வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது…
”உழவாரக்குருவிகளின் கட்டிடக்கலைத் திறமையை உங்களுக்குத் தெளிவாக விளக்க, முதலில் அதனுடைய குறைபாடுகளைச் சொல்லிவிடுகிறேன். பறக்கும் பூச்சிகளைப் படிப்பதற்கு ஏதுவாக சிறிய அலகு கொண்டவை அவை. அதனுடைய அகலமான வாய், பறக்கும் போது இரையைப் பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. பூச்சிகளை நோக்கி அது பாயும்போது, வெகு சில பூச்சிகள் மட்டுமே தப்ப முடியும். உழவாரக் குருவி மிகச் சிறியதாக இருப்பதால், அதனால் அதிக எடையைத் தூக்க முடியாது. அதன் கூடு, வைக்கோல், சற்றே பெரிய ஊசியைப் போன்ற தடிமனுள்ள சுள்ளிகளைப் போன்ற இலகுவான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
“முதன் முறை நான் உழவாரக் குருவியைப் பார்த்தபோது, முடங்கிப் போய் உருக்குலைந்தது போல் இருந்தது. தங்களுடைய கால்கள் மோசமானவை என்று எல்லா உழவாரக் குருவிகளுக்குமே தெரியும். சமநிலைப் படுத்திக்கொள்ளக் கூட அந்தக் கால்கள் போதாது. அதனுடைய உடம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும், மீன்பிடி கொக்கிகள் போன்ற கால்கள், இடங்களைப் பற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. சின்னச் சிறிய கொக்கிகள் போன்ற அதன் கால் நகங்கள் வளைந்து கொடுக்காதவை. அதனுடைய உடம்புக்கும் பாதங்களுக்கும் இடையே போதுமான நீளத்தில் கால்கள் இல்லை. இதனால், நீண்ட கால்கள் மற்ற பறவைகளுக்குத் தரும் குதிக்கும் திறன் உழவாரக் குருவிகளுக்கு இல்லை. இந்தக் குறைபாடு மற்றொரு சாதகத்தால் அடிபட்டுப் போகிறது. அவற்றால், கற்களால் அமைக்கப்பட்ட வேலிகளிலும், பளிங்கு இறவானங்களிலும், வீடுகளில் பளிங்குக் கல்லில் கூரைக்குக் கீழ் செதுக்கப்பட்ட அலங்காரங்களிலும், மற்ற எந்த பறவையைக் காட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியும். என் நண்பனான உழவாரக் குருவி, பளபளப்பான சுவர்களில் கூட ஏதோ சொறசொறப்பான மேற்பரப்ப போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
”இத்தனைக் குறைபாடுகளையும் வைத்துக் கொண்டு அவைகளால் செய்ய முடிந்தது ஒன்று தான்; கூரைகளுக்கு கீழே இருக்கும் பொந்துகளை தங்கள் வீட்டுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்வது தான். ஆனால், அங்கு அவை முட்டையிட முடியாது; உருண்டு ஓடிவிடும். அதனால், அவை பறந்து வரும் வைக்கோல்களையும் கீழே விழும் சிறிய இலைகளையும் பிடித்து, கல் தரையில் தன்னுடைய எச்சிலைக் கொண்டு ஒட்டிவிடும். கட்டுமானத்தில் அதன் திறனுக்குப் பின்னால் இருக்கும் இரகசியம் இது தான். அவற்றின் எச்சில் அருமையானவை. மர அலமாரிகள் செய்யும் ஆசாரிகளின் சிறந்த கோந்து போல, உலர்ந்து உறுதியாகிவிடும். கூண்டு தயாரானவுடன், நீட்டமான வெள்ளை முட்டைகள் இடப்படுகின்றன.
உழவாரக்குருவிகளுள், புறாக்களில் உள்ளது போல பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை. எங்கள் பெண் பறவைகள், ஆண்களோடு சம உரிமை கொண்டவர்கள். ஆனால் பெண் உழவாரக் குருவியே எப்போதும் அதிக வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஆண் பறவை அடைகாப்பதே இல்லை. அது தன் துணையை அடைக்காக்க விட்டுவிடுகிறது. பகலில் எப்போதாவது தன் துணைக்கு உணவு கொண்டு வரும். மற்றபடி விழித்துக் கொண்டிருக்கும் பெரும் பொழுதுகளை தன்னைப் போன்ற ஆண் குருவிகளைச் சந்திக்கச் செலவழிக்கும். என்னைப் போன்ற புறாக்களைப் பின்பற்றி தன் துணைக்கு இன்னும் அதிக சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும் என்று என் உழவாரக் குருவி நண்பனிடம் சொன்னேன். ஆனால், அதை எவன் ஏதோ பகடி போல எடுத்துக் கொண்டுவிட்டான்.
”கடைசியில் எங்கள் ஏற்பாடுகள் எல்லாம் ஆன பிறகு, இலையுதிர்காலத்தின் ஒரு காலையில், திருவாளர் உழவாரக் குருவி வழி நடத்த நானும் ஐந்து குருவிகளும் தெற்கு நோக்கிக் கிளம்பினோம். நாங்கள் ஒருபோதும் நேர் பாதையில் செல்லவில்லை. பொதுவாக தெற்கு நோக்கியே நகர்ந்தாலும் கிழக்கு மேற்கு என்று வளைந்து வளைந்து பறந்தோம். உழவாரக் குருவிகள் ஆறுகளிலும் ஏரிகளிலும் மிதக்கும் ஈக்களையும் சிறிய பூச்சிகளையும் உண்ணும். மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் பறப்பவை. கண்ணைப் பறிக்கும் வேகம் அது. அவற்றுக்கு வனங்களைப் பிடிப்பதில்லை. அவற்றின் பார்வை எப்போதும் கீழே பூச்சிகளைத் தேடிக் கொண்டிருக்கும்போது அவை மரத்தில் மோதி இறக்கைகளை உடைத்துக் கொள்ளக்கூடும். தண்ணீருக்கு மேலே எந்த இடைஞ்சலும் இல்லாத திறந்த வெளிகளையே விரும்புபவை அவை. வாள் போன்ற அவற்றின் நீண்ட இறக்கைகளைக் கொண்டு, இரையை நோக்கி விழும் கழுகைப் போல காற்றை கிழித்துக்கொண்டு பறக்கின்றன. உழவாரக் குருவிகளின் துல்லியமான கண்ணையும் வாயையும் நினைத்துப் பாருங்கள். தண்ணீருக்கு மேலே பறக்கையில், பறக்கும் பூச்சிகளை லாகவமாக உண்பதைப் பார்க்கவேண்டும். எவ்வளவு லாகவம் என்றால், அதன் பாதையில் அதற்கு முன் சூரிய ஒளியில் ஆடிக் கொண்டிருந்த சிறிய பூச்சிகளும் ஈக்களும் சுத்தமாக காணாமல் போயிருக்கும்.
”இப்படித்தான் ஓடைகள் மீதும், குளங்கள் மேலேயும், ஏரிகள் மேலேயும் நாங்கள் பறந்தோம். ஆண் உழவாரக் குருவி உணவை வேகவேகமாக உண்ணும். நீர் குடிப்பதும் அப்படித்தான். தண்ணீருக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் போதே வேகமாக நீர்ச் சொட்டுக்களை அள்ளிக் கொண்டு, மிக அதிக வேகத்தில் விழுங்கிவிடும். மரங்கள் மட்டைகள் செடிகள் இருக்கும் இடங்களில் அவை பறக்க விரும்பாததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
”ஆனால் திறந்த வெளியில் அதிகம் பறப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. ஒரு உழவாரக் குருவி வேகவேகமாக பூச்சிகளைத் தின்றுகொண்டிருக்கும் போது, ஒரு குருவிப் பருந்து மேலிருந்து அதன் மீது பாயக்கூடும். இந்தச் சந்தர்ப்பங்களில் குருவியால் கீழே அமிழ முடியாது. அப்படிச் செய்தால் தண்ணீரில் முழுகிச் சாக வேண்டியது தான். என் நண்பர்கள் மீது நடத்தப்பட்ட அப்படியொரு தாக்குதல் பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். ஒருநாள் மதியம் அவர்களின் அன்றைய மாலை உணவை பிடிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். நான் இளம் குருவிகளின் மீது கண்வைத்துக் கொண்டு மேலே பறந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பருந்துக் குருவி கீழே பாய்ந்தது. இளம் குஞ்சுகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்த நான், என் உயிரையும் பொருட்படுத்தாமல் சீக்கிரம் செயல்பட வேண்டியிருந்தது. ஒரு நொடி கூட தயங்காமல் நான் முன்னேறி குட்டிக்கரணம் போட்டு எதிரிக்கும் குஞ்சுகளுக்கும் நடுவே என் உடலைக் கொண்டு வந்துவிட்டேன். அந்தக் குருவிப் பருந்து இத்தனை தைரியத்தை புறாக் குடும்பத்திலிருந்து வந்த ஒரு பறவையிடம் எதிர்பார்க்கவில்லை. அது என்னுடைய எடையையும் சரியாக கணிக்கவில்லை. அதைவிட குறைந்தது ஐந்து அவுண்சாவது நான் அதிகமாக இருந்திருப்பேன். தன் நகங்களால் என்னுடைய வாலைப் பிடித்து, கொஞ்சம் இறகுகளைப் பிய்த்துவிட்டது. தனக்கு என்னமோ கிடைத்துவிட்டது என்ற நினைப்பில் இரண்டொரு முறை காற்றில் வட்டமிட்டது. என்னுடைய சிறகுகள் மட்டுமே சிக்கியிருக்கிறது என்பதை அது உணரும் முன், அனைத்து உழவாரக் குருவிகளும் யாரும் அணுக முடியாத ஒரு மரக்கிளையில் பத்திரமாக ஒளிந்து கொண்டார்கள். ஆனால் அந்தச் சின்ன குருவிப் பருந்து கடுமையான எரிச்சலில் ஒரு பெரிய பறவையைப் போல என் மீது விழுந்தது. இருந்தாலும், அதனுடைய உடம்பு சிறியதாகவும் நகங்கள் மிகச் சிறியதாகவும் இருந்ததால், அதனால் என் இறகையும் உடம்பையும் அதிக ஆழம் கிழிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால், அதனுடைய சவாலை ஏற்று நான் மேலே ஏறினேன். அதுவும் தொடர்ந்தது. நான் விரைவாக கீழிறங்கினேன். அதுவும் கீழே இறங்கியது. பிறகு நான் மேலே ஏறத் துவங்கினேன். அதுவும் முன்பு போல் தொடர்ந்தது. ஆனால், அந்தச் சிறிய பருந்துகள் உயரத்திலிருக்கும் காற்றுக்கு அஞ்சுபவை. இப்போது அதன் இறக்கைகள் பின் தங்கிவிட்டன. நான் இரண்டு முறை இறக்கைகளை அடித்தால், அதனால் ஒரு முறை மட்டுமே அடித்துக் கொள்ள முடிந்தது. நம்பிக்கையிழந்து சோர்ந்து இருக்கும் பருந்தைப் பார்த்த பின், வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடத்தை அதற்குக் கற்பிக்க முடிவு செய்தேன். நினைத்த மாத்திரத்தில் என் திட்டத்தை செயல்படுத்தியும் விட்டேன். நான் விரைந்து கீழே இறங்கினேன். அதுவும் தொடர்ந்து வந்தது. கீழே கீழே கீழே! ஏரியின் நீர் எங்களை நோக்கி உயர்ந்து கொண்டே இருந்தது. நீர்ப்பரப்பு என் இறக்கையின் அளவு தூரம் மட்டுமே இருக்கும் போது, நான் சில அங்குலங்கள் முன்னோக்கிப் பறந்து, ஒரு வெதுவெதுப்பான காற்றுச் சுழலில் நுழைந்தேன். அந்தச் சுழல் என்னை மேலே கொண்டு செல்ல உதவியது. மலைக்குகைகளிலும் மலைப்பிரதேசங்களின் பள்ளத்தாக்குகளிலும் காற்று வெதுவெதுப்பாகி, குளிர்ந்த பகுதிக்கு தள்ளும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். திடீரென்று மேலே பறக்க வேண்டியிருக்கும் போது பறவைகளான நாங்கள் இந்த வெதுவெதுப்பான காற்றுச் சுழலைத்தான் தேடுவோம். இப்போது நான் மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு, கீழே பார்க்கிறேன். அந்தப் குருவிப் பருந்து தண்ணீரில் முழ்கிக் கொண்டிருந்தது. அதனால் அந்தக் காற்றுச் சுழலை அடைய முடியவில்லை. கடினமாக நீந்திய பின், பறக்க முடியாமல் கரையை நோக்கிப் பறந்து, தன்னுடைய அவமானத்தை அடர்ந்த இலைகளுக்கு இடையில் மறைத்துக் கொண்டது. அந்த நொடியில் உழவாரக் குருவிகள் தங்கள் மறைவிடத்திலிருந்து வெளிவந்து தெற்கு நோக்கிப் பறந்தனர்.
”அடுத்த நாள் நாங்கள் சில காட்டு வாத்துகளைச் சந்தித்தோம். என்னைப் போன்றே வண்ணக் கழுத்தைக் கொண்டிருந்தன. மற்றபடி அவை பனியைப் போன்று வேன்மையானவை. அவை ஓடை வாத்துகள். மீன் பிடிப்பதற்காக மலை ஓடையில் அப்படியே மிதந்து வருவது அவற்றின் வழக்கம். அதிக தூரம் சென்ற பின், தண்ணீர்லிருந்து எழும்பி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே பறந்துவிடும். இப்படி அங்கும் இங்கும் பறந்து கொண்டே ஒரு நாளைக் கழித்துவிடும். கீஸ் வாத்துகளை விட இவற்றின் அலகுகள் தட்டையானவை. மேலும், உட்புறம் குழிவானவை. மீனைப் பிடித்துவிட்டால் ஒருபோதும் நழுவாது. மட்டி மீன்களைப் பற்றி அவை அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஏரியில் எண்ணற்ற மீன்கள் இருப்பதால் கூட இப்படி இருக்கலாம். உழவாரக் குருவிகளுக்கு இந்த இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால், வாத்துகள் இறக்கைகளால் தொடர்ந்து காற்றை அடித்துக் கொண்டேயிருக்க, சாதாரணமாக நீரின் மேற்ப்பரப்பில் பறக்கும் பூச்சிகளை எல்லாம் துரத்திவிடுகின்றன. இருந்தும், பெரும்பாலான வாத்துகளுக்குப் பிடித்தமான சலனமில்லாத நீரை விடுத்து இந்த வாத்துகள் மலைகளின் வேகமான நீரோட்டத்தில் விரும்பி வாழ்வது உழவாரக் குருவிகளுக்கு சந்தோஷத்தை அளித்தது.
”இந்த வாத்துகள் தான், அந்தப் பகுதியில் நிறைந்திருக்கும் ஆந்தைகள் மற்றும் பிற ராக்கால கொலைகாரர்களைப் பற்றி எங்களுக்கு எச்சரிக்கை செய்தன. அதனால், எங்களால் முடிந்தவரை ஆந்தைகள் புக முடியாத அளவிற்கு சிறிய இடங்களில் ஒளிந்து கொண்டோம். உழவாரக் குருவிகளுக்குப் போதுமான அளவில் ஒரு மரத்தில் பொந்துகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. ஆனால், நான் வருவது வரட்டும் என்று முடிவு செய்து வெட்ட வெளியில் தங்க முடிவு செய்தேன். சீக்கிரமாய் இரவு வந்தது.