ரயில் நிலயத்திற்கு தனியாக வருவது எப்போதும் போல் எனக்கு படபடப்பை அளித்தது. இதற்கான காரணம் இதுவரையில் எனக்குச் சரியாக புலப்படவில்லை. காரணங்களைப் பற்றி சிந்திக்கையில் ஏதேதோ நினைவுகள் கால வரிசையின்றி ஒரே சமயத்தில் கிளர்நதெழும். இது படபடப்பை மேலும் அதிகரிக்கும். வழியனுப்புவதறகு யாராவது கூடவே வந்தால் இம்மாதிரியான சிந்தனைகளை ரயில் கிளம்பும் வரையிலாவது ஒத்திப் போடலாம். ஆனால் இதை எல்லாம் வெளியே சொன்னால் கேலியும் சிரிப்பும்தான் மிஞ்சும். நாற்பது வயதில் ரயிலில் தனியாகப் போக பயம் என்று சொன்னால் யார் நம்புவார்கள்.
பள்ளிப் பருவத்தில் ரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் அம்மாவும் கூடவே வருவாள். கோடை விடுமுறைக்காக தாத்தாவைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு வருடமும் திருநெல்வேலி செல்வோம். அப்பா சில சமயம்தான் வழியனுப்புவதற்காக பிளாட்பாரத்திற்கு வருவார். ஆனால் நாங்கள் திரும்பி வருகையில் எப்போதும் அப்பா எங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார். அனேகமாக எக்ஸ்பிரஸ் ரயில்தான். சில சமயங்களில் திராவை பிடித்த பாஸன்ஜர். அப்பா வந்தால் க்ரீம் பிஸ்கட், பழம், காமிக் புத்தகம் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் கிளம்புவார்.
கல்யாணம் முடிந்து மனைவியுடன் தேனிலவுக்கு கொடைக்கானல் சென்ற போது அப்பா அம்மா, மாமனார், மாமியார் என்று ஒரு பெரிய பட்டாளமே வழியனுப்ப வந்திருந்தது. எப்போது கிளம்பிச் செல்வார்கள் என்று ஏங்கிக் கொண்டே அவர்களுடன் சிரித்துப் பேசவேண்டிய நிர்பந்தம். வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது ஆபீஸ் நண்பர்கள் ஏற்றி விட வருவார்கள். ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்னே “லைட்டா” ரெண்டு ரவுன்டு ஏத்திக் கொள்ளும் சடங்கும் நடக்கும். பின்னர் ரயில் புறப்படும் வரையிலும் முதலாளிமார்களைப் பற்றிய பிலாக்கணம். தொலைதூரம் அன்ரிசர்வ்டில் பயணிக்க வேண்டிய கவலையையும் மறந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்க முடிந்தது.
சிறுவயதில் வீட்டில் வருடம் முழுவதும் உறவினர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அப்பாவிடம் கார் இருந்ததால் அவர்களை ரயில் நிலயத்திற்கு அப்பாதான் கொண்டு விடவேண்டும். உறவுக்காரப் பெண்கள் திருமணமாகி வேறு ஊர்களுக்குச் செல்லும்போது அம்மாவும் நானும் அப்பாவுடன் கூடச் செல்வோம். புதுமணக் கோலத்தில் அந்தப் பெண்களை ரயிலில் பார்க்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கும். ஏனென்று தெரியாமலேயே அழுகை அழுகையாக வரும்.
விருந்தினர் வருவதும் ரயிலேற்றும் படலங்களும் இப்போது வெகுவாக குறைந்து விட்டன. அப்பாவிற்கு வயதாகி விட்டது. மேலும் அவர் காரை விற்று பல வருடங்கள் ஆகி விட்டது. எப்போதோ வரும் உறவினர்களுக்கு அப்பா பாஸ்ட் டிராக் வண்டியொன்றை மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறார்.
இன்றும் தனியாக ரயிலேறிச் செல்வது ஏதோ போலிருந்தது. இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பயம். தெரிந்ததிலிருந்து தெரியாததற்குள் தள்ளப்படுவது போல் ஒரு விதமான பாதுகாப்பின்மை. டிக்கட், பர்ஸ், பெட்டி எல்லாம் இருக்கிறதா என்று இன்னொரு முறை சரிபார்த்துக் கொண்டேன். சீக்கிரமே வந்துவிட்டதால் ரயில் இன்னமும் பிளாட்பாரத்திறகு வராதது தனிமையையும் பயத்தையும் அதிகரித்தது. திடீரென ஒலிபரப்பியில் நான் எதிர்பார்த்திருந்த ரயில் அரை மணி நேரம் தாமதமாக இரண்டாவது பிளாட்பாரத்திற்கு பதிலாக ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும் என்ற அறிவிப்பு வந்தது. ஐந்தாவது பிளாட்பாரத்திறகு மாற வேண்டிய கட்டாயம் எதிர்பாராத விதமாக மனதின் படபடப்பை சிறிது நேரம் மறக்கச் செய்தது.
சிகரெட் குடிப்பதற்கு முன்னால் காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. கடையில் கூட்டம் அலை மோதியது.
‘சேஞ்சு குடு ஸார் ‘
‘இருந்தா தரமாட்டேனா. பிஸ்கட் பாக்கட், வாழப்பழம், பிஸ்லேரி எடுத்துக்குரேன், சீக்கிரமா கொடு”
அதற்குள் காப்பி, டீ, சிகரெட் என்று பல குரல்கள் அச்சிறுவனை அவசரப்படுத்தின. அவன் அவர்களிடம் பேசிக்கொண்டே இடது கையால் பாக்கி சில்லறையை நீட்டினான். அதைச் சட்டைப்பையில் போட்டபடியே பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஆள் நடமாட்டம் அதிகமில்லாமல் பிளாட்பார்ம் இருட்டாக இருந்தது. யாரோ ஒரு ஆசாமி பெட்டி மேல் உட்கார்ந்து கொண்டு டிவியில் ஏதோவொரு கால்பந்து போட்டியின் மறுஒளிபரப்பை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகே ஒரு பருமனான நடுத்தர வயது பெண்மணியும் அவள் மகனும் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு தூணிற்கு பின்புறம் நின்று, சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன்.
மனது மீண்டும் படபடக்கத் தொடங்கியது. மீண்டுமொரு முறை பாக்கெட்டில் டிக்கட் பத்திரமாக இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன். ரூபாய் நோட்டுக்களை சரிவரப் பிரித்து மடித்து வைத்துக்கொண்டேன். சட்டென ஒரு எண்ணமெழ அதை களைவதற்காகவே கால்பந்து போட்டியைப் பார்ககத் தொடங்கினேன்.
நள்ளிரவு ஆகிவிட்டதால் கடைகளை அடைக்கத் தொடங்கி விட்டார்கள். பிளாட்பாரத்தை கவ்வியிருந்த இருட்டு அதனால் இன்னமும் அதிகரித்தது. கால்பந்தாட்டத்தில் ஆழ்ந்திருந்ததால் அந்தக் காப்பிக்கடைப் பையன் அங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. அவன் அழுதுகொண்டே பெட்டி மேல் அமர்ந்திருந்த அந்த ஆசாமியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்.
‘சாமி சத்தியமாத்தான் சொல்றேன் ஸார். யார்கிட்டயோ அவசரத்துல ஐநூறு ருபா எக்ஸ்ட்ராவா குடுத்துட்டேன். இப்போ அத திருப்பி கல்லாவுல வெக்கலனா வேலயே போயிடும் சார். நூறு ருபாயாச்சும் குடு சார்… ‘
பெட்டி ஆசாமி இதற்கெல்லாம் மசிபவன் போலத் தெரியவில்லை.
‘கைல பணமில்லப்பா, நீ வேற யாருகிட்டயாவது கேட்டுப் பாரு’ என்று கையை விரித்துவிட்டான்
பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்மனி சிறுவனிடம் தலையை வேகமாக ஆட்டிவிட்டு, பெட்டி ஆளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள். அவன் டிவி பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். நான் தூணிற்குப் பின் இருளில் மறைந்தபடியே சிறுவன் கடையை நோக்கிச் செல்வதைப் பார்ததுக் கொண்டிருந்தேன்.
ரயில் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. வழக்கம் போல் நான் யூகித்து வைத்திருந்த இடத்தைத் தாண்டி வெகு தொலைவில்தான் ரயில் என் கம்பார்ட்மென்டை கொண்டு சென்று நிறுத்தியது. பெட்டியை தூக்கிக்கொண்டு சற்று விரைவாக நடக்கத் தொடங்கினேன்.
திடீரென பின்பக்கத்திலிருந்து யாரோ என் கையைப் பற்றியது போலிருந்தது.
‘குடு ஸார் நான் தூக்கிட்டு வரேன். எந்த கம்பார்ட்மெண்டு?’ என்று அந்தக் காப்பிக்கடைப் பையன் கேட்டான்.
பெட்டியைத் தந்துவிட்டு அவனைப் பின்தொடர்ந்தேன். ரயிலேறி பெட்டியை சீட்டுக்கடியில் வைத்துவிட்டு அவன் நிமிரந்தான்.
‘ரொம்ப தாங்ஸ் ஸார்,’ என்று கூறிவிட்டு என் கையில் சிகரெட் பாக்கெட்டொன்றைத் திணித்துவிட்டு கதவை நோக்கி ஓடத் தொடங்கினான்.
ரயிலை விட்டு இறங்குமுன் என்னிடம் திரும்பி, “பரவால்ல வெச்சுக்கோ ஸார்” என்று தலையை ஆட்டிக்கொண்டே கூறினான்.
ரயில் மெதுவாகக் கிளம்பியது. சிறுவன் சிரித்துக்கொண்டே கையாட்டிக் கொண்டிருந்தான்.
இம்முறையும் என்னை வழியனுப்ப ஆள் கிடைத்ததை எண்ணி நானும் சிரித்தேன்.
ஒளிப்பட உதவி – Brendan O Se