மாதம் இருமுறை சிற்றிலக்கிய பத்திரிகையான ‘மணல்வீடு’, தமிழின் கூத்துக்கலைகளை பற்றிய கவனத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்க தொடர்ச்சியான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இவ்வருட புத்தக கண்காட்சிக்கு தங்களுடைய ‘மணல்வீடு இலக்கிய வட்டம்’ சார்பாக கொண்டு பா. ராஜாவின் மாயப்பட்சி (கவிதை தொகுப்பு), மயூரா ரத்தினசாமியின் மூன்றாவது துளுக்கு (சிறுகதை தொகுப்பு) மற்றும் தவசியின் அழிபசி (கவிதை தொகுப்பு) என்று மூன்று புத்தகங்களை கொண்டு வருகிறார்கள். புத்தக வெள்யீடுகளுடன், தொல்கலைகளின் ஆதாரவடிவம் மாறாமல் உயிர்ப்போடு வைத்திருக்கும் கூத்து கலைஞர்களுக்கான அங்கீகாரமும், விருது வழங்குதலும் முக்கிய நிகழ்வாக இருந்தது. புதிய புத்தகங்களைப் பற்றியும், தங்களுடைய அடுத்த செயல்திட்டங்களைப் பற்றியும் திறந்தமனதுடன் பதாகையுடன் நிகழ்த்திய உரையாடல்.
பதாகை: மணல்வீடு வெளியீடாக கவிதைப் பிரதிகளும், சிறுகதை தொகுப்பும் ‘மணல்வீடு’ கொண்டு வருவது மகிழ்ச்சியானதொரு விஷயம். இந்த நூல் தேர்வுகளைப் பற்றி, மணல்வீட்டின் பதிப்பக கொள்கைகளைப் பற்றி கூறுங்களேன்.
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: படைப்பு அதன் இடத்தை அடையும் . உரியதை தேடிக் கண்டும் மணல்வீடு வெளியிடும். கலை இலக்கிய சார்ந்த ( பிரதி- நிகழ்கலை இரண்டுக்கும்) சமதையான மதிப்பீடுகள், உரையாடல்கள் உருவாக்குதல் சமரசமற்று தகுதியான அப்படைப்புகளை நூலாக்கம் செய்வதும் பின் அதன் செயல்களாம்..
பதாகை: இன்று கவிதையைவிட உரைநடைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஏன் இந்த மாற்றம்? சமகால இலக்கியத்தில் கவிதையின் இடம் என்ன?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: அதனதன் முக்கியத்துவம் அதற்க்கு …ஒன்றின் இடத்தை ஒன்று இட்டு நிரப்ப முடியாது …வசதி ஆதாயம் கருதி நாம்தான் பாகுபடுத்தி கொள்கிறோம் ..என்றும் புதியது கவிதை அதன் இருப்பும் அப்படியே .
பதாகை: புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் குறைந்து வரும் நிலையில் புனைவெழுத்து தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளக்கூடும்?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: மாறுபட்ட களங்களை படைத்துக்காட்டுவதின் வழி மட்டுமன்றி தளக்கோலங்களை நிகழ்த்தியும் காட்ட புனைவு பிழைக்கும் .
பதாகை: இந்த மண்ணின் வழிபாட்டுக்கலையின் இன்றியமையாத அங்கமாக திகழும் கூத்துக்கலையை ‘மணல் வீடு’ இலக்கிய வட்டம் எந்தெந்த வகையில் எல்லாம் முன்னெடுக்கப் போகிறது?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: தொன்மைக்கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன்நிகழ்த்துனர்கள் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும் கலைஞர்கள் உளப்பாங்கு இடுக்குகள் சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டுமென்பதை தெளிந்து அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்கும் பொருட்டு
களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து முனைப்புடன் செயல்பட்டு செயல் பட்டுவருகிறது
கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை தருமபுரி மாவட்டம் – மூங்கில் கோம்பை யில் தொடங்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப்பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன.( நடப்பு கூத்துப்பள்ளி ஒன்று ஏர்வாடியில் இயங்கி வருகிறது )
கொங்கு மண்டல கலைவடிவங்களான கூத்து, பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம் ஆகியனவற்றை கலைநுகர்வு பரப்பில் கவனப்படுத்தும்படியாக சங்கீத நாடக அகாதமி சார்பில் ‘களரி’ சென்னை, டில்லி, கௌகாத்தி உட்பட பிற மாநிலங்களில் மற்றும் தமிழகமெங்கும் நிகழ்வுகள் நடத்தியது.
சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்தது.
கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் அருங்கூத்து என்றதோர் தொகைநூற் பிரதியையும், விதைத்தவசம் என்றதோர் ஆவணப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.
மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட நிகழ்த்துக் கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெறக் ‘களரி உடன் மணல்வீடு களப்பணி ஆற்றியிருக்கிறது.
முனைப்புடன் செயல்பட்டு வரும் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளியை தருமபுரி மாவட்டம் – மூங்கில் கோம்பை யில் தொடங்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப்பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன.
பதாகை: எந்தெந்த வகை கூத்துகள் இங்கே பயின்றப்பட்டு வந்தன? அவற்றில் சமகாலத்தில் எந்தெந்த வகைகள் உயிர்ப்புடம் நிகழ்த்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: எனக்கு விபரம் தெரிய கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயின்றும் நிகழ்த்தப்பட்டும் வந்துள்ளன. மிக அண்மைக்காலத்தில் தொழிசார் நகர்ப்பகுதிகளில் இக்கலைகள் வாய்ப்பிழந்து நசிந்து விட்டாலும் கிராமப்பகுதிகளில் உயிர்ப்புடன் நிகழ்த்தப்பட்டு வருகின்றன …
பதாகை: கூத்துக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வும் உங்களால் ஒருங்கு செய்யப்பட்டிருக்கிறது. இவ்விருதுகளுக்கான கலைஞர்கள் தேர்வு மற்றும் விருதிற்கான முக்கியத்துவம் பற்றி கூறுங்களேன். இது போன்ற நிகழ்வுகளுக்கான ஆதரவு தமிழ் சூழலில் எப்படி இருக்கிறது? தனியார் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களின் ஆதரவு கிட்டுகிறதா?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள். நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்..
வேலைத்திட்டம் எது வென்றபோதிலும் எண்ணத்தை செயலாக மாற்றும் முன் அதற்கு வேண்டிய நிதியில் மூன்றில் இரண்டு பங்கு கைப்பணத்தை எடுத்து வைத்தப்பிறகே காரியம் தொடங்குகிறேன். இயலாத அரும்பெரும் செயற்பாடுகளுக்கு என் ஆப்த நண்பர்களும் , கலை ஆர்வலர்களும் உதவுகிறார்களே அன்றி அரசோ , அதைபோன்ற நிறுவனங்களோ இதுவரை உதவவில்லை
பதாகை: தமிழ் நவீன இலக்கியத்தில் கூத்துக்கலை குறித்த பதிவுகளுண்டா? சிறுபத்திரிகைகளின் ஆதரவு கூத்துக்கலைக்கு எவ்வளவு இருக்கிறது?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: எனக்கு தெரிந்தவரை யாத்ராவில் வந்த வெங்கட் சாமிநாதனின் மற்றும் செ . ரவீந்திரனின் கட்டுரைகள், அகரம் வெளியீடாக வந்த ந.முத்துசாமியின் அன்று பூட்டிய வண்டி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மணல்வீட்டில் வந்த அருங்கூத்து தொகை நூற்பிரதி ஆகியன இலக்கியத் தளத்தில் கூத்துக் குறித்துப் பதிவுகளைச் செய்திருக்கின்றன. இவற்றை விலக்கிப்பார்த்தால் பெரும்பான்மையான சிறுபத்திரிகைக் காரர்கள் போதைக்கு ஊறுகாயாகத்தான் கூத்துக்கலையை பாவிக்கிறார்கள். அவர்கள் ஆதரவு வெறும் தேங்காய் மூடி கச்சேரிதான்
பதாகை: வருங்காலத்தில் மணல் வீடு இலக்கிய வட்டத்தின் நூல்கள் உருவாக்கும் திட்டம் எப்படியாக இருக்கும்?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: இவ்விடம் சிறந்த முறையில் புத்தகம் போட்டுத்தரப்படும்
அறுவது பக்க கவித தொகுப்பு- முந்நூறு பிரதி-16000 பிளஸ்- கமிசன்
எழுவது பக்க கவித தொகுப்பு- ஐநூறு படிகள்-25000-பிளஸ்- கமிசன்
நாவல் சிறுகதைக்கு தோராயமா பக்கத்துக்கு ஒத்த உரூவா
தபால் போக்கு வரத்து- உட்பட.எடஞ்சேர்க்கிறது எங்கள் பொறுப்பு)
பதாகை: இவ்வாண்டு புத்தக கண்காட்சியில் எவருடைய படைப்புகளை நீங்கள் அதிகம் எதிர்நோக்கி இருக்கிறீர்கள்?
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: ஹாருகி முரகாமி படைப்புகள் – ராசேந்திர சோழனின் கதைகள் – மறு பதிவு -கே .டேனியல் – மண்ட்டோ – கல்யாண்ஜி – கலாப்ரியா -சமயவேல் -அமலன் ஸ்டான்லி -வே .வெங்கடாசலம் – லகூமிகுமாரன் ஞானதிரவியம் -கரிகாலன் – குட்டிரேவதி – மாலதி மைத்திரி – வா.மு . கோமு இவர்களின் பேசப்பட்ட பிரதிகளின் மறுபதிவு. சி.எம் முத்து- சுதாகர் கதக்- கோமு -குமார செல்வா