– ஸ்ரீதர் நாராயணன் –
எறும்புகளை வளர்க்க என
சிறிய நெகிழி பெட்டிகளில்
கண்ணாடி மூடிகள் கொண்ட
சச்சதுர வீடுகள் அவை.
ஒவ்வொன்றிலும் காற்றுபோக்கியாக
சிறு துளைகளும் உண்டு.
அவற்றின் வழியே வந்து போகும்
எறும்புகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு பெயரும், குடும்பமும்
கண்டுபிடித்து வைத்திருந்தாள்
நுணுக்கிய சர்க்கரை
இணுக்குகளை சேர்த்து
வைத்துக் கொள்ள ஓரத்தில்
சிறு மூலையும் உண்டு.
எறும்புகள் வந்து சேர
தாமதமாகும்போது
தேடிப்பிடித்து கொண்டுவந்து
சேர்ப்பார்கள்
அவளும் அண்ணனும்.
குளிர்காலங்களில் மட்டும்
முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
அவற்றை உள்ளங்கையில் ஏந்தி
உதடுகளால் ஊதி
கதகதப்பாக்குகிறாள்.
சாரிசாரியாக வந்து நிறைக்கின்றன
நெகிழ்ச்சியின் தருணங்கள்.
