சிறுகதைகளின் முடிவு- டி. சி. பாய்ல்

(அட்லாண்டிக் இதழில் ஜோ பாஸ்லர் தொகுத்த கட்டுரையின் ஒரு பகுதி)

ரே கார்வர் 1970களில் அயோவா நகரிலிருந்த காலத்திலேயே அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அங்கு நான் ஐந்தரை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், முதலில் ரைட்டர்ஸ் வர்க்சாப்பில் எம்எப்ஏ படித்தேன், அதன்பின் அங்கு பிஎச்டி செய்து முடித்தேன். அப்போது அவர், வுட் யூ ப்ளீஸ் பி கொயட், ப்ளீஸ்? என்ற அவரது முதல் நூலை மட்டும்தான் பதிப்பித்திருந்தார். அதற்கு முன் எங்களைத் தவிர வேறு யாரும் அவரைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை- அவர் எழுதிய கதைகள் எவ்வளவு மகத்தானவை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், சிறுபத்திரிக்கைகளில் அவர் எழுதிய ஒவ்வொரு கதையையும் தேடிப் படித்தோம்.

நாங்கள் ஆராதித்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் எப்படியும் ஒரு முறை எங்கள் ஊருக்கு வருவார்கள். அவர்களில் பலரும் கிறுக்கன்கள், குடிவெறியர்கள், போதை மருந்து பிரியர்கள், அப்போதுதான் மனநல காப்பகத்திலிருந்து வெளிவந்தவர்களாக இருப்பார்கள். என்றாலும்கூட அவர்கள் வாசிப்பதைப் பார்ப்பது என்பது அபாரமான அனுபவமாக இருந்தது. ரே புகழ்பெற்றபின் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்து வாசிப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவருக்கு கூச்சமாகதான் இருந்தது, வாசிப்பில் பங்கேற்கும் விருப்பம் அவருக்கு இருக்கவில்லை. ஆங்கிலத் துறை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த மகா மட்டமான் லவுஞ்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அவர் ஒரு சிறு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தார், அவரது முகம் நிழலில் இருண்டிருந்தது, அவர் தெளிவில்லாமல் ஏதோ வாசித்தார், ஆனால் அருமையாக இருந்தது- அதுதான் ரே.

அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதில் சந்தேகமேயில்லை. ரே எழுதிய கதைகளை நான் முதன்முதலில் படிக்கத் துவங்கியபோது, அதிலிருந்து வெகுவும் மாறுபட்ட ஒன்றைச் செய்து கொண்டிருந்தேன்- அவர் எழுதிய கதைகளைவிட நீண்ட கதைகள், ஓர் ஒழுங்குடன் ஒலிக்கும் வாக்கியங்கள், நான் எழுதிய கதைகளில் உழைக்கும் வர்க்க மக்கள், எதார்த்தவாதம் அல்லது அந்த மாதிரி எதனோடும் நிச்சயமாக ஒரு சம்பந்தமும் இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் நான் எதார்த்தவாதம் குறித்து பெரிய அளவில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. ரே என் கண்களைத் திறந்தார், முற்றிலும் புதிய ஒரு கதைசொல்லல் முறையை அறிமுகப்படுத்தினார்.

கதீட்ரல், தனிநபர் பார்வைக் கோணத்தில் சொல்லப்பட்ட அருமையான கதை. இந்தக் கதையில், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த கதைசொல்லி நம்மை நேருக்கு நேர் பார்த்துப் பேசுகிறார். அவர் மிகவும் பொறாமைப்படுவது தெரிகிறது, தன் மனைவியின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு வரப் போகிறார். கதைசொல்லியைச் சந்திப்பதற்கு முன்னரே ராபர்ட் என்ற அந்த மனிதனோடு அவரது மனைவிக்கு பழக்கமிருந்திருக்கிறது; ராபர்ட்டுக்கு கண் தெரியாது என்பதால் கதைசொல்லியின் மனைவி அவருக்கு வாசித்துக் காட்டுவார் என்ற அளவில்தான் அவர்களிடையே பழக்கம். நம் கதைசொல்லி- கதையில் இவருக்கு பெயர்கூட கிடையாது- அந்த நண்பருக்கு எதிரான மனவிலக்கம் கொண்டவராக இருக்கிறார், அவரைப் பற்றி மரியாதைக் குறைவாக எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். உதாரணத்துக்கு, தன் மனைவியை ஒரு முறைகூட ராபர்ட் பார்த்ததில்லை என்பது எவ்வளவு கேவலமானது என்கிறார் (அவரது மனைவி இப்போது உயிரோடு இல்லை). அவள் அழகானவளா இல்லையா, அவர் பர்ப்பிள் அல்லது சிவப்பு அல்லது பொருத்தமற்ற உடைகள் அணிந்திருந்தாளா, இது எதுவும் அவளது நண்பனுக்குத் தெரிந்திருக்காது.

பார்வையற்று இருப்பது என்றால் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள இந்த கதைசொல்லி முயற்சி செய்கிறார். ஆனால், ஒரு மாதிரி நயமற்ற, எதிரும் புதிருமான நிலையில் நின்று கொண்டு இதைச் செய்கிறார். கதை நெடுக “குருடன்” என்றே அந்த நண்பரைச் சொல்லி, ஒரு மனிதனாக அவருக்கு இருக்கக்கூடிய தனித்தன்மைகளை மறுக்கிறார். இதன் அடியாழத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே இருந்த உறவின் அச்சங்களும் நம்பிக்கையின்மைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். இந்த இன்னொருவன்- இவனது மண உறவு இப்போது முறிந்திருக்கிறது-, இவனோடு அவள் எப்படிப்பட்ட உறவில் இருந்தாள், இருவரும் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள், அவளுக்கு இவன் எவ்வளவு முக்கியமானவனாக இருந்தான் என்ற கேள்விகளெல்லாம் இருக்கின்றன. இப்போது நம் கதைசொல்லி அவனை முதல்முறை சந்திக்கப் போகிறான்- அவன் இவன் வீட்டுக்கு வரவிருக்கிறான், இவன் வீட்டில் ஓரிரவு இருந்து செல்லப் போகிறான்.

தன் கதவடியில் வந்து நிற்பவனைப் பார்த்து கதைசொல்லி திகைத்துப் போகிறான். பார்வையற்றவன் தாடி வைத்திருக்கிறான், இது கதைசொல்லியை ஆச்சரியப்படுத்துகிறது. குருடன் எப்படி தாடி வளர்க்க முடியும்?- பார்வையற்றவர்கள் என்னவோ வேறொரு வகை மனிதர்கள் என்பது போல் நினத்துக் கொண்டிருக்கிறான். பார்வையற்றவன் தன் தாடியை உயர்த்தி அதை முகர்ந்து பார்க்கிறான், அது அவனது பழக்கங்களில் ஒன்று. மிருகக் காட்சிசாலையில் உள்ள வனவிலங்கு செய்யும் எதையும் கவனிப்பது போல் கதைசொல்லி இதை மனதில் குறித்து வைத்துக் கொள்கிறான்.

இந்த பார்வையற்றவனைப் பற்றி விரோதபாவத்தில் ஒருவன் சொல்கிறான் என்றாலும், அவன் மிகவும் இயல்பானவனாக, சிநேகிக்கக்கூடியவன் போலிருக்கிறான். அவன் உரத்து ஒலிக்கும் குரலில் பேசுகிறான், கதைசொல்லியை, “புப்” என்று அழைக்கிறான். கதைசொல்லியின் வெப்பம் அவனைத் தாக்குவதில்லை. இறுதியில் அவனை நிராயுதபாணியாக்குகிறான்- அதுதான் இந்தக் கதையின் அழகு.

லேட்நைட் டிவியில் ஐரோப்பிய சர்ச்சுகள் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்தபின், பார்வையற்றவனுக்கு ஒரு எண்ணம் எழுகிறது. “நல்ல கெட்டியான காகிதம் ஒன்று கொண்டு வா, கூடவே பேனாவும் கொண்டு வா,” என்று அவன் சொல்கிறான். “நாம் ஒரு வேலை செய்வோம். இருவருமாக சேர்ந்து ஒரு சர்ச் வரையலாம்”. பேனாவை இருவரும் ஒருசேரப் பிடித்துக் கொண்டு தேவாலயம் ஒன்று வரையத் துவங்குகிறார்கள்:

“உன் கண்ணை இப்போது மூடிக் கொள்,” என்று குருடன் என்னிடம் சொன்னான்.

அவன் சொன்னதைச் செய்தேன். அவன் சொன்ன மாதிரியே கண்ணை மூடிக் கொண்டேன்.

“நன்றாக மூடிக் கொண்டாயா?” என்று கேட்டான். “ஏமாற்றக் கூடாது”

“இல்லை, மூடித்தான் இருக்கிறது,” என்று சொன்னேன்.

“அப்படியே இருக்கட்டும்,” என்றான் அவன். “இப்போது நிறுத்தாதே. வரை,” என்று சொன்னான்.

எனவே நாங்கள் அதைத் தொடர்ந்தோம். காகிதத்தில் என் கை போன போக்கில் அவன் விரல்கள் என் விரல்களின்வழி பயணித்தன. இதுவரை என் வாழ்க்கையில் இந்த மாதிரி எதுவும் நடந்ததே இல்லை.

அப்புறம் அவன், “அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். உனக்குப் புரிந்து விட்டது,” என்று சொன்னான். “கண்களைத் திறந்து பார். எப்படி இருக்கிறது?”

ஆனால் என் கண்கள் மூடியிருந்தன. நான் என் வீட்டில் இருந்தேன், அது புரிந்தது. ஆனால் நான் எதனுள்ளும் இருப்பது போலில்லை.

“உண்மையில் இது சாதாரண விஷயமில்லை,” என்றேன்.

கதைசொல்லி தன் கண்களைத் திறக்க மறுப்பதோடு கதை முடிவுக்கு வருகிறது- அவன் தன் ஓவியத்தைப் பார்ப்பதில்லை. கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகச் சுவற்றில் மாட்டி வைக்க முடியுமா என்று பார்த்தால் அவன் வரைந்ததும் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருந்திருக்க முடியாது. ஆனால் அதுவல்ல விஷயம். கதைசொல்லி, தன் கண்களை மூடிக் கொண்டிருப்பதைக் கொண்டு, பார்வையற்றவன் எவ்வாறு காண்கிறானோ அவ்வாறே தானும் காண்கிறான். எது விஷயமென்றால், இருவருக்கும் உள்ள ஒத்திசைவும், அதை நிகழ்த்துகிறார்கள் என்பதும்தான்- இங்கு கலை பிறக்கிறது, வேற்றுமைகளைக் கடந்து நம்மை ஒருவருக்கொருவர் இணக்கம் கொண்டவர்களாக மாற்றும் கலையின் இயக்கம், இதுதான் முக்கியம். இது மிகவும் சிக்கலான விஷயம், ஆனால் அவசியமற்றது அத்தனையும் நீக்கப்பட்டு எளிய வடிவில் இங்கு சொல்லப்பட்டு விடுகிறது.

அதேவேளை, இது என்னவோ உலகம் மொத்தமும் திடீரென்று சந்தோஷமான இடமாக மாறிவிட்டது போலவும், கதையின் முடிவை நாம் ஒரு மியூசிகலாக மாற்றி எல்லாரும் எழுந்து நின்று ஆடிப் பாடி கொண்டாடலாம் என்பது போலவும் இல்லை. என்ன சொன்னாலும், ராபர்ட் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவன் “குருடனாக”தான் இருக்கிறான், “ராபர்ட்” ஆவதில்லை. இருந்தாலும் நமக்கு எது முக்கியம் என்று பார்த்தால்- யாராகவும் இருக்கட்டும், அதிலும் குறிப்பாக இவனைப் போன்ற விரோதபாவம் கொண்ட ஒருவன், இதுபோன்ற ஒரு அற்புத கணத்தை அடைய முடிகிறது, இதுதான் விஷயம்.

இந்தக் கதை- கார்வரின், “சிறிய, நல்ல ஒரு விஷயம்” என்ற கதை போலவே- கதை இங்கே போகும் என்று நீங்கள் நினைத்தே பார்த்திருக்க முடியாத இடத்துக்கு ஒரு படிமத் தாவல் தாவி அடைகிறது. சாதாரண கதைக்கு இது தெரிந்திருக்காது, இதை நினைத்துப் பார்க்கவே முடிந்திருக்காது.

இது நம்பக்கூடியதாக இருக்கிறதா? இவர்கள் நிஜமாகவே தங்கள் கைகளை இப்படி கோர்த்துக் கொண்டு இருவர் ஓர் ஓவியம் வரைவார்கள் என்பது நடக்கக்கூடிய காரியமா? நம்மை நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார் கார்வர், நான் அவர் சொல்வது சாத்தியம் என்று ஏற்றுக் கொள்கிறேன்- முழு மனதுடன். ஆனால், நாமறிந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இந்தக் கதை இன்னும் பிரமாதமானதாக இருக்கிறது, எதிர்பார்த்திருக்கவே முடியாத கதையாகிறது. துவக்கத்திலிருந்தே கதைசொல்லி பார்வையற்றவனிடம் பரிவு கொண்டவனாக இருந்திருந்தால் கதை வெற்றி பெற்றிருக்காது. முழுக்க முழுக்க நம்பத்தகுந்ததாய் இல்லாத ஒரு தாவலை, “தேவாலயம்,” என்ற இந்தக் கதை நிகழ்த்திக் காட்டுகிறது- என்றாலும்கூட அது முழுமையான ஒரு கதையாகத் தெரிகிறது, எல்லாம் சரியாக இருப்பது போலிருக்கிறது, அது கதையை வேறொரு களத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது.

ஒவ்வொரு கதைக்கும் உயிருண்டு, ஒவ்வொரு கதையும் தன் முடிவைத் தானே தேடிக்கொள்கிறது. ரே கதைகள்- மற்ற எவர் கதைகளைப் போலவும்- தம் முடிவை எவ்வாறு அடைகின்றன என்ற விஷயத்தில் மாறுபட்டவையாக இருக்கின்றன. தனிப்பட்ட வகையில், எனக்குப் பிடித்த முடிவுகள் கதைக்குள் நாம் மீண்டும் நுழைய நம்மை அழைக்கின்றன, கதைக்கு முழுமையான முடிவு தந்து முற்றும் என்று சொல்வதில்லை. கடைசி வரி அதைத்தான் செய்கிறது. “”உண்மையில் இது சாதாரண விஷயமில்லை,”” என்று கதைசொல்லி சொல்லும்போது, அவன் தன் உணர்வாழத்தில் எதையோ உணர்கிறான் என்பது தெரிகிறது, ஆனால் அவனது உணர்வு என்ன என்பதை அது சொல்வதில்லை. அதுதான் கதையின் அழகு. அவனது உணர்வு என்ன எனபதை நாம்தான் உணர்ந்தாக வேண்டும். இதற்கு என்ன அர்த்தம், என்று நாம் நினைத்துப் பார்க்கிறோம். அது எப்படி, என்று கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கேள்வியைக் கொண்டு கதை நம்மை மீண்டும் உள்ளிழுத்துக் கொள்கிறது.

சிறந்த முடிவுகள் அப்படியே நம்மை மீண்டும் உள்ளே கொண்டு செல்கின்றன என்று நினைக்கிறேன், எல்லாம் முடிந்து விட்டது என்று இறுதி முற்றுப்புள்ளி வைப்பதில்லை. முடிவு நிச்சயமற்ற தன்மை கொண்டிருப்பது அவசியம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நாளை காலை எல்லாரும் எழுந்திருக்கும்போது என்ன நடக்கும் என்பதை நாம் எப்போதும் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக, “கதீட்ரல்” என்ற இந்தக் கதை, இந்த் இடத்தை விட்டு ஒரு அடி கடந்து செல்ல முடியாது. நாளையும் இந்த் கதைசொல்லி தொடர்ந்து கிறுக்கனாகவே நடந்து கொள்ளக்கூடும். அல்லது, அவன் ப்ரெண்ட்ஸ் ஆப் த ப்ளைண்ட் சொசைட்டி என்ற ஓர் அமைப்பை உருவாக்கலாம்- இது எதுவும் முக்கியமில்லை. இப்போது இந்த இடம் மர்மமாய் இருக்கிறது. நாம் அறியாதிருக்கிறோம், முடிவு நம்மை கதைக்குள் இழுத்துக் கொள்கிறது.

நன்றி – The Atlantic

ஒளிப்பட உதவி – Bauman Rare Books

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.