மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை

மித்யா

image

கொரியன் இயக்குநர் சோவா-குர் இயக்கிய ‘மோன்-ரோஷ்’ என்னும் படத்தை நேற்று பார்த்து பிரமித்து போனேன். உலக சினிமாவின் ஆகச்சிறந்த உன்னதங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் நான் இந்த படத்தை பார்க்க செல்லும்பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். நீங்கள் இந்த இயக்குநரின் பெயர் கொரியன் பெயர் போல் இல்லாததை கவனித்திருப்பீர்கள். அதே போல் படத்தின் பெயரும் வேறு மாதிரி இருப்பதை கவனித்திருப்பீர்கள். இரண்டு பெயர்களையும் திருப்பி போட்டால் உங்களுக்கு கிடைப்பது: ரோஷ்மோன் மற்றும் குரோசோவா- ஆம், இந்த படத்திற்கும் குரோசோவாவின் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது.

அகிரா குரோசோவாவின் ‘ரோஷ்மோன்’ 1950 இல் வெளியாகி சினிமா ரசிகர்களிடமும் இயக்குனர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பரிசுகளை வென்ற இந்த படம் நம் கொரிய இயக்குனரையும் பாதித்தது. இந்த படத்தை பார்த்தபோது அவர் ஒரு இயக்குனர் இல்லை. வெறும் ரசிகர்தான். இந்த படம் அவரை சினிமாவுக்கு இழுத்து வந்தது. ரோஷ்மோன் போன்ற ஒரு படத்தை தானும் இயக்க வேண்டும் என்று லீ-ஹுவாங்-கூ நினைத்தார். அதன் விளைவாக உருவான படம்தான் ‘மோன்-ரோஷ்’. குரசோவாவின் பாதிப்பினால் அவர் சினிமாவுக்கு வந்ததன் காரணமாக தன பெயரை ‘சோவா-குர் என்று மாற்றிக்கொண்டார்.

இப்படி கற்பனை இல்லாமல் தனக்கு ஒரு பெயரையும் அதே போல் தட்டையாக படத்துக்கு பெயரும் வைத்த இவரிடம் அதிகம் எதிர்ப்பார்க்கலாகாது என்று நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றேன். ஆனால் படத்தை வித்தியாசமாகவும் ஆழமாகவும் எடுத்து என்னை அவரின் ரசிகர் ஆக்கிவிட்டார் இயக்குனர்.

‘ரோஷ்மோன்’ என்ற படத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு சாமுராயும் அவன் மனைவியும் காட்டுவழியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு கொள்ளைக்காரன் அவர்களை வழிமறிக்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை அந்த கொள்ளைக்காரன், சாமுராய், சாமுராயின் மனைவி மற்றும் சம்பவத்தை ஒளிந்திருந்து பார்த்தக் கொண்டிருந்த விறகுவெட்டி ஆகியோர் தங்கள் பார்வையில் சொல்கிறார்கள். ஒரே சம்பவம் நான்கு முறை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதில் பல மாற்றங்கள் வருகின்றன. யார் சொன்னது உண்மை? உண்மையின் பல்வேறு பரிமாணங்களை இந்த படம் ஆராய்ந்தது.

இதே போல் உண்மையின் பன்முகத்தன்மையை வேறொரு கோணத்திலிருந்து நமக்கு காட்டுகிறார் ‘மோன்-ரோஷ்’சின் இயக்குனர். இந்த படத்திலும் ஒரு சம்பவம் நடக்கிறது. ஆனால் இதில் ஒரே ஒருவர் ஒரே ஒரு சம்பவத்தைப் பற்றி நான்கு பேர்களிடம் கூறுகிறார். போலிஸ் அதிகாரி, காதலி, தாய்-தந்தை மற்றும் சக தொழிலாளி. இவர்கள் நாலு பேர்களிடமும் ஹீரோ சம்பவத்தை பற்றி கூறுகிறான். ஒரே சம்பவம்தான். அவன் கூறுகையில் அது நான்கு வேறு வேறு சம்பவங்களோ என்று நமக்கு தோன்றுகிறது.

“திஸ் இஸ் ப்யூர் சினிமா’ என்று நியூ யார்க் டைம்ஸ் விமர்சகரான ஜான் ஆலிவர் சிலாகித்தார். இந்த படத்தில் பார்ப்பதெல்லாம் ஹீரோவின் முகத்தை மட்டும்தான். காமெரா நங்கூரம் போட்டது போல் ஒரே இடத்தில் இருக்கிறது. ஹீரோவின் முகத்தை க்ளோஸ்அப்பில் காட்டுகிறது. ஹீரோ மெதுவாக பேசுகிறான். பத்து பணிரண்டு வாக்கியங்களில் சம்பவத்தை சொல்லிவிடுகிறான். ஆனால் ஒரு வாக்கியத்துக்கும் இன்னொரு வாக்கியத்துக்கும் நடுவில் நீண்ட இடைவெளி கொடுக்கிறான். இவன் யாருடன் பேசுகிறான் என்பதை அவன் முகபாவங்களிலிருந்து நம்மால் யூகிக்க முடிகிறது. பின்னணியில் எதுவும் ஓசை இல்லாமல் வைத்திருக்கிறார் இயக்குனர். அதனால் பின்னணி ஒலிகளை வைத்து ஹீரோ எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. அவன் முகபாவத்தையும் அவன் பேசும் விதத்தையும் வைத்து மட்டும்தான் நம்மால் அவன் யாருடன் பேசுகிறான் என்று ஊகிக்க முடியும். இந்த டெக்னிக் பல விமர்சகர்களை கவர்ந்திருக்கிறது- ப்யூர் சினிமா என்று சிலாகித்த ஜான் ஒலிவர் போல்.

ஆனால் இதற்கு எதிர்மறையாகவும் சிலர் எழுதியிருக்கிறார்கள். ‘வில்லேஜ் வாய்ஸ்’ விமர்சகரான பிலிப் பிராண்டோ “இந்த படத்தை பார்த்துவிட்டு டர்காவ்ஸ்கி படத்தை பார்த்தால், டர்காவ்ஸ்கியின் படம் ‘Fast and Furious’ அளவு வேகமாக இருப்பது போல் தோன்றுகிறது. இந்த படத்திற்க்கும் ஆமைக்கும் ஒரு போட்டி வைத்தால் ஆமை உசேன் போல்ட் போல் ஓடி இதை ஜெயித்துவிடும்” என்றார். இதற்கு கமெண்ட் பகுதியில் பலர், “வெகு அருமையாக சொன்னீர்கள்” என்றும் ஓரிருவர் “உங்களுக்கு ‘Fast and Furious’ தான் லாயக்கு. நீங்கள் எல்லாம் இந்த படத்தை பார்க்கவில்லை என்று யார் அழுதார்கள்?” என்றும் எழுதியிருந்தார்கள்.

தீவிர விமர்சககர்களுக்கு இடையே இந்தப் படம் சர்ச்சையை கிளப்பியது. லெப்ட் ஆப் செனட்டர் என்று கூறப்படும் கார்டியன் பத்திரிகையின் விமர்சகர் ரிச்சர்ட் காம்ப்பெல் என்பவர், “நாலா புறமும் நம்மை தீவிரவாதம் சூழ்ந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்தி சக மாணவர்களை கொல்கிறார்கள். நம் சகிப்புத்தனமை குறைந்துக்கொண்டு வருகிறது. இது போன்ற காலத்தில் இப்படி ஒரு படம் வருவது அபத்தம். முக்கியமான எந்த ஒரு பிரச்சினையையும் ஆராயாத இது போன்ற ப்யூர் சினிமாவுக்கு இப்பொழுது வேலை இல்லை. ப்யூர் சினிமா இஸ் dead. Tarkovsky is dead’ என்று முடித்தார்.

இதற்கு அதே பத்திரிகையின் இன்னொரு விமர்சகரான ஜோனதன் ப்ரசெர் பதில் அளித்தார். “ரிச்சர்ட், உங்கள் பார்வை தவறானது. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது ஆனால் நீங்கள் இந்த படத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. இயக்குனருக்கு சமூக பார்வை இல்லை என்பது உங்கள் வாதமாக இருக்கிறது. ஆனால் இந்த ப்யூர் சினிமாவுக்குள் அவர் ஒரு மிக பெரிய விமர்சனத்தை வைத்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை எப்படி ஏமாற்றுகின்றன என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நிறுவனங்கள் நம் போன்ற கன்ஸ்யூமர்களிடம் அழகிய ஒரு முகத்தை காட்டுகின்றன. ஆனால் தொழிலாளிகளிடம் வேறொரு முகத்தை காட்டுகின்றன. ஷேர் ஹோல்டர்ஸிடம் போலீசுக்கு பயப்படுவது போல் பயப்படுகின்றன. இவர்களின் கள்ளத்தனத்தை இந்த படம் மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறது. This film is a slap on the face of unbridled capitalism” என்று கட்டுரையை முடிக்கிறார்.

பிரபல தத்துவஞானியும் விமர்சகருமான ஜிஸ்செக்கின் மாணவரான விஸ்லாவா கொசிஸ்ச்கி இந்த படத்தை பற்றி ஏழுதும் பொழுது, “உண்மையை எப்பொழுதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. ஒரு பொருளை 3-D யில் நம்மால் பார்க்க முடியாது. ஒரு பந்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பந்தில் ஒரு பக்கத்தை பார்க்கும் பொழுது இன்னொரு பக்கம் மறைந்து விடுகிறது. இன்னொரு பக்கத்தை பார்க்கும் பொழுது முன்பு பார்த்த பக்கம் மறைந்து விடுகிறது. ஒரு சிறிய பந்தையே நம்மால் முழுவதாக பார்க்க முடியவில்லை. உண்மை என்பது எவ்வளவு மகத்தானது. அதை முழுமையாக யாராலும் பார்க்க இயலாது. Ultimate truth is an illusion” என்று முடித்தார்.

இரத்தம் சிந்தும் கொரியன் படங்களை பார்த்து பழகிய நம் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காது என்பது உறுதி. ஆனால் உலக சினிமாவை ரசிக்கும் எவரும் இந்த படத்தை பார்க்காமல் இருக்கக் கூடாது.

Film Name: Mon-Rosh

Director: Sowa-Kur

Running Time: 98 mins

Actor: Hee-Khor-Su

Cinematography: Hunag-Jin

Release Date: April, 2015

Language: Korean

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.