மித்யா
சமீபத்தில் வெளியான மாயக்கொண்டானின் ‘சம்பவம் நடந்ததா?’ என்ற நாவல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு புது முயற்சி என்று சொல்லவேண்டும். சிலர் செவ்வியல் ஆக்கங்களை உக்கிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் இப்படி ஒரு நாவல் வருவது நமக்கு ஆச்சரியம் தருகிறது.
நாவலில் இருப்பதோ ஒரே ஒரு சம்பவம்தான். அதுவும் முற்றுப்பெறாத ஒரு சம்பவம். இதை வைத்துக்கொண்டு பல கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் மாயக்கொண்டான். மனிதன் என்பவன் யார்? உண்மை என்பது என்ன? நாம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையா? தீர விசாரித்து அறிவது மட்டும் என்ன பெரிய உண்மையா? இப்படி பல கேள்விகளைக் கேட்க வைக்கிறார் ஆசிரியர்.
சம்பவம் என்னவோ சிறிய சம்பவம்தான். ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அவனை எல்லோரும் தேடுகிறார்கள். எல்லா இடத்திலும் தேடுகிறார்கள். கடைசியில் அவன் வீட்டின் படுக்கையறையிலிருந்து வெளியே வருகிறான். எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள். அவனோ, நான் படுக்கையறையில்தான் இருந்தேன், என்று சாதிக்கிறான். அவன் சொல்வது உண்மையா? இல்லை, என்கிறான் அவன் அண்ணன். இவனை வேற்றுக்கிரக மனிதர்கள் கடத்திவிட்டதாகவும் அவர்கள் இவனை மறுபடியும் இங்கு கொண்டுவிட்டதாகவும் சொல்கிறான். அவன் தங்கையோ இவனை நாகர்கள் பாதாள லோகத்திற்கு அழைத்து சென்றதாகவும் இவன் அழுகை தாங்கமுடியாமல் அவனைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் சொல்கிறாள். சம்பவம் நடந்ததா?
நாவலாசிரியர் இந்த நாவலை விஞ்ஞான நாவல்களையும் செவ்வியல் நாவல்களையும் இணைக்கும் ஒரு பாலமாக உருவாக்கியிருக்கிறார். ஒரு புறம் வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள் என்றும் மறுபுறம் நாகர்கள், பாதாள உலகம் என்றும் நாவல் விரிகிறது. விஞ்ஞான நாவல் என்றால் நம்முடைய பார்வையும் கற்பனாசக்தியும் விரியவேண்டும். அதே போல் செவ்வியல்தன்மை கொண்ட படைப்பு என்றாலும் நம் பார்வையும் கற்பனாசக்தியும் விரியவேண்டும். இதைச் சொல்லாமல் சொல்கிறார் நாவலாசிரியர்.
கதை என்றாலே கற்பனைதானா? சிறுவனின் தந்தை ‘இவன் பொய் சொல்கிறான்’ என்று சொல்லும்பொழுது கற்பனை உலகை ஏற்காத இந்த உலகத்தை மறைமுகமாக ஆசிரியர் சாடுகிறார். ‘பொய்’ என்பதற்கு உலகில் இடமில்லையா? எப்பொழுதும் உண்மையே சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்க்கை வெறுத்துப் போகாதா? இல்லை, பொய் இல்லாத இடத்தில் வாழ்க்கைக்குதான் அர்த்தம் என்று ஒன்று இருக்குமா- பொய்யே இல்லை என்றால் ஒரு விஷயத்தைப் பற்றி என்ன சொன்னாலும் அது மெய் என்று ஆகாதா? அப்படியானால் இரண்டு உண்மைகளில் எது உண்மையான உண்மை, எது சற்றே குறைவான உண்மை? பொய்யின் நிழலில்தானே உண்மை இருக்கிறது? தந்தையின் அந்த வாக்கியம் நம்முள் இத்தகைய கேள்விகளை எழுப்பி, நியோ ரியலிஸ்ட் எழுத்தாளர்களைப் பார்த்துச் சிரிக்கிறது.
‘உண்மை எதுவோ ஆனா பிள்ளை கிடைச்சுட்டான்’ என்ற தாயின் கூற்று நமக்கு உண்மையின் இன்னொரு பக்கத்தை காட்டுகிறது. உண்மைக்கு எல்லா இடத்திலும் வேலை இல்லை. எல்லோரும் உண்மையைத் தேடுவதில்லை. அவற்றுக்கு தலை போகிற அவசியம் இல்லை, எதோ அப்போதைக்கு நம் வேலை முடிந்தால் போதும். உண்மை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்தத் தத்துவத்தை தாயின் தரப்பைக் கொண்டு வெகு அழகாகவும், ஆழமாகவும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
யார் சொல்வது உண்மை? அந்த சிறுவன் எங்கே இருந்தான்? நடந்தது என்ன? இது போன்று இயற்கையாக நமக்குள் எழும் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் நாவலை முடிக்கிறார். இப்படி செய்து நம்மை சிந்திக்கச் செய்கிறார். உண்மை என்பது என்ன? உண்மையை கண்டுபிடித்தே ஆகவேண்டுமா? உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் மனிதனுக்குள் ஏன் இருக்கிறது? மனிதன் பொய்யான வாழ்க்கையைதானே வாழ்ந்து கொண்டிருக்கிறான்? பிறகு எதற்கு உண்மையைத் தேட வேண்டும்? இந்த தேடல் மனிதனுக்குள் எப்பொழுது பிறந்தது? மனிதன் தோன்றிய காலத்திற்கே இந்த கேள்விகள் நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றன.
முந்நூறு பக்கத்திற்கு மேல் உள்ள ஒரு நாவலில் ஒரே ஒரு சம்பவம்தான் நடக்கிறது. ஆனாலும் ஒரு மர்ம நாவலை படிக்கும் உணர்வை நமக்கு தருகிறார் மாயக்கொண்டான். நடுவில் வரும் சில வாக்கியங்கள் நம்மை உலுக்கி விடுகின்றன. “தம்பி கிடைக்கலேன்னா ரெண்டு ஐஸ்க்ரீமும் நானே எடுத்துக்கவா?” என்று அண்ணன் கேட்டும்பொழுது ‘தம்பி கிடைத்துவிட்டால் இவனுக்கு ஐஸ்க்ரீம் போய்விடுமே’ என்ற பரிதவிப்பில், நாம் இவனுக்காக தம்பி கிடைக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறோம். இப்படி பல இடங்களில் நம்மை கதாபத்திரங்களுடன் ஒன்றச் செய்வதே ஆசிரியரின் மிக பெரிய வெற்றி என்று நான் கருதுகிறேன்.
“அண்ணா கிடைக்கலேன்னா அம்மா சீரியல்ல வர ஆண்ட்டி மாதிரி அழுவாளா?” என்று தங்கை கேட்கும்பொழுது ஆசிரியரின் நுண்ணிய சமூக பார்வையும் அவருடைய நகைச்சுவை உணர்வும் வெளிப்படுகின்றன. எந்த ஒரு கஷ்ட காலம் வந்தாலும் நாம் சீரியல் பார்ப்பதையும் அதை பற்றி பேசுவதையும் நிறுத்த மாட்டோம் என்பதை இங்கு சொல்ல வருகிறார் ஆசிரியர். ஆண்களே, நீங்கள் சிரிக்க வேண்டாம். உங்களுடைய சினிமா ‘தல-தளபதி’ மோகத்தையும், கிரிக்கெட் மோகத்தையும் இந்தப் புத்தகத்தில் எள்ளி நகையாடத் தவறவில்லை மாயக்கொண்டான்.
ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் நமக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும் நாவல் இது. நம் மனநிலையை பொறுத்து ஒவ்வொரு முறையும் வேறு வேறு திசையிம் விரியும் நாவல் இது. இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த கதவுகளையெல்லாம் திறக்கிறது இந்த நூல். மாயக்கொண்டான் தமிழுக்கு கிடைத்த மாபெரும் எழுத்தாளர். இவர் இன்னும் இது போல் காலத்தால் அழிக்க முடியாத பல நாவல்கள் எழுதுவார் என்பது நிச்சயம். எப்படியாவது தேடிப் பிடித்து இந்த நாவலை படித்துவிடுங்கள். காணக் கிடைக்காத புத்தகத்தை படித்த மனநிறைவு உங்களுக்குக் கிட்டும்.