1. பிறப்பு
பத்து லட்சம் பேர் இருக்கும் கல்கத்தாவில் புறாக்கள் இருபது லட்சமாவது இருக்கும். இந்துப் பையன்கள் மூன்றில் ஒருவனிடம் காரியர்கள், டம்ப்ளர்கள், ஃபேன்டெயில்கள், பௌடர்கள் என்று ஒரு டஜன் வளர்ப்புப் பறவைகளாவது இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறாக்கள் வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில், ஃபேன்-டெயிலும் பெளடரும் பறவைகளை நேசிப்பவர்கள் பிரத்யேகமாய் உருவாக்கிய இருவேறு இனப் புறாக்கள். காலங்காலமாக, மாட மாளிகைகளில் அரச குடியினராலும், சின்னஞ் சிறிய வீடுகளில் ஏழைகளாலும் புறக்களின் மீது அன்பும் அக்கறையும் பொழியப்பட்டு வருகிறது. பணக்காரர்களின் தோட்டங்களிலும் குடில்களிலும் நீரூற்றுகளிலும், சாதாரணர்களின் சிறு நந்தவனங்களிலும், பழத்தோட்டங்களிலும், அலங்காரமாகவும் இசையாகவும் பல வண்ணப்புறாக்களும் குனுகும் மரகதக் கண் கொண்ட வெண்புறாக்களும் தானிருக்கும்.
இன்றைக்கும் கூட, எங்கள் பெருநகர்களுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர், தங்கள் வளர்ப்புப் புறாக்கள் ஈரமற்ற குளிர் காற்றில் உயரப் பறக்க, எண்ணற்ற சிறுவர்கள் சமதளமாய் இருக்கும் வீட்டுக் கூரைகளில் வெள்ளைக்கொடி அசைத்து சமிக்ஞை செய்து கொண்டிருப்பதைக் குளிர்கால காலை வேளைகளில் காண முடியும். நீல வானத்தில், தடித்த மேகங்களாய் புறாக்கூட்டங்கள் பறந்து செல்லும். சிறிய கூட்டங்களாகத் தொடங்கி, தங்கள் எஜமானர்கள் வீட்டுக் கூரைகளின் மேல் இருபது நிமிடங்கள் வட்டமடிக்கும். பின் மெதுவாக மேலேறி, எல்லா சிறிய கூட்டங்களும் ஒரு பெரிய கூட்டமாகி, கண்ணுக்கப்பால் தொலைதூரம் போய்விடும். ரோஸ், மஞ்சள், வயலட், வெள்ளை என்று பல நிறங்களில் இருந்தாலும் எல்லா வீட்டுக் கூரைகளும் ஒரே வடிவில் இருக்கும்போது, ஒவ்வொரு புறாவும் தத்தமது வீடுகளை எப்படி கண்டுபிடித்து வந்து சேர்கிறது என்பது ஆச்சரியம்தான்.
ஆனால், புறாக்களுக்கு அற்புதமான திசையுணர்வும் எஜமானர்கள் மீது நேசமும் உண்டு. புறாக்களையும் யானைகளையும்விட விசுவாசமான உயிரினங்களை நான் இதுவரை பார்த்ததில்லை. நாலு கால் கொண்ட யானையுடன் காட்டிலும் இரு சிறகுகள் கொண்ட புறாவுடன் நகரத்திலும் விளையாடியிருக்கிறேன். எவ்வளவு தூரம் அலைந்தாலும் அவற்றின் தவறாத உள்ளுணர்வு– அவற்றின் தோழனும் சகோதரனுமான மனிதனிடம் கொண்டு சேர்த்துவிடும்.
என் யானை நண்பன் கரியைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். மற்றொரு செல்லப்பிராணி ஒரு புறா. இவன் பெயர் சித்திரக்-க்ரீவா. சித்திரம் என்றால் – பல வண்ணத்தில் வரைந்தது. க்ரீவா என்றால், கழுத்து. அதுதான் வண்ணக்கழுத்து. சிலசமயம், வானவில் தொண்டையன் என்றும் அவனைக் கூப்பிடுவோம்.
முட்டையிலிருந்து வரும்போதே அவன் வண்ணக்கழுத்தாய் வரவில்லை. வாரக்கணக்கில் சிறகு முளைத்தது. மூன்று மாதம் வரையில் அவனுக்கு அழகான கழுத்து வரும் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால், கடைசியில் அவன் அழகிய வண்ணங்களைப் பெற்றபோது, இந்தியாவில் என் டவுணில் இருந்த நாற்பதாயிரம் புறாக்களில் மிக அழகானவனாக ஆகிவிட்டான்.
கதை அதற்கு முன்பே தொடங்குகிறது. அதாவது வண்ணக்கழுத்தின் பெற்றோர்களிடமிருந்தே கதை தொடங்குகிறது. அவன் அப்பா ஒரு டம்ப்ளர். அக்காலத்தில் மிக அழகான புறாவைக் கல்யாணம் செய்து கொண்டார்; அவள் ஒரு உயர்ந்த காரியர்ஸ் குடும்பத்திலிருந்து வந்தவள். இதனால்தான் பின்னாளில் வண்ணக்கழுத்து போரிலும் அமைதியிலும் மதிக்கத்தக்க ஒரு புறாவாக இருந்தான். அம்மாவிடமிருந்து அறிவையும், அப்பாவிடமிருந்து தைரியத்தையும் விழிப்புணர்வையும் அவன் பெற்றுக் கொண்டான். மிகவும் சுட்டி. பல முறை தன்னைத் தாக்க வரும் பருந்துகளிடமிருந்து கடைசி நேரத்தில் எதிரியின் தலைமீதே பல்டியடித்து தப்பித்திருக்கிறான். அந்தக் கதையெல்லாம் பின்னால் பார்க்கலாம்.
இப்போதைக்கு வண்ணக்கழுத்து முட்டையாக இருக்கும்போதே எப்படி மயிரிழையில் தப்பினான் என்பதைச் சொல்கிறேன். ஒருநாள், அவன் அம்மா இட்டிருந்த இரண்டு முட்டைகளில் ஒன்றை நான் உடைத்து விட்டேன்; தவறு என் பக்கம்தான். இன்னமும் அதற்காக வருந்துகிறேன். உடைந்து போன முட்டையிலிருந்து உலகின் மிகவும் அழகிய புறா வந்திருக்கலாம். முட்டை இப்படித்தான் உடைந்தது.
எங்கள் வீடு நான்கு மாடிகள் கொண்டது. அதன் கூரையில் புறாக் கூண்டு இருந்தது. முட்டையிட்ட சில நாட்களுக்குப்பின், வண்ணக்கழுத்தின் அம்மா அடைகாத்துக் கொண்டிருந்த புறாக்கூண்டை சுத்தம் செய்யத் தீர்மானித்தேன். பைய அவளைத் தூக்கி கூரையின் மீது என்னருகே வைத்தேன். பிறகு இரண்டு முட்டைகளையும் ஒவ்வொன்றாய் எடுத்து பக்கத்து புறாக்கூண்டில் வைத்தேன். அங்கு பஞ்சோ துணியோ ஏதுமில்லை; பின் அதன் கூட்டிலிருந்து குப்பைகளை அகற்றினேன். அது முடிந்த பிறகு, ஒரு முட்டையை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்தேன். பிறகு, இரண்டாவது முட்டையை எடுக்கப் போனேன், அதைப் உறுதியாக, ஆனால் அழுத்தாமல் பற்றி எடுத்தேன். அப்போது கூரையே புயலில் என் மீது விழுந்தது போல் என்னவோ என் முகத்தில் விழுந்தது.
வண்ணக்கழுத்தின் அப்பா தன் இறக்கைகளால் என் முகத்தில் படபடவென அடித்துக் கொண்டிருந்தார். அதைவிட மோசம், அவர் தன் நகங்களைக் கொண்டு என் மூக்கைப் பற்றிக்கொண்டதுதான். எப்படி நடந்தது என்றே தெரியவில்லை, வலியினாலும் அதிர்ச்சியினாலும் கையிலிருந்த முட்டையைக் கீழே விட்டுவிட்டேன். அந்தப் பறவையை என் முகத்திலிருந்து விரட்ட முயன்றேன். ஒரு வழியாக அப்பறவை என் முகத்தைவிட்டு பறந்துவிட்ட்து. ஆனால், அந்த முட்டை என் காலடியில் உடைந்து சிதறிக் கிடந்தது. என் மீதும் அந்தப் பறவையின் மீதும் கோவம் கோவமாக வந்த்து. ஏன் என் மேல் கோபம்? அப்பா பறவையின் தாக்குதலுக்கு நான் தயாராய் இருந்திருக்க வேண்டும். என்னை முட்டைத் திருடன் என்று நினைத்துக் கொண்டுவிட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து முட்டைகளைக் காக்கத் துணிந்துவிட்ட்து. அடைகாக்கும் பருவத்தில் எப்போது கூண்டுகளைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும், சகலவிதமான பறவைத் தாக்குதலுக்கும் தயாராக இருங்கள் என்றே உங்களுக்குச் சொல்வேன்.
கதையைத் தொடர்வோம். வண்ணக்கழுத்தை இந்த உலகத்திற்குள் கொண்டு வர, எந்த நேரத்தில் கொத்தி முட்டையோட்டை உடைக்க வேண்டும் என்று அம்மா பறவைக்குத் தெரியும். காலையிலிருந்து பின்மதியம் வரை – சுமார் மூன்றில் ஒரு பங்கு நேரம் – ஆண் பறவைதான் முட்டையை அடைகாக்கிறது என்றாலும், எப்போது முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும் என்று அதற்குத் தெரியாது. முகூர்த்த நேரம் எதுவென்று அம்மா பறவை மட்டுமே அறியும். முட்டைக் கருவும் வெள்ளையும் குஞ்சாக மாறிவிட்டதை அறிவிக்கும் செய்தியை அது எப்படிப் பெறுகின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சம்கூட குஞ்சைக் காயப்படுத்திவிடாமல், எந்த இட்த்தில் கொத்தி முட்டையை உடைக்க வேண்டும் என்பது அம்மா பறவைக்குத்தான் தெரியும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அற்புதம்.
வண்ணக்கழுத்தின் பிறப்பு நான் மேலே சொன்னபடிதான் நடந்தது. முட்டையிட்டு சுமார் இருபது நாட்களிருக்கும்போது, அம்மா பறவை முட்டையின் மீது உட்காருவதை நிறுத்திவிட்டது. அப்பா பறவை கூரையில் இருந்து கீழே தானாகப் பறந்து வந்து அடைகாக்க முன்வந்த போதெல்லாம், கொத்தி அதை விரட்டிவிட்டது. அப்பா பறவை, “என்னை ஏன் விரட்டி விடுகிறாய்? என்று குனுகிக் கொண்டிருந்தது.
அம்மா மேலும் கொத்தியது; அதற்கு அர்த்தம், “தயவுசெய்து போய் விடு. நிலைமை ரொம்ப தீவிரம்”.
அத்தோடு அப்பா பறவை பறந்துவிட்டது. எனக்கு கவலையாகிவிட்டது; குஞ்சு பொரிக்க வேண்டுமே என்ற பதட்டம், அம்மா பறவை இப்படிச் செய்வதில் வேறு எனக்கு சந்தேகம். அதிகரிக்கும் ஆர்வத்தோடும் கவலையோடும் புறாக்கூண்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணிநேரம் சென்றுவிட்டது. எதுவும் நடக்கவில்லை. மேலும் முக்கால் மணி நேரம் கழித்து, அம்மா பறவை தன் தலையை ஒருபக்கமாய்ச் சாய்த்து எதையோ உன்னித்து கேட்பது போல் இருந்தது; முட்டையிலிருந்து எழும் கிளறல் சத்தமாக இருக்கலாம். பிறகு அது சற்றே திடுக்கிட்டது போலிருந்தது. ஒரு நிலநடுக்கமே அதன் உடம்பில் ஏற்பட்ட்து போல நான் உணர்ந்தேன். அத்தோடு அது ஒரு முடிவுக்கு வந்தது. தன் தலையை உயர்த்தி குறிபார்த்தது. இரண்டே கொத்தில், முட்டையை உடைத்துவிட்டது. அதிலிருந்து மூக்கும் நடுங்கும் சிறு உடலுமாய் ஒரு சிறிய பறவை வெளிவந்தது. இப்போது அம்மாவைப் பார்க்கணுமே. அதற்கு அதிசயமாய் இருக்கிறது. இதற்குத்தானா இத்தனை நீண்ட நாட்கள் அது காத்திருந்தது! எத்தனை சிறிய பறவை. ஐயோ பாவம், என்றிருக்கிறது. தன்னால் எதுவும் செய்து கொள்ள முடியாத குஞ்சைப் பார்த்ததும் மிருதுவான நீல இறகுகளால் தன் குஞ்சை மார்போடு வாரி அணைத்துக் கொள்கிறது.
(தொடரும்)
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா