காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்

(மியா கோடோவின் சிறுகதையை போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் டேவிட் ப்ரூக்’ஷா)

டோனா பெர்டா தோட்டத்தில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. அது ஒன்றுதான் மிச்சம். பிற அனைத்தையும் உடைத்து, விறகாகப் பயன்படுத்திக் கொள்ள ஒற்றை பலகைகளாக்கி கட்டி வைத்திருந்தார்கள். மிச்சமிருந்த இந்த பெஞ்சில் ஒரு கிழவன் வசிக்கிறான். ஒவ்வொரு இரவும், ஆசனமும் மனிதனும், மரமும் சதையும், அணைத்துப் படுத்துக் கொள்வார்கள். கிழவனின் தோல் வரியோடிப் போயிருக்கிறது என்று சொல்வார்கள். அவனது புறக்கூட்டில் பலகைகளின் வடிவம் தன் தடத்தைப பதித்திருக்கிறது. பெரியவரை விளாடிமிரோ என்று பெயர் வைத்து அழைத்தார்கள். அவனது தனிமையை உரசிக் கொண்டு அந்த வழியாகச் செல்லும் தெருவின் பெயர் அது- விளாடிமிர் லெனின் அவென்யூ.

அந்த பெஞ்சை அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்று இன்று சொன்னார்கள். அந்த இடத்தில் ஒரு வங்கியின் புதுக்கிளை அமைக்கப்போகிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் நிலைகுலைந்து போனேன்: என் நண்பனுக்கு இருந்த ஒரே உலகம் இந்தச் சிறு தோட்டம்தான், அவனது இறுதி புகலிடம் இது. விளாடிமிரோவைப் போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் பயணம் என் இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று.

– வருத்தமா? நான் வருத்தமாக இருப்பதாக யார் சொன்னது?

என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் செய்தி அவனுக்கு மிகப்பெரிய ஆனந்தமாய் இருக்கிறது. ஒரு வங்கிக் கிளை, நிதிநிறுவனங்களில் ஒன்று, காத்திரமான, கான்கிரீட் கட்டிடம்- ஒரு மரத்தின் கிளையைவிட அதன் மதிப்பு அதிகம். அது எவ்வளவு பெரிதாக இருக்கப் போகிறது என்பதை அவனிடம் சொல்லி விட்டார்கள், அவனும் அவனது வளர்ப்புப் பிராணியும் தங்குவதற்கு நிறைய இடம் இருக்கும். யாருக்குத் தெரியும்,அவனுக்கு அங்கே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். சுற்றிலும் இருக்கும் மலர்ப் பதியன்களைப் பார்த்துக்கொள்ளும் வேலையாகத்தான் இருக்கட்டும், அதனால் ஒன்றுமில்லை. எனவே, கிளைகள் நிறைந்த தோட்டத்திலிருந்து, தோட்டங்கள் நிறைந்த கிளைக்குச் செல்லப் போகிறான். .

– கிளைவிட்டுக் கிளைக்குப் போகிறேன்

அவனது சிரிப்பு சோகமாக இருந்தது, உலர்ந்த சிரிப்பு.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். இரவானதும், விளாடிமிரோ சாராயத்தில் மூழ்குவான், பாட்டில்களில் மிஞ்சியிருயிருக்கும் வண்டல்களையும் விட மாட்டான். போதை தலைக்கேறியதும், அவன் இரவைக் கடந்து செல்வான், ஒரு நண்டு போல், குறுக்காக. சாலையின் மறுபுறத்தில் வேசிகள் நிற்கின்றனர். ஆம், வேசிகள் என்று அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அவர்கள் அனைவரையும் அவன் பெயர் சொல்லி அழைக்கிறான். வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அவர்கள் தோட்டத்துக்குள் வந்து, அவனருகில் பெஞ்சில் அமர்கின்றனர். விளாடிமிரோ தனது சாகசக் கதைகளை அவர்களிடம் சொல்கிறான், அவர்கள் அவனது அபத்தங்களைத் தாலாட்டாய் எடுத்துக் கொள்கிறார்கள். சில சமயம், இந்தப் பெண்கள் இரவில் சத்தம் போட்டு அலறுவதை கேட்டுக் கொண்டிருக்கிறான் யாரோ அவர்களை அடிக்கிறார்கள். கையாலாகதவனாய், முகத்தைத் தன் கரங்களில் புதைத்துக் கொள்கிறான், உதவிக்கு அழைக்கும் அவர்களின் குரல்களுக்கு அவனால் செவி சாய்க்க முடியாமல், கடவுளைக் குற்றம் சாட்டுகிறான்.

– ஆண்டவன் அளவற்ற கருணை கொண்டவன், யாரையும் இப்போதெல்லாம் அவன் தண்டிப்பதில்லை.

அழைத்துப் பேசிக் கொண்டிருக்கும் அளவு கடவுளுக்கு நெருக்கமானவன் விளாடிமிரோ. ஆண்டவனுடன் அவன் இப்படி வம்படித்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. விளாடிமிரோ ஒரு காலத்தில் ஆண்டவனின் மிகத் தீவிரமான பக்தனாக இருந்தான். ஆனால், இதற்கும் அந்தக் கிழவன் பதில் வைத்திருக்கிறான்: வயதாக வயதாக புனிதமான விஷயங்களில் நாம் சுதந்திரம் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் அச்சத்தை வெற்றி கொண்டு விடுவதால்தான் இப்படி. நமக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு அச்சம் குறையும் என்பதுதான் விஷயமா? தெரியும் என்றோ நம்புகிறேன் என்றோ எதுவும் அவனால் சொல்ல முடியாது. சில சமயம் அவனுக்கே சந்தேகமாய்தான் இருக்கிறது.

– கடவுள் நாத்திகராகி விட்டாரா?

கிழவன் இனி வாழ்வில் பயப்பட வேண்டியதில்லை, என்று விலக்கு பெற்று விட்டானா? இப்படி தனியாக இருக்கிறான், தனக்கென்று சொல்லிக் கொள்ள வீடில்லை, ஒழுங்கான ஒரு வீடில்லை. இதைச் சொன்னால் அவன் எதிர்க்கேள்வி கேட்கிறான்:

– ஒழுங்கான ஒரு வீடா? என்னைவிட ஒழுங்கான வீடு வேறு யாருக்காவது இருக்கிறதா?

சில சமயம், காய்ச்சலில், மரணம் தனக்கு மிக அருகில் இருப்பதை அவன் உணர்கிறான், அது அவனைச் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விளாடிமிரோ சில சாமர்த்தியமான காரியங்களைச் செய்யக்கூடியவன், தன்னை அழைத்துப் போக வந்தவனுக்குப் போக்கு காட்டிவிடுகிறான். பல்லெல்லாம் கிட்டிக்கொண்டிருக்கும்போதும், கண்கள் காய்ச்சலில் அனலாய் ஜொலிக்கும்போதும், அவன் பாடுகிறான். தான் ஒரு பெண் என்று பாவித்துக் கொண்டு நடுங்கும் குரலில் பாடுகிறான். பெண்கள், சாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள், என்று சொல்கிறான்.

– சாவுக்கு பாட்டு கேட்க பிடிக்கும். என்னைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு ஆடுகிறான்.

இவ்வாறாகத்தான் வாழ்க்கை போகிறது, ஒளிந்து விளையாடுவது போல. ஆனால் ஒரு நாள், சாவு அவனை முந்திக் கொண்டு முதலில் பாடத் துவங்கி விடுகிறது. ஆனால், அவனை அசைப்பதானால் சாவு தன் பாடலை நிறுத்தக்கூடாது. விளாடிமிரோ தன் பெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சாகும் வயசு தனக்கு வரவில்லை என்று வலியுறுத்துகிறான். முதியவர்கள் தாங்கள் கடந்து வந்த ஆண்டுகளைச் சென்று காண்பதில்லை.

இதற்கு இடைப்பட்ட காலத்தில், விளாடிமிரோ கொஞ்சம் உறங்குகிறான், பூனைத்தூக்கம். அலாரம் அடிக்கும் அவனது கடிகாரம் ஒரு தவளை. தன் காலில் ஒரு தவளையைக் கட்டிக் கொண்டு தூங்குகிறான். மிகத் தீவிரமான தொனியில் அவன் இதற்கு விளக்கம் சொல்கிறான்: அது ஓடிப் போய்விடாதபடிக்குதான் அதை கட்டி வைத்திருக்கிறான்.

– தன் இதயத்தில் தண்ணீர் புக அனுமதித்துவிட்ட காரணத்தால் தவளை பறக்க வேண்டுமென்பதில்லை.

இப்போது எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது,. தோட்டத்தை இடிக்கப் போகிறார்கள். ஊர் இன்னும் நகரமயமாகப் போகிறது, அதன் மனிதம் இன்னும் குறையப்போகிறது. அதனால்தான் நான் கிழவனிப் பார்க்கப் போகிறேன். நான் ஏன் அவனைப் பார்க்கச் செல்கிறேனோ, அதே காரணத்துக்காகதான் திரும்பி வருகிறேன்.

– இந்த வங்கி விவகாரம் பற்றிச் சொல். நீ உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறாயா?

விளாடிமிரோ பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்கிறான். தான் கண்டடையக்கூடிய ஆகச்சிறந்த உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைகிறது.

– நீ சொல்வது உண்மைதான். நான் கலகலப்பாய் இருப்பது ஒரு நாடகம்.

– நீ ஏன் அப்படி நடிக்க வேண்டும்?

– இறந்து போன என் மனைவி பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேனா?

இல்லை, என்று தலையசைக்கிறேன். துயரம் நிறைந்த, வெகு காலம் நோய்மையுற்றிந்த தனது மனைவியின் கதையைச் சொல்கிறான். தீவிரமற்ற, சீழ்பிடித்த சாவு. அவள் முன் நாளெல்லாம் கோமாளித்தனமான சேட்டைகள் செய்வான், சன்னமாய் திறந்து கொண்ட இருண்மையை மிரட்டி விரட்ட நகைச்சுவை துணுக்குகள் சொல்வான். அந்தப் பெண் சிரிப்பாள், யாருக்குத் தெரியும், அவனது இரக்க குணத்துக்காக அல்லாமல், அவன் மீது பரிதாபப்பட்டு அவள் சிரித்திருக்கலாம். இரவில், அவள் உறங்கிக் கொண்டிருக்கும்போதுதான், அவன் அழுவான், வேதனையில் பித்தாகி.

– இப்போதும் அப்படிதான்: இந்தத் தோட்டம் உறங்கும்போதுதான் நான் அழுகிறேன்.

என் கரம் அவன் தோளை வளைத்து உரையாடுகிறது. விடைபிரியும் காலம் வந்துவிட்டது. கையறு நிலை குறித்து இன்னும் ஆழமான புரிதலுடன் எனக்கு நினைவு திரும்புகிறது. எனக்குப் பின்னால், நான் விளாடிமிரோவை விட்டுச் செல்கிறேன், அவனோடு இந்தச் சாலையையும், ஒற்றை பெஞ்ச் கொண்ட தோட்டத்தையும். அந்தத் தோட்டத்தின் கடைசி பெஞ்ச் அது.

நன்றி – Words Without Borders

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.