உயிர்கள் குறைத்து மதிப்பிடத்தக்கவை. மேலும், இந்தச் சத்திச்செயல்களின் பின்விளைவாய் ஜெர்மனி மேற்கொண்ட பழிவாங்கும் தாக்குதல்கள் போராளிகளின் எண்ணிக்கை பெருகுவதை உறுதி செய்தது. ஏனெனில், ஜெர்மன் தாக்குதலில் உயிர் தப்பியவர்களில் பெரும்பாலான்வர்கள் வீடற்று, வேலையின்றி, திரும்பிச் செல்வதற்கு உறவின்றி இருந்தனர்”
ஜேகபின் இதழின் கட்டுரையாளர், வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை, ஸ்னைடருக்கு பதிலளிக்கும் வகையில் குறிப்பிடுகிறார்:
“யூதர்கள் வேறென்ன செய்திருக்க வேண்டும் என்று ஸ்னைடர் விரும்புகிறார் என்பது தெரியவில்லை. ஃபே ஷூல்மன் கிழக்கு போலந்தில் ஒரு சிற்றூரில் வாழும் பத்தொன்பது வயது பெண்ணாக இருந்தபோதுதான் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெர்மாச்ட் அவளது குடும்பத்தினரையும் அங்கிருந்த பிற யூத மக்களையும் படுகொலை செய்தது. தொழில்முறை புகைப்பட நிபுணராக இருந்ததால் தற்காலிகமாக உயிர் பிழைத்த அவள், வாய்ப்பு கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் போராளிகளிடம் சென்று சேர்ந்து கொண்டார்- அவளை அவர்கள் தங்கள் படையில் ஏற்றுக் கொண்டதற்கு அவள் நன்றியுள்ளவளாகவும் இருந்தாள்.
“போர் முடிந்து விட்டது. போராளிகள் தங்கள் தலைமையகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர், நான் அவர்களோடு இருந்தேன், உயிரோடு இருந்தேன். இது ஒரு கனவு போலிருந்தது. சோவியத் போராளிகள் என்னை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இப்போது என்னை எதிர்நோக்கிக் கொண்டிருப்பது எது எனபதைக் குறித்து எனக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது, இனி எப்படிப்பட்ட வாழ்க்கை வாழப் போகிறேன் என்பதும் தெறியாது. ஆனால் நான் மிகவும் அதிர்ஷ்டக்காரி எனபதை அறிந்திருந்தேன். நானும் ஒரு போராளி, இனி நான் நாஜிக்களைக் கண்டு அஞ்சுபவளல்ல. மஞ்சள்நிற டேவிட் நட்சத்திர இலச்சினையைக் கிழித்தெறிந்தேன். காட்டுக்குள் எங்கள் பயணத்தைத் துவங்கினோம்.
“நேரடியாகப் போர் நடவடிக்கைகளில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். என் மக்களுக்காகப் போரிட வேண்டும்- யூதர்களின் மானத்துக்கும் மரியாதைக்கும்- நாஜிக்களின் கொலை எந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போரிட வேண்டும்”, என்று ஷூல்மன் தன் நினைவுக்குறிப்புகளில் பதிவு செய்கிறார். இது இவளை ஒரு குற்றவாளியாக்குகிறதா?”
இதற்கு பதிலாக யூதர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஸ்னைடர் எதிர்பார்க்கிறார்? -வரலாற்றுக் கட்டமொன்றை எதிர்கொள்ளும்போது நம்மிடையே நிலவும் பொதுவான ஒரு மனப்போக்கை இந்தக் கேள்வி வெளிப்படுத்துகிறது. ஹாலிவுட் பாணியில் யோசிக்கும் நாம், “அவள் யார் பக்கம் சேர்ந்திருக்க வேண்டும்?” என்று கேட்கிறோம். ஏதோ, வரலாறு என்பது அற விளையாட்டுப் பந்தயம் போலவும், ஒருவர் சரியான பக்கத்துக்கு ஆதரவு அளிக்கிறாரா என்பதுதான் முதன்மைக் கேள்வி போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஃபே ஷூல்மனின் வாழ்க்கைச் சூழலை ஒட்டி வாசிக்கும்போது, அவள் ஏன் போராளிகளுடன் இணைந்தாள் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது, அதற்காக மகிழ்ச்சியடையவும் முடிகிறது. நமக்கு அந்தத் துணிச்சல் இருந்தால் நாமும் அதையே செய்வோம். ஆனால், போராளிகளின் நடவடிக்கைகள் பெரும்பாலும் ஜெர்மனியின் தரப்பிலிருந்து மிதமிஞ்சிய எதிர்தாக்குதல்களைத் தருவித்தன என்று ஸ்னைடர் சொல்வதை இது பொய்ப்பிப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு தளத்தில் சோவியத் தலைமை இந்த ஈரமற்ற கணக்கைக் புரிந்து கொண்டது: கம்யூனிஸ்ட் போராளிகளின் நடவடிக்கைகள் ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் படைகளை நேரடியாகச் சேதப்படுத்தும்போதே, விசுவாசமாய் இல்லாதிருக்கக்கூடிய எதிர்கால ‘துரோகி’களையும் ஜெர்மானிய எதிர்தாக்குதல்கள் துடைத்தொழிக்கின்றன; ஜெர்மனியைப் பழிவாங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர நாஜி பதில்தாக்குதல்கள் வேறெதையும் விட்டுச் செல்லாத காரணத்தால் போராளிகளின் எண்ணிக்கை புதிய உறுப்பினர்களால் தொடர்ந்து அதிகரிக்கிறது.
பெரும்பாலான சமயம் நம்மிடம் இல்லாதது அவல உணர்வு: விளங்கிக் கொள்ளக்கூடிய காரணங்களுக்காக நாம் பயங்கரமானச் செயல்களைச் செய்கிறோம் என்ற புரிதல். நமது செயல்கள் பயங்கரமானவை- எனினும் இவற்றை நிகழ்த்தியவர்களுக்கு இவை ஏன் நியாயமானவையாகத் தெரிந்தன என்ற புரிதல் இவற்றின் பயங்கரத்தைக் குறைப்பதில்லை. பயங்கரச் செயலெனினும் இவை விளங்கிக் கொள்ளப்படக்கூடியவை. குற்றமிழைத்தவன் தன் செயல் நியாயமானது என்று கருதக் காரணமுண்டு.
அவல உணர்வு கொண்டிருப்பது என்றால், “நல்லவன்” “கெட்டவன்” என்ற எண்ணங்களைத் தவிர்த்து, மனிதர்கள் என்று நினைப்பது அவசியம் என்பது. நல்ல காரணங்களாலும் கெட்ட காரணங்களாலும் நற்செயல்களையும் தீச்செயல்களையும் செய்கின்றனர் மனிதர்கள். கெட்ட காரியம் செய்பவர்கள், தீயன செய்வது அவர்கள் கெட்டவர்களாய் இருப்பதாலல்ல, அவர்களுக்கு அந்தத் தீச்செயல் நியாயமானதாகத் தெரிந்த காரணத்தால்- ஏன், அந்த சமயம் அது நன்மையாகக்கூட தெரிந்திருக்கலாம்.
அறம் சார்புத்தன்மை கொண்டது என்பதை ஆதரிப்பதாகவோ அக்கறையின்மையை ஆதரிப்பதாகவோ இதைப் பொருள்கொள்ளக் கூடாது. பாபம் பாபம்தான். தீச்செயல் தீச்செயல்தான். வரலாற்றை அவல உணர்வோடு அறிதல் என்பது அதன் தீமைகளைக் கண்டுகொள்ளாதிருப்பது என்பதல்ல, அனைவரும் அடிப்படையில் நல்லவர்களே என்பதுபோல் பார்க்க விரும்புவதல்ல. மாறாய், கடந்த காலத்தை இரக்கத்தோடும் அச்சத்தோடும் எதிர்கொள்வதாகும்.
பார்வையாளர்கள் உள்ளத்தில் துன்பியல் நாடகங்கள் தருவிக்க வேண்டிய உணர்ச்சிகள் பரிதாப உணர்வும் அச்ச உணர்வுமே என்று பண்டைய கிரேக்கர்கள் கூறுகின்றனர். வியர்ஸ்ப்ரூக் தண்டனைகளைப் போன்ற நிகழ்வுகளை வாசிக்கும்போது, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் குறித்து பரிதாபம், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இரக்கம், நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு எளிதாக இப்படிப்பட்ட வெறுப்பும் வன்முறையும் கூடிய ஒரு சுழலுள் இழுத்துச் செல்லப்பட முடிகிறது என்ற அச்சத்தை அவல உணர்வு தோற்றுவிக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் சிக்கிக்கொண்ட எவர் சார்பிலும் சமாதானம் சொல்லாமல் இரு தரப்பினருடனும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள அவல உணர்வு கொண்டிருத்தல் நம்மை அனுமதிக்கிறது. ஒரு தரப்பை நல்லதாகவும் தமக்குரியவர்களாகவும் மறு தரப்பை தீயதாகவும் மாற்றாராகவும் பார்க்காமல் இருதரப்பினரையும் மனிதர்களாக அணுக அவல உணர்வு நம்மை அனுமதிக்கிறது.அனைவரையும் நம் அடிப்படை இயல்பைப் பகிர்ந்துகொள்ளும் உயிர்களாய் அணுக அவல உணர்வு நம்மை அனுமதிக்கிறது.
நன்றி- http://darwincatholic.blogspot.in/2014/09/a-tragic-sense-of-history.html