ஏபிஎன் பெட்டிக்கடை சம்பவம்

 ஸ்ரீதர் நாராயணன்

எப்போதும் வழக்கமாக சாப்பிடும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அந்த பெட்டிக்கடைக்கு வந்து அரை பாக்கெட் சிகரெட் வாங்கி, ஒன்றை பற்ற வைந்து புகைத்தவாறே, கயிற்றுக் கொடியில் தொங்கவிட்டிருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் வார இதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அந்த வாரத்திய இதழ் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதில் தஞ்சையை முன்வைத்து அருமையானதொரு தொடர்கதை வந்து கொண்டிருந்தது. ஆர்வத்துடன் அதைக் கையில் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தபோதுதான், கடைக்குள்ளிருந்து அந்த சத்தம் கேட்டது.

சற்றுமுன் சிகரெட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு மீதி சில்லறை கொடுத்த பையன்தான் சத்தமாக திட்டிக் கொண்டிருந்தான். யாரைத் திட்டுகிறான் என்று பின்புறம் திரும்பிப் பார்த்தால் இரண்டு பெண்கள்தான் மரத்தை சுற்றி கட்டியிருந்த கயிற்றிலிருந்த மாலை நாளிதழ் போஸ்டர்களை கண்களால் மேய்ந்து கொண்டிருந்தனர். பக்கத்தில் எஸ்டிடி பூத்துக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவன் அவர்களை திட்டியிருக்க வாய்ப்பில்லை. சுற்றுமுற்றும் பார்த்தால் வேறு எவரும் அருகில் இல்லை. மீண்டும் கடைக்குள் திரும்பிப் பார்த்தேன். அந்த பையன்தான், இன்னமும் உக்கிரமாக திட்டிக் கொண்டிருந்தான். அத்தனை கெட்ட வார்த்தைகளுக்கும் நடுவே ‘காசு கொடுக்காம புத்தகத்த தூக்கிட்டுப் போற’ என்பது அர்த்தமாக சில நொடிகள் பிடித்தது.

‘ஏய், யாரப்பா திட்டற? புத்தகத்த புரட்டிப் பாத்திட்டுதானே இருக்கோம். வாங்கிட்டுத்தான் புரட்டிப் பாக்கனும்னா சொல்லு. வாங்கிட்டுப் போறேன்’, கையில் இருந்த ஹெல்மெட்டை கக்கத்தில் இடுக்கிக் கொண்டே மீண்டும் பர்ஸை எடுக்க கால்சட்டைப் பையில் கையை விட்டேன். அதற்குள் உள்ளங்கை சற்று வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இப்படியொரு அதிரடியான தாக்குதலுக்கு எப்போதும் ஆளானதில்லை.

‘தெரியாதாய்யா உன்ன… இப்படி தெனம் வந்து தம்மப் போட்டு ஓசியில புத்தகத்த சுருட்டினு போறவந்தான நீயு. என்னமோ யோக்கியனாட்டம் சவுண்டு விடற’, பேசிக்கொண்டே அந்த கடைப்பையன் குனிந்து, கடைக்கு முன்னிருந்த பலகையின் கீழேயிருந்த கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தான்.

அந்த பெட்டிக்கடைக்கு என்று தனிப்பெயர் எல்லாம் கிடையாது. பக்கத்தில் இருந்த எஸ்டிடி பூத்தோடு சேர்ந்து இருந்ததால், அந்த பூத் உரிமையாளர் ஏபிஎன் பெயரிலேயே அந்தப் பெட்டிக்கடையையும் குறிப்பிட்டுக் கொண்டிருந்தோம். டு ஜிக்களும், திரி ஜிக்களும் வழக்கில் இல்லாத காலகட்டத்தில் எஸ்டிடி பூத்களுக்கு என்று பெரும் சந்தை இருந்த காலகட்டம். பெரிய இடமாக வாடகைக்கு எடுத்து நான்கு பிசிஓ லைன்களும், எஸ்டிடி, ஐஎஸ்டி லைன்களுமாக ஒரு பூத்தும், ஜெராக்ஸ், லேமினேஷன், டிடிபி வேலைகள் என்று ஒரு பகுதியிலும், பாஸ்போர்ட், ஈசிஎன்ஆர், பான் கார்டு மற்றும் இன்னபிற அரசாங்க வேலைகளை துரித கதியில் செய்து கொடுக்கும் சேவைகளுமாக ஏபிஎன் அண்ணாச்சி கடை நடத்திக் கொண்டிருந்தார். வெளியில் இருந்த பெட்டிக்கடை உட்பட எல்லா இடங்களிலும் அவருடைய சொந்த ஊரான நாங்குநேரி பக்கமிருந்து பத்திக் கொண்டு வந்த பையன்களை வரிசையாக வேலையில் போட்டிருந்தார். எந்தப் பையன் எந்த நேரத்தில் எந்தக் கடையில் இருப்பான் என்று நமக்கு தெரியாது. எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக ‘அப்படிக் கூடி வாரன். நீ எங்க நிக்கெ மூதி’ ராகம் இழுத்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

திட்டும்போதும் அதே ராகம்தான். இப்படி ஒரு வெளிப்படையான ஏச்சுப்பேச்சை என்றைக்கும் எதிர் கொண்டதில்லை என்பதால் நிலைகுலைந்து போய்விட்டேன். என்னில் இருந்த நான் வெளியேறி வெறுமையாகி விட்டது போலொரு உணர்வுடன், வாய் மட்டும் ஏதோ தத்திதத்தி பேசிக் கொண்டிருந்தது.

‘ஆளப் பாத்து பேசுப்பா. தெனம் இந்த வழியாத்தான் போறேன். வர்றேன். சிகரெட்டு வாங்கறேன். புக்கு வாங்கறேன். நீ பாட்டுக்கு காசு கொடுக்கலன்னு அடிச்சு விடறியே’ என்றபடி திரும்பிப் பார்த்தேன். மரத்திற்கு பக்கமிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் என் பார்வையை சந்தித்ததும் சட்டென தங்கள் பார்வையை விலக்கிக் கொண்டு, தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே நடையை கட்ட ஆரம்பித்தார்கள்.

கடையிலிருந்து வெளியே வந்த பையன் இன்னமும் மூர்க்கமாக ‘இருடே, உன்ன என்ன செய்யறன் பார் இன்னிக்கு’ என்று கத்தியபடி பூத் இருந்த பெரிய கடைக்குள் விடுவிடுவெனப் போனான்.

இந்த மாதிரியான நிலையில் என்ன செய்வது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. பையன் ஏதோ சந்தேகத்தில் கேட்கிறான் என்றால் நாமும் விளக்கம் சொல்லி புரிய வைக்கலாம். புத்தகம் திருடினேன் என்று பரிபூரணமாக நம்பிக்கொண்டு வையத்தொடங்கி விட்டான். எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும் பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்? நெற்றிப்பொட்டில் எல்லாம் வியர்க்கத் தொடங்கிவிட்டது. இம்மாதிரியான இக்கட்டான நிலையிலிருந்து கௌரவமாக எப்படி வெளியேறுவது?

சிறுவயதில் ஒருமுறை பஸ்ஸில் டிக்கெட் எடுக்கவில்லை என்று கண்டக்டர் ஒருத்தர் இப்படித்தான் குதித்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் ஐம்பது காசோ, எழுபத்தைந்து காசோதான் அந்த டிக்கெட்..

கடைக்குள்ளிருந்து ஒரு வயதானவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெளியே வர, கூடவே இன்னும் இரண்டு மூன்று பையன்களும் வந்தனர். திட்டிக் கொண்டிருந்த பையன் என்னை நோக்கி கையைக் காட்டி, ‘இதோ, இவனத்தான் சொன்னேன். ஆள் அசந்திருக்கிறப்ப, புக்கை தூக்கிட்டு போயிர்றான். ரொம்ப நாளா ஓடிட்டிருக்கு இந்த விசயம்’.

வேட்டி கட்டியிருந்தவர் கொஞ்சம் நிதானமாக இருந்தார். என்னுடைய நாகரிகமான தோற்றம், பையனின் குற்றச்சாட்டை அவரை நம்பவிடாமல் செய்துவிட்டது. அப்புறமும் இப்புறமும் பார்த்தார். திட்டுகிற பையன் கூட இருந்த மற்ற பையன்களை ஒருதரம் ஏற இறங்கப் பார்த்தார். யாரும் எதுவும் சொல்லாமல், அதேசமயம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திட்டுகிற பையன் பழைய சம்பவங்கள் என்று ஏதேதோ அடுக்கிக் கொண்டே போனான். எனக்கு ஒரு விஷயமும் அர்த்தமாகாமல் போயிருந்தது. எப்போது யார் கையை தூக்கி அடிக்க வருவார்களோ என்று கொஞ்சம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அடித்தாலும் திரும்பி அடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அடிதடி என்றாலும் இப்படியொரு விஷயத்திற்கா அடித்துக் கொள்ள முடியும். நமக்கென்று ஒரு தராதரம் இருக்கிறது இல்லையா.

வேட்டிக்காரர் என்னைப் பார்த்து மையமாக, ‘புக்கு பாத்து எடுங்க சார். சட்டு புட்டுன்னு காணாமப் போயிடுது’ என்று ஏதோ சொன்னார். கூட இருந்த பையன்களும் திட்டுகிற பையன் அளவுக்கு கோபமாக இல்லை என்றாலும், ஏதாவது சம்பவம் நிகழ்ந்து விடுமோ என்ற எச்சரிக்கையுடன் நான் என்ன சொல்லப் போகிறேன், அல்லது என்ன செய்யப் போகிறேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

என்னைப் பார்த்ததும் வேட்டி மனிதர் ‘சாரை ஏண்டா சந்தேகப்படற. அவர் எவ்வளவு காலத்திற்கு நம்ம கஸ்டமர் தெரியுமா’ என்று ஆதரவாக சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவருக்கு என்னை பரிச்சயம் இல்லை. அல்லது இந்த மாதிரி தருணத்தில் தெரிந்தவனாக காட்டிக் கொள்ள விருப்பமில்லை போல. அவர் இப்படி பொத்தாம் பொதுவாக திட்டுகிறவனையும், என்னையும் ஒரே தளத்தில் வைத்து பேசியது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

‘புக்கு புரட்டித்தாண்ணே பாத்திட்டிருக்கேன். எப்பவும் இங்க நிறுத்தி தம்மடிக்கிறது வழக்கம்தான்.’ அந்தப் பையனை காட்டி, ‘தம்பிக்கு நல்லாவே தெரியும். நிறய முறை இங்கிட்டு பாத்திருக்கேன். ஏதோ தப்பா நினச்சுகிட்டு கத்தறாப்ல’ என்னால் அதற்கு மேல் எந்த விளக்கமும் சொல்ல இயலவில்லை. புத்தகத்தை கடை முன்பிருந்த பெஞ்சில் போட்டுவிட்டு, தளர்ந்த நடையுடன் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டு, வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. அப்படியும் திட்டின பையன் சமாதானமாகாமல், முணுமுணுப்பாக சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒருவேளை நான் இன்னமும் கோபமாக பேசியிருக்க வேண்டுமோ? மிஞ்சினால் கெஞ்சுவது, கெஞ்சினால் மிஞ்சுவது என்று மாறி மாறித்தானே சண்டையிடுவார்கள். அந்த வேட்டிக்காரர் சற்று சமாதானமாகத்தான் பேசினார். அதை சாக்காக வைத்துக் கொண்டு நானும் பதிலுக்கு எகிறியிருக்க வேண்டுமோ. அப்போதுதானே நியாயம் என் பக்கம் இருக்கிறது என்று நம்புவார்கள். இப்படி சமாதானமாகப் போய்விட்டதால் என்னைப் பற்றி தவறாகத்தானே நினைப்பார்கள். ஆனால், என்னால் சண்டையிட முடியவில்லை. என்னவென்று நினைத்துக் கொண்டு அந்தப் பையன் என்னை திட்ட ஆரம்பித்தான் என்பதே எனக்கு இன்னமும் புரிபடவில்லை. அப்புறம் எதை சமாதானப்படுத்த என்று பேசுவது.

மறுநாளிலிருந்து அலுவலகத்திற்கு பக்கமிருந்த டீக்கடை ஒன்றில் சிகரெட் வாங்க ஆரம்பித்தேன். பழைய கடை போல நிழலான இடமோ, தம்மடிக்கும்போது புரட்டிப் பார்க்க புத்தகமோ இல்லை என்பது வருத்தமாகத்தான் இருந்தது. ஊருக்கு டெலிஃபோன் செய்யக்கூட ஏபிஎன் பூத் பக்கம் போகவில்லை. இவ்வளவு நாள்களில் அந்த கடைப் பையன்களும், வேட்டி மனிதரும், இப்படியொரு அவமானம் ஒன்று நிகழ்ந்ததை மறந்து விட்டிருக்கலாம். ஆனால் நான் எப்படி மறப்பது? என்னை தெரிந்தவர்கள் யாருக்கும் இந்த சம்பவம் தெரியாததால், நல்லதாகப் போயிற்று. இல்லையென்றால் யாராவது நோண்டிக்கொண்டே இருப்பார்கள். எவ்வளவு கேவலமாக இருக்கும்.

அப்படியும் ஒருமுறை அறை நண்பன், ‘இப்போழ் நீ புஸ்தகங்கள் ஏதும் வீட்டிக்க கொண்டு வந்நில்லா. படிக்குக நிறுத்தியோ’ என்று கேட்டுவைத்தான்.

‘புத்தக விலையெல்லாம் ஏகத்திற்கு ஏறிப்போய்விட்டது’ என்று மழுப்பினேன்.

‘எப்போழ் முதல் நீ காசு பத்தி விஷமிக்கிண்டானு தொடங்ஙி… ஆ நாடாரிண்ட கட நம்முடயது அல்லோ’ என்று சொல்லி கண்சிமிட்டி சிரித்தான்,

‘போடா தெள்ளமாரி’ என்று பதிலுக்கு நன்றாக திட்டிவைத்தேன். அப்புறமாக அவனும் ஒன்றும் கேட்பதில்லை.

ஒளிப்பட உதவி – Georges Braque

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s