மலை பதுங்கும் களிறுகள்

– ஆதவன் கிருஷ்ணா – 

வற்றிய மார் சிக்கு அடர்ந்த பசையற்ற கேசம்
வெடித்து துளை விழுந்து போன உடலாய்
நான்
பிடி பற்ற பயணப்படும் விரல்களைப் போல வாய் குவித்து அழும்
முகத்துக்காக பம்பரைக் கழற்றும் போது
அதிரும் துவக்காக மாறியிருந்தேன்

காயம் நிரம்பியிருந்த என் கால்களும்
வெட்டு பதிந்த கைகளும் மஞ்சளேறிய பூவனம் ஒன்றை
தேடும் நாளில் நான்
பதறி அலறும் செல்லாகிப் போயிருந்தேன்

நிலம் ஏகும் பாலை அதில்
துளிரும் வெண்சிவப்பு மலரின்
மெல்லிதழாய் விரியும் கணத்தில்
புவியடி குண்டாகவும் வெளிர் நிற குப்பியாகவும்
தோற்றம் கொண்டேன்.

நகரும் மென் வெயிலில்
நெவுள் புக அலைந்தலைந்து நான் என்னைப் போலவே
இருந்தோரைப் பார்த்தேன் அப்போது
எம்
கோரைச் சீவற் படுக்கைகளையும்
பட்டுப் போன காய்ந்த நிலங்களையும்
மீட்டுப் பெற
நாங்கள் மலை பதுங்கும் களிறுகள்
ஆனோம்.

ஒளிப்பட உதவி- Fineartamerica.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.