Gay neck

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது

”உழவாரக்குருவிகளின் கட்டிடக்கலைத் திறமையை உங்களுக்குத் தெளிவாக விளக்க, முதலில் அதனுடைய குறைபாடுகளைச் சொல்லிவிடுகிறேன். பறக்கும் பூச்சிகளைப் படிப்பதற்கு ஏதுவாக சிறிய அலகு கொண்டவை அவை. அதனுடைய அகலமான வாய், பறக்கும் போது இரையைப் பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. பூச்சிகளை நோக்கி அது பாயும்போது, வெகு சில பூச்சிகள் மட்டுமே தப்ப முடியும். உழவாரக் குருவி மிகச் சிறியதாக இருப்பதால், அதனால் அதிக எடையைத் தூக்க முடியாது. அதன் கூடு, வைக்கோல், சற்றே பெரிய ஊசியைப் போன்ற தடிமனுள்ள சுள்ளிகளைப் போன்ற இலகுவான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

“முதன் முறை நான் உழவாரக் குருவியைப் பார்த்தபோது, முடங்கிப் போய் உருக்குலைந்தது போல் இருந்தது. தங்களுடைய கால்கள் மோசமானவை என்று எல்லா உழவாரக் குருவிகளுக்குமே தெரியும். சமநிலைப் படுத்திக்கொள்ளக் கூட அந்தக் கால்கள் போதாது. அதனுடைய உடம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும், மீன்பிடி கொக்கிகள் போன்ற கால்கள், இடங்களைப் பற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. சின்னச் சிறிய கொக்கிகள் போன்ற அதன் கால் நகங்கள் வளைந்து கொடுக்காதவை. அதனுடைய உடம்புக்கும் பாதங்களுக்கும் இடையே போதுமான நீளத்தில் கால்கள் இல்லை. இதனால், நீண்ட கால்கள் மற்ற பறவைகளுக்குத் தரும் குதிக்கும் திறன் உழவாரக் குருவிகளுக்கு இல்லை. இந்தக் குறைபாடு மற்றொரு சாதகத்தால் அடிபட்டுப் போகிறது. அவற்றால், கற்களால் அமைக்கப்பட்ட வேலிகளிலும், பளிங்கு இறவானங்களிலும், வீடுகளில் பளிங்குக் கல்லில் கூரைக்குக் கீழ் செதுக்கப்பட்ட அலங்காரங்களிலும், மற்ற எந்த பறவையைக் காட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியும். என் நண்பனான உழவாரக் குருவி, பளபளப்பான சுவர்களில் கூட ஏதோ சொறசொறப்பான மேற்பரப்ப போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (more…)

வண்ணக்கழுத்து பகுதி 3 – திசை அறிதல்

மாயக்கூத்தன்– 

கடலாழத்தில் நீந்த புதிதாக பயிற்சி பெற்றவன் போல, காற்றில் இறங்குவது குறித்து வண்ணக்கழுத்துக்கு இருந்த பயம் போய்விட்டது. அவன் நீண்ட நேரமும், அதிக உயரத்திலும் பறக்கத் துவங்கினான். ஒரே வாரத்தில் விடாமல் அரைமணிநேரம் அவனால் பறக்க முடிந்தது. வீட்டுக் கூரைக்குத் திரும்பும்போது, அவன் தன் அப்பா அம்மாவைப் போலவே அழகாகத் தரையிறங்கினான். கால் கூரையில் பதியும்போது, தன்னை சமநிலைக்கு கொண்டு வர, படபடவென்று இறக்கைகளை பீதியில் அடித்துக் கொள்வது அதற்குப் பிறகு இல்லை.

தொடக்கத்தில் அவனோடு கூடவே பறந்த அப்பாவும் அம்மாவும், இப்போது அவனை விட்டுவிட்டு அவனைவிட அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கினார்கள். பையன், தன் பெற்றோர்கள் பறக்கும் உயரத்திற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தான் என்பதால், அவனை இன்னும் மேலே பறக்க வைக்கத்தான் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்று சில காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். குட்டிப் பயலுக்கு அவர்கள் அருமையான  முன்னுதாரணமாக இருக்க நினைக்கிறார்களாக இருக்கும். ஆனால் கடைசியில் ஜூன் மாத தொடக்கத்தில் ஒருநாள், ஒரு கெட்ட சம்பவத்திற்குப் பிறகு என் எண்ணம் மாறியது. (more…)

வண்ணக்கழுத்து 2 – கல்வி

மாயக்கூத்தன்– 

பறவைகளின் உலகில் காண்பதற்கு அருமையான விஷயங்கள் இரண்டு உண்டு. ஒன்று, அம்மா தன் குஞ்சை வெளிச்சத்திற்கு கொண்டு வர முட்டையைக் கொத்தி உடைப்பது. மற்றொன்று, அவனை அவள் அணைத்து, கொஞ்சி உணவு ஊட்டிவிடுவது.

வண்ணக்கழுத்தை அவனுடைய அப்பாவும் அம்மாவும் மிகவும் பாசத்துடன் அணைத்து வளர்த்தார்கள். மனிதர்களின் குழந்தைகள் பெற்றோரின் அணைப்பில் பெறுவதை அவனும் பெற்றான். ஒன்றும் அறியாத அந்தக் குஞ்சுகளுக்கு, இது கதகதப்பையும் சந்தோஷத்தையும் தரும். உணவைப் போலவே அணைப்பும் அவைகளுக்கு அவசியம்.

இந்தப் பருவத்தில், புறாக்கூண்டில் அதிக அளவில் பஞ்சையோ பருத்தித் துணியையோ அடைக்கக்கூடாது. துணியும் பஞ்சும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கூடு அதிகம் சூடாகாமல் இருக்கும். இந்த அறிவு இல்லாத புறா வளர்ப்பாளர்கள், குஞ்சு வளர வளர தன் உடம்பிலிருந்து மேலும் மேலும் உஷ்ணத்தை உண்டாக்குவான் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. மேலும், இந்த சமயத்தில் அடிக்கடி புறாக்கூண்டை சுத்தம் செய்வதும் நல்லதில்லை என்றே நினைக்கிறேன். தாய் தந்தைப் பறவைகள் கூண்டில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்களோ அவையெல்லாம் குஞ்சை சுவுகரியமாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கும். (more…)

வண்ணக்கழுத்து 1

மாயக்கூத்தன்– 

1. பிறப்பு

பத்து லட்சம் பேர் இருக்கும் கல்கத்தாவில் புறாக்கள் இருபது லட்சமாவது இருக்கும். இந்துப் பையன்கள் மூன்றில் ஒருவனிடம் காரியர்கள், டம்ப்ளர்கள், ஃபேன்டெயில்கள், பௌடர்கள் என்று ஒரு டஜன் வளர்ப்புப் பறவைகளாவது இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறாக்கள் வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில், ஃபேன்-டெயிலும் பெளடரும் பறவைகளை நேசிப்பவர்கள் பிரத்யேகமாய் உருவாக்கிய இருவேறு இனப் புறாக்கள். காலங்காலமாக, மாட மாளிகைகளில் அரச குடியினராலும், சின்னஞ் சிறிய வீடுகளில் ஏழைகளாலும் புறக்களின் மீது அன்பும் அக்கறையும் பொழியப்பட்டு வருகிறது. பணக்காரர்களின் தோட்டங்களிலும் குடில்களிலும் நீரூற்றுகளிலும், சாதாரணர்களின் சிறு நந்தவனங்களிலும், பழத்தோட்டங்களிலும், அலங்காரமாகவும் இசையாகவும் பல வண்ணப்புறாக்களும் குனுகும் மரகதக் கண் கொண்ட வெண்புறாக்களும் தானிருக்கும்.

இன்றைக்கும் கூட, எங்கள் பெருநகர்களுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர், தங்கள் வளர்ப்புப் புறாக்கள் ஈரமற்ற குளிர் காற்றில் உயரப் பறக்க, எண்ணற்ற சிறுவர்கள் சமதளமாய் இருக்கும் வீட்டுக் கூரைகளில் வெள்ளைக்கொடி அசைத்து சமிக்ஞை செய்து கொண்டிருப்பதைக் குளிர்கால காலை வேளைகளில் காண முடியும். நீல வானத்தில், தடித்த மேகங்களாய் புறாக்கூட்டங்கள் பறந்து செல்லும். சிறிய கூட்டங்களாகத் தொடங்கி, தங்கள் எஜமானர்கள் வீட்டுக் கூரைகளின் மேல் இருபது நிமிடங்கள் வட்டமடிக்கும். பின் மெதுவாக மேலேறி, எல்லா சிறிய கூட்டங்களும் ஒரு பெரிய கூட்டமாகி, கண்ணுக்கப்பால் தொலைதூரம் போய்விடும். ரோஸ், மஞ்சள், வயலட், வெள்ளை என்று பல நிறங்களில் இருந்தாலும் எல்லா வீட்டுக் கூரைகளும் ஒரே வடிவில் இருக்கும்போது, ஒவ்வொரு புறாவும் தத்தமது வீடுகளை எப்படி கண்டுபிடித்து வந்து சேர்கிறது என்பது ஆச்சரியம்தான். (more…)