மாடர்ன் லவ் ஸ்டோரி

எஸ். சுரேஷ்

“இன்னிக்கி ராகுல் என்கிட்டே ‘ஐ லவ் யூ ’ சொன்னான்” என்றாள் வர்ஷிதா

“அவனுமா?” என்றேன் நான். “நீ என்ன சொன்ன?”

“சாரி சொன்னேன். ‘உன்ன நான் ரிஜெக்ட் பண்ணல. நீ சொன்னத ரிஜெக்ட் பண்றேன்’ன்னு சொன்னேன்”

“ஆஹா. இவங்க எல்லாரும் சேந்து உன்ன ஒரு தத்துவஞானி ஆக்கிடுவாங்க போல இருக்கு” என்று சொல்லிவிட்டு சிரித்தேன். “இந்த ஆபிஸ் சேர்ந்தப்புறம் இது என்ன மூணாவது பிரபோஸலா? நீ எங்கயோ போற போ”

“சும்மா கிண்டல் பண்ணாதடா. வெறுப்பா இருக்கு. ஒரு ரெண்டு நாள் சிரிச்சு பழகினா போதும் பிரபோஸல்லோட வந்துடறாங்க”

வர்ஷிதாவும் நானும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். எங்களுக்குள் காதல் மலராது என்று சொல்லாமலே இருவருக்கும் தெரிந்து விட்டது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவளுக்கு நான்தான் முக்கியமான நண்பன். நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் கூறுவாள்.

“சரி விடு. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான். வேற என்ன விஷயம்?”

“ஆபிஸ்ல இன்னிலேர்ந்து ஸ்கைப் யூஸ் பண்ண ஆரம்பிச்சோம். வருண்கிட்ட ஸ்கைப்ல பேசினேன்”

“யாரு? உன் கிளாஸ்மேட்டா?”

“ஆமாம்”

“இப்போ எங்க இருக்கான்?”

“குர்காவுன்”

“என்ன பேசின?”

“ஒன்னும் பெருசா இல்ல. ரொம்ப நாளைக்கப்புறம் பேசறோம். அவன்கிட்ட என் நம்பர்கூட இல்ல. நம்பர் குடுத்தேன். வாட்ஸப்ல வரேன்னு சொன்னான்”

“அம்மா தாயே. உனக்கும் உன் வாட்ஸப்க்கும் கோடி கும்புடு. உங்க பார்வர்ட்லாம் தாங்க முடியல”

காபி குடித்துவிட்டு இருவரும் கிளம்பினோம். நான் அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

ஒரு வாரம் கழித்து மறுபடியும் சந்தித்தோம். “இன்னிக்கி எதாவது ப்ரபோசல் வந்துதா?” என்று நான் ஆரம்பித்தேன்.

“ஒனக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தியா இருக்கு. உன் சைடுல என்ன விஷயம் சொல்லு”

“புதுசா என்ன இருக்க போறது. காலைல வாட்ஸப், மத்தியானம் ட்விட்டர் ராத்திரி பேஸ்புக், ஜிசாட். இதுக்கு மேலயும் எதாவுது விஷயம் இருக்குமா? நம்ப சந்திக்கறதே வேஸ்ட். நெட்லயே வாழலாம்”

“ஒ ஒ ஒ.பேஸ்புக்னதும் ஞாபகம் வருது. இன்னிக்கி அந்த ஸ்வாதியோட பேஜ் பாத்தியா?”

“இல்லியே”

“நீ எல்லாத்தையும் மிஸ் பண்றடா. அவோ ப்ரோபைல் பிக்சர் மாத்தினா. எப்போவும் போல அவளுக்கு நானூறு லைக் வந்துது. ஆனா வருண் மாத்திரம் போட்டோ லைட்டிங் சரியில்லன்னு ஒரு கமண்ட் போட்டான். அவோ லாவண்யாவ கூப்பிட்டு பொலம்பி தள்ளிட்டாலாம்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

“ஆஹா. ஸ்வாதி ஒனக்கு ஜென்ம விரோதியாச்சே. நீ சந்தோஷப்படாம இருப்பியா? ஆனால் உங்கள பப்ளிக்ல பாத்தா நம்ப சி.எம்.மும் தோழியும் போலன்னா இருக்கீங்க. எப்படியா இதெல்லாம் முடியறது?”

“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.” என்றாள்

“எனக்கேவா? ஆமாம் இப்போல்லாம் நீ எந்த ஸ்டேடஸ் போட்டாலும் வருண் வந்து லைக் பண்றான்? ஏதோ நீதான் அவன வச்சி அந்த கமண்ட் போடச் சொன்னேன்னு சுவாதி நெனச்சிக்கப் போறா”

“ஹூ கேர்ஸ். அவளுக்கு அப்படி பண்ணாலும் தப்பில்ல.”

“அது சரி. வருண் என்ன பேஸ்புக்குக்கு புதுசா? அப்படி லைக் போடறான்?”

“இப்போதாண்டா பிரண்ட் ஆனான். அதுனால இருக்கும் பாவம்.”

“ஒரு லைக் ஜாஸ்தி வந்தா நல்லதுதான். நான் ஸ்டேடஸ் போட்டா நானே லைக்க வேண்டியிருக்கு- ஸ்லேடைய கவனிச்சயா. லைக்க வேண்டியிருக்கு. லயிக்க வேண்டியிருக்கு. எப்படி?”

“தண்டம்”

“காம்பர் ஸ்மெல்”

“பர்னிங் ஸ்மெல்”

ஒரு மாதம் இப்படியே ஓடியது. காபி குடிப்பதும் ஏதோ மொக்கை போடுவதுமாய். பிறகு ஒரு நாள் ஐந்து மணி வாக்கில் அவள் கால் வந்தது. எல்லா குழப்பமான சமாச்சாரங்களையும் வாட்ஸப் மூலம் தீர்த்துக் கொள்ளும் காலத்தில் எதற்கு கால் செய்கிறாள்?

“நான் ஒன்ன பாக்கணும்”

“சான்சே இல்ல. ஆறுலேந்து ஏழு வரைக்கும் ஒரு கான்கால் இருக்கு”

“இன்னிக்கி ஒரு நாள் ஸ்கிப் பண்ணு”

“ஐயய்யோ சத்தியமா முடியாது. ஸ்டேட்டஸ் சரியில்ல. காலும் மிஸ் ஆச்சு மொத டெட் பாடி நாந்தான்”

அவள் சிரிக்கவில்லை. “அது முடிஞ்சப்புறம் வா”

“லேட் ஆயிடுமே. அப்புறம் உங்கம்மா ரொம்ப டென்ஷன் ஆயிடுவா”

“நான் இன்னிக்கி லேட்டா வருவேன்னு சொல்லிருக்கேன். நீ என்ன டிராப் பண்ணுவேன்னும் சொல்லியிருக்கேன். அதுனால் அம்மா ஒன்னும் சொல்லல”

“சரி. கான்கால் முடிஞ்சப்புறம் வரேன்.”

எதற்கு என்னுடன் பேசியே ஆகவேண்டும் என்கிறாள் என்று எனக்கு புரியவில்லை. மூளையை எவ்வளவு கசக்கினாலும் எந்த விஷயத்திலும் அர்ஜென்சி இருப்பது போல் தோன்றவில்லை. என்னவாக இருக்கும்?

நான் காபி ஷாபில் நுழையும்பொழுது ஒன்பதரை மணி ஆகிவிட்டிருந்தது. அவள் போனில் ஏதோ மெஸ்சேஜ் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தாள்.

“கம்பெனி பாரம் பூரா உன் தோள்லதான் இருக்கு போல” என்றாள் என்னைப் பார்த்துவிட்டு.

“சொல்லு, என்ன அர்ஜெண்டா வர சொன்ன?”

“அர்ஜெண்டா வர சொன்னேன் ஆனா நீ மெதுவாதானே வந்த”

“மின்னல் போல வந்து மறையணுமா?”

“வாம்மா மின்னல்” என்று இரண்டு கைகளையும் நீட்டி கூப்பிட்டாள்.

“என்ன வச்சு காமெடி பண்ணவா கூப்பிட்ட?”

“மொதல்ல காபி சொல்லுடா”

காபி ஆர்டர் செய்தேன். காபி வரும்வரை இருவரும் எங்கள் மொபைலில் ஏதோ செய்து கொண்டிருந்தோம். அவள் சற்று டென்ஷனாக இருப்பது தெரிந்தது. அவள் கம்பெனி வளரும் கம்பெனி, ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அதனால் வேலை போகும் வாய்ப்பு இல்லை. யாராவது கம்பெனியில் தவறான முறையில் நடந்து கொண்டிருப்பார்களா? அவளுக்கு எப்படி ரெஸ்பாண்ட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா?

காபி வந்தது. அவள் கோப்பையை கையில் எடுத்து, “மொபைல கீழ வை” என்றாள். நான் மொபைலை கீழே வைத்தேன். மெதுவாக ஒரு சிப் காபியை குடித்துவிட்டு கப்பை கீழே வைத்துவிட்டு, “இன்னிக்கி வருண் எனக்கு ப்ரபோஸ் பண்ணான்” என்றாள்

“இவனுமா? இவன் ஏதோ நல்லவன்னு நெனச்சேன். அவன்கூட ஸ்கைப்ல சிரிச்சி பேசினியா? ஏதோ மிஸ்டேக் ஆயிட்டான் போல இருக்கு. தினமும் நடக்கறதுதானே. இன்னிக்கி ஏன் டென்ஷனாற?”

இங்கும் அங்கும் பார்த்துவிட்டு சொன்னாள், “எனக்கு இந்த ப்ரபோசல் பிடிச்சிருக்கு”

என் ட்யூப்லைட் அப்பொழுதுதான் எரிந்தது, “அடிப்பாவி. உன்னையே ஒருத்தன் கவுத்துடானா. பெரிய கில்லாடிதான்”

முதல் முறையாக அவள் முகத்தில் வெட்கத்தை கண்டேன். “யம்மாடியோ. நீகூட வெட்கப்படற. இன்னிக்கி ட்விட்டர்ல இந்த விஷயத்த போட்டு #TIL போட்டுடவேண்டியதுதான்”

“இத யார்கிட்டயாவது சொன்ன மொத டெட்பாடி நீதான்”

“அது சரி.நாம எல்லாத்தையும் அழிச்சிட்டு மொதல்லேர்ந்து வருவோம். இது எப்படி ஸ்டார்ட் ஆச்சு. எப்படி டேவலெப் ஆச்சு எல்லாத்தையும் சொல்லு” என்று மணி பார்த்தேன்.

“ஒண்ணும் பயப்படாத. நான் செகண்ட் ஷோ போயிட்டு வருவேன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். நீயும் வரேன்னு சொல்லியிருக்கேன். நெறைய டைம் இருக்கு”

“அப்படின்னா பூரா கதையும் சொல்லு”

“அவன் என் கிளாஸ்மேட்ன்னு உனக்கு தெரியும். அவன் குர்காவுன்க்கு வேலைக்கு போயிட்டான். நான் இங்க சென்னைல. கான்டாக்ட் கெடையாது. மெயில் ஐடி இருந்துது, ஸ்கைப்ல அவன ஆட் பண்ணியிருந்தேன். ஆனா நாங்க மெயில் பண்ணிண்டதே கிடையாது. நான் ஸ்கைப் ஐடி ஒண்ணு வைச்சிருந்தேனே தவிர ஸ்கைப் யூஸ் பண்ணவே இல்லை. எல்லாம் ஜிசாட் தான். அப்புறம் வாட்ஸப்க்கு வந்தாச்சு. எப்போவாவது அவனப் பத்தி நியூஸ் யார் வழியாலயாவது வரும் . அதைத் தவிர வேற கான்டாக்ட் இல்ல. திடீர்னு எங்க ஆபீஸ்ல எல்லாரும் ஸ்கைப் யூஸ் பண்ணனும்னு முடிவெடுத்தா. ஏதோ மைக்ரோசாப்ட் டீல் போல இருக்கு.

“மொதல் நாள் நான் லாகின் பண்ணவுடனே இவன்கிட்டேர்ந்து ஒரு மெசேஜ். “ஹாய். நைஸ் டு சீ யூ ஆன் ஸ்கைப்” அப்புறம் என் போன் நம்பர் வாங்கிண்டான். பேஸ்புக்ல பிரண்ட் ஆனான். டெய்லி கார்த்தால வாட்ஸப்ல ஒரு குட் மார்னிங் மெசேஜ் வரும். டெய்லி ஸ்கைப் பேசுவோம் இல்லேன்னா சாட் பண்ணுவோம். கொஞ்ச நாளைக்கப்புறம் அவன் மெசேஜ் எப்போ வரும்டா காலைல வெயிட் பண்ணுவேன். பல நாள் அவன் மெசேஜ் பாத்து சிரிச்சிருக்கேன். ரக்ஷிதாவுக்கு ஒரே டவுட். “எதுக்கு வாட்ஸப் மெசேஜ்ஜுக்கு இப்படி சிரிக்கற. எனக்கும் அனுப்பு அந்த மெசேஜ்’ன்னு தினமும் பிடுங்கி எடுப்பா”

“இன்னிக்கி லஞ்ச ஆனப்புறம் எப்போவும் போல அவனோட ஸ்கைப் பேச ஆரம்பிச்சேன். கொஞ்சம் நேரம் பொதுவா பேசின்னப்புறம் அவன் சொன்னான், “நான் உன் பேஸ்புக்ல நெறைய லைக் போடறேனாம். இதுக்கு என்ன காரணம்னு என் பிரண்ட்ஸ் கேக்கறா” அதுக்கு நான், “என்ன காரணம்?” ன்னு அவன கேட்டேன். “ஐ யாம் இன் லவ் வித் யூ” அப்படின்னான்

“எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல. சைலன்ட்டா இருந்தேன். அவன் பேசிண்டே போனான், “நீ உடனே முடிவெடுக்க வேண்டாம். நல்லா யோசிச்சுப் பாத்து எனக்கு பதில் சொல்லு. நீ உன் அம்மா அப்பாவ கன்சிடர் பண்ணு, உன் மனசுல என்ன இருக்கோ நல்லா உன்னையே கேட்டுப் பாரு.” அது இதுன்னு ஏதோ சொல்லிண்டிருந்தான். நல்ல ரொமண்டிக் மூடைக் கெடுத்தான்”

நான் சிரித்தேன்.

“இவனுக்கு பதில் சொலறதுக்குள்ள என் பாஸ் என் டேபிளுக்கு வந்தான். ஏதோ ரிப்போர்ட் வேணுமாம், இன்னிக்கி சாயந்த்ரமே அனுப்பணுமமாம். ஸ்டேடஸ் என்னனு கொடைய ஆரம்பிச்சான். ஒரு பக்கம் பாஸ் ஸ்டேடஸ் ரிப்போர்ட் தொணதொணப்பு. இன்னொரு பக்கம் ஹெட்போன்ல இவன் அட்வைஸ். ஹெட்போன கழட்டினா இவன் குரல் கேக்கறது. என் பாஸ், “ஒ ஜான் ஆல்ரெடி ஆபிசுக்கு வந்துட்டானா?”ன்னு கேட்டான். “இது ஜான் இல்ல. என் பிரண்ட்” “ஒ அப்படியா. ஜான் வந்தானானு பாத்து அவனோட பேசிடேன் ப்ளீஸ். இனிக்கி சாயந்தரம் மீட்டிங்க்ல அவனோட ஸ்டேடஸ் வேற சொல்லணும்”

“நான் வருண்கிட்ட “அப்புறம் பேசறேன்”னு சொல்லி கால் கட் பண்ணேன். அமெரிக்கால இருக்கற ஜானோட பேச ஆரம்பிச்சேன். அதுக்குள்ள இவன் வாட்ஸப்ல மெசேஜ் மேல மெசேஜ். அரை மணி கழிச்சி நான் எதுவும் பதில் போடததால கூப்பிட்டான். “நான் சொன்னது உன்ன ஹர்ட் பண்ணித்தா”ன்னு ரொம்ப செண்டியா ஆரம்பிச்சான். “அப்படி ஒண்ணும் இல்ல. நான் ஒரு முக்கியமான கால்ல இருக்கேன். அதுனால் இப்போ பேச முடியாது. அப்புறம் பேசறேன்” “சாரி சாரி சாரி”ன்னு சொல்லிட்டு வச்சிட்டான். அப்புறம் ஒரு பத்து “சாரி” மெசேஜ் வாட்ஸப்ல” என்று சொல்லி முடித்தாள்

நான் சிரித்துக் கொண்டிருந்தேன். “நாம பேசறப்போ நெறைய பீப் வந்துதே. அவன்தானா?”

“அவனேதான்”

“என்ன பண்ணப் போறே?”

“அதைக் கேக்கதான் ஒன்ன வரச் சொன்னேன். நீ என்ன சொல்ற”

உடனே எனக்குள் ப்ரோடெக்டிவ் இன்ஸ்டின்க்ட் வந்தது. “எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். முதல்ல அவன் எப்படிப்பட்டவன், அவன் எதிர்காலம் என்ன, அவனோட பழக்கவழக்கம் என்ன…”

“கொஞ்சம் மூட்றையா. ஏண்டா நீயும் அவனப் போல அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கற? நீங்க சாதாரணமா நல்லாதான் இருக்கீங்க. ஒரு பொண்ணு எதாவது கேட்டா உடனே சுவாமி விவேகானந்தா

ரேஞ்சுக்கு போயிடறீங்க”

“சரி இப்போ நான் என்னதான் சொல்லணும்”

“இப்போவே அவனுக்கு எஸ் சொல்லட்டா இல்ல கொஞ்ச நாள் பொறுத்து சொல்லட்டா?”

“நான் அவன பாத்ததே இல்ல. நான் என்னத்த சொல்ல முடியும்”

“ஒரு நிமிஷம் இரு” என்று சொல்லிவிட்டு மொபைலை கையில் எடுத்தாள். ரெண்டு தட்டு தட்டிய பிறகு எனக்கு காண்பித்தாள். “இவன்தான்”

ஒவ்வொன்றாய் தட்டிப் பார்த்தேன். அவன் பல இடங்களில் போஸ் கொடுத்திருக்கிறான். குதுப்மினார் முன்பு, தாஜ்மகால் முன்பு என்று பல இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்திருந்தான்.

“அட. நல்லா இருக்கானே. இவன் ஒன்னப் போயி எப்படி லவ் பண்றான்?”

“ஊஹும். இந்த மூஞ்சிக்கே என்ன பிடிக்கலேன்னா…”

நான் சிரித்தேன். “என்ன கொறச்சல். நல்லாதானே இருக்கான்…”

“சும்மா கதை விடாத. அவன் ஹாண்ட்சம் இல்லேன்னு எனக்கு தெரியும். சுமார்தான். அவன பாத்து யாரும் விழமாட்டா”

“நீ விழுந்தியே?”

“அது அவன் அழகைப் பாத்து இல்ல. அவன் நல்லவன்னு எனக்கு தெரியும்”

“அப்போ எஸ் சொல்லவேண்டியதுதானே?”

“இல்லடா. அவன் சீரியஸ்ஸா இருக்கானான்னு எனக்கு தெரியணும். நான் அவன பாத்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. ஒரு தரம் அவன நேர்ல பாத்து பேசிட்டு முடிவ சொல்லலாம்ன்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?”

“அதுவும் சரிதான். உங்க வீட்ல என்ன ஆகும். அப்பா என்ன சொல்லுவார்?”

“என்ன சொல்லுவாரோ தெரியாது. ஆனா அப்பா மூஞ்சிய சுளிச்சா நான் அவனுக்கு சாரி சொல்லிடுவேன். அவர் எஸ்ன்னு சொன்னாதான் எதுவும் நடக்கும்”

“அவன் சென்னை வருவானா?”

“நான் இன்னும் அவன கேக்கலையே”

‘நீ அங்க போக வேண்டியதுதானே?”

“ஆர் யூ கிட்டிங். ஏதோ பெங்களூர்னா ஒரு கத சொல்லிட்டு போகலாம். அங்க நெறைய பிரெண்ட்ஸ் இருக்கா. குர்காவுன் சான்சே இல்ல. வந்தா அவன்தான் வரணும்”

“நீ கூப்பிட்டா வராம போவானா? மின்னல் வேகத்துல வருவான்”

அவள் சிரித்தாள். “என்ன நேர்ல பாத்து அதே வேகத்துல ஓடிடுவான்”

“நடந்தாலும் நடக்கும்”

அவள் மெனு கார்டால் என்னை அடித்தாள்

“சரி. லேட் ஆயிடுத்து. கிளம்பு”

அடுத்த நாள் போன் செய்தாள். “என்ன ஆச்சு?” என்று கேட்டேன். “காபிக்கு வா. சொல்றேன்”

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்ன்னு சொன்னேன். முதல்ல சரின்னான். அப்புறம் “என்ன பத்தி எதாவது தெரியனுமா உனக்கு? வேணும்னா என் கொலீக்ஸ் கிட்ட என்ன பத்தி கேளு. உனக்கு என்ன பயம் சொல்லு”ன்னு உயிரை வாங்கினான். நான் கடைசில, “நாம ரெண்டு பேரும் ஒரு தடவ மீட் பண்ணனும். அப்போதான் ஒரு முடிவெடுக்க முடியும்”ன்னு சொன்னேன். அவனுக்கு ஒரே சந்தோஷம்.

‘அவ்வளவுதானே. இந்த வார கடைசில அங்க வரேன். உன் முடிவோட திரும்பி போவேன்.” பேசிண்டே இருக்கறப்போ ப்ளைட் புக் பண்ணிட்டான். இந்த சனிக்கிழமை வரப்போறான்” என்றாள்.

வாயெல்லாம் பல்.

ஆனால் அவன் வரவில்லை.

“எனக்கு அவ்வளவுதான்டா லக். எனக்கு அப்போவே தெரியும். நான் ரொம்ப சந்தோஷமா இருந்தப்பவே தெரியும் இது மாதிரி எதாவது ஆகும்னு. அவன் வர மாட்டான்னு நெனச்சேன். அப்படியே ஆச்சு.”

“ஏன் வரல”

“ஏதோ க்ளையண்ட் வந்துட்டானாம்.”

“வீக்கெண்ட் எதுக்கு க்ளையண்ட் வரான்”

“என் தலையெழுத்து. அதுக்கு வரான்”

“ஏன் இவ்வளவு அப்செட் ஆகணும். அடுத்த வாரம் வந்துட்டுபோறான்”

“ஆஹா. சூப்பர் ஐடியா. எனக்கு தோணவேயில்ல. நீ ஜீனியஸ்டா”

“நான் என்ன தப்பா சொன்னேன்?”

“ஒண்ணும் தப்பில்ல. ஒண்ணும் தப்பில்ல. ஒன் மேல ஒண்ணும் தப்பில்ல. என் மேலதான் தப்பு. அவன் வருவான் அவன பாக்கலாம்னு நம்பிண்டிருந்தேன் பாரு. என் மேலதான் தப்பு”

என்ன பிரச்னை என்று அவளாகவே சொல்லட்டும் என்று நான் பேசாமல் இருந்தேன். இருவரும் மெளனமாக காபி குடித்தோம்.

“அடுத்த வெள்ளிக்கிழமை அவன் ஜெர்மனி போறான். லாங் டெர்ம். ஆறு மாசம், இல்ல ஒரு வருஷம் ஆகலாம் திரும்பி வர”

“ஓ”

“முதல்லையே சொல்லியிருந்தான். இன்னும் மூணு மாசம் கழிச்சு போவேன்னு. ஆனா ஆபிஸ்ல ப்ரீபோன் பண்ணிட்டா”

“நீ அங்க போயி அவன வழியனுப்ப முடியாதா?”

“நல்லா கேட்ட கேள்வி. இங்க டெலிவரி டெட்லைன் கழுத்துல கத்தி மாதிரி தொங்கறது. என்னோட மாட்யூல்தான் முக்கியமான மாட்யூல். நகுந்தேன் வேல காலி”

“என்னப்பா இது எந்த பக்கம் போனாலும் ஜாம் ஆறது?”

அவள் சிரித்தாள். “உனக்கு சிரிப்பா இருக்குடா. நீ பட்டாதான் தெரியும்”

“அந்த சான்ஸ் இருக்கும்னு தோணல” என்றேன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு

மறுபடியும் சிரித்தாள். “இப்படிதான் அவனும் ஒரே சோகமா இருந்தான். பேசறப்போ அழுதுடுவான் போல இருந்துது. ஒரே ‘சாரி சாரி சாரி’ தான். அவன நான் தேத்திண்டு இருந்தேன். பாவம் ரொம்ப நல்லவன்டா”

“உம். இப்போ அப்பா முகம் சுளிச்சா என்ன பண்ணுவ”

“இப்போ அப்பா 80% இவன் 20%”

“பரவாயில்ல. பையன் இம்ப்ரூவ் ஆறான்”

இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் மூஞ்சியை தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“இப்போ என்ன சண்டை?”

“யார் சொன்னா ஒனக்கு சண்டைன்னு. ஏன் ஆபிஸ்ல எதாவது ப்ராப்ளம் இருக்கக்கூடாதா?”

“நான் எங்க சண்டைன்னு சொல்லவேயில்லையே?”

முறைத்தாள். “நீ என்ன கேட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். கொஞ்சம் பொத்து”

நான் என் கையால் வாயை மூடிக்கொண்டு, “சரிங்க ஆபிசர்” என்றேன்.

சிறிது புன்னகைத்தாள். “கஷ்டகாலம்டா. இன்னிக்கி கார்த்தால அவன் வாட்ஸப் மெசேஜ் அனுப்பினான். “யூ கம்ப்ளீட் மீ” “

“என்ன” என்று கத்திவிட்டேன்

“எனக்கும் இதே பீலிங்தான் இருந்துது”

“நீ என்ன சொன்ன?”

“வாட் நான்சென்ஸ் அப்படின்னு ரிப்ளை போட்டேன்”

“அவன் என்ன சொன்னான்”

“ஒண்ணும் சொல்லல. வாட்ஸப் விட்டு போயிட்டான். ஸ்கைப்ல லாகின் பன்னல. டிவிட்டர்ல என்னை அன்பாலோ பண்ணி ப்ளாக் பண்ணிட்டான்”

“ஒ மை டாக்” என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தேன். அவள் என்னை முறைத்தாள். நான் அவளைப் பார்த்துச் உரக்க சிரித்துக்கொண்டே இருந்தேன். சற்று நேரம் பொறுத்து பார்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. என்னுடன் சேர்ந்து அவளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

சிரிப்பு சற்று குறைந்தவுடன் கேட்டாள், “லூஸாடா அவன். எதாவது ரொமாண்டிக்கா சொல்லணும்னா சொந்தமா எதாவது சொல்லவேண்டியதுதானே. எதுக்கு இந்த சினிமா டைலாக்”

“தம்பிக்கு கற்பனை கம்மி. இப்போ என்ன பண்ண போற?”

“ஒண்ணும் பண்ணப் போறதில்லை. அவனே திரும்பி வருவான்.”

“ஓஹோ. அவ்வளவு கான்பிடண்டா இருக்கியா?”

“எஸ்”

“ஆனா இந்த எபிசோடுக்கு அப்புறம் அவன் மார்க் குறைந்திருக்குமே?”

“நோ. இப்போ 50-50 ஆயிடுத்து”

“வாட் எ மெடிகல் மிராக்கிள்”

அடுத்த நாள் அவளை என் பைக்கில் பிக்கப் செய்துகொண்டு அவள் வீட்டிற்கு செல்லும் வழியில் கேட்டேன், “திரும்பி வந்தானா?”

“நேத்து ராத்திரியே வந்தான். ஆனா மெயில் மூலமா வந்தான். ஒரு பெரிய மெயில் போட்டிருந்தான். உனக்கு ஒரு காம்ப்ளிமெண்ட்டுக்கு எப்படி ரெஸ்பான்ட பண்ணனும்னு தெரியல. ஏன் இவ்வளவு இன்னோசெண்டா இருக்கேன்னு எழுதியிருந்தான்”

நான் சடன் பிரேக் போட்டேன். “என்னாது?”

“ஓட்டுடா. அவன் எழுதினதைச் சொன்னேன்.”

“அடிப்பாவி. என்ன ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணி வச்சிருக்க. சத்யராஜ விபூதி பட்டையோட பாத்தா மாதிரி இருக்கு. உனக்கு இருக்குடீ வருண்.”

“பாவம்டா அவன்”

“மார்க் எக்ஸ்ட்ராவா போட்டாச்சா”

“எஸ். இப்போ இவன் 80%”

“பாவம் உங்கப்பா. அவருக்கு தெரியாமலேயே அவர் மார்க் கொறையுது”

சனிக்கிழமை காலை பத்து மணிக்கு அவளிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. “கம் டு காபி ஷாப் நவ். ஐ மீன் நவ். நோ கொஸ்டின்ஸ் ப்ளீஸ்”

அவள் முகத்தில் எப்பொழுதும் இல்லாத ஒரு தீவிரம் இருந்தது. நான் ஒன்றும் பேசாமல் அவள் முன் உட்கார்ந்தேன்.

என்னை முறைத்து பார்த்தாள். “ஒனக்கு அன்றைக்கே சொன்னேன் இல்ல?”

நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு புரியவில்லை. இவள் காதலைப் பற்றி நான் யாருக்கும் சொல்லவில்லை. இப்பொழுது என்ன நடந்தது?

“என்ன நடந்தது”

“ஒண்ணும் நடக்கல. அதுதான் பிரச்னையே. அன்னிக்கே சொன்னேன் இல்ல. எல்லாம் என் லக். எப்போ எதாவது நல்லது நடக்கும்னு நான் நினைச்சா அதுக்கு ஆப்போசிடா நடக்கும். எப்போவும் அப்படிதான் நடக்கறது. பகவான் எனக்கு மாத்ரம் ஏன் இப்படி பேட் லக் வச்சிருக்கானோ” ஏதோ முதிர்ந்த தத்துவஞானி பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்தாள்.

நேற்று சாயந்திரம் வருணுக்கு பை சொல்லவேண்டும். அவன் ஜெர்மனி புறப்படும் முன் விஷ் செய்யவேண்டும். விடிய விடிய பேச வேண்டும் என்று ஒரே குஷியாக இருந்தாள். இப்போ என்ன ஆயிற்று?

“உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்கறது. நெத்தி சாயந்தரம் சந்தோஷமா இருந்தேன். ராத்திரி இன்னும் சந்தோஷமா இருந்தேன். இது வரைக்கும் வருணோட வெறும் வாய்ஸ் கால்தான். என்னோட கூட ரக்ஷிதா இருப்பா. அதுனால என்னால வீடியோ கால் பண்ண முடியாது. ஆபிஸ்ல பண்ணா அவ்வளவுதான். நேத்தி என் லக் ரக்ஷிதா அவ பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டா. அப்பா அம்மாவும் சீக்கிரமே தூங்கிட்டா. என் லக் இப்படி இருக்கேன்னு எனக்கு ஒரே சந்தோஷம். அப்பவே எனக்கு தெரிஞ்சிருக்கணும் எதாவது கேட்டது ஆகும்னு”

“அவன் லைன் கெடைக்கலையா?”

“எல்லாம் கெடைச்சுது. அவன பாத்த உடனே எனக்கு ஒரே குஷி. ஒரே சிரிப்பு. அவனுக்கும் அப்படிதான். ஏதேதோ பேசிண்டிருந்தோம். கடைசில ராத்திரி ரெண்டு மணிக்கு சரி நீ கிளம்புன்னு நான்தான் சொன்னேன். அவன் என்னோட பேசிட்டு டைரெக்டா ஏர்போர்ட் போகணும். நான் பை சொன்னப்போ அவன் முதல்ல ஒரு ப்ளையிங் கிஸ் கொடுத்தான். அப்புறம் மானிடருக்கு ஒரு முத்தம் கொடுத்தான்.

நான் உடனே, “எனக்கு இதெல்லாம் பிடிக்காது. இப்படியெல்லாம் பண்ணாதே. நான் இன்னும் உனக்கு ‘எஸ்’ சொல்லல. ரிமெம்பர் தட்.”ன்னு சொன்னேன். உடனே அவனுக்கு கோவம் வந்துடுத்து.

“ஓகே. ஓகே. ஐ வில் ரிமெம்பர். தாங்க்ஸ்”ன்னு சொல்லிட்டு ஸ்கைப்லேர்ந்து லாக் அவுட் ஆயிட்டான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சி அவனுக்கு போன் பண்ணேன். கால் எடுக்கல. ஒரு பத்து தடவ பண்ணியிருப்பேன். அவன் எடுக்கவேயில்லை. பேஸ்புக், ட்விட்டர் ரெண்டுத்தையும் டிஆக்டிவேட் பண்ணிட்டான். அவன் ஜெர்மனி ஒழுங்கா போய் சேர்ந்தானோ இல்லையோ கூட தெரியல. எல்லாம் என் தலையெழுத்து”

எனக்கு வருணைப் பிடித்து உதைக்க வேண்டும் போல் இருந்தது. அவன் இப்படி பண்ணிட்டு கிளம்பி போயிடறான். நான் இங்க என்ன சொல்லுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருக்கிறேன்.

“எல்லாருக்கும் லக் நல்லா இருக்கு. எனக்கு மாத்திரம்தான் இப்படி. அந்த ஸ்வாதிய பாரு. அவளுக்கும் அந்த கிருஷ்ணனுக்கும் கல்யாணம். அவோ அத பத்தி ஊர் பூரா டாம்-டாம் பண்றா. பேஸ்புக்ல ஒரே லைக். அந்த கிருஷ்ணன் வந்து வழியறான். இவாளுக்கு எல்லாம் நல்லது நடக்கறது.”

“எந்த கிருஷ்ணன்?”

“ஆமாம். அது ரொம்ப முக்கியம் பாரு. ஏதோ ஒரு உருப்படாத கிருஷ்ணன்”

எப்பொழுதும் பாடும் பாட்டை பாடினேன். “அப்செட் ஆகாத. ரெண்டு நாள்ல திரும்பி வருவான் பாரு”

“இந்த வாட்டி வரமாட்டான்” என்றாள் உறுதியாக.

அவள் சொன்னதே சரியாக இருந்தது. ஒரு மாதம் ஆகியும் வருண்\ பற்றிய ஒரு தகவல் இல்லை. அவன் நண்பர்களை கேட்க இவள் ஈகோ தடுத்தது. “நான் அவன பத்தி இங்க கவலைப்படறேன்னு அவன் நம்பினா அவனே கான்டாக்ட் பண்ணட்டும். நான் இனிமே ஒண்ணும் ட்ரை பண்ண போறதில்ல” என்று சொல்லிவிட்டாள்.

ஒரு நாள் இரவு ஏழு வாக்கில் நாங்கள் காபி குடித்துக்கொண்டிருந்தோம். அவள் மொபைல் சத்தம் செய்தது. டேபிள் மேல் இருந்த மொபைலை எட்டிப் பார்த்தாள். “ஏதோ நம்பர்” என்றாள். “ராத்திரி வேளைலயும் கடன் கொடுக்கறாங்களா? இவங்க தொல்ல தாங்கல” என்று சொல்லிவிட்டு நம்பரை பார்த்தேன். “ஏய். இது ஏதோ பாரின் நம்பர். ஜெர்மனி நம்பர் போல இருக்கு. எடு”

சட்டென்று மொபைலை எடுத்தாள். “ஒ ஹாய் வருண். ஹொவ் ஆர் யூ” என்றாள்.

அவன் ஏதோ சொன்னான். “மீ. மீ. ஐ வாஸ் நாட் இன் டச்? உனக்கு உதை கிடைக்கும்” என்றாள் உரக்க. அந்த கபேவில் இருந்த ஒரு ஜோடி இவளைத் திரும்பி பார்த்தது. மெதுவாக வெளியே நடக்க ஆரம்பித்தாள். என்னை இங்கேயே இருக்க சைகை செய்தாள். போனவள் திரும்பி வரும் பேச்சே இல்லை. வெளியில் நின்று கொண்டு கை அசைத்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டே இருந்தாள். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. நானும் மூன்று காபி குடித்துவிட்டேன். என் பக்கம் பார்க்கும் போதெல்லாம் கிளம்பலாம் என்று சைகை செய்து கொண்டே இருந்தேன். அவளோ ‘டூ மினிட்ஸ்’ என்று சைகை செய்து கொண்டிருந்தாள். கடைசியில் பத்து மணிக்கு பேச்சை முடித்துவிட்டு, போனை ஜீன்ஸ் பேண்ட் பின் பாக்கெட்டில் செருகிக்கொண்டு வந்தாள்.

“சாரிடா. கொஞ்சம் ஜாஸ்தி பேசிட்டேன்”

“யம்மா. கொஞ்சமா?”

“கோச்சிக்காதபா.” அவள் முகம் பிரகாசமாக இருந்தது.

“என்ன சொல்றான்”

“நெறைய சொன்னான். முக்கியமா ஒண்ணு சொல்லணும். அவன் என்ன பாடச் சொன்னான்”

“உன்னையா?”

“என்னையேதான்”

“பாடினியா?”

“பாடினேன்”

“என்ன பாட்டு?”

அவள் பாட ஆரம்பித்தாள். “கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் சின்ன கண்ணனே வா” லயித்து பாடிக் கொண்டிருந்தாள் ஆனால் பாட்டில் ஸ்ருதியும் இல்லை லயமும் இல்லை.

“அம்மா தாயே நிறுத்தறையா?”

“போடா ஞானசூனியம். அவன் ஒன்ஸ் மோர் கேட்டான் தெரியுமா”

“ஆஹா. முத்தி போச்சு. இத ஒண்ணும் பண்ண முடியாது”

அவள் மொபைல் ‘பீப்’ செய்தது. “அவன்தானா?” என்றேன்.

“ஆமாம். குட் நைட் மெசேஜ்” என்றாள்

“அவன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?”

வண்டியில் வீடு திரும்பும்போது என்னிடம் சொன்னாள், “ரொம்ப நல்லவனா இருக்கான்டா. இவன என்னால விட முடியாது. ஐ ஜஸ்ட் கான்ட் லெட் ஹிம் கோ”

“அப்பா வேணாம்னு சொன்னா?”

“யார் வேணாம்னு சொன்னாலும் அவன விடமாட்டேன். நாளைக்கு வீடியோ சாட்டுக்கு வருவான். அப்போ எஸ் சொல்லிடப் போறேன். அவன் முகத்த பாக்க ஆவலா இருக்கேன்”

சுபம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.