ஆன்மாக்களைக் காத்தல்
— டெனிஸ் லேவர்டாவ்
துக்கங்களுக்கும் கனவுகளுக்கும்
பொறுப்பேற்றுக் கொண்டவன்
அடுத்த வயல் நோக்கி
மிகக் கவனமாக.
தன் மந்தையைச் செலுத்துகிறான்.
கோவில் மணியோசை
கேட்டு விட்டான்.
ஆனால் ஆடுகள்
புல்லுக்குப் பசித்திருக்கின்றன,
இன்றும் ஒவ்வொரு நாளும்.
அவனது பொறுமை, அழகியது.
நீண்ட அவன் நிழலும்,
சமவெளியூடே. மந்தைகள்
அலையலையாய்ச் செல்லும்
ஓசையும்.
௦௦௦
‘தலைமைத் திறன்கள்’: நிர்வாகத்துறையில் இருப்பவர்கள் இந்தச் சொற்களைப் பல முறை கேட்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக, உங்களுக்கு ஐடீ துறையில் அனுபவமிருந்தால் இவை மிகவும் பழக்கப்பட்டுப்போன சொற்களாய் இருக்கும். முன்னெல்லாம், தலைமைப் பதவியில் மிகக் குறைவானவர்கள்தான் இருப்பார்கள்- ஆனால் இப்போது, அதிலும் குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறை, அனைவரும் தலைமைப் பதவிக்குத் தயாராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைமைக்குரிய பண்புகளை உருவாக்கிக் கொண்டாக வேண்டியிருக்கிறது. முன்னெல்லாம், ஒரு பணியில் பத்தாண்டுகள் நிலைத்திருந்தால், குமாஸ்தாவாக வேலைக்கு வந்தவன் படிப்படியாக முன்னேறி தலைமை குமாஸ்தா இருக்கையில் அமர்வான். ஓய்வு பெறுவதற்கு முன் ஜெனரல் மானேஜராகவோ அடிஷனல் ஜெனரல் மானேஜராகவோ இருந்தால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். வைஸ் பிரசிடண்ட் ஆவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. சீப் மானேஜிங் டைரக்டர்கள் வேற்று உலகத்திலிருந்து வந்தவர்கள்.
ஒரு நிறுவனத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து வேலை செய்தால் அவன் டீம் லீடராகப் பணி உயர்வு பெறுகிறான் என்பதை ஐடி துறையில் எனக்குள்ள அனுபவத்தைக் கொண்டு சொல்ல முடியும். ஐந்து ஆண்டுகளில் அவன் ப்ராஜக்ட் மானேஜர் ஆகலாம், முப்பத்தைந்து வயது ஆகும்போது சின்னச் சின்ன டிவிஷன்களுக்குத் தலைமை தாங்க வேண்டும். நாற்பது வயது ஆகும்போது லாப நஷ்ட கணக்குகளைப் பார்த்துக் கொள்ளும் வைஸ் பிரசிடண்ட் ஆகவும், நாற்பது வயது முடியும்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட் பதவியில் அமர்ந்திருக்கவும் வேண்டும். பொதுவாக, இத்துறையில் வெற்றிகரமாகப் பணிபுரிபவர் ஒருவரது பணிநிலை இப்படிதான் உயரும். அண்மைக் காலத்தில், இந்தப் பந்தயத்தில் இருந்து விலகி நிற்க முடியாது என்பதையும் கண்டுகொண்டு விட்டோம். ரேஸ் ஓடித் தோற்க வேண்டும், அல்லது கம்பெனியிலிருந்து வெளியே போயாக வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை.
இதனால்தான் நிறுவனங்கள் தலைமைப் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால் அனைவரும் தலைமைப் பதவிக்கு வர முடியாது. தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கான பயிற்சியும் நடைமுறையில் ஓரளவே பயன்படுகிறது. பலரும் உயர் பதவிகளில் இருந்தாலும், தம் வேலையை ஒழுங்காகச் செய்வதைத் தாண்டி எந்த லட்சியமும் இல்லாதவர்களாகவும் தங்கள் டீமை சரியாக வழிகாட்டிச் செல்ல முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. அடிப்படையில் திறனின்மை, நியாயமின்மை, சுயநலம் என்று சில குறைகள் சொல்ல முடியும். நிறுவன அமைப்பில் தோல்வியைச் சகித்துக் கொள்பவர்கள் அரிது. அதனால், தோல்வியைத் தவிர்ப்பதுதான் முதன்மை நோக்கமாக இங்கு இருக்கிறது. பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை என்பதைத் தோல்வி என்று சொல்ல முடியாது என்பதால், தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் பலரும் பாதுகாப்பான இடத்தில் இயங்குகின்றனர், புதிய பாதைகளைத் தவிர்க்கின்றனர்.
நிறுவன தலைவராய் இருப்பதற்கும் அரசியல் அல்லது சமூக அமைப்பில் தலைவராய் இருப்பதும் அளவில் மட்டுமே மாறுபடுகின்றது என்று சொல்ல முடியாது.. தொழில்நுட்ப திறன் அல்லது நிதிநிர்வாக திறன் போன்ற விஷயங்களுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. யார் எதற்கு ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், உங்களைச் சுற்றியுள்ளவரகளுக்கு எதனால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது எனபதைப் பார்க்க வேண்டும், அதிகார அரசியல் எப்படி இயங்குகிறது என்ற தெளிவு இருக்க வேண்டும். சின்னச் சின்ன அபார்ட்மெண்ட் அசோசியேஷன்களில் கடும் மோதல் நடப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு மாநிலம் அல்லது தேசத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்வதற்கு வேறொரு திறன் தேவைப்படுகிறது.
நல்ல ஒரு தலைவன் மக்களுக்கு செயல்படும் ஊக்கம் அளிப்பவனாய் இருக்கிறான். நிறைய நன்மை செய்து அவனால் சமூகம் முன்னேற்றமடைய முடியும். நாம் ஏன் ஒருவரை நம்புகிறோம், பிறரை நம்புவதில்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. இதையெல்லாம் விளக்கும் வகையில் நிரையா கோட்பாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் கோட்பாடு என்றால் திரும்பத் திரும்ப அது நிருபிக்கப்பட வேண்டும், அப்படி எதுவும் நடப்பதை நான் பார்த்த நினைவில்லை. உதாரணத்துக்கு ரஜினிகாந்த எடுத்துக் கொள்வோம். ஏதோ ஸ்டைல், மானரிசம் போன்ற விஷயங்களுக்காகதான் அவர் பிரபலமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். பல நடிகர்களும் தங்களுக்கு என்று ஒரு ஸ்டைல், ஒரு மானரிசம் என்று உருவாக்கிக் கொள்ள முயற்சித்து தோற்றுப் போகின்றனர். அதேதான் அரசியல் தலைவர்கள் விஷயத்திலும். சிலரை மக்கள் நம்பி பெரும்பான்மை ஆதரவு அளிக்கின்றனர். அன்மைக்காலத்தில் மோதியும் ஒபாமாவும் இப்படிப்பட்ட வெற்றி பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம்.
தார்மிக விழுமியங்களின் அடிப்படையில் தலைமை தாங்குபவர்கள்தான் மிகக் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தர்மம் வழுவாத பாதையில் தம்மைத் தொடர்பவர்களைக் கொண்டு செல்ல நினைக்கும் சமயஅமைப்புகளின் தலைவர்கள் நிலையும் சிக்கலானதுதான். அல்லது, சமூக சீர்திருத்தத்தில் அக்கறை கொண்ட தலைமையையும் கடும் எதிர்ப்புகளைக் கடந்து தங்கள் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டியிருப்பதைச் சொல்லலாம் (அரசியலில் ஈடுபடாதவர்களைச் சொல்கிறேன்). அரசியல் தலைவர்கள், வளமான எதிர்காலம் காத்திருக்கிறது, பாலும் தேனும் ஓடப் போகிறது என்று ஆசை காட்டி மக்களை நம்பச் செய்யலாம். இது போன்ற எதைக் காட்டி தார்மிக விழுமியங்களை நிலைநிறுத்த இயலும்? மக்களின் மனசாட்சியை நோக்கிப் பேச வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் அது ஒன்றும் சுலபமில்லை. அக்கம்பக்கத்தில் தூய்மையைக் காக்க வேண்டும் என்று தலைமை தாங்கி இயங்குபவர்கள் இருக்கின்றனர், தீண்டாமை ஒழிப்பு, முதியோர் நலன் போன்ற இயக்கங்களில் பங்கேற்பவர்கள் சமகால சமூக அமைப்பையும் பொதுமக்களின் ஆர்வமின்மையையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. மிகச் சிறு வெற்றிகள்தான் அவர்களுக்குக் கிட்டுகின்றன, இந்தப் போராட்டம் மிகவும் அலுப்பூட்டக்கூடியது.
கண்ணதாசன் பல பாடல்களில் ஆழமான கருத்துகளைப் போகிறபோக்கில் சொல்லிவிடுகிறார். கர்ணனில் இப்படிப்பட்ட ஒரு பாடல் உண்டு. ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” என்று இந்தப் பாடல் துவங்குகிறது. ஆம், தார்மிக நியாயங்களைப் பேசுபவர்கள் உறங்குவதில்லை. எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டிய அவசியம் அத்தகைய தலைவர்களுக்கு உண்டு. தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரியானதாக இருக்க வேண்டும், சிறிதுகூட பாதை தவறக்கூடாது. அப்படி எதுவும் நேர்ந்தால் அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை பொய்க்கும், அதுவரை அவர்கள் பெற்ற வெற்றிகள் ஒன்றுமில்லாமல் போகும். அதுதவிர, தம் தொண்டர்கள் எப்போதும் சந்திக்கக்கூடியவர்களாக அவர்கள் இருந்தாக வேண்டும், அவர்களுக்கு வழிகாட்டி, ஆறுதல் அளிக்க எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். தீயவன் ஒருவன் ஏதாவது நல்லது செய்தால், எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவனுக்கு உள்ளே நற்குணம் இருக்கிறது என்று பாராட்டுகிறோம், ஆனால் சமூக நன்மைக்கு வாழ்நாளெல்லாம் பாடுபட்டவன் ஒரு சிறு தவறு செய்தாலும், அவனைத் தூக்கி எறிந்து விடுகிறோம். இந்த முரண் சிந்திக்கத்தக்கது.
தார்மிக விழுமியங்களுக்குப் பாடுபடும் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவாலை இந்தக் கவிதை பேசுகிறது. பாதிரியார், தன் மந்தையை மென்மையாக வழிநடத்திச் செல்கிறார். ஆனால் ஆடுகளோ எப்போதும் பசியுடன் இருக்கின்றன, ஒவ்வொரு நாளும் உண்ண புல் கேட்கின்றன. மக்கள் தம் தேவைகளையும் ஆசைகளையும் தியாகம் செய்யத் தயாரில்லை., சாதி, இடம், பரம்பரை என்று பலவகையில் கிட்டும் வளங்களை விட்டுக் கொடுக்க மறுக்கின்றனர். அதனால்தான் தார்மிக ஒழுக்கங்களின் அடிப்படையில் தலைமை தாங்குபவர்கள் இதை வலியுறுத்தி, ஒரு சமநிலையை உருவாக்க வேண்டியதாகிறது. சுவையான, உடனுக்குடன் புல் கிடைக்கிறது என்றால், ஆடுகள் அவற்றை சுலபமாக விட்டுக் கொடுக்குமா?
காந்தியைப் பேசாமல் தார்மிக விழுமியங்களை முன்வைத்து தலைமை தாங்கியவர்களைப் பேச முடியுமா? புரட்சி செய்து வெற்றி பெற்ற தலைவர்கள் பலர் உண்டு, ஆனால் அவர்களில் பலரும் தம் மக்களையே தேவைப்பட்டபோது பலியாக்கியிருக்கின்றனர். தலைவரின் அகந்தையே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தேவைப்பட்டால் ரத்தம் சிந்தியும் பதவி காப்பாற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட தலைவரை ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கு அதனால் ஒரு பயனும் கிட்டியதில்லை; சில சமயம் இவர்கள் தலைவனால் கொல்லப்பட்டு அல்லது சிறையிடப்பட்டு செத்ததும் உண்டு. மாறாய், காந்தி தம் தொண்டர்களை தன்னல நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டதில்லை., என் எதிரிகளுக்குக்கூட துன்பம் வரக்கூடாது என்றார் அவர். காரணம், அவர் அடிப்படையில் அற விழுமியங்களை முன்வைத்த தலைவர், அதற்கு அப்புறம்தான் அவருக்கு அரசியல் விவகாரங்கள் எல்லாம்.
இந்தக் கவிதைக்கு நல்ல ஒரு உதாரணம் என்று காந்தியின் வாழ்வைச் சொல்லலாம். அவர் தன் மக்களை மென்மையாக வழிநடத்திச் சென்றார், அவர்களுக்குப் போராட கற்றுத் தந்தார். போராடுங்கள், ஆனா அகிம்சையைக் கைவிடக் கூடாது என்றார். மக்கள் அவரது போதனைகளை ஏற்றுக் கொண்டனர், பல பத்தாண்டுகளாக அவர் காட்டிய வழியில் பின்பற்றிச் சென்று சுதந்திரம் அடைந்தனர். ஆனால் அதன்பின் பிரிவினையின்போது எல்லாம் மோசம் போனது. அன்னியர்களான பிரிட்டிஷ்காரர்களுடன் பண்போடு நடந்து கொண்டவர்களே, அதன்பின் தம் நண்பர்களையும் அண்டை வீட்டினரையும் கொல்லத் துவங்கினர். இது காந்திக்கு எப்படிப்பட்ட மனவருத்தம் தந்தது என்பதை பலரும் பதிவு செய்திருக்கின்றனர். சுதந்தரப் போராட்டத்தைக் காட்டிலும் நவகாளி யாத்திரை காந்திக்கு மிகப்பெரும் சவாலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில், அங்கு அவர் கண்டவை அனைத்தும் அவரது கொள்கைகள் பொய்யாய் போனதைக் காட்டியிருக்கும். ஆனால் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. வெறும்காலோடு நடைபயணம் செய்து அவர்களுக்கு அகிம்சையை மீண்டும் கற்பித்தார். அதில் வெற்றியும் பெற்றார். மானுட வரலாற்றின் நற்தருணங்களில் இதுவும் ஒன்று. மாபெரும் படைகள் கொண்ட அரசர்களையும்,மாபெரும் பேரரசுகளை உருவாக்கிய பேரரசர்களையும் பார்க்கிறோம். ஆனால் மனிதனின் கீழ்மைகளோடு போராடி வெற்றி பெற்ற மனிதர்கள் வெகுச் சிலரே. அவர் நம்மவரில் ஒருவர் என்பது நம் பெருமைக்குரிய விஷயம்.
நவகாளி கலவரம் குறித்து மேலதிக தகவல்கள் இங்கே –