ஆடம்ஸ் – ஜார்ஜ் சாண்டர்ஸ்

என்னால் ஆடம்ஸை எப்போதும் சகித்துக் கொள்ள முடிந்ததே கிடையாது. ஒரு நாள் பார்த்தால் அவன் என் வீட்டு கிச்சனில் நின்றுகொண்டிருக்கிறான், அண்டர்வேர் மட்டும் போட்டுக் கொண்டு. என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்து நின்று கொண்டிருக்கிறான்! எனவே, அவன் மண்டையின் பின்பக்கம் ஒரு போடு போட்டேன், அவன் சரிந்து விழுகிறான். எழுந்து நிற்கும்போது, மறுபடியும் ஒரு போடு போடுகிறேன், அவன் மீண்டும் சரிந்து விழுகிறான். மறுபடியும் நீ இப்படி செய்தால், கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன், எனக்கு என்ன சொல்வதென்றுகூட தெரியவில்லை, ங்கோத்தா என்கிற மாதிரி  நான் அதன்பின் அவனை மாடிப்படிக்கட்டுகளில் உருட்டி விடுகிறேன், வெளியே, முன்வசந்தப்பருவத்தின் சேற்றில் போய் விழுகிறான்.
 
கரேன் திரும்பி வந்ததும் நான் அவளைத் தனியே அழைத்துப் போகிறேன். நான் பேசிய விஷயம் இதுதான்: கதவைப் பூட்டி வை, அவன் வீட்டுக்கு வந்திருக்கும்போது, குழந்தைகள் அறையைவிட்டு வெளியே வரக் கூடாது.

 
சாப்பிட்டு முடித்ததும் நினைத்துப் பார்க்கிறேன்: ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு ஒருத்தன் வருகிறான், நான் அதைப் பொறுத்துக்கொண்டு இங்கு உட்கார்ந்திருக்க வேண்டுமா? இதுதான் அன்பா? ஏதாவது ஆனால் என்னவென்று யோசிக்க வேண்டாமா? ஏதாவது தப்பு நடந்து விட்டால் என்ன செய்வது? யாராவது ஒரு குழந்தை வெளியே வந்தாலோ அவன் உள்ளே போய் விட்டாலோ என்ன செய்வது? இல்லை, இல்லை, இல்லை, என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
அதனால் உள்ளே போய், எங்கே இருக்கிறான், என்றேன்.
 
அதற்கு லின், மாடியில் இருக்கிறார், ஏன்?, என்று சொன்னாள்.
 
மேலே போனேன். அவன் கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான், இன்னும் அவன் அந்த சனியன் பிடித்த அண்டர்வேரைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறான், ஆனால் என்ன ஒன்று, இப்போது அவன் அதன்கூடவே மேலுக்கு ஒரு சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். எனவே, அவன் என்னைப் பார்க்க திரும்பிக் கொண்டிருக்கும்போதே ஒரு போடு போட்டேன், சரிந்து விழுந்தவன் அறையை விட்டு ஊர்ந்து வெளியே செல்ல முயற்சித்தான், ஆனால் நான் அவன் முதுகில் என் காலை ஊன்றி நிறுத்தி வைத்தேன்.
 
நீ மட்டும், என்று சொன்னேன். மறுபடியும் நீ மட்டும்.
 
இப்போது சரியாகப் போய் விட்டது, என்கிறான் அவன். நான் உன் வீட்டுக்கு வந்தேன், நீ என் வீட்டுக்கு வந்தாய்.
 
ஆனால் நான் பேண்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன், என்கிறேன், அதன்பின் அவன் மண்டையின் பின்புறம் லைட்டாக ஒன்று போடுகிறேன்.
 
நான் இருக்கிறபடிதான் இருக்க முடியும், என்கிறான்.
 
எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்கிறான்! இதை ஒப்புக் கொள்ள வேறு செய்கிறான்! எனவே, மறுபடியும் ஒரு போடு போட்டேன், ஏய் ரோஜர், ஏய், என்று சொல்லிக் கொண்டே லின் உள்ளே வந்து கொண்டிருந்தாள். நான்தான் ரோஜர். அப்போது பார்த்து அவன் எழுந்திருக்கப் பார்க்கிறான். எனக்கு ஆத்திரமாய் வந்தது. அவன் எழுந்திருப்பதா? எனக்கு எதிராகவா? நான் அவனுக்கு மறுபடியும் ஒரு போடு போட்டிருப்பேன், ஆனால் அதற்குள் அவள் என்னைத் தள்ளிவிடுகிறாள்\, அவள் குறுக்கே புகுந்து விலக்கி விகிடுவது போல். இப்போது அவன் மேல் ஒரு போடு போட அவளைப் பின்னால் தள்ள வேண்டியிருக்கிறது, ஆனால் துரதிருஷ்டவசமாக அவளுக்கு சறுக்கி விடுகிறது, எனவே சரிந்து விழுகிறாள்- அவள் படுத்துக் கொண்டிருப்பது போல் கிடக்கிறாள், அவளது ஸ்கர்ட் மேலே உயர்ந்திருக்கிறது- இப்போது அவனுக்கு ஆத்திரம் வருகிறது! ஆத்திரம்! அதுவும் என்மேல்! அவனானால் அண்டர்வேர் போட்டுக் கொண்டிருக்கிறான், என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்து நீன்று கொண்டிருக்கிறான், அவனா என் மேல் ஆத்திரப்படுகிறான்? எத்தனை இரவுகள் ஆடம்ஸ் வீட்டில் அவன்  விதவிதமாகத் தட்டுவதையும் போடுவதையும் கேட்டிருக்கிறேன், மூச்சிறைக்க அவள், பிராங்க், கடவுளே, நான் ஒரு பெண், எனக்கு வலிக்கிறது, குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னவெல்லாம் சொல்லுவாள்.  
 
ஏனென்றால் அவன் அந்த மாதிரி ஆள்தான்.
 
எனவே அவனை மீண்டும் ஒரு போடு போட்டேன், அவள் என் மீது ஊர்ந்தேறி வந்து,  ப்ளீஸ் ப்ளீஸ் என்று சொல்லும்போது அவளைக் கீழே தள்ள வேண்டியதாயிற்று, கெட்ட நோக்கத்தில் அல்ல, விலகி இரு என்பது போல் தள்ளி விட்டேன், ஆனால் என்ன ஆகிறது பாருங்கள், என் அதிர்ஷ்டம் அப்படி, குழந்தைகள் வெளியே ஓடி வந்து விட்டார்கள்- இந்த ஆடம்ஸ் குழந்தைகள், சின்னஞ்சிறு நடிகர் திலகங்கள், வீட்டின் பின்புறம் எப்போதும் ம்யூசிக்கல்ஸ் அது இது என்று நடித்துக் கொண்டே இருப்பார்கள்- ஆக, இவர்கள் வந்து விட்டார்கள், ஒரே நாடகீய கூச்சல்கள்: அம்மா, அப்பா! ஓகே, இதெல்லாம் பார்ப்பதற்கு நன்றாக இல்லைதான், எனவே நான் வெளியேறப் பார்த்தேன், ஆனால் அவர்கள் கதவுக்கருகில் வழி மறித்து நின்று கொண்டிருக்கிறார்கள், என்ன செய்வது எந்த பக்கம் திரும்புவது, அதிர்ச்சியால் சிலையாகி விட்டோம் என்பது போல். எனவே நான் அவர்களைத் தள்ளிக் கொண்டு வெளியே போனேன், முரட்டுத்தனமாக அல்ல, மிகவும் மென்மையாகதான் தள்ளினேன்- எனக்கும் அவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது, பலமுறை அவர்களை ஆடம்ஸ் அடித்தது என் காதில் விழுந்திருக்கிறது. நான் தள்ளி விட்டத்தில் அந்தக் குழந்தைகளில் ஒன்று சரிந்து விழுந்து மண்டியிட்டது, நான் அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டால் அவள் என்னைக் கடிக்க வருகிறாள்! என்ன நடக்கிறது என்ன ஏது என்று எதுவும் அவளுக்குத் தெரியவில்லை போல, அவள் வலிக்கிற மாதிரி கடித்து விட்டாள், எனக்கும் ஆத்திரம் வந்து விட்டது, எனவே நான் ஆடம்ஸிடம் போனேன், அவன் அப்போதுதான் எழுந்து கொண்டிருந்தான், எனக்குக் கிடைத்த கடிக்கு மாற்றாய் அவன் தலையின் உச்சியில் செல்லமாய் ஒரு போடு போட்டேன். 
 
நாசமாய்ப் போனதுகளை நீயே வைத்துக் கொள், என்றேன். நாசமாய்ப் போன உன் குழந்தைகளை என்னிடமிருந்து-
 
அப்போது எனக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது, எனவே அந்த பிளாக்கைச் சுற்றி கொஞ்சம் நடந்தேன், ஆனாலும்கூட ஏதோ தப்பு நடந்திருப்பது போல் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. காரணம், எல்லாம் இனிதான் ஆரம்பிக்கப் போகிறது, புரிகிறதா? அங்கே ஆடம்ஸ் கோபமாய் இருக்கிறான், என்னைப் பற்றி அந்தக் குழந்தைகளிடம் பொய்கள் சொல்லிக் கொண்டிருக்கிறான், அதுவும் அவர்கள் என்ன நடந்தது  என்பதைப் பார்த்திருப்பதால் (நான் போட்ட போடுகள்), என்ன நடந்தது என்பதைப் பார்க்காதிருப்பதால் (அண்டர்வேரில் அவன், என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்து), ஒவ்வொரு அரைகுறை உண்மையையும் முழுசாக நம்பிக் கொண்டிருப்பார்களாக இருக்கும், எனக்கோ, அருமை, இப்போது அவர்கள் என்னை வெறுக்கிறார்கள், ஏதோ நான்தான் இதில் கெட்டவன் என்கிற மாதிரி, இனி கோடைக்காலம் முழுதும் சேட்டை செய்யப் போகிறார்கள், என் குழாய்களில் ஓட்டை போடப்போகிறார்கள், என் காரின் டாங்கில் சிரப் ஊற்றப் போகிறார்கள், திடீரென்று என்னுடைய நாயின் அடிவயிற்றில் சூடு வைய்த்த கொப்புளம் இருக்கப் போகிறது. 
 
எனவே நான் இந்த விஷயத்தை ஒரு நோட்டிஸ் மாதிரி டைப் செய்கிறேன், இதையும் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் அப்பா என் வீட்டு கிச்சனில் ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தார், என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்தபடி, என்று அவற்றில் டைப் செய்கிறேன். அதில் ஒன்றை கதவினுள் உட்புறம் ஒட்டி வைக்கிறேன், அந்தக் குழந்தைகள் சாப்ட்பால் விளையாடப் போகும்போது அதைப் பார்க்க வசதியாக, அதன்பின் ஒரு ஒன்பது நோட்டிஸ்களை அவர்களைது தபால்பெட்டியில் திணிக்கிறேன், மிச்சம் இருப்பதில், “உங்கள் அப்பா” என்பதை அடித்து, “பிராங்க் ஆடம்ஸ்” என்று திருத்தி எழுதி, அதை எங்கள் பிளாக்கில் உள்ள அத்தனை தபால் பெட்டிகளிலும் போட்டு வைக்கிறேன்.  
 
இரவெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து அழைப்புப் மாற்றி அழைப்பு வந்தபடி இருக்கிறது, போலீஸைக் கூப்பிடு, ஆடம்ஸுக்கு உதவி தேவைப்படுகிறது, அவன் ஒரு கிறுக்கன், அவனை எனக்கு எப்போதும் பிடிக்காது, நாம் கொஞ்சம் பேர் அவன் வீட்டுக்குப் போகலாமா, நாம் இணைந்து செயல்படுவோம், நீ ஆத்திரப்பட்டு எதுவும் செய்து விடாதே, என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த மாதிரி விஷயங்கள்தான். எல்லாம் சரி, ஆனால் அப்புறம் நான் நடுராத்திரி சிகரெட் பிடிக்க வெளியே போகும்போது, அவன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவர்களுடைய வீட்டையா? விளையாடாதீர்கள். அவன் என் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவன் பார்வையே சுட்டெரித்துவிடும் போலிருக்கிறது, என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்|? என்று கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு. 
 
நான் இருக்கிறபடிதான் இருக்க முடியும், என்கிறான்.
 
ங்கொத்தா, என்று சொல்கிறேன், அவனுக்கு ஒரு போடு போட அவனை நோக்கிப் பாய்கிறேன், ஆனால் அவன் உள்ளே ஓடிப் போய் விடுகிறான்.
 
போலீஸ் பற்றி பேசுவதானால், நான் நினைப்பது இதுதான்: நான் என்ன செய்ய வேண்டும், அவன் என் வீட்டுக்கு மறுபடியும் வரும்வரை காத்திருக்க வேண்டும், அப்புறம் அவன் வந்ததும் போலீசைக் கூப்பிட வேண்டும், அப்புறம் அவர்கள் வரும்வரை அவன் அண்டர்வேர் போட்டுக் கொண்டு என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க வேண்டுமா?
 
இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள், என் வழி அதுவல்ல.
 
அடுத்த நாள் என் சின்னவன், பிரையன், பின்வாசல் கதவடியில் நின்று கொண்டிருக்கிறான், தன் பட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு, நான் அங்கே போய் கதவை அடித்து சாத்துகிறேன், வேண்டாம் வேண்டாம் ஏன்  வேண்டாம் என்று உனக்கு நன்றாகத் தெரியும் கண்ணா, என்று சொல்கிறேன்.
 
பாவம் என் பையன், மதியம் முழுக்க மடியில் பட்டத்தை வைத்துக் கொண்டு பிபிஎஸ் சேனலில் எவனோ ஒரு முட்டாள், ஷேடிங் செய்து டெப்த் கொடுக்கலாம், இந்த மரக் கொம்பில் அதைச் செய்து பார்த்தால் என்ன? என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதைப பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 
அப்புறம் திங்கட்கிழமை காலை ஆடம்ஸ் அவனது காரை நோக்கிப் போவதைப் பார்க்கிறேன், இப்போது அவன் மறுபடியும் என்னைப் பொசுக்கி விடுவதுபோல் பார்க்கிறான்! அத்தனை வெறுப்பு நிறைந்த பார்வையை நான் எப்போதும் சந்தித்ததே இல்லை. பழியை என் மீது திருப்பி விட்டான். ஏதோ நியாயம் அவன் பக்கம் இருப்பது போல்! அவனுக்கு ஒன்று போட அவன் மேல் பாய்கிறேன், ஆனால் அவன் காருக்குள் ஏறிப் போய் விட்டான்.
 
நாளெல்லாம் அந்தப் பார்வையே என் மனதில் இருந்து கொண்டிருக்கிறது, வெறுப்புப் பார்வை.
 
அப்புறம் நினைத்துப் பார்த்தேன், அவன் நானாக இருந்தால், எனக்கு அந்த அளவு வெறுப்பு இருந்தால், நான் என்ன செய்வேன்? நிச்சயம் நான் இந்த ஒரு விஷயத்தைச் செய்வேன், வெறுப்பை எனக்குள் அடக்கி வைத்துக் கொள்வேன், அடக்கிக் கொண்டேயிருப்பேன், அப்புறம் ஒரு நாள் இரவு அது மிதமிஞ்சிப் போகும், அப்போது நான் என் எதிரியின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து அவனையும் அவனது குடும்பத்தினரையும் தூங்கிக் கொண்டிருக்கும்போது கத்தியால் குத்திக் கொன்றுவிடுவேன். அல்லது, சுட்டுக் கொல்வேன். நீ அதைச் செய்தாக வேண்டும். அதுதான் மனித இயல்பு. இதற்காக நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.
 
நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன், என் குடுமபத்தைப் பாதுகாக்க வேண்டும், அல்லது அவர்களைக் கொன்ற பழி என்னைச் சேரும்.
 
எனவே நான் சீக்கிரம் வீடு திரும்பினேன், யாரும் இல்லை என்று தெரிந்ததும் ஆடம்ஸ் வீட்டுக்குப் போனேன், அவன் வீட்டு பேஸ்மெண்ட்டில் இருந்த ரைபிளை எடுத்துக் கொண்டேன், ஸ்டீக் கத்திகள், பட்டர் கத்திகள் அனைத்தும் எடுத்துக் கொண்டேன், அவற்றைக் கூர்தீட்ட முடியும், அவர்களது சாணை தீட்டும் கருவியையும் எடுத்துக் கொண்டேன், அது தவிர இரண்டு லெட்டர் ஓப்பனர்களும் கனமான ஒரு பேப்பர்வெயிட்டும் இருந்தது, அதையும் எடுத்துக் கொண்டேன், நான் மட்டும் அவனாக இருந்து, என்னிடமிருந்த துப்பாக்கிகளும் கத்திகளும் காணாமல் போயிருந்தால், நிச்சயமாக என் எதிரி தூங்கிக் கொண்டிருக்கும்போது அதை எடுத்து அவனது மண்டையை உடைப்பேன், அவன் போக அவன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர் மண்டையையும் உடைப்பேன்.
 
அன்றிரவு கொஞ்சம் நன்றாக தூங்கினேன், ஆனால் வியர்த்து விதிர்விதிர்த்து எழுந்து கொண்டேன், என் முன் ஒரு கேள்வி, யாராவது என் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் என் குழந்தைகளில் ஒன்றையும் கீழே தள்ளிவிட்டு, என் துப்பாக்கிகளையும் கத்திகளையும் சாணை தீட்டும் கருவியையும் என் பேபப்ர்வெயிட்டையும் திருடிக் கொண்டு போனால் என்ன செய்வேன், என்று என்னையே கேட்டுக் கொண்டேன். பின் இந்தக் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டேன்: ஆக்ரோஷமாக என் வீடெங்கும் தேடிப் பார்ப்பேன், வேறு ஏதாவது பயங்கர ஆயுதம் கிடைக்கிறதா என்று, பெயிண்ட், தின்னர், வீட்டு வேலைக்கு உதவும் கெமிக்கல்கள், எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, ஒன்று என் எதிரியின் வீட்டைச் சுற்றி வளைத்து இந்த நச்சுப் பொருட்களைக் கொட்டி நெருப்பு வைப்பேன், அல்லது, அதில் சிறிதை என் எதிரியின் நீச்சல் குளத்தில் கொட்டுவேன், அதன்பின் அது, (1) நீச்சல் குளத்தின் லைனரை கெட்டுப் போகச் செய்யும், அப்புறம் (2) என் எதிரியின் குழந்தைகள் நீந்தும்போது அவர்களுக்கு உடம்புக்கு வரும்
 
அப்புறம் நான் தூங்கிக் கொண்டிருக்கும் என் குழந்தைகளைப் பார்த்தேன், கடவுளே கடவுளே, என் குழந்தைகளைப் போல் இவ்வளவு இனிய குழந்தைகள் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது, நான் என் பைஜாமாவில் நின்று கொண்டு, ஆடம்ஸ் அங்கே அவனது அண்டர்வேரில் நின்று கொண்டு என் குழந்தைகள் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வரப் போராடி மூச்சுத் திணறி வாந்தி எடுப்பதைக் கற்பனை செய்து பார்ப்பதை நினைத்துப் பார்த்தேன், அப்புறம் முடிவு எடுத்தேன், இல்லை, வேண்டாம், இனி நான் இப்படி வாழ மாட்டேன்..
எனவே அன்று மதியம் நான் முன்னர் உடைத்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே போய் அவன் வீட்டில் இருந்த கெமிக்கல்கள் அத்தனையும் திரட்டினேன், நம்பினால் நம்புங்கள், அவன் எக்கச்சக்கம் வைத்திருந்தான், என்னைவிட அதிகமாய், அவன் தேவைகளுக்கும் அதிகமாய். தின்னர், பெயிண்ட், லை, காஸ், சால்வென்ட்டுகள், என்று என்னென்னவோ. ஒன்பது ஹெப்டி பைகளில் அது அத்தனையும் போட்டு வைத்தபின், முதல் பையைத் தூக்கிக் கொண்டு மாடிப்படி ஏறும்போது பார்த்து நாசமாய்ப போன அவன் குடும்பம் மொத்தமும் என் மீது வந்து விழுகிறது, அவனது குழந்தைகளும்கூட, என்னை கோட் ஹாங்கர்களால் சாட்டையில் அடிப்பது போல் அடிக்கிறார்கள், கூர்மையான முனைகள் கொண்ட புத்தகங்களால் அடிக்கிறார்கள், என் கண்ணின் ஹேர் ஸ்ப்ரே தெளிக்கிறார்கள், அந்த நாய் வேறு என்னைக் கடிக்க வருகிறது- அவர்கள் வீட்டு பேஸ்மெண்ட் படிக்கட்டுகளில் உருண்டு விழும்போது நினைத்துக் கொண்டேன், இவர்கள் என்னைக் கொன்றுவிடப் போகிறார்கள். என் தலை கான்கிரீட் தலையில் மோதிக் கொண்டபோது நட்சத்திரங்களைக் கண்டேன், ஐயோ, நிஜமாகவே இவர்கள் என்னைக் கொன்றுவிடப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன், இவர்கள் என்னைக் கொன்று விட்டால் இனி எப்போதும் மேலாரு குட்டியும் நானும் ஒரே பாப்கார்ன் பவுலில் ஒன்றாய் சாப்பிட முடியாது, பொடியன் ப்ரையானோ நானோ மோசமான ஜோக் சொல்லிவிட்டால் மாற்றி மாற்றி புருவத்தை நெரித்து விளையாடுவோமே அது முடியாது, இனி எப்போதும் அதைச் செய்து முடித்ததும் நானும் கரேனும் அருகருகே படுத்தபடி ஜன்னல்\ வழியே வெளியே மின்கம்பிகளில் மஞ்சள் மூக்கு பறவைகள் வந்து போவதைப் பார்த்துக் கொண்டே எங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பேச முடியாது. மிகவும் சிரம்ப்பட்டு எழுந்து நின்றேன், நான் எப்படி இங்கு வந்தேன் என்பதை மறந்து விடுவோம், என்று நினைத்துக் கொண்டேன், இங்கே வந்து விட்டேன், இனி இங்கிருந்து வெளியே சென்றாக வேண்டும், நான் வாழ்ந்தாக வேண்டும். எனவே போடு போடு என்று போட ஆரம்பித்தேன், அவர்கள் பின்வாங்கியதும், குட்டிப் பெண்ணை அணைத்துக்கொண்டு ஆடாமசும் அவனது பதின்ம வயது மகனும் அமர்ந்திருந்தார்கள், பாவம், அந்தக் குழந்தை நான் சற்றே உதைத்தபோது ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிக தொலைவு பறந்து சென்று விழுந்துவிட்டது, அவர்கள் பின்வாகியதும் என் லைட்டரை எடுத்து பையை, அந்த நச்சுப் பையை, பற்ற வைத்துவிட்டு படிக்கட்டுகளின் உச்சத்தில் தெரிந்த வெளிச்சத்தை நோக்கி ஓடினேன்  அங்கேதான் கதவு இருக்கிறது என்பதை நான் அறிந்திருந்தேன், அங்கேதான் கதவும், இரவும், என் சுதந்திரமும் என் வீடும் இருந்தது.
ஒளிப்பட உதவி- விக்கிப்பீடியா
நன்றி- The Rumpus
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.