றியாஸ் குரானாவுடன் ஒரு நேர்முகம்

பதாகை வாசகர்களுக்கு றியாஸ் குரானாவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இவ்வாண்டு பதிப்பிக்கப்பட உள்ள தனது கவிதை தொகுப்பு குறித்து, பதாகையுடன் அவர் நிகழ்த்திய மின் அஞ்சல் உரையாடல் இங்கு- 

பதாகை – இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் தங்கள் கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டம் என்ன என்று சொல்ல முடியுமா?

றியாஸ் குரானா – கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.

பதாகை – இதில் உள்ள கவிதைகளுக்குப் பொதுத்தன்மை உண்டா?

றியாஸ் குரானா – பொதுவாக கவிதை என்பதற்கு பொதுத்தன்மை இல்லை. ஆனால், கவிதைகள் குறித்து பேச முற்படுபவர்கள், அவைகளுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். பொதுத்தன்மையை கண்டடைவதும், பொதுத்தன்மையை உருவாக்குவதுமே கவிதைப் பிரதிகளை அனுகுவதற்கான விமர்சன முறை என நினைத்திருக்கின்றனர். உண்மையில் அதிகம் பாவிக்கப்படும் விமர்சன முறையும் இதையே கோருவதாக இருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால், விரிந்த தளத்தில் அல்லது ஆழமாக தென்படுவது, பொதுத் தன்மைகளுக்கு எதிராக வாசகர்களைத் துாண்டும் விமர்சனமுறைதான் தேவையான ஒன்று. ஒன்றிலிருந்து மற்றது எப்படி வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்போதுதான் கவிதைப்பிரதி உயிர்ப்பு நிறைந்ததாக செயலுக்கு வருகிறது. இப்படி வேறுபாட்டை நோக்கி சிந்திக்கும்போதுதான் பொதுத்தன்மை என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. வேறுபாட்டை அறிந்துகொள்ளும் நோக்கில் பிரதியை அணுகும்போது சந்திக்கும் பொதுத் தன்மைகள் கவிதையில் நடந்திருக்கும் மாற்றத்தை அறிவதற்கு உதவுகிறது. எனவே, பொதுத் தன்மை என்பது கவிதை குறித்த பழைய விசயங்களை அடையாளங்காண உதவுகிறது.

அத்தோடு, குறித்த ஒருவருடைய கவிதையின் பொதுத்தன்மையை முன்வைப்பதற்கு தேவைப்பாடுகள் ஏற்படும்போது மட்டும் அது பற்றி அக்கறை கொள்வதில் பிரச்சினையில்லை. அந்த வகையில் சொல்வதானால், இதிலுள்ள கவிதைப் பிரதிகளுக்கான பொதுத்தன்மை என்பது, நாம் நவீன கவிதை என நம்பிக் கொண்டிருக்கும் கவிதைப் பிரதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான். அதே நேரம் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டதே. எனது கவிதைகள் வேறுபடுவதின், அதாவது பிறிதாக இருப்பதின் அரசியலை தீவிரமாக அக்கறை கொள்கிறது.

பதாகை – இன்றுள்ள புறச்சூழலில் கவிதை எழுதுவதற்கான மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வது கடினம் என்று தோன்றுகிறது. ஒரு கவிஞராக நீங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான உந்துதலை எப்படி பெறுகிறீர்கள்?

றியாஸ் குரானா – மனதையும் அறிவையும் இரண்டாகப் பிரித்து அணுக முற்படுவது உண்மையில் மேலைத்தேயச் சிந்தனையாகும். அங்கிருந்தே இந்த புரிதல் கீழ்திசைக்கும் வந்தது. மனம் என்பது அறிவின் ஒரு நிலை. அறிவென்பது மனதின் ஒருவகை நிலைப்பாடு, அவ்வளவுதான். எனவே, சிந்திப்பதும், கற்பனை செய்வதும், உணர்வதும் ஒரே வகைச் செயற்பாடடின் வெவ்வேறு தருணங்கள்தான். ஒரு வசதி கருதி இப்படி பிரித்து புரிந்துகொள்ளத் தேவை ஏற்படுகிறது.

உண்மை இதற்கு மாற்றமானது. புறச்சூழலும், அகச்சூழலும் எப்போதும் தொடர்புடையதே. அதன் தொடர்பு மேலோட்டமாக தென்படுவதில்லை. மனிதனின் சாதாரணச் செயல்களைப் போல்தான் கவிதைச் செயலும். எந்தச் செயலும் பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்படும்போது கவித்துவ மனநிலையையே கொண்டிருக்கும். தொழில்கள் அனைத்தும், செயல்கள் அனைத்தும் ஞானிகளுக்கு ஒரே வகையாக தோற்றமளித்ததற்கு இதுதான் முக்கிய காரணம். ஈடுபாடு இல்லாமலும், பிரக்ஞை இல்லாமலும் செய்யப்படும் கவிதைகள்கூட வெறும் வார்த்தைகள் என்ற அளவிலே தங்கிவிட வாய்ப்பு இதனால்தால் ஏற்படுகிறது.

கவித்துவ மனநிலை என்பது பிரத்தியேகமான ஒரு மனநிலையல்ல. பிரக்ஞையோடு செய்யப்படும் அனைத்து வேலைகளும் கவித்துவமானதுதான். ஆகவே, நான் தொடர்ந்து கவிதைச் செயற்பாட்டில் இயங்குகிறேன் என்றால், நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன் என்றுதான் அதற்கு அர்த்தம்.

பதாகை – கவிதை குறித்து கறாரான விமரிசனங்களும் செய்து வருகிறீர்கள். உங்கள் கவிதைகளின் விளக்கமாக விமரிசனங்களைக் கொள்ளலாமா, அல்லது விமரிசனப் பார்வையின் வெளிப்பாடுகளாக கவிதைகள் அமைகின்றனவா? படைப்பூக்க மனநிலை என்ற தளத்தில் இரண்டுக்கும் உள்ள உறவு என்ன?

றியாஸ் குரானா – ஏற்கனவே இருக்கின்ற கவிதைகளையும், அதைச் சாய்வுகொண்ட இன்றைய கவிதைகளையும் அணுகும்போது, நான் கறாரான விமர்சனங்களை முன்வைப்பதில்லை. அந்தக் கவிதைகள் என்ன செய்கின்றன? என்ன செய்ய முற்படுகின்றன? அதற்கு கவிதைப்பிரதி எப்படியான செயல்களை முன்வைக்கின்றன என்றவகையில் அணுகுகிறேன்.

அதே நேரம், பழக்கப்பட்டுப்போன கவிதைச் செயலிலிருந்து விலகிச் செல்ல எத்தனிக்கும், விலகிச் செல்லும் கவிதைகளை அணுகும்போது, இந்தப்பிரதி எப்படி தன்னைக் கவிதையாக நிகழ்த்திக் காட்டுகின்றது என்று வாசிக்க முற்படுகிறேன். இந்த வகை வாசிப்பை வளர்த்துச் செல்லும்போது கறாரான விமர்சனங்களை முன்வைக்கிறேன். ஏற்கனவே உள்ள கவிதைத் தன்மைகளை நான் புறந்தள்ள விரும்புவதில்லை. ஆனால், புதிய வகை கவிதைப் பிரதிகளை அணுகும்போது, பழைய கவிதைகளின் பண்புகளையும் தன்மைகளையும் கடினமான முறையில் இரக்கமின்றி சுட்டிக் காட்டுகிறேன்.

இருக்கின்ற நவீன கவிதைகளின் பங்களிப்புக்களை மறுத்தொதுக்காமலும், புதிய கவிதைகளின் உருவாக்கத்திற்குத் தேவையான விவாதங்களையும் அதற்கான செயல்முறைகளில் ஏற்படும் கவிதைச் சம்பவங்களையும் ஒருங்கே ஆதரிக்கிறேன். அந்த வகையில் கவிதையின் விளக்கமாக விமர்சனத்தை பாவிக்கிறேன். விமர்சனப் பார்வையின் விளக்கங்களாக புதிய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

நவீன கவிதை என நம்பப்படும் வகையினங்களை தொந்தரவு செய்யாமல் அந்த வடிவங்களிலும், அதை நெருங்கும் எடுத்துரைப்பு முறையிலும் கவிதையைப் புதிப்பிப்பதுதான் இங்கு அதிகம் நடைபெறுகிறது. அதாவது, நவீன கவிதையை இங்கு பலர் புதுப்பிக்கிறார்கள். டிங்கரிங் வேலை செய்து புதிதாக மாற்றுவது (ஒட்டுவேலை). இன்னொன்று இருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு கவிதையை உருவாக்குவது. புதுப்பிப்பதற்கும், புதிய ஒன்றை உருவாக்குவதற்கும் படைப்பூக்கம் தேவைதான். நான் முற்றிலும் புதிய கவிதைப் பிரதிகளை உருவாக்க முயற்சித்திருக்கிறேன்.

பதாகை – கவிதைகள் வாசிக்கக் கடினமாக இருக்கின்றன என்பது ஒரு பொதுக் குற்றச்சாட்டு. உங்கள் அனைத்து கவிதைகளும் தேர்ந்த வாசகர்களை முன்னிட்டு மட்டுமே எழுதப்படுகின்றனவா? ஒரு சாதாரண வாசகன் உங்கள் கவிதைகளை அணுகுவது சாத்தியம்தானா? கவிதைகளின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் பரவலான வாசகர்களை வாசிப்பின்னுள் அனுமதிக்க முடியுமா?

றியாஸ் குரானா – ஆமாம், எனது கவிதைகள் வாசிக்க கடினமானதாகவே இருக்கும். அதை நான் மிகவும் அறிந்தே செயற்படுகிறேன். நான் பொதுவான அனைத்து வாசகர்களுக்காகவோ, அல்லது தேர்ந்த வாசகர்களுக்காகவோ கவிதைப் பிரதிகளை எழுதவில்லை. மிகத் தேர்ச்சி பெற்ற வாசகர்கள்கூட எனது கவிதைகளை நெருங்கும்போது அதிர்ச்சியடைந்தே ஆக வேண்டியிருக்கும். நவீன கவிதைகளை அர்த்தம் பிறப்பிக்கும் செயலில் எப்படி அணுகினரோ அப்படி அணுக முடியாதிருப்பதுதான் அதற்கான காரணம்.

ஏனென்றால், நவீன கவிதைகளைப்போல் வினைபுரிவதற்கு எனது கவிதைகள் இடந்தராது. கலங்கடித்துவிடும். ஆகவே, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு என்னை மகிழ்விக்கிறது. முற்றிலும் புதிய வாசகர்களை உருவாக்கவே எனது கவிதைகள் முயற்சிக்கின்றன. இதுவரை பழக்கமற்ற, ஆனால், கவிதை என நான் முன்வைக்கும் பிரதிகளை அணுகுவதற்கு அவர்கள் முற்றிலும் புதிய அணுகுமுறையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கின்ற விமர்சன முறைமைகளால் எனது கவிதையை எதுவும் செய்துவிட முடியாது. அந்த விமர்சன முறைமைகள் எனது கவிதைகளின் முன்னே செயலிழந்து போய்விடும். அவைகளை அணுகும் விமர்சன முறைமைகளை வாசகர்கள் கண்டுபிடித்துவிட்டால், அல்லது அடையாளம் கண்டுவிட்டால் எனது கவிதைகளைவிட எளிமையான கவிதைகள் எதுவுமில்லை என்றே சொல்லத் தொடங்குவர். இதற்கு முற்றிலுமான கருத்தியல் மாற்றம் தேவை.

நவீன கவிதைகள் போலில்லாது எனது கவிதைகள் தனது பொருளுருவாக்கத் தளத்தை மாற்றியமைத்திருக்கிறது. எனது கவிதைகளின் முன்னிலையில் சாதாரண வாசகன், தேர்ந்த வாசகன் மிகவும் அதிக வாசிப்புள்ள வாசகன் என்கின்ற எல்லோரும் ஒரே வகையினராகவே நிற்கின்றனர். எனது கவிதைகளை அணுகும் செயலிலும், பொருளுருவாக்கம் செய்ய முற்படும் முயற்சியிலும் பங்களிப்புச் செய்ய முற்பட்டால் அது ஒரு புதிய வாசகரை உருவாக்கும். எனது கவிதைகளுக்கு ஏற்கனவே வாசகர்கள் இல்லை. இனித்தான் அவர்கள் உருவாக வேண்டும்.

பதாகை – தற்கால இலக்கியத்தில் கவிஞர்களைவிட கதை எழுதுபவர்கள் அதிகம் மதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன், விமரிசகர்களாலும்கூட. கவிதையைவிட்டு தற்கால தமிழின் ஓசையும் கற்பனையும் தொலைதூரம் நகர்ந்து விட்டதா?

றியாஸ் குரானா – தற்காலம் என்பதை தமிழ்நாட்டுச் சூழலில் வைத்து நோக்கும்போது, அப்படித் தோன்ற வாய்ப்புள்ளது. தமிழின் விரிந்த பரப்பிற்குள் நிலமை அப்படிப்பட்டதல்ல. ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் கதைக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கிறது. கதைக்காமல் அவர்களால் இருக்கமுடியாது. திரைப்பட வசனங்கள்கூட கதை சொல்வது போலவே இருக்கும். ஏன், பாடல்கள்கூட படத்தின் பெரும் கதையை சொல்லி முடிக்கவே அங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறந்து, வளர்ந்து, மரணிக்கும் நீண்ட சம்பவங்களைக்கூட ஒரு ஐந்துநிமிடப் பாடலில் சொல்ல விரும்புபவர்கள். பெரும் காப்பியங்கள் கூட கதைகளாலானதுதான். ஆகவே, கதை சொல்லுபவர்கள் மதிக்கப்படும் ஒரு நிலை வியப்புக்குரியதல்ல. எனினும், இதை பொதுவான இலக்கிய குணமாக கருதுவதில் சிக்கல்கள் உள்ளன.

தமிழில்கூட எப்போதும் ஒரு எதிர்மரபு இருந்து வந்துள்ளது. அந்த மரபு, இப்படியான பொதுப்படையான நிலவரங்களையும், அதிகம் மதிக்கப்படுகிறது என்ற விளம்பரம் சார்ந்த கருத்துருவங்களையும் ஏற்பதில்லை. அதிகம் மதிக்கப்படும் ஒரு விசயத்தைச் சுற்றி தன்னை வளர்த்துக் கொள்ளுவதில்லை. இப்படியான அறிவிப்புக்கள் பிரச்சாரம் சார்ந்தது. விளம்பரத்திற்கு நிகரானது என ஒரு சிறுபான்மையினர் அறிந்து வைத்திருக்கின்றனர். மதிக்கப்படுவதற்குப் பின்னால் நகராமல், தமது கருத்துக்களையும், எழுத்துக்களையும் அக்கறை கொள்பவர்கள். அதனுாடாகத்தான் இலக்கிய வளர்ச்சியே சாத்தியமானது.

உண்மையில், விமரிசகர்கள் அங்கு தமது ஆற்றலை இழந்துவிட்டனர். இல்லாவிட்டால் கதைகள் மதிக்கப்படுவதான் ஒரு சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை. விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமிருக்கிறது. இன்னொரு புறம், இப்படி கதைகள் அங்கு மதிக்கப்படுவதற்கான காரணங்களும் ஒருவகையில் நியாயமானதாகவே இருப்பதுபோல் தோன்றுகிறது. அங்கு கவிதைகள் தேக்கமடைந்துவிட்டன. நவீன கவிதைகள் என நம்பப்பட்ட ஒருவகை கவிதைச் செயல்தான் பெருகியிருக்கின்றது. இதுகூட அவர்களைச் சலிப்படையச் செய்திருக்கலாம்.

ஆமாம், கவிதையைவிட்டு அதிக விசயங்கள் துாரமாகிவிட்டன. தெளிவாகச் சொல்லுவதெனில், கவிதை என நம்பப்பட்ட அதிக விசயங்கள் துாரமாக்கப்பட்டு விட்டன. கவிதை உற்பத்தியில் அவசியமற்றவை, இருக்கக்கூடாதவை என கடந்த காலங்களில் நம்பப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகமான விசயங்களைக் கொண்டு கவிதையை நிகழ்த்திக் காட்டும் ஒரு தலைமுறை இங்கு உருவாகி விட்டிருக்கிறது. எனவே, இந்தக் குற்றச்சாட்டு ஒருவகை ஏக்கம்தான். கவிதை எப்படியிருக்க வேண்டும் என்றோ அல்லது, இப்படியிருந்தால்தான் கவிதை என்றோ நம்பியிருந்தவர்கள், தற்காலக் கவிதைகளின் முன் சென்றால் ”இந்த வகைப் பதிலையே” சொல்வர். அந்தப் பதில், ”கவிதை தன்னிடமிருந்து பல விசயங்களை இழந்துவிட்டது” என்பதாகும். விசயம் என்னவென்றால், கவிதை தனது அடிப்படைகளை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு வருகின்றது. நான் சொல்லும் இப்படியான கவிதைப் பிரதிகள் அதிகம் இல்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

பதாகை – உங்கள் கவிதை நூலில் புதிய, சோதனை முயற்சிகள் உண்டா?

றியாஸ் குரானா – நிச்சயமாக, மிக அதிகமான முயற்சிகள் உண்டு. பிற கலைகள், மற்றும் இதுவரை இலக்கியமற்றது எனக் கருதப்பட்ட செய்தி, கட்டுரை, துணுக்குகள் என ஏகப்பட்ட அம்சங்களைக் கொண்டு கவிதைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன். வடிவங்களிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கதை சொல்லலின் நீட்சி, மற்றும் நான்லீனியர் உத்தி, மெட்டா பிக்சன் புனைவு உத்தி, அது மாத்திரமின்றி, சினிமாக்களிலே அதிகம் பாவிக்கப்படும் உத்திகளையும் பயன்படுத்தி கவிதைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன். எனது பிரதிகள் ”கவிதை” என அர்த்தப்பட்ட நவீன நிலவரங்களை கொண்டு அமையப்பெற்றவையல்ல. அமைப்பு தளத்தில் மாத்திரமல்ல, கருத்துத்தளத்திலும் சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நவீன (தமிழின்) கவிதைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சிந்தனையாளர்கள், எனது பிரதிகளை கவிதையல்ல என்றே சொல்லுவர். அப்படிச் சொல்லுவதினுாடாகத்தான், நான் எழுதியிருப்பது நவீன கவிதைகள் அல்ல என்பதை உறுதி செய்கிறேன். தனித்த அமைப்பு, தனித்த குணநலன்கள், பண்புகள், கருத்துநிலைகள் என இறுக்கமான அம்சங்களால் ஒரு வரையறைக்குள் இருத்தப்படக் கூடியதல்ல. அப்படி இருக்கக்கூடியதாக கவிதை பாவிக்கப்படுமாயின் அது வரையறைகளுக்குள் சிக்கிவிட்தாகவே அமையும்.

நவீன கவிதை என்பது இப்படி இருப்பதுதான் என ஒரு கருத்து நிலைபெறுமாயின் அதுகூட கவிதைக்கான இலக்கணமாக மாறிவிடும் அல்லவா? என்னைப் பொறுத்தவரை, எப்போதெல்லாம் கவிதைக்கான ஒரு வரையறை, இலக்கணம் உருவாகும் சூழல் ஏற்படுகிறதோ, அப்போது அதை மீற எத்தனிக்கும் பிரதிகளைத்தான் நான் கவிதைக்கான பண்பைக் கொண்டிருப்பதாக கருதுவேன். எனது தொகுப்பை எதிர்கொள்ளும்போது அது உங்களுக்கே புரிந்துவிடும். எனது கவிதைகளைப் பற்றி சொல்லவும், விவாதிக்கவும் எனக்கு தயக்கம் சிறிதுமில்லை. விரிவாகப் பேசும் வாய்ப்புக்கள் வரும்போது செய்யவிருக்கிறேன்.

பதாகை – ஒரு கவிஞராக, உங்கள் வளர்ச்சியை இந்த தொகுப்பைக் கொண்டு எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?

றியாஸ் குரானா – காட்டோரமாய் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று, வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு பின்னே சென்றது. அவைகளோடு விளையாடியபடி நெடுநேரம் சென்றபின், திருப்பிப் பார்த்தது. தான் காட்டில் நிற்பதையும், தனக்கு வழிதப்பிவிட்டதையும் உணர்ந்தது. சற்று பயமாகவே இருந்தது. பயங்கர மிருகங்கள் காட்டில் வசிப்பதாக கேள்விப்பட்டிருந்தும், எதிரே ஒரு புலி தன்னை அடித்துச் சாப்பிட வருவதைக் கண்டு கலங்கிப்போய் நின்றது. எனினும், பின்வாங்கவில்லை. தலையைச் சிலுப்பிக் கொண்டு அருகில் கிடந்த பிணத்தின் மீது உட்கார்ந்து, ” இந்தப் புலியை அடித்துக் கொன்று சாப்பிட்டேன். நன்றாகத்தான் இருக்கிறது. இன்னுமொரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே,” என்று உரத்துச் சத்தமிட்டுச் சொன்னது. அதைக் கேட்ட புலி. பயத்தில் திரும்பிப்போனது. இதைப் பார்த்துக்கொண்டு மரத்திலிருந்த குரங்கு, பின்னால் சென்று புலியிடம் உண்மையைச் சொன்னது. ”அந்த நாய் புலியை அடித்துக் கொல்லவில்லை. அங்கு கிடந்த எலும்பின் மீது உட்கார்ந்திருக்கிறது” என்றது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த புலி, குரங்கை தனது முதுகில் ஏற்றிக்கொண்டு நாயை நோக்கி வந்தது. இதைக் கண்ட நாய், ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என உணர்ந்திருந்தும் பயம் கொள்ளவில்லை. மிகச்சாதாரணமாக காத்திருந்தது. புலி ஓரளவு அருகில் வந்ததும், நாய் சொன்னது ” வெரிகுட் குரங்கே, நீ சொன்னதைப்போல் செய்துவிட்டாய். இன்னுமொரு புலியைக் கூட்டி வருகிறேன் என்றதைச் சாதித்துவிட்டாய். நான் தருவதாகச் சொன்ன சன்மானத்தை நீ பெற்றுக் கொள்ளலாம்” என்றது. பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகிக்கலாம்.

ஏன் இப்படி ஒரு கதையைச் சொல்கிறேன் என்றால், இந்தக் கதையில் வரும் நாயின் நிலைதான் என்னுடையதும். கவிதைகள் எழுதினேன். இலக்கிய உலகத்தினுள் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கச் சென்றவன். ஆனால், புலிகளிடமிருந்து தப்பிச் செல்வதற்காக விமர்சனத்துறையிலும் கால் வைக்க வேண்டியிருக்கிறது. வெறும் புனைவெழுத்துக்களைச் சிந்திக்கவும், நேரம் செலவிடவுமே விரும்புபவன். ஆனால், அது சாத்தியமில்லை. என்னை வளர்த்துக்கொள்ளவே விமரிசனங்களைப் பயின்றேன். ஆனால், அதை ஆயுதமாக பாவிக்கத் துாண்டுகிறது இலக்கிய வெளி. நான் வளர்ச்சியடைந்திருக்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. கவிஞர் என்பதிலிருந்து கவிதை சொல்லி என மாறியிருக்கிறேன். அத்தோடு புலிகளை எதிர்கொள்ளவும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

பதாகை – இந்தக் கவிதை நூல் என்று மட்டுமல்ல, கவிதையின் அவசியம்தான் என்ன?

றியாஸ் குரானா – எது அவசியமானது? அவசியமற்றது எது? என்பது உண்மையில் அரசியல் சார்ந்த கேள்வி. அதன் பின் பயன்பாடு தொடர்பான அம்சங்கள் தொக்கி நிற்கின்றன. இது அவசியமற்றது என்ற ஒரு பகுதியை அழித்துவிடும் நோக்கத்தை பொருட்படுத்தக் கோருவது. இப்படித்தான் நமது மனித வரலாறு சிந்திக்கப் பழக்கப்பட்டிருக்கிறது. மோசமான ஒரு பகுதியை அழிக்க வேண்டியது அறம் என்பதுபோல் நம்மை நம்ப வைத்திருக்கிறது. இந்த அணுகல் முறையே, கலை இலக்கியங்களிலும் பெரும் தேர்வாக அமைந்திருந்தது. தேவையற்றவைகளை நீக்கினால் சிற்பம் கிடைக்கும் என்றும், இதுபோலவே, இலக்கியங்களிலும் சிந்தித்தனர். தேவையற்றவைகள் என்ற ஒன்றை ஒவ்வொரு பிரதியும் கட்டாயம் தனது கதையாடலினுாடாக உருவாக்க வேண்டும்.

அவசியமா? இல்லையா? என்ற தேர்வு மனிதச் செயலுக்கும், அதன் நடத்தைகளுக்கும் உட்பட்ட சிந்தனைகளுக்குள் பெரும்பாலும் அடங்கிவிடுகிறது. எனவே, மனிதர்களிடம் அக்கறை கொள்கின்ற அனைவரும், மனிதர்களின் அனைத்து நடத்தைகளையும், செயல்களையும் தணிக்கை செய்யாது புரிந்து கொள்ளவே வேண்டியிருக்கிறது. மனித குலம் இற்றைவரை அவசிமற்றது, தீங்கானது எனக் கருதி அழிக்க வேண்டும் எனக் கருதிய அனைத்து விசயங்களும் இன்றும் பெரும் ஆற்றலோடு வளர்ந்தபடியேதான் இருக்கின்றது. ஆகவே, அவசியமானது என்றும், அவசியமற்றது என்றும் தணிக்கை செய்வதும், அவைகளை அழிப்பதற்கும் பதிலாக அதை புரிந்துகொள்ளும் வழிகளை சிந்திக்க வேண்டியிருக்கிறது.

கவிதையும் அதைப்போல்தான், அதுவும் மனித நடத்தைகளில் ஒன்று. அல்லது செயல்களில் ஒன்று. அதற்கு முன்னே அவசியமா? அவசியமற்றதா? என்ற கேள்விகளை எழுப்புவதைவிட்டுவிட்டு அதை புரிந்துகொள்ள முயற்சிப்போம். பிளேட்டோவின் லட்சியக் குடியரசிலிருந்து கவிஞர்களை அழிக்க வேண்டும் என்ற கட்டளை தொடங்கியது. அன்று தொட்டு, கவிதை மிக ஆபத்தான, தீங்கான, தேவையற்ற ஒன்றாகவே பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. கவிதையைக் கண்டு பிளேட்டோவைப் போன்ற புத்திஜீவிகள் மட்டும் அச்சப்படவில்லை. அதிகாரத்திலிருப்பவர்கள் தொடங்கி, கவிதையைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் வரை பயப்பட்டிருக்கிறார்கள்.

ஆம், உண்மையில் கவிதை பெரும் ஆபத்து நிறைந்த ஒன்றுதான். ஏனெனில், கவிதைச் செயல் என்பது சிந்திப்பதற்கான ஒரு பெரும் வழி. அதே போல, பெரும் அறிவியல்களைக்கூட கலங்கடிக்கக் கூடிய மாயமான கற்பனைச் செயல். நானோ கவிதை அவசியமா? இல்லையா? என்ற கேள்வியைக் கடந்து நிற்பவன். அதன் ஆபத்தான செயற்பாட்டை புரிந்து, அங்கிருந்து செயற்படுபவன். அறிவியலை, விஞ்ஞானத்தை, ஆன்மீகத்தை திணறடிக்கும் கவிதையின் ஆற்றலை சிந்தித்து நிற்பவன். எனவே, கவிதையை சிந்தனையின் மாற்றாக யோசிப்பவன்.

பிரபஞ்சத்தைப் பார்த்து மனிதனின் பயன்பாட்டுக்குரியதுதான் இது என்றது, விஞ்ஞானமும் ஆன்மீகமும், மனிதன் மற்றும் இயற்கை என இரண்டாகப் பிரித்தது. கவிதை அப்படி சொல்ல விரும்பவில்லை. மனிதனும் சேர்ந்துதான் இயற்கை என்கிறது. மனிதனை மய்யப்படுத்தி இயற்கை என்ற ஒன்றை விளிம்புநிலைக்குரியதாக மாற்றியிருக்கும் இன்றைய சிந்தனை நிலையில், உதிர்ந்துவிழும் சிறு இலையும் மனிதனைப் போன்ற ஒரு தன்னிலைதான் என்று இன்று அக்கறை கொள்கிறது.

வரலாற்றில், அதிகாரமும், அரசியல்களும், மதங்களும், விஞ்ஞானமும் தனக்கு ஆதரவாக கவிதையை பயன்படுத்த முயற்சித்திருக்கின்றன. பயன்படுத்தியிருக்கின்றன. எனினும், கவிதை அந்த கட்டுப்பாடுகளையும் மீறி இன்னும் சுதந்திரமாக இருப்பதே தன்னால் சாத்தியப்படக்கூடிய சொல்முறையினால்தான். எப்படியும் தன்னால் சொல்லமுடியும் என்ற ஆற்றலினால்தான் இன்னும் திமிறிக்கொண்டிருக்கிறது. ஆகவே, கவிதையை நோக்கி அவசியமா இல்லையா என்று கேள்விகளைக் கேட்க முடியும். அது தவறுமல்ல. ஆனால், அதற்கு கவிதை சொல்லும் பதிலை இன்னும் யாராலும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது. அந்தப் பதில், இப்போது மட்டுமல்ல இதற்குப் பிறகு கேட்கப்பட்டாலும் அறிவியல் தொடங்கி எந்த துறையாலும் புரிந்து கொள்ள முடியாத பதிலைச் சொல்ல கவிதையால் முடியுமாக இருக்கும். அப்படியிருக்கும் வரைதான் அது கவிதையாகவும் இருக்கும்.

பதாகை – உங்கள் அடுத்த முயற்சி?

றியாஸ் குரானா – அடுத்த முயற்சி எது எனக் கேட்பதற்கு கவிதையில் இடமில்லை. அப்படியான கேள்வி மேலோட்டமான சில விசயங்களைத் தடங்காட்ட மட்டுமே முடியுமாக இருக்கும். கவிதை எப்படியோ அதுபோலதான் அதன் செயற்பாடுகளுக்கும் படிமுறை வளர்ச்சி கொண்டதில்லை. எனவே, அடுத்த முயற்சி எது எனச் சொல்ல கவிதையும், கவிதைச் செயலும் இடந்தராது.

ஆனால், இப்போது உள்ள கவிதைச் செயலை மறுப்பதுதான் அடுத்த முயற்சி. அப்படி மறுப்பதற்கு கடினமான உழைப்பு தேவை. எனது இப்போது உள்ள கவிதைச் செயல்கூட ”நவீன கவிதை” என பாவிக்கப்படும் கவிதைகளின் அத்தனை கோணங்களையும், தன்மைகளையும் மறுப்பதுதான். அதைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். இந்த வகை முயற்சியே இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. இது தொடரவும், முற்றாக இல்லாது போனாலும் திருப்தி தரும் வகையில் மறுப்பதற்கே பல ஆண்டுகள் தேவைப்படலாம்.

இது என்னால் மாத்திரமே முடிகிற ஒரு விசயம் என்று நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. இன்றுள்ள, இதன் பின் வருகின்ற கவிஞர்களின் பங்களிப்புக்களால் சாத்தியமாகக்கூடிய ஒன்று. ஆனால், இதை நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன் அவ்வளவுதான். இன்னும் சில இளம் கவிஞர்கள் சக பயணிகளாக வந்து சேர்ந்திருக்கின்றனர். நவீன கவிதை என்ற சிந்தனையால் மிக மோசமாக பாதிப்புற்றிருக்கும் கவிதைமனம்தான் தமிழ் கவிதைக்கான படைப்பூக்கமாக இன்றிருக்கிறது. அதைக் கடந்த கவிதை மனமோ அல்லது நவீன கவிதையை மறுக்கும் கவிதைமனமோ இங்கு இன்னும் திரட்சியுறவில்லை. அப்படியான ஒரு அசைவியக்கத்தை நோக்கியே நான் அதிகம் பேசியபடியும், கவிதைக்கான மாற்றப்பிரதிகளை உருவாக்கியபடியும் இருக்கிறேன்.

நவீன கவிதைமனதை கலங்கடிக்கும் மனநிலை ஒன்று ஆங்காங்கே சிறுதுளிகளாக விழுந்துகொண்டிருக்கிறது. உண்மையில், அடுத்த முயற்சி என்ன? என்ற கேள்வி, நவீன கவிதைமனம் தயாரித்த ஒரு முக்கிய கேள்விதான். நவீன கவிதைமனதால் சிந்திக்காதபோது இவை சாதாரணமான கேள்விகளாகவே தோன்றும். இன்று கவிதை குறித்து கேட்கப்படும் அனேகமான கேள்விகள் நவீன கவிதைமனதால் வடிவமைக்கப்பட்டவையே. எனினும், நான் சொல்லும் பதில்கள் அந்தக் கேள்விகள் உண்மையில் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விபரிக்கும் பதில்கள் மாத்திரம்தான். கவிதை குறித்த விவாதங்களை எதிர்நோக்கியே அதிகம் பேச முற்படுகிறேன். துரதிருஷ்டம் என்னவென்றால், விவாதங்கள் தொடரப்படுவதே இல்லை. எனினும், எனது இந்தச் சிறுபேச்சுக்களினுாடாக எனக்கான பார்வையாளர்களை உருவாக்க முயற்சிக்கிறென். அது சாத்தியப்பட்டுமிருக்கிறது.

பதாகை – நன்றி, தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.