– ஸ்ரீதர் நாராயணன் –
பலவண்ணத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கிற
ஊதாங்குழல்களில்
ஆரஞ்சு வண்ண குழலை
பாய்ந்து பற்றியெடுக்கிறாள்.
சாளவாய் ஒழுக
ஊதி ஊதிப் பார்க்கிறாள்.
ஓசை எழவில்லை.
வாகாய் பிடித்து
மேளம் வாசிக்கலாமென்றால்
நீளமும் பத்தவில்லை
சைக்கிள் ஓட்டும்போது
தடைக்கல்லாய் போட்டு
ஏறியிறங்கி விளையாட
பருமனும் இல்லை.
ஊதாத அந்த குழலை
இற்றுப்போக அனுமதிக்காதபடிக்கு
இறுகப் பற்றிக்கொள்கிறாள்.
இன்னொரு ஆரஞ்சு வண்ணம்
இருந்திருந்தால் அண்ணனுக்கும்
ஒன்று எடுத்து வைத்திருப்பாள்.
இப்போது எஞ்சியிருப்பது
ஒன்றுக்கும் ஆகாக ஒரு குழலும்
அவனுக்கு பிரிய வண்ணத்தை
கைக்கொண்ட பெருமையில்
விகசித்தபடி அவளும்.
