வண்ணக்கழுத்து 2 – கல்வி

மாயக்கூத்தன்– 

பறவைகளின் உலகில் காண்பதற்கு அருமையான விஷயங்கள் இரண்டு உண்டு. ஒன்று, அம்மா தன் குஞ்சை வெளிச்சத்திற்கு கொண்டு வர முட்டையைக் கொத்தி உடைப்பது. மற்றொன்று, அவனை அவள் அணைத்து, கொஞ்சி உணவு ஊட்டிவிடுவது.

வண்ணக்கழுத்தை அவனுடைய அப்பாவும் அம்மாவும் மிகவும் பாசத்துடன் அணைத்து வளர்த்தார்கள். மனிதர்களின் குழந்தைகள் பெற்றோரின் அணைப்பில் பெறுவதை அவனும் பெற்றான். ஒன்றும் அறியாத அந்தக் குஞ்சுகளுக்கு, இது கதகதப்பையும் சந்தோஷத்தையும் தரும். உணவைப் போலவே அணைப்பும் அவைகளுக்கு அவசியம்.

இந்தப் பருவத்தில், புறாக்கூண்டில் அதிக அளவில் பஞ்சையோ பருத்தித் துணியையோ அடைக்கக்கூடாது. துணியும் பஞ்சும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கூடு அதிகம் சூடாகாமல் இருக்கும். இந்த அறிவு இல்லாத புறா வளர்ப்பாளர்கள், குஞ்சு வளர வளர தன் உடம்பிலிருந்து மேலும் மேலும் உஷ்ணத்தை உண்டாக்குவான் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. மேலும், இந்த சமயத்தில் அடிக்கடி புறாக்கூண்டை சுத்தம் செய்வதும் நல்லதில்லை என்றே நினைக்கிறேன். தாய் தந்தைப் பறவைகள் கூண்டில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்களோ அவையெல்லாம் குஞ்சை சுவுகரியமாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கும்.

பிறந்து இரண்டு நாட்களில், ஒவ்வொரு முறையும் அதன் பெற்றோரில் ஒருவர் கூடு திரும்பும் போது, குட்டி வண்ணக்கழுத்து தானாக அலகு திறந்து, தன் இளஞ்சிவப்பு நிற உடலை துருத்தி போல் விரித்தது எனக்கு முழுமையாக நினைவிலிருக்கிறது. அப்பாவோ அம்மாவோ, அவனுடைய அகல விரிந்த தொண்டைக்குள் தங்கள் அலகுகளை விட்டு, தாம் உண்ட தினை விதைகளை தங்கள் உடலுறுப்புகளில் செரித்து உருவாக்கிய பாலைப் புகட்டுவார்கள்.

அவனுடைய வாயில் விடப்படும் உணவு மிகவும் மென்மையானதாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு மாத காலம் ஆனாலும் கூட எந்தவொரு புறாவும், எந்த விதையானாலும் தன் தொண்டையில் சிறிது நேரம் வைத்திருக்காமல் குஞ்சுக்குத் தராது. அப்படிச் செய்வதன் மூலம், குஞ்சின் பிஞ்சு வயிற்றுக்குள் நுழையும் முன்பே உணவு இலகுவாகிவிடும்.

நம்முடைய வண்ணக்கழுத்து அசுரத்தனமாகத் தின்பான். அவனது பெற்றோர்களில் ஒருவர் அவனோடு இருந்து அவனை அணைத்துக் கொண்டிருந்தால், மற்றவரை உணவுக்காக அலைகழித்துக் கொண்டிருந்தான். அம்மாவுக்கு எந்த அளவிலும் குறையாமல் அப்பாவும் அவனை அணைத்துக் கொண்டும், அவனுக்காக வேலை செய்து கொண்டும் இருந்தார் என்று நினைக்கிறேன். இதனால், அவன் பெருத்துப் போனதில் ஆச்சரியமே இல்லை.

அவனுடைய இளம்சிவப்பு நிறம், இறகுகள் வளர்வதற்கு அறிகுறியாக மஞ்சள் கலந்த வெண்ணிறம் கொண்டது. அதன் பிறகு, உருண்டையான, விறைப்பான, முள்ளம்பன்றியின் முட்கள் போன்ற, வெள்ளை இறகுகள் முளைத்தன. வாய் பக்கத்திலும் கண்களுக்குப் பக்கத்திலும் இருந்த மஞ்சள்கள் உதிர்ந்தன. மெல்ல, உறுதியான கூர்மையான நீண்ட அலகு வெளிப்பட்டது. என்னவொரு உறுதியான தாடை!

அவன் பிறந்து மூன்று வாரங்கள் இருக்கும்போது, புறாக்கூண்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்போது ஒர் எறும்பு அவனைக் கடந்து ஊர்ந்து சென்றது. யாரும் எதுவும் சொல்லித் தராமலேயே அந்த எறும்பை தன் அலகால் கொத்திவிட்டான். முழு எறும்பு, இப்போது இரண்டு துண்டங்களாப் பிளந்து கிடந்தது. செத்த எறும்பின் பக்கம் தன் அலகைக் கொண்டு வந்து தான் செய்த காரியத்தை ஆராய்ந்தான். தன் இனத்திற்கு நட்பான ஓர் அப்பாவி வழிப்போக்கனைக் கொன்றுவிட்டான். அந்தக் கட்டெறும்பை அவன் விதையென்று நினைத்துதான் அப்படிச் செய்துவிட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக அவன் வெட்கப்பட்டிருப்பான் என்று நம்புவோம். என்னவானாலும், அதன் பிறகு வாழ்நாள் முழுக்க அவன் வேறொரு எறும்பைக் கொல்லவில்லை.

ஐந்து வாரங்களில், தான் பிறந்த கூண்டிலிருந்து குதித்து வெளியே வந்து அதன் முன்னால் வைத்திருக்கும் தண்ணீர் பாத்திரத்திலிருந்து அவனால் நீர் குடிக்க முடிந்தது. தானாகவே உணவைச் சேகரிக்க அவன் முயற்சி செய்தாலும், இப்போதும் அவனுடைய பெற்றோரே அவனுக்கு உணவளிக்க வேண்டியிருந்தது.

என்னுடைய மணிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, என் உள்ளங்கையில் இருந்து ஒவ்வொரு விதையாக எடுத்துக் கொள்வான். ஒர் வித்தைக்காரன் காற்றில் பந்துகளை வீசிப் பிடித்து விளையாடுவது போல, அதை இரண்டு மூன்று முறை தொண்டைக்குள் தூக்கிப்போட்டு விழுங்குவான். ஒவ்வொரு முறை அப்படிச் செய்யும் போதும் வண்ணக்கழுத்து, தன் தலையைத் திருப்பி என்னைப் பார்த்து, “நான் சரியா செய்யறேன் இல்ல? அப்பாவும் அம்மாவும் வெயிலில் காய்ந்து கூரையிலிருந்து வந்த பின்னாடி நான் எவ்வளவு புத்திசாலின்னு அவங்ககிட்ட சொல்லணும்,” என்று சொல்வதைப் போல் பார்த்தான். என்னுடைய புறாக்களிலேயே தன் ஆற்றல்களை மிக மிக மெதுவாக உருவாக்கிக் கொண்டவன் இவன்தான்.

இந்த சமயத்தில்தான் நான் ஒன்றைக் கண்டுபிடித்தேன். அதற்கு முன்னர், குருடாகாமல் புறாக்களால் புழுதிப் புயல்களில் எப்படிப் பறக்க முடிகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வளர்ந்து வரும் வண்ணக்கழுத்தைப் ஒருநாள் பார்த்தபோது, அவன் கண்கள்மேல் ஒரு திரை இருந்ததைக் கவனித்தேன். அவன் குருடாகிறான் என்றே நினைத்தேன். பதற்றத்தில், இன்னும் அருகில் கொண்டு வந்து பார்ப்பதற்காக என் கையை நீட்டினேன். நான் கையை நீட்டியது தான் தாமதம், பொன்னிற கண்களைத் திறந்து கொண்டு கூண்டின் உட்புறம் போய்விட்டான்.

அவனை அப்படியே பிடித்து, கூரைக்குக் கொண்டு போய், எரியும் மே மாத வெயிலில் அவன் கண்களை ஆராய்ந்தேன். ஆமாம், அப்போதும் அது இருந்தது. அவனுடைய இமைகளோடு டிஷ்யூ பேப்பர் போல மெல்லிய திரை இணைந்திருந்தது. ஒவ்வொரு முறை சூரியனைப் பார்த்து அவன் முகத்தைக் காட்டிய போதும், தன் விழியின் பொன்னிறப் பாவைகளின் மேல் இந்தத் திரைகளைப் போட்டுக் கொண்டான். அது புழுதிப்புயல்களிலும் சூரியனை நோக்கி பறக்கும்போதும் பறவைகளின் கண்களை பாதுகாக்கும் திரை என்று அறிந்து கொண்டேன்.

அடுத்த பதினைந்து நாட்களில், எப்படிப் பறப்பது என்று வண்ணக்கழுத்துக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அவன் பிறவியால் பறவையானாலும் அது அத்தனை எளிதாக இல்லை. ஒரு குழந்தைக்கு நீந்தப் பிடிக்கலாம், ஆனாலும் நீச்சல் கலையைக் கற்றுக் கொள்ளும்போது அவன் தவறுகளை செய்ய வேண்டியிருக்கும், தண்ணீரைக் குடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரிதான் என் புறாவும். தன்னுடைய இறக்கையை விரிப்பதில் அவனுக்கு கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பான். காற்று அவனை பறக்க நிர்பந்திக்காமல் வீசிக்கொண்டிருக்கும்.

நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள உதவியாக, எங்கள் மொட்டை மாடியை தெளிவாக விவரிக்கிறேன். மாடியைச் சுற்றி, பதினான்கு வயது பையனுடைய உயரத்தில் கான்க்ரீட் சுவர் கட்டப்பட்டிருக்கும். எங்களில் பெரும்பாலானவர்கள் வெயிற் கால இரவுகளில் மொட்டை மாடியில்தான் படுத்துக் கொள்வோம். தூக்கத்தில் நடப்பவர்களும்கூட நான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்துவிடாமல் அந்த சுவர்தான் தடுத்தது.

அந்தச் சுவற்றில் ஒவ்வொரு நாளும் வண்ணக்கழுத்தை ஏற்றிவிடுவேன். அதன் மேல், காற்றின் திசையை நோக்கி, மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பான். அதைத் தவிர ஒன்றும் நடக்காது.

ஒருநாள் மாடித் தரையில் சில நிலக்கடலைகளைப் போட்டு அவனை குதித்து வந்து எடுக்கச் சொன்னேன். கேள்வி கேட்கும் பாவனையில் விரிந்த கண்களுடன் சில நொடிகள் என்னைப் பார்த்தான். தலையைத் திருப்பி, கீழே நிலக்கடலைகளைப் பார்த்தான். இப்படியே சில தடவைகள் செய்துகொண்டிருந்தான். கடைசியில், நான் சுவையான அந்தக் கடலைகளை அவனுக்கு எடுத்துக் கொடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், திரும்பத் திரும்ப தன் கழுத்தை, மூன்றடிக்கு கீழே இருக்கும் நிலக்கடலையை நோக்கி நீட்டிக் கொண்டு, மேலும் கீழும் அந்த சுவற்றில் நடக்கத் துவங்கினான். பார்ப்பவர்களின் இதயத்தைப் பிளக்கும் பதினைந்து நிமிட தயக்கத்திற்குப் பிறகு, கீழே குதித்தான். அவன் தரையைத் தொடும் சமயத்தில், தடுமாறி விழுந்து விடாமல் சுதாரித்துக் கொள்வதற்கு உதவியாக, இதுவரை மூடியே இருந்த அவனது இறக்கைகள் திடீரென்று முழுமையாகத் திறந்து கொள்ள, அவன் கடலைகள் மீது இறங்கினான். வெற்றி!

இதே சமயத்தில் அவன் இறகுகளின் நிறம் மாறியிருப்பதைக் கவனித்தேன். வழக்கமானன சாதாரண சாம்பல் நீலமாக இல்லாமல், மினுங்கும் ஆக்வாமெரின் அவன் உடல் முழுதும் ஒளிர்ந்தது. அதன்பின் திடீரென்று ஒரு நாள் காலையில், சூரிய ஒளியில் அவனுடைய கழுத்து பல வண்ண மணிகள் போல ஒளிர்ந்தது.

இப்போது முக்கிய கேள்வியான பறத்தல் வருகிறது. அவனுடைய பெற்றோர்கள் பாலபாடத்தை தொடங்க காத்திருந்தேன். இருந்தாலும், எனக்குத் தெரிந்த ஒரே வழியில் நானும் உதவினேன். ஒவ்வொரு நாளும் அவனை என் மணிக்கட்டில் அமர்த்திக் கொண்டு, பலமுறை என் கையை மேலும் கீழும் வீசுவேன். அப்படி ஆட்டும்போது, அதைச் சமாளிக்க அவன் இறக்கைகளை திறந்து மூட வேண்டியிருந்தது. அவனுக்கு அது நல்லது; ஆனால் அத்தோடு என் பயிற்சிப் பணி முடிந்துவிட்டது.

நான் ஏன் இப்படி அவசரப்படுத்துகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். ஏற்கெனவே அவன் பறத்தலில் பின்தங்கியிருக்கிறான். மேலும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் மழை பெய்யத் துவங்கிவிடும். மழைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில் தொலைதூரம் பறப்பது சாத்தியமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் திசைகளை அறியவும் அவனுக்கு பயிற்சியளிக்க விரும்பினேன்.

எப்படியிருந்தாலும், மே மாத இறுதியில் ஒரு நீண்ட நாளில் அவனுடைய அப்பா அந்த வேலையை எடுத்துக் கொண்டார். குறிப்பிட்ட அந்நாளில் நகரை குளிரச் செய்துகொண்டிருந்த வாடைக் காற்று, நின்றுவிட்டிருந்தது. வானம் தூய்மையான நீலக்கல் போல இருந்தது. வான்வெளி மிகத் தெளிவாக இருந்தது. நகரின் வீட்டுக் கூரைகளும் அதற்கப்பால் தொலைதூர கிராமங்களின் வயல்களும் கொடிவீடுகளும் தெளிவாகத் தெரிந்தன.

மதியம் மூன்று மணி போல் இருக்கும்போது, வீட்டுக் கூரையின் கான்கரீட் சுவற்றின்மேல் வண்ணக்கழுத்து சூரிய ஒளியில் உட்கார்ந்திருந்தான். பறந்து கொண்டிருந்த அவனுடைய அப்பா, கீழிறங்கி அவன் பக்கத்தில் உட்கார்ந்தார். தன் பையனை விசித்திரமாகப் பார்த்தார். “அடேய்! சோம்பேறி, நீ பிறந்து மூணு மாசமாச்சு. இன்னமும் பறக்க தைரியமில்ல. நீயென்ன புறாவா மண்புழுவா?” என்பது போல் இருந்தது அவர் பார்வை.

ஆனால், சத்திய ஆத்மாவான வண்ணக்கழுத்து பதிலேதும் சொல்லவில்லை. ஆத்திரமடைந்த அவன் அப்பா, புறாக்களின் மொழியின் அவனைப் பார்த்து முணுமுணுத்தார், திட்டினார். அந்த வார்த்தைகளிலிருந்து தப்பிக்க வண்ணக்கழுத்து நகர்ந்தான். ஆனால், அவன் அப்பா விடாமல் தொடர்ந்து வந்து, முணுமுணுத்து, திட்டி தன் இறக்கைகளால் அவனை வேகமாக அடித்தார். வண்ணக்கழுத்து, தொடர்ந்து தன் அப்பாவிடமிருந்து விலகி ஓடினான். ஆனால், பெரியவரோ பின்வாங்காமல் தன் திட்டுகளை இரட்டிப்பாக்கினார். அவனைத் தள்ளித் தள்ளி கடைசியில் விளிம்பிற்கே கொண்டு வந்துவிட்டார்.

கூரையிலிருந்து குதிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. திடீரென்று அவன் அப்பா, அவருடைய வயதான உடம்பைக் கொண்டு அவனுடைய இளம் உடம்பை இடித்தார். வண்ணக்கழுத்து இடறி விழுந்தான். அரையடி கீழே வந்திருப்பான், உடனே தன் இறக்கைகளை திறந்து பறந்துவிட்டான்.

கவலைப்பட்டோருக்கெல்லாம் எத்தனைக் களிப்பு! கீழே தண்ணீரில் முங்கி, மதியக் குளியல் போட்டுக் கொண்டிருந்த அவனுடைய அம்மா, படிவழியாக மேலே வந்து, தன் மகனுக்குத் துணையாக பறந்தார். மறுபடி கீழே உட்காருவதற்கு முன் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது அவர்கள் கூரையின்மேல் வட்டமடித்திருப்பார்கள். அவர்கள் கூரையை அடைந்தபோது அவனுடைய அம்மா வழக்கம் போல, இறக்கைகளை மடித்து நிதானமாக உட்கார்ந்தாள். பையன் அப்படியில்லை.

ஆழமான குளிர்ந்த நீரில் நடக்கும் சிறுவனைப் போல், அவன் பயந்துபோய் இருந்தான். மொத்த உடம்பும் குலுங்கியது. பயத்தில் கால் பாவாமல் கூரையில் தத்திக்கொண்டு இறங்கினான், வேகமாக வழுக்கிச் சென்ற அதே நேரத்தில் தன்னை சமநிலைக்குக் கொண்டு வர இறக்கைகளை படபடவென அடித்துக் கொண்டான். சுவற்றில் நெஞ்சு முட்டி நின்றான். நாம் மின் விசிறியை நிறுத்துவது போல், தன் இறக்கைகளை வேகமாக மடக்கிக் கொண்டான். உற்சாகத்தில் அவனுக்கு மூச்சு வாங்கியது.

ஏதோ இப்பொதுதான் பிறந்த பிள்ளை போல அவனைத் தடவி, தன் நெஞ்சை அவன் நெஞ்சோடு பொருத்தி, அம்மா அவனை அணைத்துக் கொண்டாள். தன்னுடைய வேலை கச்சிதமாக முடிந்ததைப் பார்த்த அப்பா, குளியல் எடுத்துக் கொள்ள கீழே சென்றார்.

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.