சிண்ட்ரெல்லா கொலைவழக்கு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

Cinderella

இன்னும் பத்து நிமிஷத்தில் சில்க்போர்டு பாலம் வந்துவிடும். இந்த நடுஜாமத்தில் மடிவாலா பக்கம் ஏதாவது டீக்கடை திறந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் போது வண்டியோட்டிக் கொண்டிருந்த கம்பார் மைக்கை திருப்புகிறார். சற்று கரகர பின்னணியில் ஒரு குரல் ‘கமின்…. கமின்… கண்ட்ரோல் ரூம் கமின்…. ஹொய்சளா பேட்ரோல் செவண்டீன் ரிப்போர்ட்டிங்… இல்லி கொலை ஆரிட்டிட்டு. காரு உளகே ஒந்து லேடி டெத்…’ என்று செய்தி சொல்கிறது. ஏதோ சாலைவிபத்து பற்றி தகவல் என்று நினைத்தால் கொலை என்ற வார்த்தை, காரில் உள்ள எல்லோரையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. உங்களுடைய அடுத்த ஒரு மணி நேர அனுபவங்களும், இன்னும் மூன்று மாதத்திற்காகவது ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று மீடியாக்களில் அதகளபடப்போகிறது பாருங்கள்.

பின் சீட்டில் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஏடிஜிபி ராகவேந்திரா முல்குந்த் இன்னும் நான்கு வருடங்களில் சிட்டி கமிஷனராக ஆகிவிடுவார். அவருக்கு தொந்தரவு வேண்டாமே என்று கம்பார் அவசரமாக மைக்கை அணைக்க போக, முழுவதுமாக விழித்துக்கொண்ட ஏடிஜிபி அவர் தோளைத் தொட்டு, அணைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்கில் வந்த செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்.

பன்னர்கட்டா ரோடில், மீனாட்சி கோவில் பக்கம் அநாமத்தாக சாலையோரத்தில் கார் ஒன்று நிற்கிறதாம். காரை ஓட்டி வந்த பெண், டிரைவர் சீட்டில் இறந்து கிடக்கிறாராம். வழிப்பறிக் கொள்ளையோடு கொலையாக இருக்கலாம் என்கிறார். மைக்கில் பேசுபவரின் மொழி ஹூப்ளி வட்டாரவழக்கு போல் உங்களுக்கு தெரிகிறது. போலிஸ் வேலை என்று வந்துவிட்டால் எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஆனால் ரொம்பவும் மெனக்கெடாதீர்கள். இந்தக்கதையின் முக்கியமான துப்பு துலக்கப் போகும் பாத்திரம் என்றாலும், நீங்கள் யூனிஃபார்ம் போலிஸ் இல்லை. ஏடிஜிபி ஆபிஸ் கிளார்க்தான். ஏடிஜிபியோடு கேம்ப் போய்விட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

காரின் எண் மற்றும் மாடல், பற்றிய விவரங்களை சொன்னதுமே ஏடிஜிபி உஷாராகிக் கொள்கிறார். கோணப்ப அக்ரஹாரா தாண்டி ரிங்ரோடு வழியாக பன்னர்கட்டா ரோட்டுக்கு வண்டியை விடச் சொல்கிறார். இது போன்ற ஒற்றை இலக்க லைசன்ஸ் பிளேட்கள் எல்லாம் பெரிய இடத்துக்காரர்களிடம்தான் இருக்கும். ஏற்கெனவே பெங்களூருவில் வரவர பெண்களுக்கு பாதுகாப்பு சரியில்லை என்று எல்லா பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு விளாசித் தள்ளுகிறார்கள்.

மீனாட்சி கோவில் ஸ்டாப்பிற்கு முன்னே இடதுபக்கம் திரும்பி உள்ளே கொஞ்சம் சென்றதும், ஹொய்சளா வேன் ஒன்று, கொண்டையில் விளக்குகள் சுழல நின்றுகொண்டிருக்கிறது. கம்பார் காரை நிறுத்துமுன்னர், முன் சீட்டில் தொத்தினாற்போல் அமர்ந்திருந்த சீனுவாசன், கதவைத்திறந்து குதித்து பேட்ரோல் வேன் நோக்கி ஓடுகிறார். ஏடிஜிபி வருகிறார் இல்லையா. முன்னெச்சரிக்கை செய்ய வேண்டாமா. ஏடிஜிபி இறங்கி முன்னே போவதற்குள் ஹொய்சளா வேனிலிருந்த சப் -இன்ஸ்பெக்டர் விரைப்பாக முன்வந்து சல்யூட் வைக்கிறார்.

‘எஸ்ஐ பிரமோத் ரிப்போர்ட்டிங் சார். இப்பதான் ஆம்புலன்ஸ் வந்திட்டிருக்குன்னு சொன்னாங்க சார்…’

அவர் முடிக்கும் முன்னரே, ஏடிஜிபி ‘ஐடெண்டிஃபிகேஷன் ஏதாவது கிடச்சதா… வண்டி பத்தி டீடெய்லஸ் ஏதாவது? கண்ட்ரோல் ரூம்ல என்ன சொல்றாங்க’ என்கிறார் பரபரப்பாக.

சம்பவ இடத்திலிருக்கும் எஸ்ஐ மிகவும் இளமையானவர். அதனால் துடியானவராகவும் தெரிகிறார். மடமடவென தன்னுடைய ரிப்போர்ட்டை கொட்டுகிறார். கடந்த அரைமணிநேரமாக அந்தப் பகுதியில் செம மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. கிரைம் சீனை சரியாக அனுமானிக்க முடியாதபடி பெரும் பின்னடைவு. ஆனாலும் பிரமோத் திறமையாக பல விஷயங்களை சேகரித்திருக்கிறார். முன்னர் மைக்கில் வந்த அதே ஹூப்ளி வட்டாரவழக்கில் சொல்கிறார்.

‘கார் நெம்பர் போட்டு பெங்களூர் ட்ரான்ஸ்போர்டேஷன் சைட்டில் தேடினேன் சார். யஷ்வந்த்பூர் பக்கம் அட்ரஸ் இருக்கு. பேரு ஸ்டான்லின்னு ரெஜிஸ்தர்ல இருக்கு. அப்புறம் விஐபிங்க லிஸ்ட்ல போட்டுப் பாத்தா, ஏர்போர்ட் ரோடுல ஃபீனிஸ் பப் இருக்குல்ல. அதோட ஓனர் வண்டி சார். உள்ள டெத் ஆகியிருக்கறது அவங்க சம்சாரம்னு நினைக்கிறேன் சார். எம்ஜி ரோட்டில் பார்ட்டிக்கு வந்திருக்காங்க. உள்ள பார்ட்டி முகமூடில்லாம் கெடக்கு. வேலட் பார்க்கிங் டோக்கன் வச்சு ஹோட்டலுக்கு ஃபோன் போட்டு பேசிட்டேன். அம்ருதா ஸ்டான்லின்னு பார்ட்டி லிஸ்ட்ல பேரு இருக்கு. இந்நேரத்துக்கும் பார்ட்டி ஓடிட்டிருக்காம் சார். ஏதோ ஹாலோவின்னு எல்லாரும் மாறுவேஷத்தில் வர்ற பார்ட்டியாம். மேடம்கூட சிண்ட்ரெல்லா மாதிரி ஏதோ டிரஸ்லதான் வந்திருக்காங்க. காரை யாரோ வழிமறிச்சு நிறுத்தி அட்டாக் பண்ணியிருக்காங்க. ராப்பரியான்னு கன்ஃபர்ம் பண்ண முடியல. ஆனா கார்ல ஒண்ணுவிடாம எல்லாத்தையும் தொடச்சு எடுத்துட்டு போயிருக்காங்க. டயர் மார்க்ஸ் எதுவும் காணோம். வீடு, ஓட்டல்னு எல்லாத்திலும் தகவல் சொல்ல சொல்லி கண்ட்ரோல் ரூம்ல சொல்லிட்டேன் சார்’

மூச்சு எடுத்துக் கொள்கிறார். ஏடிஜிபிக்கு சற்று அசௌகரியமாக இருக்கிறது. ஸ்டேன்லி பப் ஓனர் என்றால் பெரிய இடம்தான். பெங்களூருவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய, சீமான்களில் ஒருவர் அவர். அவருடைய மனைவி எங்கே இப்படி பன்னர்கட்டா ரோட்டில் அர்த்தராத்திரியில் வந்து செத்து தொலைத்தார்? சப் இன்ஸ்பெகடர் பிரமோத்தான் ‘சிண்ட்ரெல்லா டிரஸ்’ பிரயோகத்தை முதன்முதலாக பயன்படுத்தியது. மீடியாக்கள் எல்லாம் ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று கவர்ச்சியாக தலைப்பு வைத்து ரிப்போர்ட்டிங் செய்ய காரணமாகிறார். ‘பன்னர்கட்டா ரோட்டில் பலி. சின்ட்ரெல்லா உடையில் போன சீமாட்டி கொலை’ என்பதெல்லாம் கூட பத்திரிகை செய்திகள் தலைப்புகள்தாம்.

அது ஒரு சிவப்புக்கலர் ஹுண்டாய் அக்செண்ட் வண்டி. அங்கே அநாமத்தாக நிற்கிறது. ஏடிஜிபி காருக்கு அருகே சென்று பார்க்கிறார். உடன் ஹொய்சளா குழுவிலிருந்து ஒருவர் பெரிய டார்ச்சை எடுத்து ஒளியைப் பாய்ச்ச, கிரைம் சீனை நீங்களும் ‘முதல் கை’யாக பார்க்கிறீர்கள். இதுவரை சிண்ட்ரெல்லா, அம்ருதா, மேடம் என்றெல்லாம் விளிக்கப்பட்டவர் சர்வ நிச்சயமாக செத்துப் போய் ஸ்டீரிங் வீல் மீது கவிழ்ந்திருக்கிறார். பிரமோத் சொன்னது போல பார்ட்டி உடைதான். பக்கத்து சீட்டில் நீல வண்ணத்து முகமூடி கிடக்கிறது. காலுக்கு கீழே ஒற்றை செருப்பு கிடக்கிறது. பிரமோத் ஏன் சிண்ட்ரெல்லா என்று சொன்னார் என்று செருப்பைப் பார்த்தால் உங்களுக்கு புரிகிறது. நல்ல கண்ணாடியில் செய்தது போல ட்ரான்ஸ்பெரண்ட் வெள்ளை நிறத்தில், வெகு அலங்காரமான செருப்பு. ஒரே ஒரு செருப்பு மட்டும் தனியாக கிடக்கிறது.

பிரமோத் விடாமல் ‘செக்போஸ்ட்ங்க எல்லாம் அலர்ட் பண்ண சொல்லிட்டேன் சார். ஸ்ட்ரீட் ராபரி குரூப்னு சந்தேகப்படற லிஸ்ட்ன்னு பாத்தா…’ மிகத் திறமையாக, இணையத்தை கையாண்டு பல தகவல்களையும் விரைவாக பெற்று விடுகிறார் எனத் தெரிகிறது. அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு ஏடிஜிபிக்கு சந்தோஷம் அளிக்கிறது இதற்குள் காரிலிருந்து இறங்கிய கம்பார் கழுத்து மஃப்ளரை இறுக்கிக் கொண்டு நடந்து வருகிறார். வயசுகாலத்தில் கொஞ்சகாலம் கிரைம் பிராஞ்சில் இருந்தவர்தான் கம்பார். மருத்துவ காரணங்களுக்காக இப்போது ஏடிஜிபி கேம்ப் ஆபிசிற்கு வந்துவிட்டார்.

‘இதென்னமோ ஹலோவீன் பார்ட்டின்னு இப்பல்லாம் ஓவரா அலட்டிக்கிறாங்க சார். என்னா வழக்கமோ. அதென்னாத்துக்கு இந்நேரம் வரை ஒருத்தருக்கொருத்தர் ஹலோ ஹலோ-ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்களா’ சூழ்நிலையை இலகுவாக்கும் அவருடைய கமெண்ட் அங்கிருப்பவரிடையே புன்னகையை வரவழைக்கிறது.

பல்லுக்கு உதட்டுக்கும் நடுவே பொதிந்து வைக்கப்பட்ட ஃப்ரெஷ்ஷான ‘தம்’ பாக்கை உறிஞ்சிக்கொண்டே ‘இது ராபரியா இருக்காது சார். மெயின்ரோட்டு விட்டு இவ்ளோ ஒதுக்குபுறமா வழிபறி பண்ண எவன் வருவான்’ என்கிறார் கம்பார். பிரமோத் சட்டென கம்பாரின் ரேங்கை கவனிக்கிறார். அனுபவத்தின் சாயல் அவருடைய பேச்சில் அழுத்தத்தை கூட்டிக் காண்பிக்கிறது. ஏடிஜிபி கம்பாரின் பதிலை எதிர்நோக்கும் விதத்தைப் பார்த்ததும் பரமசிவன் கழுதது பாம்பை பார்ப்பது போல பிரமோத்தும் கம்பாரை மரியாதையுடன் நோக்குகிறார்.

கம்பார், அதே நிதானத்துடன் நடந்து அம்ருதா இறந்து கிடக்கும் காருக்கு அருகே வருகிறார். ஹொய்சளா வேன் கான்ஸ்டபிளின் கையிலிருந்த டார்ச்சை வாங்கி உள்ளே நன்றாக மீண்டும் அடித்துப் பார்க்கிறார். ஸ்டீரிங் வீல் மேல் கவிழ்ந்திருந்த பிணத்தின் (இனி அப்படித்தான் அதை அழைக்க வேண்டும்) தலையைப் பற்றி தூக்கி பார்க்கிறார். லேட்டக்ஸ் கிளவுஸெல்லாம் அணிந்து கொண்டு கைரேகை படாமல் ஜாக்கிரதையாக செய்வார் என்றெல்லாம் நீங்கள் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம்தான். காருக்குள் இன்னொரு முறை சுற்றிப் பார்த்தவர், டார்ச்சை திருப்பி கொடுத்துவிட்டு ஏடிஜிபியிடம் சொல்கிறார்.

‘கார் மோதி நிக்கல. சுத்தி பாடில ஏதும் அடி கிடி படல. மேடம் மேலயும் அசால்ட் ஆன மாதிரி தெரில. மூக்கு நுனில பவுடர் தெரியுது. ஓவர் டோஸ் ட்ரக் சார். அதான் டெத் ரீசனா இருக்கனும். தனியே காரோட்டிட்டு வந்த மாதிரி தெரியல. கால்ல ஒத்த செருப்புதான் கிடக்கு. கார்ல ஏறும்போதோ இறங்கும்போதோ செருப்பு கழண்டு போயிருக்கலாம். காரோட்டறவரா இருந்தா ஒத்தக்கால் செருப்பை வச்சுகிட்டு காரோட்டறது கஷ்டம். செருப்பு பின்னாடி சீட்டுக்கிட்டயோ பக்கத்து சீட்லயோ இருந்திருக்கனும். ட்ரக் டோஸையும், பாடி பொசிஷனையும் வச்சுப் பாத்தா செத்ததும் பக்கத்து சீட்லேந்து, டிரைவர் சீட்டுக்கு மாத்திப் போட்டிருக்காங்க. ராபரின்னா கார்ல விலைமதிப்பான பொருளுங்க மட்டும்தான் எடுத்திட்டு போயிருப்பாங்க. தொடச்சுப் போட்டாப்ல எல்லா சாமானையும் தூக்கிட்டு ஓடிருக்காங்க. ராபரி மாதிரி செட்டப் பண்றதுக்கு ட்ரை பண்ணியிருக்காங்க. எல்லாத்துக்கும் மேல….’ கொஞ்சம் இடைவெளிவிட்டு நிறுத்துகிறார்.

ஏடிஜிபி கூர்ந்து கவனிக்க கூடியிருந்த கூட்டமும் அவர் வழியை பின்பற்றி கம்பாரையே கவனிக்கிறது.

‘ஓடோ மீட்டரில் ட்ரிப் ரீடிங் என்ன இருக்குன்னு பாத்தேன். இருவது கிமி ரீடிங் காட்டுது. யெஷ்வந்த் பூரிலிருந்து கிளம்பி எம்ஜி ரோடு வந்து இங்க வந்திருந்தா முப்பத்தஞ்சுக்கு குறையாம காட்டனும்.’ சொல்லிவிட்டு யாரும் எதுவும் குறுக்கே கேட்கப் போகிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். நடுவில் எங்காவது ட்ரிப் ரீடிங் ரீசெட் பண்ணியிருந்தால் என்னாவது என்று உங்களுக்கு கேள்வி எழுகிற்து. அதை இப்போது கேட்கலாமா, இல்லை நாளையிலிருந்து இந்தக் கேசை எடுத்து நடத்தப்போகும் மைகோ லேஅவுட் போலிஸ் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொள்ளட்டுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். கம்பார் தொடர்கிறார்.

‘முன்னாடி ட்ரிப் ரீடிங்னு பாத்தா ஒண்ணும் தனியா செட் பண்ணா மாதிரி தெரில. இதுவரை கார் ஓடிருக்கிற டிஸ்டென்ஸ்தான் காட்டுது. இப்ப ரீசண்டா காரை எடுத்திருக்கிற யாரோதான் ட்ரிப் மீட்டர் செட் பண்ணி அதுவும் 20 கிலோமீட்டருக்கு முன்னாடிதான் செட் பண்ணியிருக்காங்க. வின்ஷீல்ட் உள்ளாற சர்வீஸ் ஸ்டிக்கரோட கீழ இன்னொரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கு பாருங்க. SGACன்னு போட்டிருக்கு. ஏதோ கார் விக்கற கம்பெனி மாதிரி தெரியுது. அங்கதான் ஓடோமீட்டர் ரீடிங்லாம் குறிச்சு வச்சுகிட்டு, ட்ரையல் போறதுக்கு ட்ரிப் ரீடிங் செட் பண்ணுவாங்க’ மஃப்ளரை நன்றாக இழுத்து விட்டுக் கொள்கிறார்.

ஏடிஜிபி முன்னால் கம்பார் சொல்வது எதையும் ஒதுக்கிவிட முடியாது என்று உணர்ந்து கொண்ட பிரமோத், உடனே வேனுக்கு சென்று ஸ்மார்ட் ஃபோனில் பழைய கார்களை வாங்கி விற்கும் கம்பெனிகளைப் பற்றி தேடத் தொடங்குகிறார். அதற்குள் ஏடிஜிபி குழுவிற்கு ஃப்ளாஸ்க்கிலிருந்து டீ கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பேப்பர் கப்பை சுழற்றி, டீயை ஆறவைத்து குடித்துக் கொண்டிருந்த ஏடிஜிபி கம்பாரிடம் அவருடைய தியரியை விரிவாக சொல்லும்படி கேட்கிறார்.

‘காருக்குள்ள கிடக்கற லேடி ஒத்த ஆளா வந்திருக்க சான்ஸில்ல சார். கூட யாரோடவோ, இல்ல குரூப்பா வந்திருக்கனும். அந்த ஆளப் புடிச்சிட்டா கேஸை ஈசியா முடிச்சிடலாம் சார். இங்க பக்கத்துல ஏதாச்சும் ரேவ் பார்ட்டின்னு வந்திருக்கலாம். இப்பதான் எங்க பாத்தாலும் சின்னப்பசங்க ஒண்ணு சேந்தா டிரக் மானாவாரியா ஓடுதே’ என்கிறார்.

டீ குடித்து முடிப்பதற்குள் பிரமோத் வந்துவிடுகிறார்.

‘கோரமங்களாவில் ஒரு கார் கம்பெனி இருக்கு சார். சோமசேகர கவுடா ஆட்டோ கார்னு. போன் நம்பர் கிடச்சிட்டுது. ரெட்டி ஃபோனல் ட்ரை பண்ணிட்டிருக்கார்’

‘இந்தமாதிரி வண்டி அவங்ககிட்ட விக்கிறதுக்கு இருக்கான்னு மொதல்ல கேளுங்க. உஷாராயிட்டா ஒழுங்கா பேசமாட்டானுங்க’ என்கிறார் கம்பார்.

சோமண்ணா பெயரைக் கேட்டவுடன் கேஸ் சிக்கலாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறீர்கள். ஏடிஜிபி அசௌகரியமாக திரும்புவதைப் பார்த்தால் அவரும் உங்களைப்போலதான் நினைக்கிறார் என்று புரிகிறது. பசந்த் நகர் பெட்ரோல் பங்க் டெண்டர் மேட்டரில்தான் அரசியல் வட்டாரத்தில் சோமண்ணா என்ற பெயர் பிரபலமாக ஆரம்பித்தது. பத்து வருடத்தில் அசுர வளர்ச்சி. கர்நாடகா பேட்மிண்டன் கிளப்பில் மாலை வேளையில் நடக்கும் அரசியல்கட்சிகளின் மந்திராலோசனையில் அடிக்கடி ‘சோமண்ணா எல்லீ சுவாமி’ என்று சகலரும் தேடுவார்கள். கட்சி கடந்த செல்வாக்கு மனிதருக்கு. நாலாம் நபருக்கு தெரியாமல் ’நறுக்’ என சுத்தமாக வேலையை முடிப்பது அவர் ஸ்பெஷாலிட்டி. இந்தக் கேஸ் வழிபறி திருட்டிலிருந்து வேறெங்கோ நகர்கிறது என்று எண்ணுகிறீர்கள்..

இப்போது ரெட்டி தனக்கு கிடைத்த தகவலை சொல்கிறார்.

‘அன்வர்னு ஒர்த்தன்தான் பேசுனான். அவந்தான் அங்க ஆல்-இன்-ஆல் இன்சார்ஜாம். நைட் வாட்ச்மென் உட்பட. சார் சொன்னது போல (கம்பார் பக்கம் மரியாதையுடன் கையைக் காட்டி) கேட்டதுக்கு, இதே வண்டி, இதே லைசன்ஸ் நம்பர் அவங்கதான் விக்கிறதுக்கு வச்சிருக்காங்களாம். அவங்க ஓனர் நவீன்தான் அந்த வண்டிய இன்னிக்கு எடுத்திட்டுப் போனார்னு சொன்னான்’ என்கிறார்.

அடுத்தடுத்த நாட்களில் அன்வரின் முழு வாக்குமூலத்தையும் பேப்பர்களில் நியூஸாக நீங்கள் படிக்கத்தான் போகிறீர்கள். கேஸ் கோர்ட்டுக்கு போகும்போது அதில் நிறைய இடத்தில் அன்வரின் சாட்சியம் ஹியர்சே என்ற அடிப்படையில் ஸ்ட்ராங்காக நிற்காமல் போய்விடத்தான் போகிறது. அதைப் பற்றி இப்போது கவலையில்லை. ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெயர் கிடைத்தால் போதுமே.

அன்வரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பின்னாளில் பேப்பர்கள் இப்படி செய்தியை வெளியிடப்போகின்றன. சென்ற திங்கள்கிழமைதான் அம்ருதா, கோரமங்களா சென்று நவீனை அந்த கார் கம்பெனியில் பின்மாலை நேரத்தில் சந்தித்திருக்கிறாள். எப்போதும் கஸ்டமர்களின் வண்டியை செக் செய்து பார்ப்பது அன்வர்தான் என்றாலும் அன்று நவீனே அம்ருதாவின் காரை செக் செய்திருக்கிறான். அதுவும் அம்ருதாவுடன் சேர்ந்து டிரையல் என்று இரண்டு மூன்று ரவுண்டுகள் போய்வந்திருக்கிறார்கள். அங்கிருந்த வேறு சில கார்களையும் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். வெகுநேரம் நவீனின் அலுவலக அறையில் அவர்கள் தனிமையில் இருந்திருக்கிறார்கள். கூல்ட்ரிங் கொண்டுபோய் கொடுக்கும்போது வெள்ளிக்கிழமை ஹலோவீன் பார்ட்டி பற்றி அவள் விவரிப்பதை அன்வரும் கேட்டிருந்திருக்கிறான். அடுத்து, வெள்ளிக்கிழமை அதே காரை எடுத்துக் கொண்டுதான் நவீன் வெளியே கிளம்பியிருக்கிறான். அந்த பழைய கார்கள் வரிசையிலிருந்து காரை வெளியே எடுப்பதெல்லாம் அன்வரின் வேலைதான் என்பதால் அவனுடைய கடைசி வாக்கியத்திற்கு மீடியா நிறைய முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள்.

ஏடிஜிபியின் நிம்மதியை இன்னமும் குலைக்கும் வண்ணம் கம்பார் தன்னுடைய அடுத்த கண்டுபிடிப்பை வீசுகிறார்.

‘நவீன்னா பேரு சொன்னான்? அது சோமண்ணாவோட மச்சானாச்சே. அவன் தங்கையை கட்டிக்கொடுத்த ஆளு. நாலு வருசம் முன்னாடி ஏக தடபுடலா பன்சஙக்ரி ராஜேஸ்வரி கல்யாணமண்டபத்தில நடந்திச்சே.’ பிரமோத் ஒரு தொழில்நுட்ப வித்தகர் என்றால், கம்பார் ஒரு தகவல் சுரங்கம்.

ஏடிஜிபி உடனே ஹொய்சளா வேன் மூலமாக கண்ட்ரோல் ரூமைப் பிடித்து நவீனை தேடச்சொல்லி உத்தரவு கொடுக்கிறார். அரைமணி நேரம் முன்புவரை, மர்மநபர்களால் தாக்கப்பட்டு அடையாளம் தெரியாத பெண் பிணமாகக் கிடந்தார் என்றிருந்த செய்தி இப்போது முழு தகவல் பின்னணியுடன் பிரஸ்ஸுக்கு அனுப்பப்பட்டு விடும் என்பதே உங்களுக்கு பெரிய சாதனை என்று தோன்றுகிறது. போலிசாருக்கு தேவையெல்லாம் சந்தேகப்பட ஒரு ஆள். அவனைப் பிடித்துப் போட்டால் அப்புறம் எப்படியும் கேஸ் தானாக முடிவுக்கு வந்துவிடும். இதில் பெரிய இடத்துப் பின்னணி இருப்பதால் அவர்களின் இழுப்பு எந்தமாதிரியெல்லாம் போகும் என்பதெல்லாம் ஓரளவுக்கு அனுமானிக்கக் கூடியதுதான்.

அடுத்தடுத்த நாட்களில் பத்திரிகைகள் எல்லாம் நவீனுக்கும் அம்ருதாவிற்கும் எப்படியெல்லாம் பழக்கம் ஏற்பட்டது என்பதை பல்வேறு பார்வையில் உளப்பகுப்பாய்வு செய்து தீட்டி விடப்போகிறார்கள். சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் உயிரோடு இல்லாமல் போனது அவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அம்ருதாவை பார்த்த முதல் கணத்தில் நவீன் என்ன நினைத்தான். அடுத்தடுத்து அவர்கள் உரையாடல்கள் எப்படியெல்லாம் போனது. பிறகு வந்த நாட்களில் அவர்கள் எப்படி எல்லாம் தொடர்பு கொண்டார்கள். சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை மாலை என்ன பேசிக்கொண்டார்கள். அவள் தன்னை சிண்ட்ரெல்லாவாக உருவகித்துக் கொண்ட போது, அவளைக் காப்பாற்றப்போகும் இளவரசனாக நவீன் போனானா? அங்கிருந்து எதற்கு பன்னர்கட்டா ரோட்டிற்குப் போனார்கள். இவ்வளவையும் பெரிய காவியமாகவே எழுதி தீர்த்துவிடப்போகிறார்கள்.

ஓரளவுக்கு திருப்தியுற்ற ஏடிஜிபி காருக்கு திரும்பலாம் என்று சைகை செய்தபடி கிளம்புகிறார். சோமசேகர் கவுடா, அவர் மச்சான் நவீன், ஸ்டேன்லி பப் முதலாளியின் மனைவி, போதைப்பொருள் என்று பெரிய தலைகள் சம்பந்தப்பட்ட சிக்கலாக இருப்பதை மனதில் அசைபோட்டபடியே, ‘யார் குற்றவாளியானாலும் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுக்கனும்’ என்கிறார். ஆனால் வீட்டிற்குப் போய் இரண்டு ரவுண்டுகள் சோடா கலக்காத ரம் சாப்பிட்டபிறகுதான் இதன் முழு பரிமாணமும் தெரியும் என்று அவர் உள்மனது சொல்வது, உங்களுக்கு புரிகிறது.

நீங்கள் நினைப்பது போலவே நவீனை உடனே அரெஸ்ட் செய்வது பிரச்னையாக இல்லை. மறுநாள் மதியமே அவன் வீட்டில் வைத்து போலிஸ் பிடித்து விடுவார்கள். ஆனால், அவனுக்கும் அம்ருதாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஓரேயடியாக மறுத்துவிடுவான். அன்வர் சொன்னது போல வெள்ளிக்கிழமை காரில் வீட்டுக்கு கிளம்பியது உண்மைதான். சனிக்கிழமை காலை காரின் ஃபில்டர்களை மாற்ற ஒர்க்‌ஷாப்புக்கு கொண்டு போவதற்காக அவன் திட்டமிட்டிருந்தானாம். அப்போ அந்தக் கார் எப்படி பன்னர்கட்டா ரோட்டிற்கு வந்தது? தெரியவே தெரியாது என்று அடித்து சொல்லிவிடுவான். ஆனால், போலிசுக்கு அதைப் பற்றி அதிக கவலை இல்லை. சர்க்கம்ஸ்டான்ஷியல் என்று போட்டு கஸ்டடி எடுத்துக் கொண்டு நன்றாக ‘கவனித்து’க் கொள்ளலாம் என்று தீர்மானித்துக்கொள்வார்கள். எல்லாம் மாமூலான நடைமுறைதான்.

வழிபறியாக இருக்கலாம் என்று தொடங்கிய கேஸ், போதை பழக்கத்தால் மரணம் என்று முடிந்துவிடும் என்று பார்த்தால், இப்போது சோமண்ணாவின் மச்சான் சீனுக்குள் வந்துவிட்டதால் எந்த திசையில் செல்லும் என்றே உங்களுக்கு புரியவில்லை.

இப்பொழுது இந்த கிரைம்சீனின் அதிமுக்கியமான கட்டத்திற்கு வருகிறோம். நீங்கள் யார் எவர், ஆணா பெண்ணா, வயது முதிர்ந்தவரா இளையவரா நான் அறியேன். உங்களுக்கிருக்கும் ஆயிரம் ஜோலிகளிடையே இந்த கதைக்காக அர்த்தஜாமத்தில் ஏடிஜிபியுடன் காரில் வந்து போலிஸ் துப்பு துலக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கேசின் முக்கியமான சந்தேகம் ஒன்றைப் பற்றி கேள்வி எழுப்பும் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறேன்.

‘ஒரு சின்ன விஷயம்’ என்கிறீர்கள்.

காருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஏடிஜிபி நின்று பார்க்கிறார். ஒருவருக்கொருவர் புன்னகைத்தபடி அதிகம் பட்டுக்கொள்ளாமல் விடைபெற்று அவரவர் இடத்திற்க்கு திரும்பிக் கொண்டிருக்கும் பிரமோத்தும் கம்பாரும் நின்று திரும்பிப் பார்க்கின்றார்கள்.

‘அந்த செருப்பு, காரில் கிடக்கிறதே…. அது யாருடையதுன்னு கண்டுபிடிக்க வேண்டாமா?’ என்கிறீர்கள்.

இதுவரை ஏதும் பேசாமலிருந்த சீனுவாசன், நீங்கள் கேள்வி எழுப்பியதால் சீண்டப்பட்டவராக ‘ஏன்? நவீன் காஸ்ட்யூம் பார்ட்டிக்கு லேடிஸ் செருப்பு போட்டுட்டு வந்திட்டானோன்னு டவுட்டா இருக்கா?’ என்கிறார். இதென்ன அபத்தமான கேள்வி என்பது போல உங்களைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள்.

‘கம்பார் சொல்றது போல, கார்ல ஏறும்போதோ, இறங்கும்போதோ ஒத்தசெருப்பு மட்டும் இடறி கழண்டு விழுந்திருக்கலாம். ஆனால் அந்த செருப்பு செத்துக் கிடக்கிற அம்ருதாவோடதுதான்னு உறுதிபடுத்திக்க வேணாமா’ என்கிறீர்கள்.

ஏடிஜிபி சற்று யோசனையோடு நிற்க, கம்பார் அனுபவம் தந்த விவேகத்தால் உங்கள் கேள்வியை புரிந்துகொண்டு ஆமோதிப்பாக தலையை ஆட்டுகிறார். பிரமோத் அவரே போய் அம்ருதா இருந்த காரைத் திறந்து கீழே கிடக்கும் செருப்பை சற்று, ஜாக்கிரதையாக எடுத்து பிணத்தின் காலுக்கருகே கொண்டு சென்று பார்க்கிறார். அப்போதே தெரிந்துவிடுகிறது நிச்சயம் அந்தக் காலைவிட செருப்பு சிறியது.

அங்கிருந்த அமர்ந்தபடியே ‘சார், செருப்பு மிஸ்மேட்ச் ஆவுது. ஒருவேளை காஸ்ட்யூம் வாடகைக்கு எடுத்து சரியான சைஸ்ல செருப்பு கிடைக்கலயோ என்னவோ’ என்கிறார்.

கம்பார் பதிலுக்கு ‘சின்னதா இருக்கா பெருசா இருக்கா’ எனக் கேட்கிறார்.

‘சின்னதா இருக்கு சார். போட முடியாது’ பிரமோத் ஆமோதிப்பாக தலையாட்டுகிறார்.

‘அப்ப கூடவந்த பொண்ணோட செருப்பா இருக்கனும். கூடவந்தது ஒரு பொண்ணோ, இல்ல கூட்டமா வந்தவங்கள்ல ஒரு பொண்ணு இருந்திச்சோ’ என்கிறார் கம்பார்.

நீங்கள் இப்போது எழுப்பிய கேள்விதான் பின்னர், சோமண்ணாவின் தங்கையும், நவீனின் மனைவியுமான சபர்ணாவை கேஸ் வட்டத்திற்குள் கொண்டுவரப்போகிறது. சபர்ணாவும் அம்ருதாவும் வசந்த்நகர் மவுண்ட் கார்மெல் காலேஜில் ஒன்றாக படித்த வரலாறையெல்லாம் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதி வைப்பார்கள். அப்பொழுதே அவர்களுக்கு போதை பழக்கம் இருந்திருக்கிறது என்றும், அதில் நவீன் எப்படி சம்பந்தப்பட்டிருப்பான் என்றும், கார் பிசினெஸ் போர்வையில் போதை கடத்தல் எல்லாம் நடந்திருக்கும் என்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கதைகளை உருவாக்கி பத்திரிகைகளில் பரப்பி விடப்போகிறார்கள்.

பிரமோத்திடம் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிவிட்டு ஏடிஜிபி காரில் ஏறிக் கொள்ள, கம்பார் காரை கிளப்புகிறார். நீங்களும் காரில் ஏறிக்கொள்கிறீர்கள்.

‘நன்ன சிவனே. இந்தக்கால யூத் எப்படில்லாம் ட்ரக்ஸால பாதிக்கப்படறாங்க பாரு. இதுக்கு ஒரு முடிவு கட்டனும்யா’ ஏடிஜிபி வேதனையோடு சொல்கிறார். அவர் உளமாறத்தான் சொல்கிறாரா அல்லது வீட்டிற்கு போய் ரம்மோடு ரிலாக்ஸ் ஆனதும் பிராக்டிகலாக மாறிவிடுவாரா என்று யோசிக்கிறீர்கள்.

கம்பார் மெதுவாக ‘ஒரு விஷயம் மட்டும் விசாரிக்கனும் சார். அந்தம்மா பேர்ல ஏற்கெனவே டிரக் அப்யூஸ் கேஸ் எதுவும் போலிஸ் ரிக்கார்ட்ல இருக்குதான்னு. அப்பதான் இன்ஷூரன்ஸ்ல ஆக்சிடெண்டல் ஓவர்டோஸ்ன்னு கிளியரெண்ஸ் கொடுப்பாங்க.’ உங்கள் பக்கம் திரும்பி ‘சோமண்ணாவோட சிஸ்டர் இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டுன்னு அவங்க கல்யாணம் அப்பவே கேள்விப்பட்டிருக்கேன். அந்தம்மா வழியாத்தான் பாலிசி எடுத்திருப்பாங்க. பக்கா பிளானிங்தான். கார் மேட்டர் மட்டும் சொதப்பலைன்னா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வச்சே இன்ஷூரன்ஸ் போட்டு கறந்திருப்பாங்க’ என்கிறார்.

கம்பார் இந்த கொலைக்கான மோட்டிவ் பற்றி சூசகமாக சொன்னதும், அந்த உண்மையின் தாக்கம் உங்கள் மேல் வேகமாக இறங்குகிறது. ஆனால், நீங்கள் எதிர்பார்த்தபடி ஏடிஜிபி வேறெந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் தன்னுடைய சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொள்கிறார். கேஸைப் பற்றிய முழுத்தெளிவும் அவருக்கு வந்துவிட்டதால் அந்த இளைப்பாறுதல். இனி நடக்கப் போவதெல்லாம் சதுரங்க ஆட்டமும் சம்பிரதாய பேரங்களும்தான் என புரிந்து கொள்கிறீர்கள்.

அடுத்து மூன்றுமாதங்களுக்கு பத்திரிகைகளில் அமளிதுமளிப்படப்போகும் சிண்ட்ரெல்லா கொலைக் கேஸ் அப்புறம் ஆறிப்போய்விடும். ஒருவருடம் கழித்து ஹெப்பால் பக்கம் ரிங்ரோட்டில் நடந்த வேறொரு வழிபறிக்கொள்ளையோடு இந்தக் கேஸையும் சேர்த்து போலிஸில் ஃபைலை மூடிவிடுவார்கள். பத்திரிகை செய்திகளின் பரபரப்பால் ஸ்டான்லியால் இன்ஷூரன்ஸ் கிளெய்மை வெற்றிகரமாக செய்ய முடியாது போய்விடும். சோமண்ணாவின் நுட்ப திட்டம் மட்டும் பசந்த்நகர் பேட்மிண்டன் கிளப்பில் பெரியதாக பேசப்பட்டு வந்தது. நீதி நியாயம் எல்லாம் நடைமுறையில் கிடையாதா… அம்ருதா வஞ்சித்து சாகடிக்கப்பட்டதற்கு யாரும் பொறுப்பில்லையா… என்ற நொந்து போன நெஞ்சங்களில் உங்கள் நெஞ்சமும் சேர்ந்திருக்கும். ஏடிஜிபி ராகவேந்திரா பிறகு பெங்களூர் போலிஸ் கமிஷனராகி பதவியேற்றுக் கொண்டபோது பெங்களூர் புறநகர வழிபறிக் கொள்ளைகளை எல்லாம் குறிப்பிட்டு, அவற்றை வலிமையான கரம் கொண்டு அடக்கப் போவதாக உறுதி கூறுவார்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.