விரல் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

counting_with_fingers2

சின்னஞ்சிறு விரல்களை
விரித்து மடக்கி கணக்கிட்டு
அடுத்த செவ்வாய்க்கிழமை
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம்
என அறிவிக்கிறாள்.

சிரிக்கும் அவர்களையும்
சேர்த்துக்கொண்டு
ஊதிய பலூன்கள் ஓடி ஓடி வெடிக்கிறாள்.

பாலேடு வழியும் கேக்குகளை
விரலால் வழித்து நக்குகிறாள்.

கார்ட்டூன் பாத்திரங்களுடன்
சுவரில் ஏறி சுற்றிச்சுற்றி வருகிறாள்.

விட்டுக்கொடுக்கத் தெரியாத
நண்பர்களிடமிருந்து
பிடுங்கி விநியோகிக்கிறாள்.

புதிய பரிசுகளின் வருகைக்காக
ஒதுக்கி வைத்த பொம்மைகளை
சமாதானம் செய்கிறாள்.

நான்கு வயது ஆகிவிட்டது
இனி தன்னை
அக்கா என்றே அழைக்க வேண்டும்
என்று பிரகடனம் செய்கிறாள்.

அக்காவாகிவிட்டதால்
அவளுக்கு ஒரு குழப்பமுமில்லை.

அடுத்த விளையாட்டின்போது
ஒருவிரலை கூடவோ குறையவோ
விட்டுக் கொண்டால் ஆயிற்று.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.