1. ரயிலுக்குக் காத்திருக்கும் இரும்பு இருக்கையில்
அமர்கையில் தடாலென விழப்போய் சுதாரித்து எழுந்து
அது உடைந்ததென உணர்ந்ததும் அதிர்ந்து சொன்னார்
“இந்த இருக்கை என்னை ஏமாற்றப் பார்கிறது,
உங்கள் எல்லோரையும் போலவே”, என்று என்னைப் பார்த்து
பின் சிரித்தபடி வேறு பக்கம் சென்று அமர்ந்தார் அமைதியாக
2. ரயிலேறியபின் 51 ஜன்னலோர இருக்கை இல்லையே என்ற கவலையில்
அமர்ந்தவன் அருகே அமர்ந்தவன் அருகே அமர்ந்தவன்
தன் செல்பேசியில் ஒவ்வொரு மாத்திரைக்கும்* ஒரு குறுஞ்செய்தி அனுப்பி
கடக் முடக் என நகத்தைக் கடிக்கிறான்
3. எதிரில் இருப்பவர் தன் மடிக்கணிணியில்
அலுவல் பார்க்கிறாரோ இல்லை
சினிமா பார்க்கிறாரோ
அடிமைத்தனம் அடிமைத்தனம்தான் என்கிறேன்
என்னிடம் நானே எள்ளி நகைத்தபடி
4. ஒரு ஜீபூம்பாவில் ரயிலில் உள்ளோரின்
செல்பேசிகளும் மடிக்கணிணிகளும் மாயமாக
மாயமாகாத என் செல்பேசியையும் மடிக்கணிணியையும் என்னையுமே
பார்க்கின்றார் எல்லோருமே
0. ஏணியில் ஏறும் ரயிலில் இப்படியும் நிகழுமோ என்று எண்ணியபடி
ஏணியிலிருந்து நான் இறங்கிக் கொண்டிருக்கிறேன்
ஏறும் ரயில் இதே ஏணியில்தான் வந்து கொண்டிருக்கிறது
எனத் தெரிந்தும்
* கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை