படோல் பாபு – திரை நட்சத்திரம்

சத்யஜித் ரே – (தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

இந்திய சினிமாவின் நூறாண்டு நிறைவை கொண்டாடும் விதமாக தயாரிக்கப்பட்ட ‘பாம்பே டாக்கிஸ்‘ திரைப்படத்தின் ஒரு பகுதியாக, பிரபல இயக்குநர் திபாங்கர் பானர்ஜி இயக்கிய குறும்படத்தின் மூலக் கதை. சத்யஜித் ரே ‘படோல் பாபு, திரைநட்சத்திரம்‘ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். திரையில் பார்க்கும்போது ‘புலிக்கலைஞன்‘ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.


db-star
நிஷிகாந்தா பாபு தெருவிலிருந்து அழைக்கும்போது படோல் பாபு சாமான்கள் நிறைந்த பையை தனது தோளில் மாட்டிக்கொண்டிருந்தார். ‘படோல், இருக்கிறீர்களா?’

‘இதோ, வருகிறேன்.’

நேபாள் பட்டாச்சார்ஜி தெருவில் படோல் பாபுவின் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நிஷிகாந்த கோஷ் குடியிருந்தான். வெகு கலகலப்பான ஆள்.

சாமான்கள் பையுடன் வெளிப்போந்த படோல் பாபு கேட்டார். ‘என்னாச்சு? சீக்கிரமே எழுந்துவிட்டாயா?’

‘கவனி. நீ எப்போது திரும்புவாய்?’

‘இன்னும் ஒரு மணி நேரத்தில். ஏன்?’

‘நீ திரும்பவும் வெளியே போக மாட்டாய் அல்லவா? எப்படியிருந்தாலும் இன்று தாகூரின் பிறந்தநாள் வேறு. நேற்று நான் என் மனைவியின் தம்பியை நேதாஜி மருந்துக்கடையில் சந்தித்தேன். அவன் திரைப்படங்களில் வேலை செய்கிறான் – நடிகர்களை ஏற்பாடு செய்வது. ஒரு திரைப்பட காட்சிக்கு ஆள் தேவை என்று சொன்னான். அவன் வேண்டுவது என்ன தெரியுமா – ஐம்பது வயதான, குள்ள, வழுக்கைத்தலை – போன்றதொரு ஆசாமியை. உடனே உன்னைப்பற்றித்தான் நினைத்தேன். அதனால் அவனிடம் உன்னைப் பற்றி சொன்னேன். உன்னிடம் நேரடியாக பேசும்படி அவனிடம் சொல்லியிருக்கிறேன். இங்கே பத்துமணி வாக்கில் இருப்பேன் என்று சொன்னான். உனக்கொண்ணும் பிரச்னை இல்லையே? அவர்களுடைய கணக்குக்கு ஏற்றப்படி சம்பளம் தந்துவிடுவதாக சொன்னான்…’

அவ்வளவு அதிகாலையில் அப்படியான ஒரு குறிப்பை படோல் பாபு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவரைப்போன்ற சாதாரண ஆசாமிக்கு ஐம்பத்திரெண்டு வயதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்ப்பது கடினம். உண்மையில் நம்பமுடியாதது.

‘சரி. முடிவாகச் சொல். ஆமாமா? இல்லையா? முன்பு எப்போதோ நீ நடித்தவன்தானே?

‘ஆமாம். நான் ஏன் ‘இல்லை’ எனச் சொல்லப்போகிறேன்? அவன் வரட்டும். விவரங்களை தரட்டும். உனது மச்சானின் பெயர் என்னவென்று சொன்னாய்?’

‘நரேஷ். நரேஷ் தத்தா. உயரமாக, நல்ல ஆகிருதியுடன் முப்பது வயது பக்கம் இருப்பான். அவன் பத்துக்கும் பத்தரைக்கும் இடையே வருவதாக சொன்னான்.’

படோல்-பாபு தனது மனைவியின் ஆணைகளை குழப்பிக்கொண்டு கடுகுக்கு பதில் மிளகாயை வாங்கினார். கல் உப்பை முற்றிலும் மறந்துபோனார். அவர் அவ்வளவு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒருகாலத்தில் படோல்-பாபு நடிப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு நாட்டம் கொண்டிருந்தார். அது வெறும் நாட்டமில்லை, ஆனால் பெரும் விருப்பமாக இருந்தது. ஜாத்ரா நிகழ்வுகளில், அமெச்சூர் மேடை நாடகங்கள், பண்டிகைகள், உள்ளூர் மன்ற கொண்டாட்டங்கள் என்று தொடர்ந்து நடித்தார். விளம்பர நோட்டீஸ்களில் படோல் பாபுவின் பெயர் பலமுறை தோன்றியிருக்கிறது. உண்மையில் ஒரு முறை, நோட்டீஸின் கீழே தனித்து, கொட்டை எழுத்துகளில் – பராசரராக சித்தாலகந்த ராய் (படோல் பாபு) என்று போட்டிருந்தது. அவருடைய புகழுக்காக மட்டும் டிக்கெட்டுகள் விற்ற காலம் கூட உண்டு.

எனினும் அப்போது அவர் காஞ்ச்ரபரத்தில், ரயில்வே தொழிற்சாலையில் ஒரு வேலையில் இருந்தார். ஹட்சன் & கிம்பர்லியில் படோல்-பாபுவிற்கு சற்று அதிக-சம்பள வேலையும், நேபாள் பட்டாச்சார்ஜி தெருவில் வீடும் கிடைத்ததால் தன் மனைவியுடன் 1934ல் கல்கத்தாவிற்கு இடம்மாறினார். ஆரம்பத்தில் சில வருடங்கள் சந்தோஷமாக கழிந்தன. அலுவலகத்தில், படோல்-பாபுவின் முதலாளி அவர் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். ஆனால் 1943ல், படோல்-பாபு தன்னுடைய அண்டை அயலில் ஒரு நாடகக்குழுவை அமைக்கும் முயற்சியின் விளிம்பில் இருந்தபோது, அவருடைய போர்-தாக்கிய நிறுவனம் ஆட்குறைப்பை தொடங்க, அவருடைய பாதுகாப்பான வேலை காற்றில் கரைந்து போனது.

அன்றிலிருந்து, பிழைப்புக்கு வழிகள் தேடியே படோல்-பாபுவின் எல்லா நாட்களும் கழிந்தன. அவர் ஒரு பலசரக்குக் கடை வைத்துப் பார்த்தார், ஆனால் ஐந்தாண்டுகளுக்கு மேல் அது தாக்குப்பிடிக்கவில்லை. அப்புறம், ஒரு பெங்காலி நிறுவனத்தில் குமாஸ்தாவாக சிலகாலம் வேலை செய்தார், ஆனால் பெங்காலி ஆங்கிலேயரான மிஸ்டர். மிட்டரின் ஆணவமும், முன்கோப தாக்குதலும் பொறுக்க முடியாமல் ராஜினாமா செய்தார். அதற்கப்புறம் பத்து ஆண்டுகளுக்கு, காப்பீடுகள் விற்பதிலிருந்து படோல்-பாபு முயற்சி செய்யாத வேலைகள் இல்லை.. ஆனால் அவர் எப்போதும் கைக்கு வாய்க்கும் போதாமல் வாழும் பரம ஏழையாகவே இருந்தார். சமீபமாக, ஒரு பழைய இரும்புக்கடையில் நடமாடிக்கொண்டிருந்தார்; அவருடைய பங்காளி ஒருவர் அங்கு ஒரு வேலைக்கு உறுதி அளித்திருந்தார்.

நடிப்பு? அது வேறொரு வாழ்நாளுக்கு உரியதானது போலிருந்தது. மங்கிய நினைவு, எதிர்பாராமல் வெளியேறும் பெருமூச்சு – அவ்வளவுதான். படோல்-பாபுவிற்கு நல்ல நினைவாற்றல் இருந்து வந்ததால், அவருடைய பழைய வேடங்களிலிருந்து கலக்கலான வசனங்களின் துணுக்குகளை அவர் ஞாபகபடுத்திக் கொண்டார். “கேளீர்! அந்த தெய்வீக வில் மீண்டும் உயிர்பெறுகிறது. நேசநாடுகள் போர்க்களத்திற்கு அணிவகுக்கின்றன. கர்ஜிக்கும் காற்றோடு, ஏவுகணை மலையென இடிமுழக்கமிடுகிறது ‘ ஓ! அந்த நினைவே அவரை மயிர்கூச்செரிய வைத்தது.

நரேஷ் தத்தா சரியாக பன்னிரெண்டரைக்கு வந்தான். படோல்-பாபு கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்து, குளிக்க கிளம்பியபோது கதவு தட்டும் ஓசை கேட்டது.

‘உள்ளே வாருங்கள்!’ கதவைத் திறந்த படோல்-பாபு வெளியாளை கிட்டத்தட்ட உள்ளே இழுத்துப் போட்டு, கையுடைந்த நாற்காலியைக் காட்டி ‘தயவுசெய்து அமருங்கள்.’ என்றார்.

‘ஓ, இல்லை. நேரமில்லை. நிஷிகந்தா-பாபு என்னைப் பற்றி சொல்லியிருப்பார்….’

‘ஆம். அவர் சொன்னார். ஆனாலும் நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இவ்வளவு காலம் கழித்து….’

‘உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?’

படோல்-பாபு கூச்சத்தோடு தரையை நோக்கி கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

‘ஆனால்… அஹ்… நான் அப்படி சொல்வேனா?’

படோல்-பாபுவை மேலும் கீழும் தீர்க்கமாக பார்த்த நரேஷ்-பாபு ‘உண்மையில் நீங்கள் சரியாகவே பொருந்துவீர்கள். கவனிங்கள், நாளைக்குத்தான்’

‘நாளைக்கா? ஞாயிற்றுக் கிழமையா?’

‘ஆமாம்… ஆனால் ஸ்டூடியோவில் இல்லை. எங்கு என்று சொல்கிறேன். மிஷன் தெரு மற்றும் பென்டிங்க் தெரு சந்திப்பில் ஃபாரடே வீடு தெரியும் இல்லையா? ஏழு மாடி கட்டிடம். அங்கே எட்டு மணிக்கு வந்துவிடுங்கள். எட்டரைக்காவது. அங்கேதான் படப்பிடிப்பு நடத்துகிறோம். மதியத்திற்குள் உங்களை திருப்பி அனுப்பிவிடுகிறேன்’

நரெஷ்-பாபு புறப்பட்டான். சற்று கவலையுற்ற படோல்-பாபு சொன்னார். ‘நீங்கள் பாத்திரத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே’

‘உங்களது பாத்திரம்…. ஒரு பாதசாரி. வழிபோக்கன். கவனமில்லாத முன்கோபி பாதசாரி. ஆமாம், உங்களிடம் கழுத்துவரை பட்டன்களிட்ட கோட் இருக்கிறதா?’

‘இருக்கு என நினைக்கிறேன்’

‘அதை அணிந்து கொள்ளுங்கள். கருமையான வண்ணம் என நம்புகிறேன்’

‘பழுப்பு. எனினும் கதகதப்பாக இருக்கும்’

‘அது சரி. நமது காட்சி குளிர்காலத்தில் அமைக்கபெற்றது. அது நன்றாகப் பொருந்தும்… காலை எட்டரை மணி. ஃபாரடே வீடு’

மற்றொரு முக்கிய கேள்வி படோல்-பாபுவின் தலையில் உதித்தது.

‘அந்த பாத்திரத்திற்கு வசனம் உண்டு என நினைக்கிறேன். நான் ஏதும் சொல்ல வேண்டியிருக்கும். இல்லையா?’

‘பின்னே! வசனப் பகுதிதான். நீ முன்னர் நடித்திருக்கிறாய், இல்லையா?’

‘ம்ம்ம்… கொஞ்சம்…’

‘அப்ப சரி. சும்மா யாராவது காமிரா முன்னால் கடந்து போக வேண்டும் என்றால் நான் ஏன் உன்னிடம் வரப்போகிறேன்? பாதையோரத்தில் இருந்த யாரையாவது தேர்ந்தெடுத்திருப்பேன். நிச்சயம் வசனம் இருக்கிறது. நாளைக்கு நீ வந்தவுடன் உன்னிடம் கொடுக்கப்படும். சரிதானே அப்ப…’

நரேஷ்-பாபு சென்றதும், படோல்-பாபு தன் மனைவியிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னான்.

‘எனக்குத் தெரிந்தவரை, இதொன்றும் பெரிய பாத்திரமில்லை; சம்பளம் உண்டுதான். ஆனால் அதுவும் முக்கியமில்லை. விஷயம் என்னவென்றால் – மேடையில் என்னுடைய முதல் பாத்திரம் நினைவிருக்கிறதா உனக்கு? செத்துப்போன படைவீரன். கண்களை மூடியபடி, வாயைத் திறந்துக்கொண்டு மேடையில் படுத்துக் கிடக்க வேண்டும். அப்புறம் மற்றதெல்லாம் ஏதோ சொல்வார்களே, அது போல வரலாறு. மிஸ்டர் வாட்ஸ் என்னுடைய கைபற்றி குலுக்கியது நினைவிருக்கிறதா உனக்கு? நமது முனிசிபாலிட்டி சேர்மன் சாரு பிஸ்வாஸிடமிருந்து பதக்கம்? இல்லையா? இது ஏணியின் முதல்படிதான். சரிதானே? பொழைச்சுக் கிடந்தால், பொண்டாட்டியே, மரியாதை, பெயர், புகழ், மதிப்பு அத்தனையையும் ஜெயித்துவிடுவேன்.’

ஐம்பத்திரெண்டு வயது படோல்-பாபு, திடீரென காற்றில் எம்பிக் குதித்தான். ‘நீ என்ன செய்கிறாய் என்று தெரிந்துதான் செய்கிறாயா?’ கேட்டார் அவர் மனைவி.

‘கவலைப்படாதே! எழுபது வயதில் சாணக்கியராக நடித்த ஸிஸிர் பாதுரி எப்படி துள்ளிக் குதிப்பார் என்று நினைவிருக்கிறதா உனக்கு? பால்யம் திரும்பிவிட்டது எனக்கு’

‘நினைப்புதான். நீ ஒன்றுமில்லாதவனாக இருப்பதில் ஆச்சரியமில்லை’

‘விரைவில் ஹீரோ ஆகிவிடுவேன்! நினைவுக்கு வருகிறது – மதியம் ஒரு கப் டீ குடிக்கப்போகிறேன். சரியா? இஞ்சிச்சாறு சேர்த்து… இல்லையென்றால் என் குரல்…’

~~~~~~~~

மறுநாள் காலை, படோல்-பாபு நகர சதுக்கத்தை அடைந்தபோது மெட்ரோபாலிட்டன் கட்டிடத்தின் கடிகாரத்தில் எட்டடித்து ஏழு நிமிடங்கள் ஆகியிருந்தது. மிஷன் தெரு மற்றும் பென்டிங்ட் தெரு சந்திப்பில் இருக்கும் ஃபாரடே வீட்டை அடைய இன்னுமொரு பத்து நிமிடம் ஆனது.

அலுவலகத்தின் கதவுக்கு முன்னால் ஏகப்பட்ட தடபுடல் ஆக இருந்தது. மூன்று நான்கு கார்கள், அதில் ஒன்று மிகப் பெரியது – ஏறத்தாழ ஒரு பேருந்து அளவிலானது – அதன் தலைமேல் ஏகப்பட்ட தளவாடங்கள் இருந்தன. சாலையோரக்கல் மீது மூன்று காலுடைய கருப்பு சாதனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் பலர் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நுழைவாயிலில், மூன்று கால் நிறுத்தம் மேல் இரும்பு கம்பியை குறுக்கே போட்டிருக்க, மேலே தேன்கூடு மாதிரி ஒன்று தொங்கியது. சுமார் முப்பது பேர் பரவியிருக்க, படோல்-பாபு சில வங்காளியர்-அல்லாதரையும் கவனித்தார். ஆனால், அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தார் என்று அவருக்கு தெரியவில்லை.

சரி. நரேஷ்-பாபு எங்கே? படோல்-பாபுவை வேறு யாரையும் தெரியாது.

இருதயம் அதிர, கதவை நோக்கி முன்னேறினார் படோல்-பாபு.

அது மே மாதம்; கழுத்துவரை பொத்தானிட்ட கோட் வெகு கனமாக இருந்தது. படோல் பாபு கழுத்தை சுற்றி வியர்வையை உணர்ந்தார்.

‘இங்கே, அதுல்-பாபு. இந்தவழியில்’

அதுல்-பாபு? படோல்-பாபு திரும்பிப் பார்த்தால், அலுவலகத்தின் தாழ்வாரத்தில் இருந்த தூணின் பக்கத்தில் நின்றபடி நரேஷ்-பாபு அவரை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். அவர் பெயரை குழப்பிக்கொண்டுவிட்டான். ஆச்சரியம் இல்லை. அவர்கள் ஒருமுறைதான் சந்தித்திருந்தனர். வணக்கம் சொன்ன படோல்-பாபு, ‘என் பெயரை சரியாக கவனித்திருக்க மாட்டாய். சித்தலகந்தா ராய். ஆனால் எல்லோருக்கும் நான் படோல்-பாபுதான். அப்படித்தான் என்னை நாடகங்களிலும் அழைத்தனர்’

‘அது சரி. நீங்கள் நேரம் தவறாமல் சரியாக வந்துவிட்டீர்கள் என்று கவனித்தேன்’

படோல்-பாபு புன்னகைத்தார்.

‘ஹட்ஸன்-கிம்பர்லியில் 9 வருடங்கள் – ஒருநாள் கூட தாமதம் செய்ததில்லை. ஒரு நாள் கூட’

‘பிரமாதம். நான் என்ன சொல்கிறேன் என்றால் – அந்த நிழலில் கொஞ்சம் காத்திருக்கிறீர்களா? அதற்குள் நாங்கள் வேலைகளை தொடங்கிவிடுகிறோம்.’

‘நரேஷ்’ அந்த முக்காலி சாதனத்தின் பக்கத்திலிருந்து கூப்பிட்டார்.

‘சார்?’

‘அவர் உன் ஆட்களில் ஒருவரா?’

‘ஆமாம் சார். அவர்தான்… உங்களுக்கு தெரியுமே… அந்த மோதல்….’

‘அப்படியா. சரி. இப்போது இடத்தை காலி செய். ஒரு ஷாட்டுக்கு போகிறோம்’

அலுவலகத்தின் அருகில் இருந்த வெத்திலைபாக்கு கடையின் மறைப்புக்கு கீழே படோல்-பாபு நின்றுகொண்டார். பயாஸ்கோப் படமாக்கப்படுவதை அவர் பார்த்ததேயில்லை. அவருக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. நாடகத்துக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. இவர்கள் எல்லாம் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள். இருபத்தியோரு, இருபத்தியிரெண்டு வயதான இளைஞன் ஒருவன் மிகவும் கனமானதொரு சாதனத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தூக்கிச் சென்றுகொண்டிருந்தான். அது இருபது இருபத்தைந்து கிலோ எடையாவது இருக்க வேண்டும்.

ஆனால், அவருடைய வசனம் எங்கே? அதிகம் நேரமில்லை. ஆனாலும் படோல்-பாபுவிற்கு இன்னமும் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாது.

அவர் சட்டென பதட்டமாக உணர்ந்தார். அவர் அவர்களிடம் போய் கேட்கலாமா? அங்கே நரேஷ்-பாபு இருந்தான்; அவர் அவனிடம் பேச வேண்டாமா? அது சின்ன பாத்திரமோ, பெரிய பாத்திரமோ, அதை சரியாக செய்ய வேண்டுமென்றால் அவர் தயார் செய்துகொள்ள வேண்டும். அத்தனை பேர் முன்னிலையிலும் அவருடைய வசனங்களை குளறுபடி செய்து முட்டாளாகி நின்றால் என்னாவது? இருபது ஆண்டுகளாக அவர் நடிக்கவே இல்லை வேறு.

முன்னேற நினைத்த படோல்-பாபு யாரோ கத்துவதை கேட்டு நின்றார்.

‘சைலன்ஸ்!’

அப்புறம் நரேஷ்-பாபுவின் குரல் கேட்டது ‘இப்போது ஒரு காட்சி படமாக்கப் போகிறோம். எல்லோரும் தயவுசெய்து அமைதியாக இருங்கள். பேசாதீர்கள், நகராதீர்கள், கேமராவை அணுகாதீர்கள்’

இப்போது முதலில் கேட்ட குரல் மீண்டும் கேட்டது. ‘சைலன்ஸ்! டேக்கிங்!’ படோல்-பாபு அவரைப் பார்க்க முடிந்தது. அந்த முக்காலி-சாதனத்திற்கு அருகே சுமாரான குண்டான மனிதர் நின்றுகொண்டிருக்க, அவர் கழுத்து சங்கிலியில் பைனாகுலர் போன்ற ஏதோ தொங்கிக் கொண்டிருந்தது. அவர்தானா இயக்குநர்? என்ன விந்தை, அவர் அந்த இயக்குநரின் பெயர் கூட தெரிந்துகொள்ளவில்லை.

தொடர்ச்சியாக இன்னும் சில கூச்சல்களை கேட்டார் படோல்-பாபு. ‘ஸ்டார்ட் சவுண்ட்! ரன்னிங்! ஆக்‌ஷன்!’

‘ஆக்‌ஷன்’ என்று கூறியதும், கார் ஒன்று வந்து அலுவலகத்தின் முன்னால் நின்றது. சூட்டு அணிந்த ஒரு இளைஞன் முகம் முழுவதும் சாயம் பூசியதுபோலிருக்க, காரிலிருந்து உதிர்ந்து அலுவலக வாயில் வரை நடந்து போய் நின்றான். அடுத்த நொடி, படோல்-பாபு ‘கட்!’ என்ற கூச்சல் கேட்க, உடனே கூட்டம் அமைதியை கிழித்துக் கொண்டு கூட்டம் ஆரவாரித்தது.

‘அந்த ஆளைத் தெரிகிறதா?’ படோல்-பாபுவின் பக்கத்திலிருந்தவர், அவரை நோக்கிக் கேட்டான்.

‘எனக்கு தெரியவில்லையே’ என்றார் படோல்-பாபு.

‘சஞ்சல்குமார்!’ பதிலளித்தான் பக்கத்திலிருந்தவன். ‘உதயமாகும் நட்சத்திரம். ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்’

படோல்-பாபு அபூர்வமாக பயோஸ்கோப்பிற்கு செல்பவர். ஆனால், இந்த சஞ்சல்குமாரின் பெயரை சிலமுறைகள் கேட்ட நினைவு. இந்த இளைஞனைத்தான் அன்று கோடி-பாபு புகழ்ந்து கொண்டிருந்தார். சொல்லப்போனால் அவன் மேக்-அப் நன்றாகவே இருந்தது. அந்த மேற்கத்திய சூட்-உடைக்கு பதிலாக வேட்டி இருந்து, ஒரு மயில் மேல் அவனை உட்கார்த்தி வைத்தால் – கார்த்திகேயன் போலவே கச்சிதமாக இருப்பான். காஞ்ச்ரபரத்தில், சீனு என்கிற மோனோதோஷ் இதே மாதிரிதான் இருப்பான். சீனு பெண் பாத்திரங்களில் பிரமாதமாக இருப்பான்.

மீண்டும் பக்கத்திலிருந்தவன் பக்கம் சாய்ந்து, படோல்-பாபு கிசுகிசுப்பாக கேட்டார்.’அந்த இயக்குநர் பெயர் என்ன?’

‘உங்களுக்கு தெரியாதா?’ ஆச்சரியத்துடன் கேட்டான் அவன். ‘அது பாரன் முல்லிக். – தொடர்ந்து மூன்று வெற்றிகள்”

நல்லவேளை. தேவையான விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டார். இல்லையென்றால்,அவர் மனைவி, யாருடைய படத்தில் யாருடன் நடித்தார் என்று கேட்டால் பிரச்னையாகி இருக்கும்.

நரேஷ் படோல்-பாபுவிற்கு ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தான்.

‘இதோ. இது உங்கள் தொண்டையை சீராக்கும். எந்த நிமிடமும் உங்களைக் கூப்பிடுவோம்’

படோல்-பாபு பொறுக்கமுடியாமல் விஷயத்திற்கு வந்தார்.

‘என்னுடைய வசனத்தை இப்போது நீ கொடுத்தால்….’

‘வசனம்? என்னுடன் வாருங்கள்’

படோல்-பாபு தொடர நரேஷ் அந்த மூன்று-கால்கள் சாதனத்தை நோக்கி நடந்தான்,

‘சசாங்கா!’

அரைக்கை சட்டையுடன் ஓரிளைஞன் அவர்களை அணுகினான். நரேஷ் அவனிடம் ‘இவர் வசனம் பற்றி கேட்கிறார். ஒரு காகிதத்துண்டில் எழுதிக்கொடுக்கிறாயா? அந்த மோதல் விஷயம்…’

‘என்னோடு வாங்க அண்ணே….. ஜோதி உங்க பேனாவை ஒரு நிமிடம் கொடுக்க முடியுமா. அண்ணனுக்கு வசனம் எழுதனும்’

ஜோதி என்றழைக்கப்பட்ட இளைஞன் தன் பையிலிருந்த சிவப்பு பேனாவை சசாங்கனிடம் கொடுக்க, நோட்டுபுத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை கிழித்து, அதில் ஏதோ எழுதிவிட்டு, படோல்-பாபுவிடம் கொடுத்தான்.

அதில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் எழுதியிருப்பதை படோல்-பாபு கண்டான் – ‘ஆ!’.

ஆ?

படோல்-பாபுவிற்கு திடீரென அவர் தலை சுற்றுவது போலிருந்தது அவருக்கு அந்த கோட்டை கழட்ட முடியாதா என்றிருந்தது. உஷ்ணம் தாங்கமுடியவில்லை.

‘அண்ணே, நீங்க தொந்தரவாக உணர்கிறீர்களோ,’ கேட்டான் சசாங்கன். ‘ரொம்ப கடினமோ?’

அவர்கள் அவரை கிண்டல் செய்கிறார்களா? மொத்த விஷயமும் ஏதோ பெரும் பகடியோ? பரபரப்பான நகரத்தின் பரபரப்பானதொரு தெருவில், சாதாரண, பாதகமில்லாதொரு மனிதனை ஏய்க்கப்பார்க்கிறார்களா? இப்படியும் கொடூரமாக மனிதர்கள் இருக்கமுடியுமா?

‘எனக்கு சரியாகப் புரியவில்லை’ தொண்டை வரள படோல்-பாபு சொன்னார்.

‘ஏன் புரியவில்லை?’

‘வெறும் ‘ஆ!’? வேறு வசனங்கள் இல்லையா?’

புருவங்களை உயர்த்தியபடி சசாங்கன் சொன்னான். ‘என்ன சொல்றீங்க அண்ணே? இது ஒன்றுமில்லைன்னு நினைக்கறீங்களா? இது முறையான வசனம் பேசும் பாத்திரம். பாரன் முல்லிக்கின் படத்தில் ஒரு வசனம் பேசும் பாத்திரம் – நம்பமுடிகிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பேன். குறைந்தபட்சம் நூற்றைம்பது பேராவது இந்தப் படத்தில் வசனமில்லாமல் நடித்திருக்கிறார்கள் தெரியுமா? வெறுமனே காமிரா முன்னால் நடந்து போனார்கள். சிலர் நடக்கக் கூட இல்லை. ஓரிடத்தில் வெறுமனே நின்றார்கள். சொல்லப்போனால் அவர்கள் எல்லாருடைய முகமும் தெரியாது. இன்று கூட, அந்த விளக்கு கம்பத்தின் பக்கத்தில் நிற்கும் மக்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாரும் இன்றைய காட்சியில் உண்டு. ஆனால், ஒருவருக்கும் வசனம் கிடையாது. ஏன், நமது கதாநாயகர் சஞ்சல்குமாருக்கே வசனம் கிடையாது. நீங்கள் ஒருவர்தான் பேசுகிறிர்கள்’

இப்போது அந்த ஜோதி என்ற பெயர்கொண்ட இளைஞன் படோல்-பாபுவிடம் வந்து, தோளில் கைபோட்டு சொன்னான். ‘கவனிங்க அண்ணே – நான் விளக்குகிறேன். இந்த அலுவலகத்தில் சஞ்சல்குமார் ஒரு மூத்த மேலாளர். ஒரு திருட்டைப் பற்றிக் கேள்விபட்டதும் அவர் அலுவலகத்திற்கு அவசரமாக வருவதைத்தான் இந்த காட்சியில் காட்டுகிறோம். அப்போதுதான் நீங்கள் அவர் வழியில் குறுக்கே வருகிறீர்கள் – பாதசாரியாக – சரிதானா? அவர் மேல் மோதுகிறீர்கள் – சரிதானா? மோதியதும், நீங்கள் ‘ஆ!’ என்கிறீர்கள். ஆனால் சஞ்சல் உங்கள் மேல் எந்த கவனமும் செலுத்தாமல் அவசரமாக போய்விடுகிறார். உங்களை உதாசீனபடுத்துவது அவருடைய மனநிலையை காட்டுகிறது. சரிதானா? இந்த் மொத்த விஷயங்களும் எவ்வளவு முக்கியமானது என்று உங்களுக்கு தெரிகிறதா?

சசாங்கன் அவரிடம் மீண்டும் வந்தான். ‘இப்ப உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அந்த பக்கமாக காத்திருக்க முடியுமா? இங்கே கூட்டம் கூட்ட வேண்டாம். உங்களை கூப்பிடுவதற்கு முன்னால் இன்னும் சில ஷாட்டுகள் இருக்கிறது’

படோல்-பாபு மீண்டும் வெத்திலைபாக்கு கடை நோக்கி சென்றார். அதன் மறைப்புக்கு கீழே நின்றவர், தன்னுடைய கையிலிருந்த துண்டு காகிதத்தின் மேல் ஒரு பக்கவாட்டு பார்வையை ஓட்டியவர், தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சோதித்து கொண்டு அந்த காகிதத்தை பந்தாக சுருட்டி சாக்கடையில் விட்டெறிந்தார்.

‘ஆ!’

இதயபூர்வமான பெருமூச்சை வெளியிட்ட்டார்.

ஒரே ஒரு சொல் – ஒரு சொல் கூட இல்லை, ஒரு சத்தம் – ஆ!

வெயில் தாங்க முடியாததாக இருந்தது. கோட்டு மிகவும் எடை கூடியதாக ஆகிவிட்டது. அவரால் நிற்கவே முடியவில்லை. கால்கள் கனத்துவிட்டிருந்தன.

வெத்திலைபாக்கு கடையின் மறுபுறம் இருந்த மாடிப்படிகள் பக்கம் சென்று அமர்ந்து கொண்டார். ஒன்பதரை. கரளி-பாபு ஞாயிறு காலைகளில் வீட்டில் பக்தி பாடல்கள் பாடுவார் – படோல்-பாபு வழக்கமாக போய்க்கொண்டிருந்தார். அங்கே அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது போகலாமா? என்ன கேடு வந்துவிடப் போகிறது? இந்த வெறுப்பான, மேலோட்டமான மக்களுடன் ஞாயிறு காலையை விரயம் செய்வதில் என்ன பயன்? இங்கு இருப்பதால் அவமானத்தின் வலியை வேறு தாங்கிக் கொள்ள வேண்டும்.

‘சைலன்ஸ்!’

போதும் உங்க சைலன்ஸ் எல்லாம். எல்லாம் வெறும் பேச்சு மட்டும்தான். மிகக் கொஞ்சமாக வேலை செய்கிறார்கள். நாடகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்….

நாடகம்…. நாடகம்….

கடந்தகாலத்திலிருந்து மெல்லிய நினைவு ஒன்று அவர் மனதில் எழுந்தது. ஆழமான, கட்டுப்பாடான ஆனால் இனிமையான குரலில் அவருக்களிக்கப்பட்ட அறிவுரை: ‘நினைவில் கொள் படோல். சிறிய பாத்திரங்கள் செய்வதில் எவ்வித அவமானமும் இல்லை. முக்கியமற்ற பாத்திரத்திலிருந்தும், சாத்தியமான இறுதிச்சொட்டு உணர்வுவரை பிழிந்தெடுத்து, வெற்றிகரமான நிகழ்த்துதலாக மாற்றுவதே ஒரு கலைஞனாக உன்னுடைய சாதனை, நாடகம் என்பது குழு முயற்சி. ஒவ்வொரு தனிநபரின் வெற்றி மீதுதான் ஒட்டுமொத்த நாடகத்தின் வெற்றியும் கட்டமைக்கப்பட்டது.

பக்ராஷி-மோஷாய் தான் அவருக்கு இந்த அறிவுரையை வழங்கியவர். ககன் பக்ராஷி. படோல்-பாபுவின் நாடகமேடை குரு. ககன் பக்ராஷி அபாரமான நடிகர் என்றாலும் ஒரு துளி கூட திமிர் இல்லாதவர். சாந்தமானவர். கலைஞர்களிடையே பிரமாதமான கலைஞர்.

பக்ராஷி-மோஷாய் இன்னொன்றும் வழக்கமாக சொல்வார். ‘நாடகத்தில் ஒவ்வொரு வரி வசனமும் மரத்திலிருந்து தொங்கும் கனி போன்றது. எல்லோருக்கும் எட்டிவிடக்கூடியது அல்ல. அதை பறிக்கிறவர்களுக்கு கூட அதை எப்படி உரிப்பது என்று தெரியாது. அது உன் பொறுப்பு – நடிகனின் பொறுப்பு. அந்த பழத்தை எப்படி பறிப்பது, எப்படி உரிப்பது, அதிலிருந்து பிழிந்து சாறு எடுத்து மக்களுக்கு பரிமாறுவது பற்றி நீ அறிந்திருக்க வேண்டும்.

பக்ராஷி-மோஷாயைப் பற்றி நினைவுகூர்ந்ததும், படோல்-பாபு தன்னையறியாமலே மரியாதையாக வணங்கினார்.

அவருடைய இன்றைய பாத்திரம் உண்மையிலும் பொருளற்றதா? அவர் ஒரு சொல்லைத்தான் சொல்ல வேண்டும் – ஆ. ஆனால் ஒரே ஒரு சொல் என்பதற்காக அந்த வசனத்தை புறந்தள்ள முடியுமா?

ஆ, ஆ, ஆ, ஆ – அந்த சொல்லை பல்வேறு வழிகளில், பல்வேறு தொனிகளில் படோல்-பாபு உச்சரித்தார். அப்படி செய்யும்போது, அவர் அபாரமானதை கண்டறிந்தார். அந்த ஒரு சொல், பல்வேறு வழியில் வெளிப்படுத்தப்படும்போது பல்வேறு மனநிலையை வெளிக்கொண்டு வந்தது. லேசாக கிள்ளும்போது சொல்லக்கூடிய ‘ஆ!’, கோடைநாளில் ஒரு குளிர்பானத்தை அருந்தியதும் சொல்லும் ‘ஆ’வை விட முற்றிலும் வேறானது. காதில் கூச்சம் காட்டும்போது வேறொருவகையான ‘ஆ’ வெளிப்படும். அது போல நிறைய ‘ஆ’க்கள், பெருமூச்சு, இழித்தல் அல்லது வேதனை; விரைவான ‘ஆ’ அல்லது நீண்ட ‘ஆஆஆஆ’; சத்தமாக அல்லது மென்மையாக, உரத்த தொனியில் அல்லது தாழ்ந்த தொனியில், தாழ்ந்த தொனியில் தொடங்கி உரக்க முடியும் ஒன்று. நம்பமுடியவில்லை! அந்த ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஓர் அகராதியே செய்துவிட முடியும் என்று படோல்-பாபு எண்ணினார்.

அவர் ஏன் மனமுடைந்து போனதாக உணர்ந்தார்? இந்த சொல் ஒரு தங்கச்சுரங்கம். ஒரு தகுதியுள்ள நடிகன் இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு ஜாக்பாட்டே ஜெயிக்கலாம்.

‘சைலன்ஸ்!’

இயக்குநர் மீண்டும் உறுமினார். அவரருகில் ஜோதி கூட்டத்தை விலக்கிக் கொண்டிருப்பதை பார்த்தார் படோல்-பாபு. அவனிடம் சொல்ல அவருக்கு விஷயமிருந்தது. படோல்-பாபு அவனருகே சென்றார்.

‘இன்னும் எவ்வளவு நேரம் பையா?’

‘ஏன் பொறுமையில்லாமல் இருக்கிறீர்கள் அண்ணே? இந்த விஷயங்களில் விரைவுபடுத்த முடியாது. இன்னும் அரைமணி பொழுது காத்திருங்கள்’

‘சரி. சரி. நான் இங்கே அருகேதான் இருப்பேன்’

‘ஓடிப்போய்விடாதீர்கள். சரியா?’

ஜோதி சென்றுவிட்டான்.

‘ஸ்டார்ட் சவுண்ட!’

எந்த சத்தமும் எழுப்பாமல், படோல்-பாபு சாலையின் மறுபுறமிருந்த தனித்த, அமைதியான சந்துக்கு போனார். ஷாட்டுக்கு முன் சிறிது நேரம் கிடைத்ததில் அவருக்கு திருப்தி. இவர்கள் ஒத்திகை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவர் தன்னுடைய பாத்திரத்தை தானே பயிற்சி செய்துகொண்டார். அந்த சந்து ஆளரவமற்று இருந்தது. இது வணிக பகுதி. அப்படியென்றால், குடித்தனக்காரர்கள் அதிகம் கிடையாது. மேலும், அது ஒரு ஞாயிற்று கிழமை. இங்கு வசிக்கும் வெகு சிலரும் ஃபாரடே வீட்டுக்கு படபிடிப்பு பார்க்க போயிருப்பார்கள்.

தன் தொண்டையை சரிசெய்து கொண்டு, அந்த சிறப்பான காட்சியின் சிறப்பான வசனத்தில் நிபுணத்துவம் பெற முயன்றார் படோல்-பாபு. கண்ணாடி ஜன்னலில் தெரிந்த பிம்பத்தை பார்த்து தன்னுடைய நடிப்பின் பல்வேறு விஷயங்களை கச்சிதப்படுத்தினார் – அந்த மோதலுக்கு அப்புறம் அவருடைய முகம் எவ்வளவு சுளித்திருக்க வேண்டும், தோள்கள் எவ்வளவு பின்னால் போயிருக்க வேண்டும், எந்த கோணத்தை அவை அடைய வேண்டும், விரல்கள் எவ்வளவு அகலமாக விரிந்திருக்க வேண்டும், மற்றும் பாதங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும்.

சரியாக அரைமணி நேரம் கழித்து படோல்-பாபு அழைக்கப்பட்டார்; அவர் ஊக்கம் குறைந்தவராக இல்லை இப்போது. அவருடைய சஞ்சலம் கூட மறைந்து, அடக்கிக்கொண்ட கிளர்ச்சியும், குறுகுறுப்புமாக – இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நாடக மேடையில் முக்கிய காட்சியில் தோன்றும் உணர்வுடன் – இருந்தார்.

படோல்-பாபுவை பார்த்து கையசைத்த பாரன் முல்லிக், ‘நீங்கள் காட்சியை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்’ என்றார்.

‘ஆம் சார்’

‘நல்லது. முதலில் நான், ‘ஸ்டார்ட் சவுண்ட்!’ என சொல்வேன். ‘ஒலிப்பதிவாளர் பதிலுக்கு ‘ரன்னிங்’ என்பார். உடனே காமிரா ஓட ஆரம்பிக்கும். அப்புறம் நான் ‘ஆக்‌ஷன்!’ என்பேன். நீங்கள் உடனே, அந்த தூணிலிருந்து இந்த திசையில் நடக்கத் தொடங்க வேண்டும், நமது கதாநாயகரும் காரிலிருந்து வெளிப்பட்டு அலுவலக வாசல் நோக்கி நடப்பார். நடைபாதையில் இந்த இடத்தில் மோதல் நிகழ வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களை புறக்கணித்தபடி கதாநாயகர் அலுவலக வாசலைக் கடந்து போவார், நீங்கள் ‘ஆ!’ என்று வலியில் சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்க வேண்டும். எல்லாம் சரிதானா?’

‘ஓர் ஒத்திகை….’ படோல்-பாபு முன்மொழிந்தார்.

‘ஓ, இல்லை! இடைமறித்தார் பாரன்-பாபு. ‘மேகமூட்டமாகி வருகிறது. ஒத்திகைக்கு அவகாசம் இல்லை. சூரியன் இருக்கும்போதே ஷாட்டை எடுக்க வேண்டும்’

‘அது வந்து…’

‘இப்ப என்ன?’

சந்தில் ஒத்திகை பார்க்கும்போது படோல்-பாபுவிற்கு ஒரு யோசனை தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அதைப் பற்றி சொன்னார்.

‘நான் என்ன நினைக்கிறேன் என்றால்…. வந்து… நான் செய்தித்தாள் ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு, மோதும்போது படித்துக் கொண்டிருப்பது போலிருந்தால்… கவனமில்லாத உணர்வை சரியாக வெளிப்படுத்தலாம்…’

அவர் முடிக்கும் முன்னரே பாரன் முல்லிக் ‘பிரமாதம்…. ஏய் உன்னைத்தான்! உன்னோட செய்தித்தாளை இந்த கனவானுக்கு கொடுக்க முடியுமா…. சரி. இப்பொழுது அங்கிருக்கும் தூண் பக்கமாக உங்கள் இடத்துக்கு போங்கள். சஞ்சல் தயாரா?’

‘ஆமாம், சார்’ காருக்கு பக்கத்திலிருந்த ஸ்டார் பதிலளித்தார்.

‘நல்லது. சைலன்ஸ்!’

பாரன் முல்லிக் கையை உயர்த்தி, உடனே அடுத்த நொடியில் கீழிறக்கினார். ‘ஒரு நிமிடம். கேஷ்டோ, இவருக்கு ஒரு மீசை கொடு சீக்கிரமாக. அந்த பாத்திரம் சரியாக பொருந்தவில்லை’

‘எந்த மாதிரி சார்? அடர்த்தியாக, கைப்பிடி, பட்டாம்பூச்சி மீசை? எல்லா வகையும் இருக்கிறது’

‘பட்டாம்பூச்சி. சீக்கிரம். நேரமாக்காதே’

தலையை பின்னோக்கி வாரிக்கொண்டிருந்த, கரிய, குட்டை மனிதன் படோல்-பாபுவை நெருங்கி, ஒரு தகரப்பெட்டியிலிருந்து எடுத்த சிறிய கரிய பொய்மீசையை அவர் மூக்குக்கு கீழே ஒட்டிவிட்டான்.

‘மோதலினால் கீழே விழுந்துவிடாது என நம்புகிறேன்’ என்றார் படோல்-பாபு.

‘மோதலைப் பற்றி கவலைப்படாதீர்கள்,’ சிரித்தபடி சொன்னான் அந்த இளைஞன், ‘நீங்கள் தாராசிங்குடன் மல்யுத்தம் செய்தால் கூட இது கீழே விழாது’

அவன் ஒரு கண்ணாடியை பிடித்துக் கொண்டிருந்தான். படோல்-பாபு அதில் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டார். ஆம் – அது அவருக்கு அருமையாக பொருந்தி இருந்தது. இயக்குநரின் பார்வையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

‘சைலன்ஸ்! சைலன்ஸ்!’

அவருக்கு மீசை ஒட்டும்போது பார்வையாளர்களிடையே சற்று சலசலப்பு எழுந்தது. பாரன்-பாபுவின் உறுமலில் எல்லாம் அடங்கியது.

அங்கு சேர்ந்திருந்த பார்வையாளர்களில் பலரும் அவரைப் பார்ப்பதை படோல்-பாபு கவனித்தார்.

‘ஸ்டார்ட் சவுண்ட்!’

படோல்-பாபு தொண்டையை கனைத்துக் கொண்டார். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து…. அந்த குறித்து வைக்கப்பட்ட இடத்திற்கு போக படோல்-பாபுவிற்கு குத்துமதிப்பாக ஐந்து தப்படிகள் வேண்டும். சஞ்சல்குமாருக்கு நான்குதான் தேவைப்படும். அதனால், இருவரும் ஒரே சமயத்தில் கிளம்பினால், படோல்-பாபு சற்று விரைவாக நடக்க வேண்டும், இல்லையென்றால்….

‘ரன்னிங்!’

செய்தித்தாளை தன் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டார் படோல்-பாபு. ‘ஆ!’ சொல்லும்போது அறுபது சதவீத எரிச்சலும், நாற்பது சதவீத திகைப்புமாக கலந்து சொல்ல முடிந்தால்…

‘ஆக்‌ஷன்!’

கடவுளுக்கு வணக்கம்.!

க்ளாம்ப் க்ளாம்ப் க்ளாம்ப் க்ளாம்ப் க்ளாம்ப்…. பாங்க்க்க்க்! படோல்-பாபுவிற்கு கண்களில் பூச்சி பறந்தது. அவர் முன்நெற்றி கதாநாயகனின் தலையோடு உண்மையில் மோதியது. கூரிய வலி அவரை ஒருகணம் மயக்கமடைய வைத்தது.

ஆனால் அடுத்த நொடியே மிகுந்த ஆற்றலுடன் தன் மனோபலத்தை மீட்டெடுத்தவர் அறுபது சதவீதம் எரிச்சலும், இருபது சதவீதம் திகைப்பும், இருபது சதவீதம் வேதனையுமாக ‘ஆ’ என்று குரலெழுப்பினார். செய்தித்தாளை சேகரித்தபடி தன் வழியே நடந்து போனார்.

‘கட்!’

‘நன்றாக இருந்ததா?’ கவலையுடன் படோல்-பாபு பாரன் முல்லிக்கிடம் போனார்.

‘மிகப்பிரமாதம்!’ நீங்கள் ஒரு நல்ல நடிகர் தெரியுமா… சுரேன், இருட்டப் போகிறதா என்று ஃபில்டரைப் போட்டு பார்த்து சொல்’

‘அடி ஒண்ணும் இல்லையே அண்ணே’ சசாங்கன் அவரிடம் வந்து கேட்டான்.

சஞ்சல்குமார் நெற்றியைத் தடவியபடி நடந்து சென்றார். ‘என்னவொரு டைமிங். ஒரு நொடி நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்றே தெரியவில்லை…’

அங்கே கூடியிருந்த கூட்டத்தை தள்ளிக் கொண்டு நரேஷ் வந்தான். ‘இங்கே நிழலுக்கு வாங்க. இன்னும் ஒரு ஷாட் ஆனதும் உங்களுக்கு சேரவேண்டிய…’

படோல்-பாபு வியர்வையை துடைத்துக் கொண்டே கூட்டத்தின் ஊடே சென்று, அந்த வெற்றிலை-பாக்கு கடை முன்னே மீண்டும் போய் நின்றார். சூரியனை மேகங்கள் மூடிக்கொண்டதால், அவ்வளவு வெயில் இல்லை; இருந்தாலும் படோல்-பாபு கோட்டைக் கழட்டினார். அஹ், எவ்வளவு சுகம்! ஆழமான சந்தோஷமும் சுய-திருப்தியும் அவர் மனதையும் இதயத்தையும் மெதுவாக நிறைத்தன.

இன்று மிகவும் அருமையாகவே நடித்திருந்தார். நடிக்காமல் இருந்த காலங்கள் அவருடைய கலையுணர்வுத் திறனை மழுங்கடிக்கவில்லை. ககன் பக்ராஷி அசலாக திருப்தி அடைந்திருப்பார். ஆனால் இந்த மக்களுக்கு அது புரிந்திருக்குமா? இயக்குநர் பாரன் முல்லிக்கிற்கு புரிந்திருக்குமா? இந்த பாத்திரத்தை பிழையில்லாமல் செய்வதற்காக அவர் பட்டபாட்டையும், உழைப்பையும் இவர்கள் பொருட்படுத்துவார்களா? இவர்களுக்கு அந்த திறமை இருக்கிறதா? இவர்களுடைய ஈடுபாடெல்லாம் மக்களை நடிக்க பிடித்துக் கொண்டு வருவதிலிருந்து, அதற்கு சன்மானம் கொடுப்பது வரைதான். சன்மானம்! எவ்வளவு? ஐந்து, பத்து, பதினைந்து? அவருக்கு பணம் தேவைதான்… ஆனால் இன்றைய சந்தோஷத்திற்கு முன்னர் அந்த ஐந்து ரூபாய் எம்மாத்திரம்?

பத்து நிமிடங்கள் கழித்து தேடிப் பார்த்த போது நரேஷால் படோல்-பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை. பணம் வாங்காமலே போய்விட்டாரா? என்னவொரு மறதி!

‘சூரியன் வந்தாச்சு,’ பாரன் முல்லிக் கத்தினார். ‘சைலன்ஸ்! சைலன்ஸ்!… நரேஷ், இங்கே வா, கூட்டத்தை கட்டுப்படுத்து!’

One comment

  1. ஒரு மொழி ஆசிரியராக அந்த ஆ உச்சரிக்கப்பட வாய்ப்பிருந்த சூழல்களை இன்னும் விரிவாக கற்பனை சேர்த்து இரசிக்க முடிந்தது. நடிப்பதற்கென பிறந்தவர்களால்தான் இந்த மனோ பாவத்தை இரசிக்க முடியும். நன்றாக உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.