தொலைந்த துணை

சிகந்தர்வாசி 

இரவு ஒரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது, கனவில் யாரோ என்னை கூப்பிடுவது போல்.

மணி அடிக்கிறது என்று உணர சற்று நேரமாகியது. இளைஞனாக இருந்திருந்தால் திடுக்கிட்டு எழுந்திருப்பேனோ என்னவோ. சற்று குழப்பத்துடன் ரிசிவரை கையில் எடுத்தேன்.

“ஹல்லோ. நான் உன் நம்பர கண்டுபிடிக்கமாட்டேன்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் உன்ன விட மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு சிரித்தது ஒரு குரல். இளம் பெண்ணின் குரல்.

“ஹலோ யார் நீங்க?”

“ஹஹ.. குரலை மாத்தி பேசறயாடா ராஸ்கல். என்ன ஏமாத்தமுடியாது. அதுக்கு வேற ஆள பாரு”

“ஹலோ. உங்களுக்கு யார் வேணும்?”

“நீதான் வேணும் அப்படின்னு நான் சொல்லணுமா? ஹ ஹ ஹ. அந்த மாதிரி சினிமா டைலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்ன்னு”

“ஹலோ நீங்க ராங் நம்பரோட பேசறீங்க”

“ஹஹஹஹா!நீ ராங் நம்பர்தான். ஹஹ! சரியாச் சொன்னே. என் தம்பி இப்போ வருவான். அவனோட புட்பால் மேட்ச் முடிஞ்சுது போல் இருக்கு. நான் நாளைக்கு போன் பண்றேன்”

கால் கட்டாகிவிட்டது.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் யார், எந்த நம்பரிலிருந்து அழைத்தாள்? கால் லான்ட்லைனில் வந்தது. என்னிடம் இருப்பதோ பழைய காலத்து தொலைபேசி. எந்த நம்பரிலிருந்து போன் வருகிறது என்பதை இதில் கண்டுபிடிக்க முடியாது. என்னிடம் மொபைல் இருக்கிறது. என் பெண் விடுமுறைக்கு அமெரிக்காவிலிருந்து வந்தபோது வாங்கி வந்திருந்தாள். ஆனால் அதை எங்காவது வைத்துவிட்டு மறந்துவிடுவேன்.

என் பெண் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் இங்கு வரும்பொழுது எதாவது வாங்கி வருவாள். போன முறைகூட ஒரு மொபைல் வாங்கி வந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டா அல்லது மூன்றா? இரண்டுதான் என்று நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் மூன்று யார் பெற்றுக் கொள்கிறார்கள்? நான் இளைஞனாக இருந்தபொழுது எல்லோரும் பல குழைந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் நான் எங்கள் வீட்டில் ஒரே பையன்.

டெலிபோன் மணி மறுபடியும் ஒலித்தது. இல்லை. ஒலிக்கவில்லை. ரூம் இருட்டாக இருக்கிறது. சில சமயங்களில் ரூம் மூலையில் என் மனைவி வருவாள். திடீரென்று வருவாள். திடீரென்று மறைவாள். அதேபோல்…

மறுபடியும் மணி ஒலித்தது. ரிசிவர் கையில் எடுத்தேன். ஆனால் ‘நோஈஈ’ என்ற சப்தம் மட்டும் கேட்டது. மறுபடியும் மணி ஒலித்தது. காலிங் பெல்… விடிந்துவிட்டிருந்தது. வேலைக்காரியாக இருக்கும்.

இன்று தூக்கம் சரியாக வரவில்லை. மணி அடிக்குமோ என்று எதிர்பார்த்தேன். அடிக்கவில்லை.

இன்றைக்கு நன்றாக தூங்கிவிட்டபொழுது மணி அடித்தது.

“என்ன நல்லா தூங்கிட்டெயா? ரொம்ப நேரமா எடுக்கவேயில்ல. என்ன கோவமா?”

“யார்மா நீ. என் தூக்கத்த கெடுக்கற?”

“ஹ ஹ ஹ ஹ” அதே சிரிப்பு. “நீ எவ்வளவு நாள் என் தூக்கத்த கெடுத்திருப்ப. உன்னையே நினைச்சி எவ்வளவு நாள் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா. ஒரு நாள் உன்னோட தூக்கம் கெட்டா ஒண்ணும் தப்பில்ல”

“இத பாரு..”

“எங்க பாக்கறது? நீதான் என்ன பாக்க வரவே மாடங்ற. எங்க வரணும் சொல்லு. நாளைக்கு மீட் பண்ணலாமா?”

“உனக்கு எப்படி சொல்லி புரியவெக்கற்துன்னு தெரியல”

“ஒண்ணும் புரிய வெக்க வேணாம். உன்ன எனக்கு நல்லா தெரியும். உன்ன பாத்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று சொல்லிவிட்டு விசும்ப ஆரம்பித்தாள். “எங்க அப்பா அம்மா சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க. நீயோ கண்மறைவாயிட்ட. நான் யார்கிட்ட சொல்லி அழுவேன்” இப்பொழுது அழவே ஆரம்பித்துவிட்டாள். சற்று நேரம் அழுதபின் “சரி நான் போன் வெக்கறேன்”

நான் என்ன செய்ய வேண்டும்? அவள் கஷ்டத்தில் இருக்கிறாள். நான் ஓடிச் சென்று காப்பாற்ற வேண்டுமா? சென்று காப்பாற்றி விட முடியுமா?

அடுத்த நாள் கால் வரும் என்று முழித்திருந்தேன். வரவில்லை. ரூமில் யாரோ இருப்பது போலவே இருந்தது. ஆனால் யாரும் இல்லை. அப்பா அடுத்த ரூமில் இருந்தார். இல்லை. அப்பா இறந்து பல வருடங்கள் ஆகிறது. அம்மாவாக இருக்குமோ? இருக்கலாம்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது மணி அடித்தது. வேலைக்காரி வந்துவிட்டாள் என்று எழுந்தேன். ஆனால் இன்னும் இருட்டாகவே இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆ. டெலிபோன் ஒலிக்கிறது.

“உனக்கு வெக்கமா இல்ல. ஒரு பொண்ண இப்படியா ஏமாத்துவ?” இது வயதான ஒரு பெண்மணியின் குரலாக இருந்தது. “ராத்திரியானா உன்னோட பேசுவேன்னு அடம் பிடிக்கறா…”

“மேடம். நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. நான் ஒரு..”

“அதான் நான் என் பொண்ணுக்கு சொன்னேன். ஊர் பேர் தெரியாதவன் பின்னாடி சுத்தறியே உனக்கு வெக்கமா இல்லையான்னு. என் சொந்தத்துல எவ்வளவு நல்ல பசங்க இருந்க்காங்க. அவனெல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி சுத்தாறா பாரு..”

“நீ பேசினது போதும். என்கிட்டே போன் குடு” அவள் குரல். இப்பொழுது போனில் அவள். “நீ சீக்கிரம் வந்து என்ன இங்கேர்ந்து கூட்டிண்டு போ. இவங்க தொல்ல தாங்க முடியல. நீ உடனே கிளம்பி வா. ரெண்டு பேரும் எங்கயாவது ஓடிடலாம்”

“போறும்டீ நீ பேசினது. போன வை”

வைத்துவிட்டாள். இல்லை அவள் தாய் போனை கட் செய்தாளோ என்னவோ. இப்பொழுது அவளை எப்படி அந்த வீட்டிலிருந்து அழைத்து வருவது. என்ன ஆனாலும் சரி என்று கிளம்பினேன். ஹால் இருட்டாக இருந்தது. ஆனால் சேரில் உட்கார்ந்திருந்த அப்பாவின் சிவப்பான கண்கள் பிரகாசமாக தெரிந்தன. நான் உள்ளே வந்துவிட்டேன். அப்பா இறந்து பல வருடங்கள் ஆகின்றன. நான் மறுபடியும் ஹாலுக்கு வந்தேன். அப்பா எங்கோ கிளம்பி சென்றுவிட்டார். அந்த சேரில் அம்மா உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் சோகமாக இருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நான் மறுபடியும் என் அறைக்குள் வந்தேன். போர்வையை போர்த்திக்கொண்டு படுத்தேன். அம்மாவிற்கு நான் கொள்ளி வைத்த காட்சி கண் முன் வந்தது. பிறகு பெண்ணின் குரல். ஹாலில் அப்பா. வெளியே போகமுடியாமல் படுக்கையில் நான்.

இரண்டு நாட்கள் ஓடியிருக்கும். இல்லை மூன்றா? போன் எதுவும் வரவில்லை. இல்லை வந்தது. ஆனால் மொபைலில். என் பெண் பேசினாள். ஏதோ கேட்டாள். யார் பேரையோ சொல்லி அவர்களை பற்றி ஏதோ சொன்னாள். அவர் எங்களுக்கு உறவாம். எனக்கு அவரை ஞாபகம் இல்லை. இரவு இந்த பெண் போன் செய்வதை பற்றி அவளிடம் சொன்னேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுடன் பேசி முடித்து ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும், வீட்டு தொலைபேசி ஒலித்தது.

இந்த முறை ஒரு ஆண் குரல். “டேய். உன்ன என் பொண்ணு பக்கத்துல வரக்கூடாதுன்னு என் பொண்டாட்டி சொன்னாளேடா. ஆனாலும் நீ சொன்ன பேச்ச கேக்கல. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்னு உனக்கு தைரியம். எல்லாருக்கும் ஒரு எல்லை வரைக்கும்தான் பொறுமை இருக்கும். என்ன அந்த எல்லைய தாண்ட வச்சிட்டே.”

“நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நீங்க நினைக்கற மாதிரி..”

“டேய். இன்னும் என்னடா பொறுமை. உன் பேச்ச நான் எதுக்குடா கேக்கணும். ரெண்டு பசங்க கிளம்பி உன் வீட்டுக்கு வராங்க. அவங்க ஒன்ன ஒரு கை பாப்பாங்க. அப்புறம் பாக்கலாம் நீ எப்படி என் பொண்ணோட பேசறேன்னு. இன்னும் பத்து நிமிஷம். பத்தே நிமிஷத்துல அங்க இருப்பாங்க. இன்னி இருக்குடீ உனக்கு”

போனை வைத்துவிட்டான்.

சரியாக பத்து நிமிடம் கழித்து காலிங் பெல் அடித்தது. நான் பயந்துகொண்டே வாசல் கதவில் உள்ள பீப் ஹோல் வழியாக பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். நான் கதவைத் திறக்காமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இளைஞன் மறுபடியும் காலிங் பெல்லை அமுத்தினான். இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு காலிங் பெல் ஒலித்தது. சரி வருவது வரட்டும் என்று கதவைத் திறந்தேன்.

“மாமா. உங்க ஒடம்புக்கு ஒன்னுமில்லையே?”

“நீங்க யாரு?”

அவர்கள் ஏனோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“நான்தான் பக்கத்து ப்ளாட்ல இருக்கேன். அப்பா உங்கள ஒரு முறை பார்த்துவிட்டு வர சொன்னார்.”

“உங்கப்பா யார்?”

பக்கத்து வீட்டு கதவு திறந்தது. வயதானவர் ஒருவர் வெளியே வந்தார்.

“என்ன சார். எப்படி இருக்கீங்க. உங்க மக போன் பண்ணியிருந்தா. நீங்க எப்படி இருக்கீங்கன்னு பாக்க சொன்னா. அதுக்குதான் அர்த்த ராத்திரில பெல் அடிக்க சொன்னேன்”

இவரை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் தெரியவில்லை. அவர் யார் என்று கேட்கவேண்டும் என்று எண்ணிய பொழுது போன் மறுபடியும் ஒலித்தது. “போன் அடிக்கறது. நான் பேசிட்டு வரேன்” என்றேன். அவர்கள் ஏனோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“எங்கயாவது ஓடிப்போயிடுடா. அப்பா ஆள அனுப்புவேன்னு சொல்றார்ரு. அம்மா வேணாம்னு சொல்றாங்க. நான் எப்படியாவது நாளைக்கு நாம முதல் முறை சந்திச்ச பார்க் கிட்ட சாயங்காலம் எஞ்சு மணிக்கு வந்துடுறேன். நீயும் வந்துடு. அத தவிர வேற வழி தெரியல. ஐயோ அப்பா வராரு..” போனை வைத்துவிட்டாள்.

நான் ரிசிவரை வைத்துவிட்டு தலையைத் தூக்கினேன். யாரோ மூன்று மனிதர்கள் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என் வெளிறிய முகத்தை பார்த்து அவர்களுக்கு கவலை வந்துவிட்டது போல். “ஆர் யூ ஓகே” என்று கேட்டார்கள். எப்படி ‘ஓகே’வாக இருக்க முடியும்? பார்க்குக்கு போக வேண்டும். ஆனால் எப்பொழுது? இரவில் பார்க் திறந்திருப்பார்களா?

“சார். ஆர் யூ ஓகே?”

“ஹ்ம்ம். எஸ். எஸ். ஐ ஆம் ஓகே.”

அவர்கள் சென்றுவிட்டார்கள்.

இன்று என் பெண் அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருகிறாள். வீட்டுக்கு வர இரவு ஒரு மணிக்கு மேல் ஆகும் என்று சொல்லியிருந்தாள். நான் இங்கு தனியாக இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லையாம். வேறெங்கோ சென்று இருக்கலாம் என்று சொன்னாள். எங்கு என்பது மறந்துவிட்டது.

அன்று இரவு போன் ஒலித்தது. “ஹலோ” அவள் குரல் தான்.

“எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?” என்று கனிவுடம் கேட்டேன்

“சாரி. ராங் நம்பர்”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

காலிங் பெல் ஒலித்தது. யாரோ இன்று இரவு வருவதாக சொல்லியிருந்தார்கள். வந்து விட்டார்கள் போலிருக்கிறது.

அன்றைக்கு அப்புறம் எனக்கு இரவில் போன் கால் வருவதில்லை.

ஒளிப்பட உதவி- Patternism

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.